சுயநிர்ணய உரிமை என்பது ஒரு பூதமுமல்ல பிசாசுமல்ல. அது ஐக்கியநாடுகள் சபையின் சாசனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முக்கியமான ஒரு சொற்பிரயோகம். ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் குடியியல் சம்பந்தமான அரசியல் சாசனத்தில் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு தனித்துவமான மக்களுக்கு அந்த சுயநிர்ணய உரிமை உண்டு. அதுதான் அவர்களுடைய மிகப் பெறுமதியான மனித உரிமை. அது அவர்களின் பிறப்புரிமை.அதை எவரும் மறுக்க முடியாது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற குழுத்தலைவரும் திருமலை மாவட்ட பிரதம வேட்பாளருமான ஆர்.சம்பந்தன் கூறினார்.
வன்னியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஏறக்குறைய 30 வருடங்களாக தந்தை செல்வாவின் தலைமையில் எமது உரிமைகளைப் பெறுவதற்காக நாங்கள் பல ஒப்பந்தங்களைச் செய்தோம். பல்வேறு சாத்வீகப் போராட்டங்களில் ஈடுபட்டோம். ஆனால் எமது பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காணப்படவில்லை.
நாங்கள் எதைக் கேட்டோம்? இந்த நாட் டில் வாழ்கின்ற தமிழ்மக்கள் ஒரு தனித்தேசிய இனம். அதை எவரும் மறுக்க முடியாது. நாம் தனித்துவம் வாய்ந்தவர்கள். தமிழர் சிங்களவர்கள் அல்ல. சிங்களவர்கள் தமிழர்களும் அல்ல. அதுதான் உண்மை. எமக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கின்றது. எமக்கென்று ஒரு மொழி இருக்கின்றது. எமக்கு ஒரு கலாசாரம் இருக்கின்றது.
ஒரு தனித்துவம் வாய்ந்த மக்களுக்கு சுயநிர்ணய உரிமைக்கு உரித்துண்டு. அவர்கள் தங்களுடைய அரசியல், குடியியல்,உரிமைகளைப் பொறுத்தமட்டில் தங்களது அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு வழி இருக்க வேண்டும். அந்த நாட்டின் ஆட்சி முறையின் கீழ் அந்த வசதி இருக்க வேண்டும்.அதன் மூலமாக அவர்கள் தங்களுடைய அரசியல் குடியியல் பொருளாதார, சமூக, கலாசார விடயங்களை அந்த மக்களின் தீர்மானங்களின் அடிப்படையில் தங்களுடைய ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி அவர்கள் தெரிவு செய்கின்ற பிரதிநிதிகளின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ளும் வசதி, அதிகாரம் இருக்க வேண்டும்.
அதாவது எமது பாதுகாப்பு, எமது சட்டம் ஒழுங்கு, எங்களுடைய பிரதேச பாதுகாப்பு, காணி சம்பந்தமான அதிகாரம், கல்வி சம்பந்தமான அதிகாரம், எமது கடற்றொழில், விவசாயம், நீர்ப்பாசனம், கைத்தொழில், வேலைவாய்ப்பு, போக்குவரத்து. அதாவது எமது பொருளாதார சமூக கலாசார விடயங்கள் சம்பந்தமாக அதிகாரங்களைச் செலுத்தி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் சுயநிர்ணய உரிமை. அதைத்தான் நாங்கள் கேட்கிறோம். இதைத்தான் தந்தை செல்வா கேட்டார்.
இவ்விதமான ஒரு தீர்வை அடைய வேண்டும் என்பதற்காக எமது மக்கள் 1956 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் தொடக்கம் தொடர்ச்சியாக தமது பூரணமான இறைமைக்காக வாக்களித்து தங்களுடைய ஜனநாயக உரிமையை உலகத்திற்கு அறிவித்தார்கள். ஆனால் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எமது மக்களுடைய உரிமைகள் நீண்டகாலமாக மறுக்கப்பட்டு எமது மக்கள் மீது ஆட்சியாளர்களுடைய அனுசரணையுடன் வன் முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
அதன் காரணமாகத்தான் இந்த நாட்டில் ஓர் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆயுதப் போராட்டம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ள சூழலில் சர்வதேச சமூகம் இன்று இலங்கைத் தீவில் நிரந்தர சமா தானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் அந்த நாட்டு மக்கள் மத்தியில் புரிந்துணர்வு, நல்லிணக்கம் ஏற்படவேண்டும். என்று சொல்கின்றது
இவ்வாறான நல்லிணக்கம், புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமானால் தமிழ்பேசும் மக்களுக்கு தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அந்த மக்கள் தாம் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் சுயஆட்சியைப் பெற்று தங்களுடைய சகல தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு நிலைமை ஏற்பட வேண்டும். இதைத்தான் சர்வதேச சமூகம் கூறுகின்றது.
தமிழர் பேரவை அண்மையில் நடத்திய மாநாட்டில் பங்கு பற்றிய ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகாரச் செயலர் டேவிட் மிலிபான்ட், அந்த நாட்டின் பிரதமர் கோடன் பிரவுண், கொன்சவேட்டிவ் கட்சியின் நிழல் வெளிவிவகார செயலாளர் ஆகியோரும் இதே கருத்தைத் தான் தெரிவித்துள்ளார்கள். கொன்சவேட்டிவ் கட்சியின் நிழல் பாதுகாப்பு செயலர் லியாம் பொக்ஸ் சமீபத்தில் இலங்கைக்கு வந்திருந்தபோதும் இதே கருத்தைத்தான் தெரிவித்தார்.
அண்மையில் பாரத வெளிவிவகார அமைச்சர் சிறிகிருஷ்ணா பாராளுமன்றத்தில் கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் இலங்கையில் வாழ்கின்ற தமிழ்பேசும் மக்கள் திருப்தியடையக் கூடிய வகையில் அவர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்க வேண்டும் எனக் கூறினார். இதைத்தான் ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் கருத்தாக உள்ளது. " பொதுவாக சர்வதேச சமூகமும் இதைத் தான் கூறி வருகின்றது.
இப்போது யுத்தம் முடிவடைந்துள்ள அமைதியான சூழலைப் பயன்படுத்தி ஓர் அரசியல் தீர்வைக்காண வேண்டியது அரசாங்கத்தின் கட்டாயக் கடமை. இதிலிருந்து அது தவறக் கூடாது என்பதை சர்வதேச சகம் மிகவும் தெளிவாக உறுதியாகக் கூறி வருகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இந்தத் தேர்தல் முடிவடைந்ததும் தமிழ்த் தலைவர்களுடன் பேசப்போவதாகக் கூறியுள்ளார்.
எனவே இந்தத் தலைவர்கள் யார் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இலங்கைத் தமிழர சுக்கட்சியாகிய நாங்கள் வடக்கு கிழக்கு மாகாணத்தில் அனைத்து தேர்தல் மாவட் டங்களிலும் போட்டியிடுகின்றோம். வேறு எந்த ஒரு தமிழ்க்கட்சியும் இவ்வாறு வட கிழக்கு மாவட்டங்கள் அனைத்திலும் போட்டியிடவில்லை.
தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்படு கின்ற தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளுடன் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் பேசப்போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். இந்தப் பேச்சுக்களில் யார் கலந்து கொள்வது என்பதை நீங்கள் மிகவும் கவனமாகச் சிந்தித்து முடிவு செய்து பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய வேண்டும்.
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளவர்களைக் கொண்டவர்கள் எமது கட்சியின் சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். எனவே பலம் வாய்ந்த ஓர் அணியை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். அந்த அணி இலங்கை அரசாங்கத்துடன் தேர்தல் முடிந்ததன் பின்னர் உங்கள் சார்பில் பேச்சுக்களில் பலத்துடன் ஈடுபட வேண்டும். இந்தத் தேர்தலில் தமிழ் மக்களுடைய அரசியல் பலத்தைப் பலவீனப்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்களுடைய பிரதேசத்தைக் குறைப்பதற்கான ·யற்சிகளை முன்னெடுத்திருக்கின்றது. தங்களுக்கு வசதியானவர்களை உங்களுடைய வாக்குகளின் மூலம் இந்தத் தேர்தலில் தெரிவு செய்து அதன் மூலம் உங்களின் அரசியல் பலத்தைக்குறைத்து உங்களுக்கான அரசியல் தீர்வைப் பலவீனப்படுத்துவதற்காக அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. இதனை எமது மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சூழ்ச்சிகளில் நீங்கள் பலியாகிப் போய்விடக் கூடாது என்பதைக் கூற விரும்புகிறேன்.
அபிவிருத்தி பற்றி முக்கியமாகப் பேசப்படுகின்றது. அபிவிருத்தி முக்கியம். அது அவசியம்தான். உண்மையான அபிவிருத்தியென்றால் அது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான எமது மக்கள் தாங்களே முன்னுரிமை அடிப்படையில் தீர்மானிக்கின்ற அபிவிருத்தியாக இருக்க வேண்டும்.
தங்களுக்கு எது அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதை எமது மக்கள் தீர்மா னிப்பதாக இருக்கவேண்டும். இதுதான் உண்மையான அபிவிருத்தியாக இருக்க ·டியும். எங்களுடைய பின் சந்ததி இந்த நாட்டில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். அவர்கள் தமது சொந்த கால்களில் நிற்க வேண்டும் பல விடயங்களைச் சொந்தமாகத் தீர்மானிப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். எனவே அதற்காக நல்லதொரு முடிவை எடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உங்களுக்கு இருக்கின்றது.
நாங்கள் அபிவிருத்தியையோ மக்களு டைய அத்தியாவசிய தேவைகளையோ நாங்கள் புறக்கணிக்கவில்லை. அந்த விடயங்களை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றோம்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 42 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டிருக்கின் றன. இதுபற்றி நாங்கள் பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றோம். எமது மக்களின் மீள்குடியமர்வு, புனர்வாழ்வு மக்களுடைய வீட்டு வசதி தொழில் வசதி விவசாயிகள் கடற்றொழில் செய்பவர்கள், கைத்தொழில் செய்பவர்களுக்குப் பல்வேறு தேவைகள் இருக்கின்றன. அவர்களுக்கான அடிப்படை வசதிகள் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். இந்த இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த வீடுகளில் சொந்த வருமானத்தில் கௌரவமாக வாழ்ந்தவர்கள். இவர்கள் இன்று அனாதையாக நிர்க்க தியாக தெருவிலே நிற்கின்றார்கள். இது தொடர முடியாது.
இதுபற்றி வெளிநாடுகளிடம் நாங்கள் பேசியிருக்கின்றோம். வெளிநாட்டு நிறுவனங்களிடம் எங்களுடைய புலம் பெயர்ந்த தமிழர்களுடன் பேசியிருக்கின்றோம்.
இந்த விடயங்களை ஆராய்வதற்காக சமீபத் தில் சுவிற்சர்லாந்திலும் ஒஸ்ரியாவிலும் இரண்டு மாநாடுகள் நடைபெற்றன. இதில் நாங்கள் இதுபற்றி எடுத்துக் கூறியிருக்கின்றோம். தேர்தல் முடிந்த பின்னர் தொடர்ந்து நடைபெறப் போகின்ற மாநாட்டிலும் நாங்கள் கலந்து கொண்டு இதுபற்றி ஆராய இருக்கின்றோம்.
எனவே பலம் வாய்ந்த அணி யாக வடகிழக்கில் நீங்கள் எங்களைத் தெ>வு செய்ய வேண்டும். நாங்கள் பெரும்பான்மை பலம்வாய்ந்தவர்களாக இருந்தால் எமது மக்களின் ஜனநாயக முடிவு இது தான் என்பதை வெளிப்படுத்தி உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சர்வதேச ஆதரவைத் திரட்டி நாங்கள் இதுவிடயத்தில் செயற்பட இருக்கின்றோம்.
எனவே நாங்கள் மிகவும் வினயமாக உங்களைக் கேட்டுக்கொள்கின்றோம். நீங்கள் எம்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு விரோதமாகப் போக மாட்டோம். ஒரு போதும் நாங்கள் உங்களைக் கைவிட மாட்டோம். இது அரசாங்கத்திற்கு நன்றாகத் தெரியும். அதன் காரணமாகத்தான் மற்றவர்களை உருவாக்குவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றார்கள். அதற்கு நீங்கள் இடமளிக்கக் கூடாது. அந்த முயற்சியை முறியடிக்க வேண்டியது உங்களுடைய கடமை. அந்தப் புனித கடமையில் இருந்து நீங்கள் தவறக்கூடாது.
வேறு கட்சியில் இருந்து ஒருவரையோ இருவரையோ நீங்கள் தெரிவு செய்வதன் மூலம் எந்தப் பயனையும் நீங்கள் அடையப் போவதில்லை. இந்தத் தேர்தலில் சொந்த பந்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்தத் தேர்தலில் கொள்கையின் அடிப்படையில் மாத்திரம் தான் எமது மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் எதிர்கால சந்ததி நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் அதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய தேர்தல் இதுவாகும். ஆதலால் முழுமையாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்வதற்காக நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
பிரிந்து போயுள்ள அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸினர் உங்கள் தவறை உணர்ந்து நீங்கள் திரும்பி வரவேண்டும் என்று விரும்புகிறேன். உங்களுடைய தலைவர் எங்களுடன் இருக்கின்றார். அவர் அனுபவமிக்கவர். நீங்களும் எங்களுடன் வந்து சேர வேண்டும். தயவு செய்து தமிழ் மக்களை இந்தச் சந்தர்ப்பத்தில் பிரிக்காதீர்கள்.
அவ்வாறு எமது மக்களை இந்த நேரத்தில் பிரிப்பது மன்னிக்க முடியாதது. ஒற்றுமையாக நின்று ஒரு நிரந்தரமான நியாயமான நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு அரசியல் தீர்வைப் பெறவேண்டியது எமது மக்களின் அத்தியாவசிய தேவை. ஆகவே நொந்து போயிருக்கின்ற மக்களைத் தூக்கி விட வேண்டியது எமது தலையாய கடமை.
ஆகவே பிரிந்து நிற்காதீர்கள் எம்மிடம் வாருங்கள் வந்து சேருங்கள் என கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் அப்படி பிரிந்திருந் தாலும் எமது மக்கள் அவர்களுக்குத் துணை போகக் கூடாது என மிகவும் அன்பாக எமது மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment