Sunday, March 28, 2010

அடிப்படை உரிமைகளுக்காக சிங்கள அரசுடன் மட்டுமன்றி கூட்டமைப்புடனும் போராட வேண்டியிருக்கிறது!

இன்று கூட்டமைப்பு உடைந்து போனமை கவலைக்குரிய ஒரு விசயமே. நாங்கள் கடைசி வரையும் ஒற்றுமைக்காகவே பாடுபட்டோம். இப்போதும் அதையே வலியுறுத்துகிறோம். ஆனால் ஏன் ஒற்றுமை? எதற்காக கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது? அந்த அடிப்படைகளைப் பாதுகாத்து, அந்த நோக்கத்தை அடைய வேண்டுமே தவிர, எல்லாருமாகச் சேர்ந்து மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யக்கூடாது. இப்போது நாங்கள் அடிப்படை உரிமைகளுக்காக சிங்கள அரசாங்கத்துடன் மட்டும் போராடவில்லை. கூட்டமைப்புடனும் போராட வேண்டியிருக்கிறது.

இவ்வாறு பொங்குதமிழுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தலைவராகவும் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளராகவும் இருக்கும் அவர் பொங்குதமிழ் இணையத்திற்கு வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

அடிப்படையான விசயங்களில் விட்டுக் கொடுப்புகளைச் செய்யாமல், ஏனைய நிலைமைகளில் நாம் சூழ்நிலைக்கு ஏற்றமாதிரிச் செயற்பட வேண்டும். எங்களுடைய மக்களும் நாங்களும் இவ்வளவு தியாகங்களைச் செய்து கஸ்ரங்களை அனுபவித்ததும் இந்த அடிப்படையான விசயங்களுக்காகவே. ஆனால், அடிப்படையான விசயங்களில் அரசாங்கத்துடன் பேசுவதற்கு முன்னரே நாமே விட்டுக் கொடுப்புகளைச் செய்யலாமா?

கிழக்கில் இருந்து விடுதலைப்புலிகள் வெளியேறியதைத் தொடர்ந்து சம்மந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோர் தங்களுடைய தீர்வு யோசனைகளைத் தயாரிக்கத் தொடங்கி விட்டனர்

ஆனால் இதை அவர்கள் கூட்டமைப்பின் ஏனைய பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்திச் செய்யவில்லை. அல்லது அப்படியொரு தீர்வு யோசனையை தயாரித்த பின்னர் கூட அதை கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கவில்லை. இதை அறிந்து நான்; கொடுத்து வந்த அழுத்தத்தின் காரணமாகவே ஒரு கட்டத்தில் என்னுடைய பார்வைக்கு அதைத் தந்தனர். அதுவும் கடந்த ஜூன் மாதத்தில்தான்.

அப்பொழுதுதான் அந்தத் தீர்வு யோசனைகளில் இருக்கும் பெருங்குறைபாடுகளைக் கண்டேன். அதிலிருந்துதான் எமக்கிடையிலான முரண்பாடுகள் ஆரம்பமாகின என்பதைச் சுட்டிக்காட்டிய திரு கஜேந்திரகுமார் மேலும் தெரிவிக்கையில்,
வன்னிக்குச் சென்றிருந்த மாவை சேனாதிராஜாவிடம் தலைவர் பிரபாகரன் தெரிவித்திருந்தார், 'ஒஸ்லோ பிரகடனம் என்று சொல்லப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது ஒரு இணக்கப்பாட்டுக்கான அடிப்படைகளைப் பரிசீலிப்பதற்காகக் கூறப்பட்டதே தவிர, அதில் வேறு எந்த அடிப்படைகளும் இல்லை' என்று.

வன்னியிலிருந்து திரும்பிய பின்னர் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவைக் கூட்டி ஒஸ்லோ ஆலோசனையை நிராகரிப்பதாக திரு. மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார். அத்துடன், 2004 இல் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த ஒஸ்லோ விசயம் சொல்லப்படவே இல்லை. இப்போது விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்ட நிலையில் இந்த முறை தேர்தல் சந்தர்ப்பத்தில் அதற்கு உயிரூட்டப்படுகிறது. இது எதற்காக என திரு கஜேந்திரகுமார் கேள்வி எழுப்பினார்.

இந்தியாவை அனுசரிப்பது என்பது எங்கள் மக்களின் நலனுக்காகவே தவிர, தலைமைகளின் நலனுக்காக அல்ல. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட அடுத்த சில நாட்களில் இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனும் பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணனும் கொழும்புக்கு வந்தபோது நடந்த சந்திப்பில் தமிழ் மக்களின் தீர்வு குறித்த பேச்சு வந்தது. அப்போது சிவசங்கர் மேனன் சம்பந்தனிடம் சொன்னார், நீங்கள் வரைகின்ற தீர்வு யோசனைகள் உங்களுக்குத் திருப்தியாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியம் வேணுமே என்று. அப்போது நான் கேட்டேன், எங்கள் மக்களின் உணர்வுகளையும் நலனையும் எப்படிப் புறக்கணிக்க முடியும் என்று. அவர்கள் பதிலளிக்கவேயில்லை.

நாம் சம்பந்தன் அவர்களை மதித்திருக்கிறோம். அவரே இதை நன்றாக அறிவார். அவருக்கு கடந்த காலத்தின் பல விசயங்கள் தெரியும். நீண்டகால அரசியல் அனுபவமுடையவர். சட்ட நுணுக்கங்களைத் தெரிந்தவர். சிங்கள தேசியத்தைப் பற்றிப் புரிந்தவர். அவரோடு எட்டு ஆண்டுகளாக நெருங்கிப் பழகி வந்திருக்கிறேன். அந்தக் காலத்தில் இதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால், இவ்வளவும் தெரிந்த அவரும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு மாறாக நிற்பதையிட்டே நாங்கள் அவர்களுடன் முரண்பட்டோம். தெரிந்து கொண்டே தவறு செய்கிறார்கள். இவர்களின் மீது இவர்களுடைய கடந்த காலத்தைய நடவடிக்கைகளின் மீது பல விமர்சனங்கள் இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். இப்போதும் ஏறக்குறைய மக்களுக்கு அந்நியமாகவே நடந்து கொள்கிறாரகள்.

சுரேஸ் கூட்டமைப்பினுள் எப்படியான அதிகாரத்துடன் இயங்குகிறார். அவருக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது? பல கட்சிகளையும் கட்சி சாராதவர்களையும் உள்ளடக்கி உருவாகிய கூட்டமைப்பில் ஜனநாயகம், முறையான கருத்துப் பரிமாற்றம், மக்களின் அபிலாசைகளுடன் சம்மந்தப்பட்ட பொருத்தமான தீர்மானங்கள், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான விசுவாசமான முயற்சிகள் என்று நடந்திருந்தால் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கவே வாய்ப்பில்லை.

இந்த இடத்தில் மாவை சேனாதிராஜா முக்கியமான பங்கை வகித்திருக்க வேண்டும். அவருக்கு இன்னொரு வகையான போராட்ட வாழ்க்கைத் தகுதி இருக்கிறது. ஆனால், அவரும் பல சந்தர்ப்பங்களில், தமிழ் மக்களின் அரசியல் உரிமை தொடர்பான பல விசயங்களில் மௌனமாக இருப்பதும் நழுவல் போக்கைக் கடைப்பிடிப்பதும் நிலைமைகளை மேலும் மோசமாக்கியுள்ளன.

உண்மையில் எங்களுடைய கொள்கை உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளுதல் என்பதாகும். அதாவது முன்னோட்டமாகச் சமஸ்டியை அடைதலாகும். இலங்கைத் தீவில் இரண்டு மொழிபேசும் இனங்கள், அவர்கள் வாழும் இரண்டு தேசங்கள் என்ற அடிப்படையில் இந்தப் பிரச்சினை அணுகப்பட வேண்டும் எனவும் இவ் நேர்காணலில் தெரிவித்துள்ளார் திரு கஜேந்திரகுமார்.

நன்றி -பொங்குதமிழ்

No comments:

Post a Comment