பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோருவதற்கு விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தது ஒரு தடையாகாது என பிரித்தானியா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
விடுதலைப்புலிகள் அமைப்பில் 1992 ஆம் ஆண்டு இணைந்து கொண்ட நபர் ஒருவர் அந்த அமைப்பில் பல பதவி நிலைகளை வகித்திருந்தார். விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினரை வன்னியில் இருந்து காடுகள் ஊடாக கொழும்புக்கு நகர்த்தும் நகர்வுப் பிரிவிலும் அவர் அங்கம் வகித்திருந்தார்.
விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவின் கட்டளை தளபதி பொட்டுஅம்மானின் பாதுகாவலராகவும், புலனாய்வுப் பிரிவின் தாக்குதல் அணியின் இரண்டாம் நிலை தளபதியாகவும் பணியாற்றியிருந்தார்.
2006 ஆம் ஆண்டு அவர் ஒரு நடவடிக்கைக்காக கொழும்புக்கு அனுபப்பட்டிருந்தார். அங்கு அவர் இரு மாதங்கள் தங்கியிருந்தபோது சிறீலங்கா அரசு அவரின் பிரசன்னத்தை அறிந்துகொண்டது. இந்த நிலையில் அவர் அங்கிருந்து பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்றிருந்தார்.
அங்கு அவர் அகதித்தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் போர்க் குற்றங்களின் அடிப்படையில் அவரின் மனு முதலில் நிராகரிக்கப்பட்டது.
ஆனால் அவரின் மேன்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், ஆதாரங்கள் இன்றி ஒரு தனிநபருக்கு எதிராக போர்க் குற்றங்களை முன்வைக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனை எதிர்த்து உள்விவகார செயலாளர் விண்ணப்பித்த போதும், பின்னர் அவர் தனது விண்ணப்பத்தை கைவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment