Tuesday, March 23, 2010

இலங்கைக்கு அப்பால் புவியோடு விரிசல்: பாரிய பூகம்ப ஆபத்து ஏற்படலாம்?

இலங்கைக்கு அப்பால் புவியோடு விரிசல்: பாரிய பூகம்ப ஆபத்து ஏற்படலாம்?

இலங்கைத்தீவுக்கு அப்பால் புவியோட்டில் ஏற்பட்டுள்ள விரிசல் அதிகரித்து- புதியதொரு புவியோடு தோன்றியிருப்பதால் இலங்கையில் பூகம்ப ஆபத்து ஏற்படலாம் என்று புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்து சமுத்திப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் புவியதிர்வுகளின் விளைவாகவே இந்த புதிய புவியோடு தோன்றியுள்ளது.

இது இலங்கைத்தீவுக்குத் தெற்கே சுமார் 1000 கி.மீற்றர் தொலைவில் உருவாகியுள்ளது.

இதன்காரணமாக இலங்கையில் பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய ஆபத்து உருவாகியுள்ளதாக மூத்த புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கபில தகநாயக்க எச்சரித்துள்ளார்.

இவர் பேராதனைப் பல்கலைக்கழக்கத்தின் புவியியல்துறைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

புதிதாகத் தோன்ற ஆரம்பித்துள்ள புவியோட்டின் விளைவாக இலங்கையில் பூகம்ப ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

அதுமட்டுமன்றி பாரிய சூறாவளி, வெள்ளம், சுனாமி, நிலச்சரிவு போன்ற அபாயங்களுக்கும் நாடு முகம் கொடுக்க நேரிடலாம்.

அண்மையில் இலங்கைக்கு அருகே இடம்பெற்ற புவியதிர்வு 6.0 என்று றிச்டர் அளவுகோலில் பதிவாகி இருந்தது.

அண்மையில் இடம்பெற்ற புவியதிர்வுகள் கடல்பகுதியில் தான் இடம்பெற்றன என்று நிம்மதியோடு இருக்க முடியாது.

புவியோடுகளின் நகர்வுகளால் பூகம்பம் இலங்கையின் நிலப்பரப்பிலும் கூட எந்த நேரத்திலும் ஏற்படலாம்.

அதுபற்றி முன்கூட்டியே எச்சரிக்க முடியாது.

கொழும்பு கோட்டைப் பகுதியை மையம் கொண்டு 400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு பூகம்பத்தில் 2000 பேர் வரை பலியாகினர்.

இதன்அடிப்படையில் பார்க்கும் போது விரைவில் இலங்கைத்தீவுக்கு அருகில் பாரிய பூகம்பம் ஒன்று நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அண்மையில் நிகழ்ந்த 6.0 றிச்டர் அளவுள்ள புவியதிர்வு சாதாரணமானதொன்றல்ல. மிகவும் பாரதூரமானது.

பொதுமக்கள் கட்டடங்களை அமைப்பதற்கு முன்னர் புவியியலாளர்களின் ஆலொசனைகளைப் பெறுவது அவசியம்.

கொழும்பில் பூகம்பத்துக்குத் தாக்குப் பிடிக்கக் கூடிய கட்டடங்கள் என்று ஐந்து கூடக் கிடையாது என்றும் பேராசிரியர் கபில தகநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கைக்கு வெளியே புதிய புவியோடு ஒன்று உருவாகியிருப்பதை புவியியல் ஆய்வு மையமும் உறுதி செய்துள்ளது.

இதன்காரணமாக இலங்கையில் பூகம்பம் ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையத்தின் தலைவரான கலாநிதி விஜயானந்த கருத்து வெளியிடுகையில்,

“மில்லியன் கணக்கான வருடங்களாக இணைந்திருந்த இந்தோனேசியாவுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடைப்பட்ட புவியோடுகள் எந்த நேரத்திலும் பிளவடையலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக கடல் படுக்கையின் ஆழத்தில் விரிசல்கள் தோன்றியுள்ளன. இதன்விளைவாகவே கடந்த வாரம் புவியதிர்வு ஒன்று ஏற்பட்டது.
அது றிச்டர் அளவுகோலில் 6.6 என்று பதிவாகியுள்ளது.

அதேவேளை பேராசிரியர் கபில தகநாயக்க எச்சரித்தது போன்ற புதிய புவியோடு உருவாகியுள்ளதன் விளைவாக சூறாவளிகளோ புயல்களோ ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை.

இந்த இயற்கை அனர்த்தங்களுக்கும் புவியோடுகளின் நகர்வுகளுக்கும் எந்தத் தொடர்புகளும் இல்லை.

அது வானியல் மாற்றங்களின் விளைவாகத் தோன்றுவதே தவிர புவியியல் மாற்றங்களுடன் தொடர்புடையதல்ல.”

என்று கலாநிதி விஜயானந்த மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை எந்தநேரத்திலும் அனர்த்தங்களைச் சமாளிக்கக் கூடிய விதத்தில் தயாராகவே இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

எந்த இயற்கை ஆபத்துக் குறித்தும் பொதுமக்களுக்கு முன்கூட்டியே எச்சரிப்பதற்கு தாம் மாவட்டங்கள் தோறும் அதிகாரிகளை நியமித்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment