Thursday, January 14, 2010

சிறிலங்காவில் தொடரும் அவலங்கள்! சுரேஸ்பிரேமச்சந்திரன் கூறும் உண்மைகள்!!

வியாழக்கிழமை, 14 ஜனவரி 2010 04:04
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தமிழக வார இதழ் ஒன்றிற்கு வழங்கிய கருத்துரையிலேயே சிங்களத்தால் அபகரிக்கப்படும் தமிழர்களது தாயக நிலப்பரப்பு தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார்.

சிறிலங்காவில் விடுதலைப்புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பிறகு தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் கேட்பாரில்லை என்ற நிலையே உருவாகியுள்ளது. ‘மழைவிட்டும் தூறல் நிற்கவில்லை’ என்ற கதயாக அங்கே தமிழர்களுக்கு எதிரான துன்பங்கள் அரங்கேறுகின்றன.

புத்த கோயில்களின் ஆக்கிரமிப்பு

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுக்க மட்டுமே சொந்தமில்லை என்ற நிலையே உருவாக்க நினைத்து சிங்கள குடும்பங்களை அங்கு சிறிலங்கா அரசே குடியேற்றுகின்றது. சிங்கள வெறியர்கள் புத்த கோயில்களை கட்டுகின்றனர்.

கிளிநொச்சியில் தமிழ்மக்களின் கலை மற்றும் மரபுகளை வெளிப்படுத்தும் விதமாக இருந்த மாவட்ட கலாச்சார மண்டபத்தை இடித்துவிட்டனர். அதே பகுதியில் புத்தருக்கு கோவில் கட்டும் பணியை தொடங்கிவிட்டனர்.

ஓமந்தை முதல் பளை வரையிலான ஏ-9 நெடுஞ்சாலையும் இரு புறமும் 150ற்கு மேற்பட்ட கட்டடங்களையும் தரைமட்டமாக்கி புத்தருக்கு கோவில் கட்டும் பணி இப்போது வேகமாக நடக்கிறது. இதை தடுக்க யாருக்கும் தைரியம் இல்லை.

சிங்களவர்களது நினைவுச் சமாதிகளுக்காக அழிக்கப்படும் தமிழர்களது வாழ்வியல் கட்டமைப்புக்கள்.

போரில் இறந்த சிங்கள சிப்பாய்களுக்க சமாதிகள் அமைக்க கிளிநொச்சி நூலகத்தை அழித்து விட்டனர். ஏற்கனவே கிளிநொச்சியில் 350கடைகளை கொண்ட பொதுச் சந்தை பெற்றோல் நிரப்பு நிலையம் கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையம் ஆகியவற்றை சிறிலங்கா இராணுவத்தினர் அடையாளம் தெரியாதபடி அழித்து அதில் தங்கடுயது சிப்பாய்களுக்கு சமாதிகளை அமைத்துள்ளனர். போர் நினைவுத் தூணும் இராணுவ நிணைவு மையமும் அமைப்பதற்காக கிளிநொச்சி பிரதேச சபைக்கு சொந்தமான இயற்கை பூங்காவை சிறிலங்கா அரசு அழித்துவிட்டது.

அடையாளமே அழியும் நிலையில் தமிழர் தாயகம்.

கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன என்பது அரசால் கிளப்பிவிடப்பட்ட புரளி. வன்னிப் பிரதேசத்தை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவே சிறிலங்கா அரசு இந்த மோசமான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. வடக்கு கிழக்க மாகாணங்களை ஒட்டுமொத்தமாக சிங்கள பவுத்த பூமியாக மாற்றுவதே அரசின் கொள்கை.

இதை தடுக்க சர்வதேச சமூகம் இனியும் சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்காவிட்டால் தமிழன் வாழ்ந்த அடையாளத்தை அடியோடு சிங்கள இனவாத அரசு அழித்துவிடும்.

சிறிலங்காவில் யுத்த இரத்தம் நின்றாலும் தமிழர்களின் கண்ணீர் நிற்கவே நிற்காதா….?

No comments:

Post a Comment