21-ம் நூற்றாண்டை அணுகும் தற்போதைய உலகம் அடைந்த விஞ்ஞான ரீதியான முன்னேற்றங்களிலும் பார்க்க, அது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளம். இயற்கையால் ஏற்படும் அழிவுகள், விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிட தீவிரமடைந்துள்ளன.
புத்திஜீவிகள், பொருளாதார நிபுணர்கள், அரசியல்வாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் அனைவரும் அவற்றையெண்ணி அதிர்ச்சி, அடைந்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. மேற்குலக நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியும், இந்தியா, சீனா ஆகியவற்றின் வளர்ச்சியும் ஒரு சாராருக்கு மகிழ்ச்சியையும், பெருமையையும் அளித்தாலும், மற்றைய நாடுகளுக்கு அச்சத்தை உருவாக்கி வருகிறது என்பதை மறுக்க முடியாது.
அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்த அணுசக்தி வல்லமை இன்று சீனா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து தாண்டி ஈரான், வட கொரியா ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டில் வரும் வாய்ப்பில் உள்ளன. கணணியின் வளர்ச்சி இன்று ஒவ்வொரு நடுத்தர வசதியுள்ள வீட்டிலும் உணரப்படுவதால் உலகத்தின் தொடர்பு வலைப்பின்னல் ஒரு மகோன்னத நிலையை அடைந்திருக்கிறது.
இங்கு ஆராயப்படும் விடயம் 100க்கு 90 வீதம் ஓர் அரசியல் சார்பானதாக இருந்தாலும், அதைப்பாதிக்கக்கூடிய பல காரணிகள் உருவாகுவதைக் காணலாம். முக்கியமாக பொருளாதார, இராணுவ அரசியல் காரணிகள் இங்கு கவனிக்கப்பட வேண்டியதொன்று. இந்தியா தனது அண்டை நாடாகிய இலங்கையை, சுதந்திரமடைந்த அன்றைய தொடக்க காலத்தில் ஒரு சினேகித நாடாக நோக்கியிருக்கலாம்.
தற்போதய நிலையிலும்கூட இலங்கையை நேச நாடாக இந்தியா நோக்கவில்லை எனக்கூற முடியாது. ஆனால் துரதிர்ஷடவசமாக இலங்கையோ, இந்தியா தனது நேச நாடாக இருக்கவேண்டும் என அன்று தொடங்கி இன்றுவரை நினைத்ததாகச் சான்றுகள் இல்லை. சுமார் 5 இலட்சம் இந்தியர்களின் பிரஜாவுரிமையைப் பறிமுதல் செய்த இலங்கை, மிகுதியாகத் தங்கியிருந்தோர்களில் 40 விகிதத்தினர்க்கு மட்டுமே தனது குடியுரிமையை வழங்கியது.
இந்திய-பாகிஸ்தான் யுத்தங்களிலும் இலங்கையின் எதிர் நிலைப்பாடு உலகறிந்த விடயம். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் பரம எதிரிகளான, பாகிஸ்தானுடன் பாரிய நட்பைக் கொண்டும் சீனாவைத் தனது ஞானபிதாவாகப் பூஜிக்கும் இலங்கையரசை வேறென்னவென்று கூறமுடியும்?
இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் அதன் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், மியன்மார், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளினுள், தற்பொழுது, ஒரு நாடாவது இந்தியாவை ஆதரித்தோ அல்லது நட்புடனோ இருக்கிறதா என்றால் அதற்கு எதிரான பதில்தான் கிடைக்கும். சுருங்கக்கூறின் 'பிச்சை வேண்டாம் நாயைப்பிடி' என்பது போல அவை அனைத்தும் 'பகை நாடுகளே' என்று கூறின் அது மிகையாகாது.
வாழ்க இந்தியாவின் இராஜதந்திரம்! எது எவ்வாறாகினும் இத்தகைய இக்கட்டான நிலைமையில் இருக்கும் இந்தியாவில் அதன் உள்நாட்டிலேயே அல்கொய்டா அச்சுறுத்தல்களும், மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்படும் சீனாவின் ஆதரவுடன் கூடிய விடுதலை நோக்கிய எழுச்சிகளும், மத்திய அரசுக்கு ஒரு தலையிடியை ஏற்படுத்தி வருகின்றன.
இப்படியான குழப்பநிலையில் ஈழத்தமிழினத்தின் விடுதலை வெற்றியடைந்துவிட்டால், இந்தியாவின் மற்றைய தேசிய இனங்களும் ஈழத்தமிழினத்தை பின்பற்றிவிடுவார்களோ என ஐயம் கொண்டு, ஈழதமிழின அழிப்புக்கு இந்தியா துணை போனது என்று கொள்ளலாம்.
இது இவ்வாறிருக்க, இத்தகைய 'தற்காப்பு' மனப்பான்மையுடன் தொடர்ந்து இந்தியாவால், ஈழத்தமிழினத்தை அலட்சியம் செய்ய முடியுமா என்பது இந்நேரத்தில் ஓரு சர்ச்சைக்குறிய விடயமாகிறது. இதற்கு முக்கிய காரணம் சீனாவின் பொருளாதார, இராணுவ வளர்ச்சியும், இந்தியாவைச் சூழ்ந்த பகுதிகளிலும், முக்கியமாக இந்து சழுத்திரத்திலும், சீனா திடிரெனச் செலுத்தும் ஆதிக்கமும் எனலாம்.
இந்தக் கோணத்தில், சீனாவின் 'முத்துமாலை வியூகம்' இராணுவ வட்டாரங்களில் தற்போது பலமாகப் பேசப்படும் ஒன்றாகும். அத்துடன், அம்பாந்தோட்டைத் துறைமுகமும், கச்ச தீவிலும் (பால தீவிலும் உட்பட) சீனாவின் ஆதிக்கமும் இந்தியாவின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
தமிழ் நாட்டின் சேது சமுத்திரத் திட்டத்தையே சீனாவின் நடமாட்டம் பாதிக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த நிலைமை தொடருமானால் சீனாவின் ஆதிக்கம் பொதுவாக இந்தியா முழுவதையும் பாதிப்பதோடு, தமிழ்நாடு, கேரளம் ஆகிய கடல் சார்ந்த மாநிலங்களின் பாதுகாப்பையும் பாரிய அளவில் பாதிக்கும்.
இந்தியாவிற்கும், மற்றும் மேற்குலக நாடுகளுக்கும் தேவையான ஆப்பிரிக்க – தூரக் கிழக்கைத் தொடுக்கும் வழங்கற் பாதையானது (இந்து சமுத்திரம்), அவர்களின் எண்ணை, வாயு போன்ற முக்கிய எரிபொருட்களைக் கொண்டு செல்லத் தேவையானதாகும்.
இத்தகைய முக்கிய வழங்கற்பாதையின் ஆதிக்கத்தைச் சீனாவிடம் இழக்க யாரும் விரும்பமுடியாது. பரந்து விரியும் உலக வாணிபத்தில், மேற்கு நாடுகள்கூட இவ்விடயத்தில் கரிசனையாக இருப்பதைக் காணலாம்.
அதே சமயத்தில், சீனா இத்தகைய நடவடிக்கையில் மும்முரமாகச் செயற்பட வேண்டிய காரணங்கள் யாவென ஆராய்ந்தால், சில விடயங்கள் வெளிச்சத்திற்கு வரலாம்.
1. பொருளாதார ரீதியில், சீனா உலகின் ஈடுஇணையற்ற நிலையில் உள்ளது. இதற்குக் காரணம், சீன மக்களின் விடா முயற்சியும், சிறந்த கல்வியும், மலிவான உற்பத்தித்திறனும் ஆகும். அத்துடன் சீனாவின் ஊழலற்ற அரசியல் நிர்வாகம் அந்நாட்டை ஒரு தனித்துவமான நிலைக்குக் கொண்டு செல்கிறது. இருப்பினும், அந்த பிராந்தியத்தில், தனக்கு ஆடுத்தப்படியாக இருக்கக்கூடிய நாடு இந்தியா என்பதால், பொருளாதாரத் துறையில் இந்தியா வலுவாக முன்னேறுவதைத் தடுத்தால், ஆசியாவில், உலகிலும்கூட சீனா ஒரு தனி உரிமையைப் பெறும் நிலை ஏற்படலாம்.
2. ஆபிரிக்கா தூர கிழக்கு நாடுகளின் வழங்குப்பாதையான இந்து சமுத்திரத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் சீனா உலகின் எண்ணை, வாயு ஆகிய எரிபொருள் சக்திகளின் வினியோகத்தைத் தனது கைக்குள் வைத்திருக்கலாம்.
3. சீனா இந்தியாவுடன் பல வருடங்களாகத் தொடர்ந்து முறுகல் நிலையில் இருக்கும் அருணாச்சலப் பிரதேசம் போன்ற எல்லைப் பிரச்சனைகள் இன்னும் தீர்வின்றி சீனாவை உறுத்தி வருகின்றன.
4. பாகிஸ்தானுடன், இந்தியாவின் எதிர்போக்கான அணுகு முறைக்கு சீனாவும் பாகிஸ்தானும் கொண்டிருக்கும் நட்பு ஆசியா கண்டத்தில் ஓர் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
5. திபேத் பிரதேசத்திலும் இந்தியாவின் நிலைப்பாடு சீனாவிற்கு ஏற்றதாக இருக்க முடியாது.
6. இந்தியாவின் அணு சக்தி முன்னேற்றம், சீனாவை (தான் ஒரு அணு சக்தி நாடாக இருந்த போதிலும்) ஓர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய நிலையில் தள்ளும்.
7. இலங்கையின் பொருளாதாரச் சீர்கேடு (விடுதலைப்புலிகளின் யுத்தத்தினால் ஏற்பட்டதால்) சீனாவை இந்தியாவுக்கு அண்மையில் சுலபமாக ஈர்க்க முடிந்தது.
மேற்கூறிய காரணிகளைக் கருத்தில் கொள்ளும் சீனா, தனக்குச் சாதகமாக இத்தகைய ஆதிக்க நடவடிக்கைகளில் இறங்கியது வியப்பினை ஏற்படுத்த முடியாது. எனினும் சீனாவின் இந்த நடவடிக்கையை ஈடுசெய்ய இந்தியாவால் முடியுமா என்பதுதான் இந்திய அரசியல்வாதிகளை மட்டுமின்றி, மேற்குலக அரசியல்வாதிகளைக்கூட விழி பிதுங்க வைக்கும் கேள்வியாகும்.
இந்து சமுத்திரத்தைத் தக்க வைக்க வேண்டி வந்தால், இந்தியாவுக்கு, இலங்கையில் முழுதாகவோ அல்லது பாரிய ஒரு பகுதியிலோ பூரண ஆதிக்கம் தேவை என்பதனை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்தக் கோணத்தில் நோக்குமபோது, இலஙகைத் தீவில், தமிழீழக் கடற்பரப்பு மூன்றில் இரண்டு பகுதியை உள்ளடக்குகிறது என்பது முக்கியம்.
இலங்கை அரசை இனித் தனது கட்டுப்பாட்டிற்குள் நட்புரீதியாக ஆயினும் கொண்டு வருவது என்பது தற்போது இந்தியாவிற்கு குதிரைக் கொம்பு ஆகும். சீனாவின் பொருளாதார அழுத்தம் இலங்கையச் சீனாவுக்கு மீளா அடிமை ஆக்கிவிட்டதை உலகம் முழுவதுமே நன்கு அறியும். இந்த நிலையிலிருந்து இலங்கையை எவருமே மீட்க முடியாது.
இன்று, இந்து சமுத்திரத்தின் விதி ஒரு நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது எனக் கூறலாம். இந்தியாவின் தென்புறத்தில் உள்ள இலங்கை சீனாவின் கட்டுப்பாட்டில் நாளுக்கு நாள் விழுங்கப்படும் நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு அதையொரு நுழைவாயிலாகப் பாவிக்கலாம் எனும் நப்பாசையில் சில சக்திகள் இருக்கலாம்.
இந்தியா கூட இந்த எண்ணத்திற்கு விதிவிலக்காக முடியாது. ஆனால், இதனை இராஜதந்திர முறையில் எவ்வாறு அணுகலாம் என்பதே ஒரு பொன்னான கேள்வியாகும். இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் முன், இந்தியா தனது 'பழைய வெளிநாட்டுக் கொள்கைகளை' அறவே கைவிட வேண்டும்.
தொட்டிலையும் ஆட்டி பிள்ளையைக் கிள்ளும் போக்குக்கூட இனிப் பயனளிக்காது போகலாம். காரணம், இந்தியா ஒரு சமஷ்டித் தீர்வினை தமிழர்களுக்குக் கொடுப்பதன் மூலம் சில பிரமுகர்களைத் திருப்திபடுத்தி இலங்கையரசின் அரைச்சம்மத்ததைப் பெற்றாலும்
1. அத்தகைய தீர்வால் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.
2. அது தமிழ் மக்களின் போராட்ட உணர்வினை முற்றாக மழுங்கடித்துவிடும் என்று திட்டவட்டமாக ஒருபோதும் கூறமுடியாது. இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்த் தியாகத்தின் பின் 'காலம் கடந்த சமஷ்டியை' ஏற்பது, 'மலையைக் கல்லி எலியைப் பிடித்தது' போல் ஆகிவிடும்.
3. இராஜபக்சே அரசு சொல்லளவில் சமஷ்டியை ஏற்றாலும், நடைமுறையில் அதை அமுல்படுத்துமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். இராஜிவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் கதியை எல்லோரும் அறிவர்.
4. இந்தியாவின் பழைய தமிழீழத்திற்கெதிரான பிடிவாதக் கொள்கைக்கு வலுச்சேர்பது என்பதே இதன் பலனாகலாம். ஆனால் இராஜதந்திர முறையில் இந்த போக்கு சரியானதா என நோக்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கு சமஷ்டி ஆட்சியோ, அல்லது சுயநிர்ணயமோ எழுத்தளவில் அப்படித் தீர்க்கப்பட்டாலும் கூட அது இந்தியாவின் பூகோள நிலைமையைச் சீர் செய்யுமா என்பதே முக்கியமாகும். ஏனெனில், இத்தகையத் தீர்வை இறுதியில் ஏற்கும் சிலர் இந்தியாவின் 'கட்டுப்பாட்டில்' இந்தியாவுக்கு 'விசுவாசியாக' இருந்தாலும், அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் வலு இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையைப் பாதிக்க ஒருபோதும் முடியாது.
ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட இலங்கையின் முழு ஆட்சியுமே இராஜபக்சேவினால் சீனாவுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்ட நிலையில், இத்தகைய 'பிச்சைக்கார அதிகாரத்துடன்' தமிழ்த் தலைவர்களோ, தமிழ் மக்களோ, இந்தியாவையோ, இந்து சமுத்திரத்தையோ மீட்கவோ, கண்கானிக்கவோ ஒருபோதும் முடியாது.
எனவே, ஈழத்தமிழ் மக்களுக்கு ஏதாவது அரைகுறைத் தீர்வைக் கொடுப்பதன் மூலம் இந்தியா தன்னைத்தானே ஏமாற்றினால் 'தன் மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனப் பிழை' என்ற கதை போலாகிவிடும். இதற்கு மாறாக ஏதோ ஒரு காரணத்தால் இந்தியா தமிழீழக் கொள்கையை அங்கீகரித்து, தமிழ் மக்களின் இனஅழிப்பை நிறுத்தி, ஒரு புதிய அரசியற் பாதையைத் திறப்பதாக வைத்துக்கொன்டால் அதன் பெறுபேறுகளைக் கீழ்கண்டவாறு நோக்கலாம்.
1. தமிழீழத்திற்கு தனது சொந்த வான், காலால், கடற்படைகளை வைத்திருக்கும் உரிமை கிடைக்கும்.
2. தமிழ் மக்களின் கல்வித்திறன் உலகம் முழுவதிலுமே நற்பெயர் பெற்றிருக்கும் நிலையில், சிறிய நாடாக இருந்தாலும் அது வலுவுள்ள தொழில்நுட்பம் சார்ந்த படைத்திறனை உடையதாக இருக்கும்.
3. தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டதால், அதனுடன் நேசநாடுகளாகப் பல நாடுகள் கூட்டுச்சேர முன்வரும்.
4. தமிழீழத் தனியரசால் மட்டுமே சேதுத் சமுத்திரத் திட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.
5. வடக்கே இருக்கும் தமிழ் நாடு, கேரளா ஆகிய கடல் எல்லையில் உள்ள மாநிலங்களின் பாதுகாப்புடன் இந்து சமுத்திரத்தை தமிழீழ அரசு இந்தியாவுடன் சேர்ந்து கண்கானிக்கும்.
6. தமிழ் மக்களின் போர் வலிமையை உலக நாடுகள் அனைத்தும் கடந்த 30 வருடமாக நடந்த போரின் மூலம் அறிந்தமையால், சீனா போன்ற நாடுகள் (அணுச் சக்தியில்லாத) சிறிய ரகப் போரை இக்கடற்பரப்பில் தொடுக்க பின் வாங்கும் (உலக அழிவைத் தவிர்ப்பதற்காக, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வல்லரசுகளும் நடைமுறையில் அவற்றைப் பாவிக்க மாட்டா).
7. இலங்கையின் கடலோரப் பகுதியில் மூன்றில் இரண்டை தமிழீழக் கடற்பரப்பு கொள்வதால், இந்து சமுத்திரத்தைக் கண்கானிப்பது தமிழீழ அரசிற்கு பெரிய பிரச்சனையாக இருக்க முடியாது. எனவே, இதனால் தென்னிந்தியக் கடற்பரப்பின் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்படும்.
8. தமிழர்களின் பிரச்சனை முற்றாக தீர்க்கப்பட்ட நிலையில் மேற்கு நாடுகள் இலங்கை அரசியலில் அனாவசியமாகத் தலையிடும் வாய்ப்புகள் குறையும்.
9. இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் பாகிஸ்தான், நேபால், பங்களாதேஷ், மியான்மார் ஆகிய ஒரு நாட்டையும் தனது நட்பு நாடாக இந்திய இராஜதந்திரத்தால் மாற்றமுடியாது. ஆனால், முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற பாரிய அழிவின் பின்னும் தமிழீழத்தை அங்கீகரிப்பதன் மூலம் இந்தியா தனது தென்பகுதியைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்நடவடிக்கை தமிழகத்திலும் ஒரு நிரந்தர அமைதியை ஏற்படுத்த உதவும்.
10. ஆசியா உபகண்டத்தில் நடைபெற்ற ஈழமக்களின் இனஅழிப்பைக் கண்டிக்காது ஆதரித்து வந்த இந்தியா, அதற்கேற்ற தகுந்த பரிகாரத்தை மேற்கொள்ளாவிடின் அது ஐ.நா.வின் நிரந்தர பாதுகாப்புச் சபைக்குள் நுழையும் வாய்ப்பையும் வலுவாகப் பாதிக்கலாம்.
எனவே, இந்தியா தனது சொந்த நலன் கருதியாவது, தமிழ் மக்களின் தமிழீழக் கொள்கையை பூர்த்திச் செய்வதே அதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தற்போது எஞ்சியுள்ள ஒரே வழியாகும். அதனையும் சீனா வடக்கு-கிழக்கு மாகாணங்களை ஆக்கிரமிக்கும் முன் விரைவுப்படுத்துவதன் மூலம் இதன் முழுப்பலனையும் அடைவதற்கு இந்தியாவிற்கு வாய்ப்பு உண்டு.
முள்ளிவாய்க்காலின் அழிவும் பின்பும் உலகத் தமிழ் மக்கள் தமது வாக்கெடுப்பின் மூலம், தமிழீழக் கொள்கையை மீளுறுதி செய்ததோடு, உலகில் உள்ள 9 கோடி தமிழ் மக்களையும் ஒன்று சேர்க்கும் திராணியுள்ளவர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.
ஈழத்தமிழர்கள் இந்தியாவின் நலனுக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், உலகில் எவருக்கும் தமது வாழ்வுரிமையை விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராக இல்லையென்பதைப் பல நாடுகள் உணர ஆரம்பித்துள்ளன. இந்தியாவும் இதை உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது உறுதி
No comments:
Post a Comment