Sunday, March 21, 2010

ஈழத் தமிழரின் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக மாறப் போகும் ஏப்ரல் 9 : இரா.துரைரத்தினம்

முழுநாட்டையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டதாக மகிந்த ராசபக்சவும் சிங்கள தேசமும் எக்காளமிட்டு கொண்டாடிய நாள் மே 19ஆம் திகதி. தமிழரின் ஆயுதபலம் தோற்கடிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டு விட்டோம் என்று தமிழர்கள் விம்மி விம்மி அழுத நாளும் அதுதான். அரசியல் பலம் மட்டுமே தமிழர்களை தலைநிமிர்த்தும் என்ற நம்பிக்கை இருந்தநிலையில், அந்த அரசியல் பலமும் ஏப்ரல் 9 ம் திகதியுடன் மகிந்தவின் கைகளுக்கு போய்விடப்போகிறது.

தமிழரின் மிகப்பெரிய ஆயுதபலம் வீழ்ச்சியடைந்த நிலையில் இனிமேல் அரசியல் ரீதியான பலத்தை வைத்தே தலைநிமிர முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே தமிழர்களிடம் இருந்தது.

ஆனால் அந்த அரசியல் பலமும் ஏப்ரல் 9ஆம் திகதியுடன் மகிந்தவின் கைகளுக்கு போய்விடப்போகிறது. ஆம் ஈழத் தமிழர்களின் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக எதிர்வரும் ஏப்ரல் 8ம்திகதி அமைய இருக்கின்றது.

இதை நான் சொல்லும் போது இவர் என்ன மகிந்தவின் பக்கம் சென்றுவிட்டாரா மகிந்தவுக்காக அல்லது டக்ளஸ், கருணாவுக்காக பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டாரா?என்று நீங்கள் யோசிக்கலாம்.

வடக்கு கிழக்கில் தேர்தல் அரசியல் களநிலவரங்களை பார்க்கும் போது எமது அரசியல் பலத்தையும் மகிந்தவின் கைகளில் கொடுத்துவிடப்போகிறோம் என்று அச்சமே எழுந்திருக்கிறது.

சிங்கள தேசம் வகுத்த சூழ்ச்சியினால் வடக்கு கிழக்கில் இன்று ஒன்றுமையாக இருந்து செயற்பட வேண்டிய தமிழர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொள்வதும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தமது பலவீனம் வெளிப்பட்ட நிலையில் அச்சமடைந்திருந்த டக்ளஸ், கருணா போன்றவர்கள் இன்று காலுக்கு மேல் காலைப்போட்டுக்கொண்டு நாம் படுகின்ற பாட்டைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வெற்றிக்காக நமது தமிழர்கள் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள்.

அது எப்படி சொல்லமுடியும். வடக்கு கிழக்கில் தமிழர்கள்தான் வெற்றிபெறப்போகிறார்கள். உங்களுக்கு என்ன பையித்திமா பிடித்து விட்டது என்று என்னை கேள்வி கேட்கப்போகிறீர்கள் என்பதும் எனக்கு தெரியும். ஆனால் யதார்த்தம் எங்கள் விருப்பத்திற்கு மாறாகத்தான் இருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டமாக இருக்கும் களநிலவரங்களையும் வாக்குகள் எவ்வாறு பிரிக்கப்பட போகிறன என்பது பற்றியும் முதலில் பார்ப்போம். அதன் பின்னர் ஏப்ரல் 9ஆம் திகதிக்கு பின்னர் தமிழரின் அரசியல் தலைமை யாரிடம் இருக்கப்போகிறது என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

இம்முறை தமிழர் பிரதேசங்களில் வாக்குகள் பிரிக்கப்பட்டு முன்னணியில் இருக்கும் தமிழ் கட்சிகளின் வாக்குவங்கிகளை குறைப்பதற்காகவும் தமிழர் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்காகவும் மகிந்த ராசபக்ச அரசு மிகவும் திட்டமிட்டு செயற்பட்டிருக்கிறது.

இலங்கையிலேயே ஆகக்கூடிய கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடும் மாவட்டங்களில் அம்பாறை முதலாம் இடத்திலும் மட்டக்களப்பு இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.

முதலில் யாழ்ப்பாண மாவட்டத்தை எடுத்துக்கொள்வோம்.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ( கிளிநொச்சி தொகுதி உட்பட) வாக்காளர்களாக தேர்தல் திணைக்களத்தால் 7இலட்சத்து 21ஆயிரத்து 359பேரின் பெயர்கள் பதியப்பட்டுள்ளன. ஆனால் புள்ளிவிபரத் திணைக்களம் இறுதியாக 2008 ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி 18வயதிற்கு மேற்பட்டவர்கள் 3இலட்சத்து 70ஆயிரத்து 620பேரே இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

இறந்தவர்கள், காணாமல் போனவர்கள், யாழ்மாவட்டத்தை விட்டு பல ஆண்டுகளுக்கு முதல் வெளியேறியவர்கள் உட்பட அங்கு இல்லாத பலரின் பெயர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்படாததன் காரணமாகவே 7இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் அங்கு இருப்பதாக காட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அங்கிருந்த வாக்காளர்களில் 50 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் வாக்களித்திருந்தனர். ஆனால் 7இலட்சம் வாக்காளர்கள் என்ற கணக்கை வைத்துக்கொண்டு அங்கு ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரித்தார்கள் என்று கூட பிரசாரம் செய்தனர்.

2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் யாழ்.மாவட்டத்திலிருந்த 95வீதமான மக்கள் வாக்களித்தனர்.

தற்போது கிளிநொச்சி தொகுதி மற்றும் பருத்தித்துறை தொகுதியின் பெரும்பகுதியான வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்களில் பலர் இறுதிக்கட்ட போரின் போது இறந்துள்ளனர். பலர் யாழ் மாவட்டத்திற்கு வெளியில் வவுனியா பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். முகாம்களில் இருக்கும் பலர் இடம்பெயர்ந்த வாக்காளர்களாக வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க வில்லை. இதன் காரணமாக நடைபெறப்போகும் தேர்தலில் 2இலட்சத்து 50ஆயிரத்திற்கு குறைவானவர்களே வாக்களிக்கப்போகிறார்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 15 அரசியல் கட்சிகளும் 12 சுயேச்சைக்குழுக்களுமாக 27 அணிகள் போட்டியிடுகின்றன. 324 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்து பம்பரமாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் கட்சிகள் வரிசையில் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி, ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி, பிள்ளையான் அணி ஆகிய கட்சிகளும், சிங்கள கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் டக்ளஸ் போன்றோரும், ஐக்கிய தேசியக்கட்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் மனைவி உட்பட சிலரும், இடதுசாரி முன்னணியில் சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றோரும், போட்டியிடுகின்றனர்.

மகிந்த ராசபக்சவின் ஆதரவு பெற்ற மக்கள் கட்சியினால் நிறுத்தப்பட்டிருக்கும் சுயேச்சைக்குழுவுக்கு செங்கைஆழியான் க.குணராசாவும், சிறுபான்மை தமிழர் மகாசபையின் சார்பில் போட்டியிடும் சுயேச்சைக்குழுவுக்கு எழுத்தாளர் தெணியானும் தலைமை தாங்குகின்றனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராசபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 44154 வாக்குகள் யாழ்.மாவட்டத்தில் அளிக்கப்பட்டிருந்தது. இம்முறை இந்த வாக்கு எண்ணிக்கை அக்கட்சிக்கு அதிகரிக்குமே ஒழிய அவை வீழ்ச்சியடைவதற்கு வாய்ப்பு இல்லை.

வேட்பாளர்களின் தனிப்பட்ட வாக்கு சேகரிப்பு மற்றும் நிவாரணங்களை நம்பியிருக்கும் அகதி முகாம் மக்கள் அரசு தரப்பினருக்கு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றமை காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கான வாக்கு இப்பொதுத்தேர்தலில் 50ஆயிரமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகுதியாக இருக்கும் ஒரு இலட்சத்து 60ஆயிரம் வாக்குகளைத்தான் ஏனைய 26அணிகளும் பிரிக்கப்போகின்றன.

சுயேச்சைக்குழுக்கள் ஆசனங்கள் எதையும் எடுக்கப்போவதில்லையாயினும் அவர்களும் கணிசமான வாக்குகளை பிரித்தெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெணியான் தலைமையிலான சிறுபான்மை தமிழர் மகாசபை சார்பில் போட்டியிடும் சுயேச்சைக்குழு சுமார் 10ஆயிரம் வாக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக சில சுயேச்சைக்குழுக்களும் கணிசமான வாக்குகளை பிரிக்கலாம்.

இடதுசாரி முன்னணியின் சார்பில் போட்டியிடும் சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோரும் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது.

திருமதி மகேஸ்வரன் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி கூட சுமார் 15ஆயிரம் வாக்குகளை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.( 2000, 2001ஆண்டு தேர்தல்களில் மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)

வெற்றிபெற முடியாதவர்கள் என கணிக்கப்படும் அரசியல் கட்சிகள், சுயேச்சைக்குழுக்கள் என இந்த 24 அணிகளும் மொத்தம் 50ஆயிரம் வாக்குகளைப்பெறுவார்கள் என்பது திண்ணம்.

எனவே மிகுதி 85ஆயிரம் அல்லது 90ஆயிரம் வாக்குகளைத்தான் தமிழரசுக்கட்சியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியும் தங்களுக்குள் பிரிக்கப்போகிறார்கள்.

இதிலிருந்து தமிழ் கட்சிகள் தங்களுக்குள் பிரிந்து நிற்பதால் யாழ்ப்பாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணிக்கு எவ்வாறு வெற்றிவாய்ப்பை தேடிக்கொடுக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

வன்னி மாவட்டம்

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் தொகுதிகளை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்தை பார்ப்போம். வடக்கு கிழக்கில் வன்னி மாவட்டம் மட்டுமே தமிழர் தரப்பிற்கு ஓரளவு நம்பிக்கை தரக்கூடியதாக இருந்தாலும் தமிழர்களின் வாக்குகள் பிரிக்கப்படுவதாலும், தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிப்பதாலும் தமிழர்களுக்கு வர வேண்டிய இரு ஆசனங்கள் முஸ்லீம்கள், சிங்களவர்கள் கைகளுக்கு போகப்போகிறது என்பதே உண்மை.

வன்னி மாவட்டத்தில் 6 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 16 அரசியல் கட்சிகளும் 12 சுயேச்சைக்குழுக்களுமாக 28அணிகளில் 253 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இம்மாவட்ட வாக்காளர்களின் இனவிகிதாசார அடிப்படையில் 5 தமிழர்களும் ஒரு முஸ்லீமும் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால் தமிழர்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிப்பதால் அதிலிருந்து தெரிவு செய்யப்படப்போகின்றவர்கள் முஸ்லீம்களும் சிங்களவர்களுமாகத்தான் இருப்பார்கள்.

வன்னி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2இலட்சத்து 66ஆயிரத்து 976ஆக இருந்த போதிலும் இவர்களில் கணிசமானவர்கள் வன்னியில் இறுதி யுத்தத்தின் போது இறந்துவிட்டார்கள். மிகுதிப்பேர் வன்னி மாவட்டத்தை விட்டு இடம்பெயர்ந்து விட்டார்கள். இந்நிலையில் கணிசமான தமிழ் வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கப்போவதில்லை.

இது தவிர வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 11ஆயிரம் சிங்கள வாக்காளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். அதேபோன்று மன்னார் மாவட்டத்திலும் சுமார் 7ஆயிரம் முஸ்லீம் வாக்காளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் வன்னி மாவட்டத்தில் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறதே ஒழிய அதிகரிக்கவில்லை.

இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு பிரதேசத்திலும் சிங்கள வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. (சிலோன் பாம் உட்பட பல பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றம் அதிகரித்து வருவது பற்றி பின்னர் தனியாக பார்ப்போம்)

வன்னி மாவட்டத்தில் 28அணிகள் போட்டியிட்டாலும் தமிழரசுக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சி இணைந்த ஐக்கிய தேசியக் கட்சி, புளொட் ஆகிய கட்சிகளுக்கிடையில்தான் கடுமையான போட்டி இருக்கும் என கருதப்படுகிறது. இம்முறை கணிசமான தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கே அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இம்முறை கனகரத்தினம், கிசோர் சிவநாதன் போன்ற தமிழர்களும், அப்துல் ரிசாத் பதியுதீன், மக்ருப் போன்ற முஸ்லீம் வேட்பாளர்களும், பிரேமரத்ன சுமதிபால, சமிந்த உபுல் பாலசூரிய ஆகிய சிங்களவர்களும் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் கனகரத்தினம், கிசோர் சிவநாதன் போன்றவர்கள் கணிசமான வாக்குகளைப்பெற்று அக்கட்சிக்கு கொடுத்தாலும் அவர்கள் அக்கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படப்போவதில்லை.

ஏனெனில் முஸ்லீம்கள் அனைவரும் ஒருமித்து தமது விருப்பு வாக்குகளை ரிச்சாட் பதியுதீன், மக்ருப் போன்றவர்களுக்கே அளிப்பார்கள். முஸ்லீம் வேட்பாளர்களே 30ஆயிரத்திற்கு மேற்பட்ட விரும்பு வாக்குகளை பெறும் சந்தர்ப்பமே காணப்படுகிறது.

இவ்வளவு விருப்பு வாக்கை கனகரத்தினமோ கிசோரோ, பெற முடியாது. எனவே தமிழ் வேட்பாளர்கள் வாக்குகளை எடுத்து முஸ்லீம், சிங்கள வேட்பாளர்களைத்தான் வெல்ல வைக்க முடியும். அந்தக் காரியத்தை இந்த இருவரும் கச்சிதமாகச் செய்துமுடிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இம்முறை தமிழரசுக்கட்சி 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரு ஆசனங்களையும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் ஒரு ஆசனத்தையும் பெறலாம் என நம்ப்படுகிறது. சில வேளைகளில் சித்தார்த்தன் தலைமையிலான புளொட்டும் ஒரு ஆசனத்தை பெறலாம்.

திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை, மூதூர், சேருவல தொகுதிகளை உள்ளடக்கிய திருகோணமலை மாவட்டத்தில் 4 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 17அரசியல் கட்சிகளும், 14 சுயேச்சைக்குழுக்களுமாக 31அணிகளில் 217 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2,41,133 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கில் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களே பெரும் சர்ச்சையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த பொதுத்தேர்தலில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டதன் காரணமாகவே இரு பிரதிநிதிகளை பெற முடிந்தது. இம்மாவட்டத்தில் இரு தமிழ் பிரதிநிதிகளும் முஸ்லீம்கள் சிங்களவர்கள் தரப்பிலிருந்து தலா ஒவ்வொருவரும் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால் தமிழ் வாக்குகள் பிரிக்கப்பட்டால் ஒரு தமிழர் கூட தெரிவு செய்யப்பட முடியாத நிலை கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கிறது.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி, உட்பட சில தமிழ் கட்சிகளும் சிங்கள கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி, சிவாஜிலிங்கம் அணி போட்டியிடும் இடதுசாரி முன்னணி உட்பட சிங்கள கட்சிகளும் தமிழ் வாக்குகளைப் பிரிப்பதால் இம்முறை திருகோணமலையில் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய் இலங்கையின் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் முஸ்லீம் காங்கிரஷ் கட்சியும் வெற்றிபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

2004ம் ஆண்டு தேர்தலின் போது தமிழரசுக் கட்சி 68995 வாக்குகளினைப் பெற்றது. சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 65187 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 31053 வாக்குகளினையும் ஐக்கிய தேசியக் கட்சி 15693 வாக்குகளினையும் பெற்றது.

கடந்த முறை தமிழரசுக்கட்சிக்கும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சிக்கும் இடையில் 3808 வாக்கு வித்தியாசமே காணப்பட்டது. இந்த முறை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சிக்கு சாதகமான விடயங்கள் சிலவும் காணப்படுகின்றன.

தற்போது சிறிலங்கா முஸ்லீம்காங்கிரஷ் கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் போட்டியிடுகின்றன. திருகோணமலையில் முஸ்லீம்களின் வாக்குகள் பிரிந்து போகாது இருப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சி தன்னுடைய வேட்பாளர் பட்டியலில் சிங்களவர்களையும் தமிழர்களையும் இணைத்திருக்கிறது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் முதன்மை வேட்பாளராக இருந்திருந்த மக்ருப் அவர்களை இம்முறை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சி தன்னுடைய வேட்பாளர் பட்டியலில் சேர்த்திருக்கிறது. கடந்த முறை மக்ரூப் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கின் காரணமாக 4ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தார். இது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஷ் கட்சியின் வாக்கு பலத்தை அதிகரிக்கவே செய்யும்.

அதுமட்டுமன்றி 2004ம் ஆண்டில் 74869 ஆக காணப்பட்ட மூதூர்தொகுதி முஸ்லீம் வாக்காளர்களின் தொகை 2010ம் ஆண்டில் 85401 ஆக அதிகரித்துள்ளது. 5ஆண்டுகளில் 10542 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

இதனால் இம்முறை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் 70ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறக்கூடிய சாதகமான நிலையும் அக்கட்;சியே ஆகக்கூடிய வாக்குகளைப்பெறக்கூடிய கட்சியாகவும் காணப்படுகிறது.

அதே போன்று 2004ம் ஆண்டில் 63161 ஆக காணப்பட்ட சேருவில தொகுதியின் பதியப்பட்ட சிங்கள வாக்காளர் எண்ணிக்கை 2010இல் 69047 ஆக அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளில் அத்தொகுதியில் 5886 பேர் புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்களின் வாக்காளர் தொகை வீழ்ச்சியடைந்திருக்கிறது.

முஸ்லீம் சிங்கள வாக்காளர் அதிகரிப்பு வீதத்துடன் ஒப்பிடும் போது கடந்த 5 வருடங்களில் 12ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் அதிகரித்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக தமிழ் வாக்காளர் தொகை வீழ்ச்சியடைந்திருக்கிறது.

முஸ்லீம் சிங்கள வாக்காளர்கள் தொகை அதிகரித்த அதேவேளை அவர்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் இருக்க கடந்த முறை தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் போட்டியிட்டு பெற்ற 68995 வாக்குகளைத்தான் அங்கு போட்டியிடும் 10க்கு மேற்பட்ட தமிழ் கட்சிகளும் 15க்கு மேற்பட்ட சுயேச்சைக்குழுக்களும் இம்முறை பிரிக்கப்போகின்றன.

தமிழரசுக் கட்சியைத் தவிர அங்கு போட்டியிடும் ஏனைய தமிழ் கட்சிகள் 10ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெறப்போவதில்லை. தாங்கள் ஒருபோதும் வெற்றிபெறப்போவதில்லை என்று அங்கு வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஆனந்தசங்கரி, சிவாஜிலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி சிறிதரன், பிள்ளையான் போன்றவர்களுக்கு நன்றாக தெரியும்.

திருகோணமலையைப்பொறுத்தவரை தமிழ் கட்சிகளில் வெற்றிபெறக்கூடிய வாக்கு வங்கியைக்கொண்ட ஒரே ஒரு தமிழ்கட்சி தமிழரசுக் கட்சிதான். பல தமிழ் கட்சிகள் அங்கு போட்டியிட்டால் தமிழர் தரப்பில் ஒரு பிரதிநிதியும் கிடைக்கப்போவதில்லை என்றும் அவர்களுக்கு தெரியும். ஆனாலும் சம்பந்தனை தோற்கடிக்கப்படவேண்டும் என்ற வெறியில் இவர்கள் அனைவரும் திருகோணமலையை குதறி வருகின்றார்கள்.

இம்முறை தமிழரசுக் கட்சி சார்பில் ஒரு பிரதிநிதியே தெரிவு செய்யப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. அதுவும் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அக்கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம்தான் அந்த ஒரு பிரதிநிதித்துவத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியும். ஒற்றுமையின்றி செயற்பட்டால் அது கூட கிடைக்காது.

2000ஆம் ஆண்டில் ஏற்பட்டில் கிடைத்த பாதகமான முடிவைத்தான் தமிழ் மக்கள் சந்திக்க நேரிடும். 2000ஆம் ஆண்டில் மூன்று தமிழ் கட்சிகள் போட்டியிட்டே அந்த முடிவுவை சந்திக்க நேரிட்டது.

இம்முறை 10க்கு மேற்பட்ட தமிழ் கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த அனுபவங்களிலிருந்தாவது பாடங்களை கற்று தங்களின் சுயநலங்களை விட்டு திருகோணமலையில் உள்ள தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்டிருக்க வேண்டும். அந்த ஒற்றுமைதான் தமிழ் சமூகத்திடம் இல்லையே.

மட்டக்களப்பு மாவட்டம்

கல்குடா மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதிகளை உள்ளடக்கிய மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 17அரசியல் கட்சிகளும் 28 சுயேச்சைக்குழுக்களுமாக மொத்தம் 45 அணிகளில் 360 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இலங்கையில் அதிக கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் போட்டியிடும் இரண்டாவது மாவட்டம் மட்டக்களப்பாகும். அத்தனை சுயேச்சைக்குழுக்களும் அரசியல் கட்சிகளும் தமிழர்களின் வாக்குகளை பிரித்தெடுப்பதையே குறியாகக்கொண்டு களமிறக்கப்பட்டிருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 3இலட்சத்து 33ஆயிரத்து 644 ஆகும். இம்மாவட்டத்தில் தமிழர்கள் 74வீதமாகவும் முஸ்லீம்கள் 25வீதமாகவும் காணப்படுகின்றனர்.

வாக்காளர் இனவிகிதாசார அடிப்படையில் தமிழர் தரப்பில் 4பேரும் முஸ்லீம்கள் தரப்பில் ஒரு முஸ்லீம் பிரதிநிதியுமே தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்கும் பட்சத்தில் எதிர்மறையாக முஸ்லீம்களே அதிக பிரதிநிதிகளை பெறும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

இம்மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, புளொட், ஈழவர் ஜனநாயகக்கட்சி சிவாஜிலிங்கம் அணியினரின் இடதுசாரி முன்னணி, என தமிழர் தரப்பு கட்சிகளும் 28 சுயேச்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. அத்துடன் சிங்கள கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியகட்சி, ஜே.வி.பி உட்பட சிங்கள கட்சிகளிலும் பல தமிழர்கள் போட்டியிடுகின்றனர். சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியும் போட்டியிடுகிறது.

சுயேச்சைக்குழுக்கள், அரசியல் கட்சிகள் என 26தமிழ் அணிகள் போட்டியிட்டாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிவாய்ப்பை பெறக்கூடிய வாக்கு வங்கியை தமிழரசுக்கட்சி மட்டுமே கொண்டிருக்கிறது. ஆனால் ஏனைய தமிழ் கட்சிகள் ஆசனங்களைப்பெற முடியாவிட்டாலும் கணிசமான வாக்குகளைப் பெறக்கூடிய சாத்தியங்களே காணப்படுகின்றன. தமிழ் மக்களின் வாக்குகள் பிரிக்கப்படுவதால் தமிழ் பிரதிநிதித்துவத்திற்கு நிட்சயம் ஆபத்து ஏற்படத்தான் போகிறது.

தமிழர் விடுதலைக்கூட்டணியில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெள்ளிமலை, ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் லட்சுமி சுந்தரம், பிள்ளையானின் கட்சியில் போட்டியிடும் செல்வேந்திரன் ஆகியோர் கணிசமான வாக்குகளைப் பெற்றாலும் அவர்களால் வெற்றிபெற முடியாது. அவர்கள் வாக்குகளைப் பிரிப்பது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போன்ற சிங்கள கட்சிகளின் வெற்றி வாய்ப்பிற்கே வழிவகுக்க போகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 3,33,644 ஆகும். இம்மாவட்டத்தில் கடந்த 5வருட காலத்தில் 30ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 25 வீதமான முஸ்லீம்கள் 15ஆயிரம் வாக்காளர்களால் அதிகரிக்க 74வீதமான தமிழர்கள் 14ஆயிரம் வாக்களார்கள் மட்டுமே அதிகரித்திருக்கிறார்கள். இதனால் 75ஆயிரமாக இருந்த முஸ்லீம் வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 90ஆயிரமாக அதிகரித்திருக்கிறது.

இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தமிழ் வேட்பாளர்கள் 5பேரும் முஸ்லீம் வேட்பாளர்கள் 3பேரும் போட்டியிடுகின்றனர். அக்கட்சியின் முஸ்லீம் வேட்பாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹிஸ்புல்லா, அமிர்அலி, அலிசாகிர் மௌலானா ஆகியோரும் தமிழ் வேட்பாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி, கணேசமூர்த்தி மற்றும் சத்தியவரதன், குலசேகரம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த ஐந்து தமிழ் வாக்காளர்களும் தலா 5ஆயிரத்திற்கும் 10ஆயிரத்திற்கும் இடைப்பட்ட வாக்குகளை அக்கட்சிக்கு எடுத்துக்கொடுத்தாலும் விருப்பு வாக்கு அடிப்படையில் ஒருபோதுமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பே இல்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து தப்பித்தவறி மூன்று பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டால் அவர்கள் மூவரும் முஸ்லீம்களாகவே இருப்பார்கள்.

அண்மையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பள்ளிவாசல்கள் சம்மேளனம் முஸ்லீம் மக்களுக்கு ஒரு அறிவித்தலை விடுத்திருந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்கும் முஸ்லீம்கள் அனைவரும் ஹிஸ்புல்லா, அமிர்அலி, அலிசாகிர் மௌலானா ஆகிய மூவருக்கும் தமது விருப்பு வாக்குகளை அளிக்க வேண்டும் என கேட்டிருந்தது.

இதன் படி எப்படியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு குறைந்தது 40ஆயிரத்திற்கு குறையாத வாக்குகள் கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளன. எனவே இந்த மூவரும் 40ஆயிரம் விருப்பு வாக்குகளைப்பெறுவது உறுதியாகியிருக்கிறது.

இந்நிலையில் அக்கட்சியில் போட்டியிடும் தமிழர்களால் 15ஆயிரத்திற்கு மேல் விருப்பு வாக்குகளைப்பெற முடியாது. எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் தமிழர்களால் அக்கட்சியில் உள்ள முஸ்லீம் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு வாக்குகளை சேகரித்து கொடுக்க முடியுமே ஒழிய கணேசமூர்த்தியாலோ அல்லது தங்கேஸ்வரியாலோ நாடாளுமன்ற உறுப்பினராக வரமுடியாது.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்கும் தமிழர்கள் தாங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழர் பிரதிநிதித்துவத்தை பறித்து முஸ்லீம்களுக்கு வழங்கப்படுவதற்காக பயன்படப்போகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் முஸ்லீம்களுக்கும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் தமிழர்களுக்கும் செல்ல வேண்டும். அதை விடுத்து தமிழர்களின் வாக்குகளில் முஸ்லீம்களோ முஸ்லீம்களின் வாக்குகளில் தமிழர்களோ பிரதிநிதியாக வருவது அந்த சமூகங்களுக்கிடையே கசப்புணர்வையே ஏற்படுத்தும்.

முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் பகைமை உணர்வை வளர்த்துவரும் சிறிலங்கா அரசு இத்தேர்தல் மூலமும் இரு சமூகங்களுக்கிடையில் மோதல்களை உருவாக்கவே வழிவகுத்திருக்கிறது.

பல சுயேச்சைக்குழுக்கள் போட்டியிடுவதாலும் தமிழ் கட்சிகள் வாக்குகளைப்பிரிப்பதாலும் தமிழரசுக்கட்சி கடந்த முறையைப்போன்ற ஒருவெற்றியை பெற முடியாவிட்டாலும் மூன்று அல்லது இரண்டு பிரதிநிதிகளையாவது பெறுவதாக இருந்தாலும் தமிழர்கள் ஒற்றுமையோடு செயற்பட்டால் மட்டுமே அந்த இலக்குகளையாவது அடைய முடியும்.

தமிழ் மக்கள் இந்த ஆபத்துக்களை உணராது உதிரி தமிழ் கட்சிகளுக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போன்ற சிங்கள கட்சிகளுக்கோ வாக்களித்தால் 4முஸ்லீம் பிரதிநிதிகளும் ஒரு தமிழ் பிரதிநிதியுமே தெரிவு செய்யப்படும் அபாயம் ஏற்பட்டு விடும். இதை உணர்ந்து மட்டக்களப்பு தமிழ் மக்கள் செயற்படாவிட்டால் வரலாற்று தவறு ஒன்றை இழைத்துவிட்டார்கள் என்ற பழி அவர்கள் தலையில் சுமத்தப்பட்டு விடும். இத்தவறை மட்டக்களப்பு தமிழ் மக்கள் செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன்.

அம்பாறை மாவட்டம்

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் சாதனை படைத்த மாவட்டமாக அம்பாறை மாவட்டம் திகழ்கிறது. இம்மாவட்டத்தில் 7 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 18 அரசியல் கட்சிகளும் 48 சுயேச்சைக்குழுக்களுமாக 66 அணிகளின் சார்பில் 660 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதற்கென 4அடி நீளமான வாக்குச்சீட்டு அச்சிடப்படுவதாகவும் இது வாக்காளர்களுக்கு மட்டுமல்ல வாக்கு எண்ணும் ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் பெரும் சிரமங்களையே ஏற்படுத்தப்போவதாக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதிலும் முக்கியமாக தற்போது 18வீதமாக குறைந்திருக்கும் தமிழ் வாக்குகளை சிதைத்து தமிழ் பிரதிநிதித்துவத்தை பறிப்பதற்காக மகிந்த அரசு செய்த கைங்கரியம் என்றே அம்பாறை தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இம்மாவட்டத்திலும் தமிழ் மக்களின் வாக்குகளைப்பிரிப்பதற்காக தமிழர் விடுதலைக்கூட்டணி, சிவாஜிலிங்கம் அணி, பிள்ளையான் அணி, ஆசனங்களைப்பெறக்கூடிய வாக்கு வங்கி இல்லாத பல தமிழ் கட்சிகளும் போட்டியிடுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 4இலட்சத்து 20ஆயிரத்து 835 வாக்காளர்களில் சுமார் 75ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். இங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் பட்சத்திலேயே ஆகக் கூடியது ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தையாவது பெற்றுக்கொள்ள முடியும். பல தமிழ் கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் போட்டியிடுவது தமிழர்களுக்கு பாதகமாகவே அமையும்.

அம்பாறை மாவட்டத்தில் கிடைக்க கூடிய ஒரு ஆசனத்தை கூட தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்ற அச்சம் தற்பொழுது தமிழ் மக்களுக்கு எழுந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள தமிழரசுக்கட்சி இம்முறை ஒரு ஆசனத்தை பெற வேண்டுமாக இருந்தால் அம்பாறை மாவட்ட மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

இந்த ஐந்து மாவட்டங்களில் இருக்கும் நிலையை இப்பொழுது பார்த்திருக்கிறோம்.

இதன் படி அம்பாறை மாவட்டத்தில் மகிந்த ராசபக்சவின் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெறும் என்பது உறுதி.

திருகோணமலையில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியே அதிக வாக்குகளைப்பெற்று போனஸ் ஆசனத்துடன் இரு ஆசனங்களை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மட்டக்களப்பு வன்னி யாழ்ப்பாணம் மாவட்டங்களில் கூட தமிழர்கள் பிரிந்து நின்று மோதிக்கொள்வது மகிந்த ராசபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்கே வழிவகுக்கும்.

அவ்வாறு வடகிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால் தமிழருக்கு கிடைக்கும் தோல்வியும் வீழ்ச்சியும் சாதாரணமானதல்ல.

மே 19ல் எத்தகையை வெற்றியை சிங்கள தேசம் பெற்றுக்கொண்டதோ அதற்கு சமமான ஒரு வெற்றி கிடைத்துவிட்டதாக ஏப்ரல் 9ஆம் திகதி மகிந்த தரப்பு எக்காளமிடப்போகிறது

தமிழர்களின் ஆயுதப்பலத்தை மட்டுமல்ல அரசியல் பலத்தை கூட வீழ்த்தி விட்டதாகவும் தமிழர் தலைமை தனது கைகளுக்கு வந்துவிட்டதாகவும் அவர்கள் ஆர்ப்பரிக்கத்தான் போகிறார்கள்.

தமிழ் மக்களுக்கு இப்பொழுது இருக்கின்ற ஒரே பலம் வடகிழக்கில் உள்ள அரசியல் தலைமை ஒன்றுதான்.

அந்த அரசியல் தலைமையையும் சிதைத்து சின்னாபின்னமாக்கி அழிப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்களே ஏப்ரல் 9ஆம் திகதி உங்கள் முன் இரு தெரிவுகள் தான் இருக்கப்போகிறது.

ஒன்று தமிழரின் அரசியல் தலைமையை அழித்து விட்டோம் என்ற மகிந்தவின் வெற்றிக்களிப்பில் பங்குகொள்வது

இரண்டு 2009ம் ஆண்டு மே 19க்கு பின் விடைதெரியாது தேம்பி...திகைத்து.....அழுது.....விழுந்தது போல மீண்டும் எழ முடியாத பாதாளத்தில் நின்று அழுவதுதான்.

யோசியுங்கள்....எதை தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்று.

R.Thurairatnam
thurair@hotmail.com

No comments:

Post a Comment