Friday, March 26, 2010

ரை கோர்ட்' அணிந்த புலிகளான சம்பந்தன் குழுவை சபைக்கு வர அனுமதிக்கக்கூடாது : ஹெல உறுமய

சிங்கள அரசாங்கம் ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாறாக புலிகள் விட்டுச்சென்ற போராட்டத்தை மீண்டும் முன்னெடுத்து தமிழீழத்தை அமைக்கவே இவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். எனவே த.தே. கூட்டமைப்பினரை பாராளுமன்றத்திற்குள் வர இடமளிக்கக் கூடாது.என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்தது.
அத்துடன் சம்பந்தன் குழுவினருக்கு உதவி செய்யும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே. வி. பி. போன்ற பிரிவினைவாத சக்திகளையும் பாராளுமன்றத்திற்குள் வர பொதுமக்கள் அனுமதிக்க கூடாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்தது.
வடக்கு, கிழக்கை மீண்டும் இணைத்து வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு உயிர் கொடுக்க யாரேனும் முன்வருவார்களேயானால் அவர்களை முதல் எதிரியாக கொண்டு எமது போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை தேசிய நூலகத்தில் நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் பிரசார செயலாளரும் ஊடக இணைப்பாளருமான நிசாந்த சிறி வர்ணசிங்க கூறுகையில்,
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஐ. தே. க., ஜே. வி. பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன. இக் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் நாட்டிற்கோ நாட்டு மக்களுக்கோ நன்மையளிக்க கூடியதொன்றல்ல.
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் விஞ்ஞாபனமானது தனி நாட்டு தமிழீழ கொள்கையை மீண்டும் வலியுறுத்துவதுடன் வடக்கு கிழக்கை மீண்டும் இணைக்க வேண்டும். அத்தோடு அப் பிரதேசங்கள் தமிழர்களின் பூர்வீக தாயகம். இங்கு வாழ் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் போன்ற ஆபத்தான தீர்வுத் திட்டங்களை முன்வைத்துள்ளது.
இவ்வாறு நாட்டை துண்டாட நினைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐ. தே.க.வும் ஜே. வி. பியும் கூட்டணியமைத்துப் போட்டியிட்டன.
கடந்த மே மாதம் 18 ஆம் திகதி புலிகளின் ஆயுதப் போராட்டத்தை எமது இராணுவ வீரர்கள் முடிவிற்கு கொண்டு வந்தனர்.
ஆனால் புலிகள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து சம்பந்தனின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனி நாட்டு ஈழப் போராட்டத்தை அரசியல் அணுகுமுறைகளின் ஊடாக முன்னெடுக்கின்றது.
எனவே இவர்களை பாராளுமன்றத்திற்குள் வர இடமளிக்கக் கூடாது.
அவ்வாறு பாராளுமன்றத்திற்குள் வந்து விட்டால் “ரை கோர்ட்' அணிந்த புலிகளையே எம்மால் காண முடியும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment