Monday, March 22, 2010

புதுமாத்தளனில் கஞ்சிக்காக கையேந்தி நின்ற குழந்தைகள் இரையானதை எப்படி மறப்பது? சிந்தித்து வாக்களியுங்கள்: சி.சிறிதரன்

புதுமாத்தளனில் பசி, பட்டினியுடன் வாடிய நிலையில் கஞ்சிக்காகக் கையேந்தி வரிசையில் நின்றவேளையில், கொத்துக் குண்டுகளுக்கு இரையாகியதை எப்படி மறப்பது? இவற்றை யெல்லாம் சிந்தித்து தமிழ்மக்கள் எதிர்வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு கூறினார் யாழ்.தேர்தல் மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சி.சிறிதரன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிர சாரக் கூட்டம் அண்மையில் ஆவரங்காலில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறிதரன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்தக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள் குண்டுகளுக்கும், ஷெல்களுக்கும் இலக்காகி துடிதுடித்துப் பலியானதை மறந்து விடமுடியுமா? இவற்றை எல்லாம் தமிழ் மக்கள் என்றும் மறந்து விடமாட்டார்கள்; இவற்றை யெல்லாம் சிந்தித்து தமிழ்மக்கள் எதிர்வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அதனை அம்மக்கள் சரியாகச் செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

எமது மக்களில் பலர் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள சூழலில் வாழமுடியாத மூச்சுவிடமுடியாத சூழலில், எங்களது சகோதரர்கள், பிள்ளைகள் புனர்வாழ்வு என்ற பேரில் முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள சூழலில், நாங்கள் நம்பியிருந்த போராட்டத்தை இழந்த நிலையில் நாங்கள் வாழ்ந்த மண்ணில் யார் யாரோ எல்லாம் வந்து எம்மை இருத்திக் கேள்வி கேட்கின்ற சுதந்திரமாக நடமாட முடியாத சூழலில் நாங்கள் ஒரு தேர்தலைச் சந்திக்கின்றோம்.

இந்த தேர்தலிலே நாங்கள் வாக்களிக்கச் செல்லலாமா? யாருக்கு வாக்களிக்க வேண்டும்? தற்போது எமது மக்களின் மனநிலை என்ன என்பதெல்லாம் எம்மில் பலருக்கு எழுகின்ற கேள்விகள்.

நாங்கள் தோற்றுப் போனவர்களாக வேரோடு பிடுங்கி எறியப்பட்டவர்களாக எங்களது வாழ்க்கையை ஒரு நடைப்பிணங்கள் போன்று நடத்திக்கொண்டு இருக்கின்றோம். மனதிலே ஆயிரம் சோகங்கள், ஒவ்வொரு தாய், தந்தையர் மனதிலும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கேள்விகள், இவற்றை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு அவர்களது உணர்வுகளை அடக்கி எவ்வாறு இந்தத் தேர்தலைச் சந்திப்பது என்று என்ற நிலையில் தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம்.

இந்தச் சூழலிலிருந்து விடுபட்டு எவ் வாறு இந்த வாழ்வை வெற்றி கொள்வது என்று இனி நாம் சிந்திக்க வேண்டும். அதன்படி செயற்பட வேண்டும்.


தற்போது கொக்காவிலிலே இராணுவத் தினருக்காக 4,000 வீடுகள் அமைக்கப் பட்டு வருகின்றன. ஏறக்குறைய நான்காயிரம் குடும்பங்கள் குடியமர்த்தப்படின் ஒவ்வொருவீட்டிலும் இரு மாணவர்கள் என்று பார்த்தாலே 8 ஆயிரம் பேர். இவர்கள் கல்விகற்க எத்தனை பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டும். ஆகவே அங்கு எப்படி ஒரு சிங்களக் கிராமம் வேகமாக வளரும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.

இன்று கொக்காவில், நாளை இயக்கச்சி அப்படியே பளை, யாழ்ப்பாணம் இதெல்லாம் இவர்களுக்கு ஒரு பெரிய விடயமாக இருக்காது. யாழ்ப்பாணத்திலே படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களை வாக்குப் போடுவதற்காகப் பலர் வேட்டையாடி வருகின்றனர்.

ஆனால் இத்தனை இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கும் போது பல சிங்களப்பகுதி இளைஞர்கள் இங்கு வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இங்கு இருக்கும் வேலைகளுக்காக சிங்கள இளைஞர்களுக்கு வழங்கப்படும் சந்தர்ப்பத்தை ஏன் தமிழ் இளைஞர்களுக்கு வழங்கக் கூடாது.

அபிவிருத்தி, அபிவிருத்தி என்கிறார் கள் வீதிக்குத் தார் பூசுவதும், மதவுக்குப் ""பெயின்ட்'' அடிப்பதும் அபிவிருத்தியா? தீவுப்பகுதிகளை எடுத்தால் அங்கு முற்றுமுழுதாகக் குடியமர அனுமதிக்கப்படவில்லை

கிளிநொச்சியில் சிறிய நிலப்பரப்பில் குடியமர்த்திவிட்டு 99 வீதமான பகுதியில் குடியேற்றப்பட்டு விட்டதாகப் பரப்புரை செய்யப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் எந்த ஒரு குடிமகனும் தன்னுடைய இடத்துக்கு போக முடியாது. அவர்களுடைய சொத்துக்கள் யாவும் சூறையாடப்படுகின்றன.

கஞ்சிக்காக வரிசையில் நின்ற எமது குழந்தைகள் கொத்துக் குண்டுகளுக்குப் பலியான சம்பவம் உலகத்தில் எங்கே நடந்தது? இவ்வளவு இழப்புக்களுக்கும் மத்தியில் சில லட்சங்களுக்காக எமது மெத்தப் படித்த மேதாவிகள் சுயேச்சைகள் என்ற பெயரில் இறங்கி இருப்பது துரோகத்தனமானது; வெட்கக்கேடானது.

அன்பான தமிழ்மக்களே! நன்றாகச் சிந்தித்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட இந்த மக்களுக்காகவாவது நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் ஸ்ரீதரன்.

No comments:

Post a Comment