சிறிலங்காவின் வடக்கே உள்ள ஒரு முக்கிய நகரமும் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் முன்னாள் தலைநகருமான கிளிநொச்சிக்கு மக்கள் அதிகமான எண்ணிக்கையில் திரும்பி வந்து கொண்டிருப்பதால் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அந்நகரம் திணறி வருகிறது.
இவ்வாறு ஐ.நா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து இதுவரை 24,000 மேற்பட்ட மக்கள் அதாவது நகரத்தின் மக்கள் தொகையில் 30 சதவிகிதம் திரும்பி வந்து விட்டதாக சிறிலங்கா ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவர்களில் பெரும்பான்மையானோர் இன்னமும் கூடாரங்களிலேயே வசிப்பதாக கூறப்படுகிறது.
26 வருடங்களாக நடந்து வந்த போர் தீவிரமானதை தொடர்ந்து 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த நகரத்தில் இயங்கி வந்த அனைத்து அரசுசாரா உதவி நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டன.
2009ம் ஆண்டு மே மாதம் விடுதலை புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததாக அரசு அறிவித்ததிலிருந்து இன்று வரை பத்து மாதங்களாக கிளிநொச்சிக்கு மக்கள் திரும்பி வந்து கொண்டு உள்ளனர்.
2008ம் ஆண்டுக்கு முன்னாள் இந்த நகரத்தில் 90,000 அதிகப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர். யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிற்கு இடையே உள்ள முக்கிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் போர் நடந்த போது கிளிநொச்சியில் இருந்த அனைவரும் முழுவதுமாக காலி செய்யப்பட்டனர். போரினால் நகரின் கட்டமைப்பு வசதிகளான பாடசாலைகள், மருத்துவமனைகள், தண்ணீர் வசதி, மின்சாரம் அனைத்துமே சேதப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டதுடன் 80 சதவிகித வீடுகளும் பாதிப்புக்கு உள்ளாகியது.
இறுதிக் கட்ட போரின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகரவாசிகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வவுனியா மற்றும் பிற பகுதிகளில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தாங்களாகவே தஞ்சமடைந்தனர்.
அனைவரும் அவரவர் சொந்த பகுதிகளுக்கு திரும்பலாம் என அரசு முடிவு அறிவித்ததிலிருந்து பெரும்பான்மையான மக்கள் திரும்பி வந்து கொண்டிருப்பதால் தரமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசுக்கு மிக பெரிய சவாலாக உள்ளது.
சரியான இருப்பிட வசதிகளும் தண்ணீர் வசதிகளும் இல்லாமல் இருப்பது முக்கிய பிரச்சினையாக உள்ளது என உள்நாட்டில் இயங்கி வரும் உதவி நிறுவனத்தை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
பெரும்பான்மையான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் சிறிலங்காவில் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதத்தில் முடிவுறும் தென்மேற்கு பருவ மழை கால கட்டங்களில் திரும்பி வந்த மக்கள் மிகுந்த சிரமங்களுக்குள்ளாக நேரிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வீடுகள் அனைத்திலும் அடிப்படை வசதிகளான கழிப்பிடம், தண்ணீர், மின்சாரம் கூட இல்லாமல் இருப்பதால் வாழ்வது மிகவும் கடினமாக உள்ளதென்றும் தாங்கள் சரியான மேற்கூரை கூட இல்லாமல் வீடுகளில் இருப்பதாகவும் கடந்த மாதம் வீடு திரும்பிய குமாரி தேவராசா என்கிற இல்லத்தரசி தெரிவித்துள்ளார்.
மற்றவர்கள் சமூக சேவை நிறுவனங்கள் மூலம் அமைக்கபட்ட தார்பாயை மேற்கூரையாக கொண்ட கூடாரங்களில் வாழ்ந்து வந்த போதிலும் அங்கு வாழ்ந்து வரும் சிலர் அரசு தங்கள் வீடுகளை செப்பனிடுவதற்கும் கட்டுவதற்கும் தேவையான உதவிகளை வழங்கியுள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் சிலர் உடல் நலம், கல்வி போன்றவற்றில் உள்ள குறைகளை கூறுகின்றனர்.
தங்களுக்கு சரியான வேலைவாய்ப்புக்கள் இல்லை என்றும் கிடைக்கின்ற வேலைகளை செய்து கொண்டும் அரசு அளிக்கும் உதவித் தொகைகளிலே வாழ்ந்து வருவதாகவும் தங்களுக்கு பொருத்தமற்ற வேலைகளையே செய்து வருவதாகவும் நளினி சபேசன் என்பவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் மீள்குடியேறிய ஒரு கடைக்கு சொந்தக்காரரான டேவிட் சிவசுந்தரம் தினமும் வாழ்க்கைக்காக போராட வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசிடம் தங்களுக்கு பெரிய அளவில் உதவுவதற்கு தேவையான அளவிற்கு பணம் இல்லை என்றே தான் கருதுவதாகவும் போரினால் தான் கடைக்கு ஏற்பட்ட சேதங்களை சரி செய்துகொண்டிருந்த அவர் மேலும் கூறினார்.
தனக்கு ஏகப்பட்ட குறைகள் இருப்பதாகவும் தற்போதுள்ள சூழ்நிலையில் தான் அதை மற்றவரின் குற்றங்களாக சுட்டிக் காட்ட விரும்பவில்லை என்றும் நம்முடைய வாழ்க்கை மேம்பட நாம் தான் போராட வேண்டும் என்றும் கிளிநொச்சிக்கு திரும்பி வந்து மீள்குடியேறியவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உணவு, அவசர உதவிகள், கல்வி, இருப்பிடம், சுகாதாரம் மற்றும் சுத்தமான குடிநீர் போன்ற புனரமைப்பு பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் உதவி அமைப்புக்களும் சிறிலங்கா அரசுக்கு உதவி வருகின்றன.
புனரமைப்பு பணிகள் தொடங்கிய பின் 185,000 பேர் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பி குடும்பத்துடன் இணைந்து வாழ்வதாகவும் 93,000 பேர் தொடர்ந்து முகாம்களிலேயே வாழ்ந்து வருவதாகவும் இவர்களில் பெரும்பான்மையானோர் வவுனியா மற்றும் அதை சுற்றியுள்ள முகாம்களிலேயே வாழ்வதாக ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
Saturday, March 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment