Monday, January 4, 2010

அழைப்பு விடுக்காதபோதும் ஸ்ரீகாந்தா, கிஷோர், சிவாஜிலிங்கம் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு அனுமதி

[ செவ்வாய்க்கிழமை, 05 சனவரி 2010, 02:23.38 AM GMT +05:30 ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நேற்றைய நாடாளுமன்றக்குழுக் கூட்டத்துக்கு வன்னி மாவட்ட எம்.பியான சிவநாதன் கிஷோரும், யாழ். மாவட்ட எம்.பியான என்.ஸ்ரீகாந்தாவும் அழைக்கப்பட்டிராத போதிலும் அவர்கள் இருவரும் நேற்றுக் காலை கூட்டத்துக்குத் தாமாகவே சமுகம் தந்தனர். மாலையில் யாழில் இருந்து வந்த சிவாஜிலிங்கமும் கூட்டத்தில் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டார்.

அவர்கள் இருவரையும் கூட்டத்துக்கு அனுமதிப்பதா என்பது குறித்து கூட்டத்தின் ஆரம்பத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இறுதியில் அவர்களை அனுமதிப்பது என முடிவுசெய்யப்பட்டது எனத் தெரியவருகின்றது.

காலையில் கிஷோர், ஸ்ரீகாந்தா ஆகிய வெளிநாட்டில் இருக்கும் ஜெயானந்தமூர்த்தியும், சந்திரநேருவும், கனகசபையும் நேற்றைய கூட்டத்தில் பங்குபற்றவில்லை. மற்றொரு எம்.பியான கனகரட்ணம் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் உள்ளார். இக்கூட்டத்துக்கு ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், சிவநாதன் கிஷோர் ஆகியோர் அழைக்கப்பட்டிருக்கவில்லை. ஏனைய அனைத்து எம்.பிக்களும் கூட்டத்துக்கு சமுகம் தந்தனர்.

இந்நிலையில், நேற்றுக்காலை 10.45 மணியளவில் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள கூட்டமைப்பின் அலுவலகத்தில் ஆரம்பமானபோது ஸ்ரீகாந்தாவும், கிஷோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அவர்களை அனுமதிப்பதா என்பது குறித்துக் கூட்டத்தில் முதலில் விவாதிக்கப்பட்டது.

கிஷோர் அண்மைக்காலமாக அரசுடன் இணைந்து செயற்படுகின்றமை குறித்து சில எம்.பிக்கள் சுட்டிக்காட்டினர். அதை கிஷோர் ஆட்சேபித்தார். தாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஜனாதிபதியின் பிறந்த தினத்தன்று அவரைச் சந்தித்து வாழ்த்தியமை உண்மை என்றும் அதை ஒளிவு மறைவின்றிப் பகிரங்கமாகத் தாம் செய்தார் என்றும் அவர் சொன்னார். எந்தச் சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பின் கட்டுக்கோப்புக்கு மாறாகப் பகிரங்க அறிக்கைகளையோ, கருத்துக்களையோ தாம் வெளியிடவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்திலும் தாம் அதில் உறுதியாக இருப்பார் என்றும், கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பது என்ற முடிவில் தமக்கு மாற்றம் ஏதும் கிடையாது என்றும் சொன்னார்.

அடுத்து ஸ்ரீகாந்தாவின் விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் தனித் தமிழ் வேட்பாளர் ஒருவரை நியமிப்பதில்லை என்று கடந்த கூட்டத்தில் கூட்டமைப்பு முடிவெடுத்திருக்க, அதற்கு முரணான அறிக்கைகளை ஸ்ரீகாந்த விடுத்ததுடன், சிவாஜிலிங்கத்துடன் சேர்ந்து கூட்டமைப்பின் முடிவுக்கு மாறாக வேட்பாளரை நிறுத்தி, அது தொடர்பான நடவடிக்கைகளில் நேரடியாகச் சம்பந்தப்பட்டார் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் குற்றம் சுமத்தினர். ஸ்ரீகாந்தாவுக்கு எதிராகக் கடும் கண்டனக் கணைகள் எழுந்தன. இந்தச் சமயத்தில் குறுக்கிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டத்துக்குத் தலைமை வகிப்பவர் என்ற முறையில் இவ்விடயத்தில் தமது முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். அதனை அனைவரும் ஏற்க இணங்கினர்.

கூட்டமைப்பின் அனைத்து முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பதற்கு சிவநாதன் கிஷோரும், ஸ்ரீகாந்தாவும் இணங்குகின்றனர் என்று இங்கு தெரிவித்திருப்பதால், கடந்தவற்றை மறந்து இருவரையும் கூட்டத்தில் அனுமதித்து, கூட்டத்தைத் தொடரும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

எனினும், தனித் தமிழ் வேட்பாளர் ஒருவரை இத்தேர்தலில் நிறுத்துவதில்லை என்ற முடிவு கடந்த கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என ஸ்ரீகாந்தா தெரிவித்தமை தவறானது என்பதையும் கூட்டமைப்பின் முடிவுக்கு மாறாகத் தம்மை வேட்பாளராக நிறுத்தி, இத்தேர்தலில் போட்டியிடும் பிரசாரத்தை சிவாஜிலிங்கம் இந்தச் சமயத்திலும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டு வருகின்றமை வருத்தத்துக்கும் விசனத்துக்கும் உரியது என்பதையும் தாம் அங்கு சுட்டிக்காட்டுகின்றார் என சம்பந்தன் தெரிவித்தார் என அறியவந்தது.

இதேசமயம் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் மாலையில் கூடியபோது யாழ்ப்பாணத்திலிருந்து வந்து சேர்ந்த சிவாஜிலிங்கமும் இங்கு பிரசன்னமானார். காலையில் ஸ்ரீகாந்தா, கிஷோரை அனுமதித்த அடிப்படையில் சிவாஜிலிங்கத்தையும் கூட்டத்தில் பங்குபற்ற அனுமதியளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment