கொக்காவிலில் சிங்களக் குடியேற்றம் - சுரேஷ் பிரேமச்சந்திரன்
வன்னி முல்லைத்தீவின் கொக்காவில் பகுதியில் ஏ 9 சாலை மருங்கில் மீள்குடியேற்றம் என்ற வகையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் நடைபெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழில் போட்டியிடும் வேட்பாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை சுழிபுரம்-தொல்புரம் பகுதிகளில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இந்த புகாரை முன்வைத்துள்ளதோடு, வன்னியில் போர் நடந்தபோது அங்குள்ள மக்கள் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு இடம்பெயர்ந்தபோது விட்டுச்சென்ற வாகனங்களை இலங்கை ராணுவத்தினர் எடுத்து விற்று வருவதாகவும், அவ்வாகனப் பாகங்களையும் காசாக்கி வருவதாகவும் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த மாதிரியான வியாபாரம் அனுராதபுரம் பகுதியில் நல்ல சூடாக நடந்துவருவதால் ராணுவத்தினர் லாபம் சம்பாதிப்பதாகக் கூறினார் அவர்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கோபுரமும், அதற்கருகில் இலங்கை ராணுவத்தின் பெரிய முகாம் ஒன்றும் கொக்காவிலில் அமைந்துள்ளன. இந்த முகாமை அண்டிக்கட்டப்படும் வீடுகளும், பாடசாலைகளும் சிங்கள ராணுவத்தின் குடும்பத்தினருக்காகவே கட்டப்படுவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். இதேவேளை முல்லைத்தீவு வற்றாப்பளைப் பகுதிக்கு அருகாமையிலுள்ள கேப்பாபிலவு பகுதியையும் இலங்கை ராணுவத்தினர் பெரியதொரு முகாமாக மாற்றியுள்ளனர். இங்கும் பல சிங்களக் கிராமங்கள் கட்டப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார் அவர்.
தமிழ் மக்களின் வாகனங்கள் விற்கப்படுவதாக தாம் குரலெழுப்பியபோதும் அவ்வாறான வாகனங்கள் எதுவும் வன்னியில் இருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளாராம் மஹிந்த ராஜபக்ஷ. ஆனால் வன்னியில் தமது வாகனங்களைக் கைவிட்டவர்கள் அவற்றைப் போய்ப் பார்க்கவும், தகுந்த ஆதாரம் காட்டிப் பெற்றுக்கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள் என அண்மையில் வடமாகாண ஆளுநரான மேஜர் ஜெனரல் ஜி. ஏ சந்திரசிறி தெரிவித்திருந்ததையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளா சுரேஷ் பிரேமச்சந்திரன்.
No comments:
Post a Comment