Saturday, March 20, 2010

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் : மதியுரைக்குழுவின் இறுதி அறிக்கை

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பாக மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவான இறுதி அறிக்கையின் தமிழ்வடிவம் நேற்று (19.03.2010) வெளியிடப்பட்டுள்ளது.
இவ் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் பொழிப்பு கீழே தரப்படுகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டமைக்கான பின்னணியினை இந்த அறிக்கை முதலில் விளக்குகின்றது. இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளினையும், இறைமையையும் தன்னாட்சியையும் வெளிப்படுத்த உரிய அரசியல் வெளி காணப்படாமையினாலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றின் தேவை எழுகின்றது என அறிக்கை அறிவுபூர்வமாக முன் வைக்கின்றது.

நாடு கடந்த அரசாங்கத்தின் கோட்பாட்டு அடிப்படைகளும் இவ்அறிக்கையில் விவரிக்கப்படுகின்றன. இதனைத்தொடர்ந்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் பணிகள், அது உருவாக்கப்படும் வழிமுறைகள், அதன் வழிகாட்டிக் கோட்பாடுகள், நாடு கடந்த தமிழீழ அரசவையின் அமைப்பு வடிவம், நேரடியான வாக்களிப்பு முறையின் பயன்கள் என்பன விளக்கப்படுகின்றன.

இளைஞர்களினதும் பெண்களினதும் பங்களிப்பை அறிக்கை வலியுறுத்துகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பில் தேர்தல் ஆணையம், நாடுவாரியான செயற்பாட்டுக் குழுக்கள்,வாக்காளர் தகைமை,வேட்பாளர் தகைமை மற்றும் அவர்கள் பணியாற்றும் பாங்கு என்பனவற்றினைப் பற்றியும் அறிக்கை விவரிக்கின்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு வலு மையமாக உருவாகுவதற்கான சாத்தியப்பாடுகள், ஏனைய புலம்பெயர் தமிழ் மக்களின் நிறுவனங்கள், மக்கள் அமைப்புக்களுடனான அதன் உறவு, அனைத்துலக சமூகத்துடனான ஊடாட்டம் போன்றவை தொடர்பாகவும் இவ்வறிக்கை விளக்கம் அளிக்கிறது.

முஸ்லீம் மக்களுடனான உறவுகள் பற்றிய சிறப்புக் கவனத்தினையும் அறிக்கை முன்வைக்கிறது. தென்னாசியாவின் புவிசார் அரசியற் சூழலைப் பற்றியும் அறிக்கை கருத்துரைக்கிறது. முடிவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் யாப்பில் இடம்பெற வேண்டும் என ஆலோசனைக்குழு கருதும் வழிகாட்டிக் கோட்பாடுகள் பற்றி விவரிக்கப்படுகிறது.

இவ் அறிக்கையின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கான தேர்தல்கள் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளன.

வெளியீடு:
அனைத்துலகச் செயலகம்
தொடர்புகளுக்கு: info@govtamileelam.org

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் மதியுரைக் குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவான இறுதி அறிக்கை மொத்தமாக 42 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன..

அவற்றைப் பார்வையிட கீழே தரப்படும் இணைப்பை (LINK) "கிளிக்" செய்து கொள்ளுங்கள்.

http://www.tamilwin.com/data/docs/TGTE__AC_Report__Tamil_20-03-2010.pdf

No comments:

Post a Comment