Friday, March 26, 2010

கிளிநொச்சி முன்னாள் அரச அதிபர் வெற்றிலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி மக்களை வலியுறுத்துகிறார்

கிளிநொச்சியின் முன்னாள் அரச அதிபர் தி. இராசநாயகம் கிளிநொச்சி மக்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு வாக்களிக்கும்படி வற்புறுத்தி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரச அதிபர் சிறீலங்கா சுதந்திக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பரப்புரைச் செயலர் போன்று செயற்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் கிளிநொச்சிக்கான விஜயத்தினை மேற்கொண்டு அங்கிருக்கின்ற மீனவர்கள் சிலருக்கு மீன்பிடி உபகரணங்கள், சைக்கிள்கள் சிலவற்றை வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து இராசநாயகத்தினைச் சந்தித்த டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மக்களது வாக்குகளை தமக்குப் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளதுடன், சில வாக்குறுதிகளையும் அவருக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி அரச அதிபர் ஆவதற்கு உரிய முனைப்புக்களில் ஈடுபட்டு வருகின்ற இராசநாயகம், கிளிநொச்சி மாவட்ட மக்களது வாக்குகளை அரசாங்கத்தின் வெற்றிலைச் சின்னத்திற்கு வழங்க வைப்பதன் மூலம் தனது எதிர்பார்ப்புக்களை ஈடு செய்ய முடியும் என முயற்சி செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தேசியத்தை வலியுறுத்த வாக்களிக்க வேண்டும் என மக்கள் கருத்து வெளியிட்டால், தேசியத்திற்கு வாக்களிக்க வேண்டிய தேவை தற்போது கிளிநொச்சி மக்களுக்கு இல்லை என்றும், அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கான வசதிகளைப் பெறுவதற்கு என்ன வழி உள்ளதோ அதனைக் கவனத்தில் எடுத்தே வாக்களிக்க வேண்டும் என்றும் இராசநாயகம் கூறிவருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கியஸ்தர்களை அணுகி மக்களை வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து ஆளும் அரச அங்கத்தவர்களையே வெற்றிபெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வற்புறுத்தி வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment