இதன் பொருள் உடனடியாகச் சாத்தியமில்லாத ஆயுதப் போராட்டத்தை தொடங்குவது என்பதல்ல. சிங்களத் தலைமைகள் தமது தவறான, நியாயமற்ற செயற்பாடுகளிற்கு, ஜனநாயகம், தேர்தல் போன்றவற்றை பாவிக்கும் போது, தமிழராகிய நாம் நமது நியாயத்தை நிலை நிறுத்த அதே தேர்தல், ஜனநாயகம் போன்றவற்றைப் பாவிக்க முற்படவேண்டும் என்ற கருத்தை ஞாபகப்படுத்த எழுதப்படுவதாகும்.
மகிந்த தனக்கு ஆயுதத்தில் தான் நம்பிக்கை என்று கூறிக் கொண்டு வாக்களிப்பை பாவியாது விடவில்லை.
வீழ்ந்ததோ அல்லது வீழ்த்தப்பட்டதோ ஏதோ உண்மை தான். ஆனால் இன்னமும் எழுந்திருக்கவில்லை என்பதும், இயலுமான வாக்களிப்பு அரசியலைக் கூட உரிய முறையில் கையாள முயலவில்லை என்பதை சுட்டிக் காட்டுவதே இதன் நோக்கமாக உள்ளது.
பல்லாயிரக் கணக்கான போராளிகளின் தியாகங்களையும் வீர தீரங்களையும் யாரும் கொச்சைப்படுத்த இயலாது. ஆனால் அதே தரப்பில் வெளி நாடுகளில் நிதி சேகரிப்புத் துறையினரது மோசடிகளையும், அரசியல் துறையில் செயற்பட்டவர்கள் அவர்களை கப்பலிற்காக கடற்கரையில் காக்க வைத்து மோதலின்றி மொத்தமாக அழிபட வைத்துள்ளமையை யாரால் மன்னிக்க முடியும்?
இதுவே இறுதி நேரத்தில் போராளிகள் பலரும் தமது உறவினரிற்கு தெரிவித்த கருத்தாக இருக்கிறது. காட்டுக்குள் இருந்த நாங்கள் ஏன் தான் கடற்கரைக்கு போகும்படி கட்டளையிடப் பட்டோமோ தெரியாது என்றும் அவர்கள் அங்கலாய்த்திருப்பதாகவும் தெரிகிறது.
யாருமே எதிர்பாராத மிகப் பெரிய மோசடியும் ஏமாற்றும் அங்கே இறுதி நேரத்தில் அரங்கேற்றப்படடுள்ளது.
எனவே ஆயுதப் போராட்டமானது மற்றத் துறைகளின் சமாந்தர வளரச்சியும் பக்குவமும் இன்றி துரிதமாக வளர்ந்திருந்திருக்கிறது. குறிப்பாக புலிகளின் அரசியற் துறை வெளிநாடுகளில் மிகவும் பேதமைமிக்கதாக இருந்திருக்கிறது புலனாகிறது.
ஒரு இனத்தின் போராட்டத்தின் பெரும் பகுதியும் முக்கியமான அம்சமும் ஆயுதப் போராட்டந்தான். ஆனால் இன்றைய உலக ஒழுங்கில் அது மட்டுமே வழி என்பதல்ல. இப்போது சாத்தியமான மார்க்கங்களிலும் பயணிக்காது செயலற்று இருப்பதால் எதையும் பெற இயலாது. எழும்ப இயலாத அளவு அடி வீழந்திருப்பது புரிகிறது. அத்தோடு அதற்குள் இயல்பு நிலைக்கு திரும்ப முன்னரே சிங்களம் தேர்தற் போரைத் தொடங்கி விட்டது.
சுதந்திர இலங்கையில் அரச ஆயுதங்கள் தமிழர் உயிர்களையும் உடமைகளையுந் தான் அழித்தன. தேர்தல் மூலமான தெரிவுகளே உரிமை மறுப்புச் சட்டங்ளையும் அரசியலமைப்பு மோசடிகளையும் நிறைவேற்றி வந்திருக்கின்றன. எனவே அவற்றை எதிர்கொள்ள வேண்டிய தேவை தமிழராகிய நம் முன்னே உள்ளது.
இந்த நிலையில், பல்வேறு கட்சிகளாக கொள்கை அடிப்படையில் பிரிந்து விட்டாலும் , ஒரு தேர்தற் கூட்டணி அமைக்க இயலாது போனமை தான் வேதனைக்குரியது.
எங்கள் தலைமைகளால் மகிந்தவுடன் பேச முடிகிறது செம்மணிப் புதைகுழி சரத் பொன்சேகாவை இராஜதந்திர ரீதியில் தேர்தலில் ஆதரிக்க முடிகிறது. ஆனால் காங்கிரசாலும் தமிழரசாலும் பேசி ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்து ,தமிழர் தேசியக் கூட்டமைப்பை நிலை நிறுத்த இயலவில்லை. ஒரு தேர்தற் கூட்டணியை நமது கட்சிகளால் அமைக்க இயலவில்லை.
அதற்குக் காரணம் வெளிநாடுகளில் இருந்து எழுந்த அதே தமிழர்களின் அரசியல் ஞானமற்ற அழுத்தங்கள் தான் என்று உள்ளக வட்டாரங்கள் மனம் வருந்துகின்றன. தமிழரது போராட்டம் வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்களால் தான் மோசமான நிலைக்கு சென்றது என்றும் பல மட்டங்களிலும் பேசப்படுகிறது.
இந்த நேரத்தில் தாயக நிலத்தில் உள்ள தலைமைகளும் வெளிநாட்டில் உள்ள தலைமைகளும் வேண்டியளவு பொறுமையுடனும் விட்டுக் கொடுப்புடனும் நடக்கவில்லை என்று கருதப்படுகிறது.
கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் மாத ஆரம்பத்தில், விடுதலைப் புலிகளின் ஒரு டசினிற்கும் மேற்பட்ட மேன்நிலை தலைமைகள் ஒரே வீச்சில் அழிக்கப்பட்டமை உங்களிற்கு ஞாபகமிருக்கலாம்.
அன்று ஆனந்தபுரத்தில் தீபன், விதுஜா, கீர்த்தி , நாகேஷ் , குட்டி, கடாபி , அமுதன் , மணிவண்ணன் எனப் பலரும் வீழ்த்தப்பட்டது புலிகள் தரப்பின் மோசமான வீழச்சியாகும். இத்துடன் வழி நடாத்தும் ஆற்றலை புலிகள் பெருமளவு இழந்து விட்டிருந்தனர். இந்த பின்னடைவிற்கான காரணம் காட்டிக் கொடுப்பா அல்லது செய்மதி அவதானிப்பா என்று தெரியவில்லை.
பின்னர் கடற்கரைக்கு புலிப் படைகளைப் போகும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டமை தெரியவருகின்றது. எல்லோரையும் ஏற்றிச் செல்ல ஒரு கப்பல் வரும் போன்ற ஒரு நிலையை நம்பி அவர்கள் அனைவரும் சென்றிருக்கிறார்கள். காட்டிற்குள் தோன்றி, காட்டிற்குள் வளர்ந்து, காட்டிற்குள்ளே பாதுகாப்பாக இருந்த புலிகளை பலிக்களமாகிய கடற்கரைக்கு கொண்டு வந்தது யார்? அதில் புலிகள் தரப்பை சரணடையத் தூண்டியவர்கள் யார்? அந்தத் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படவில்லையா? அப்படியாயின் அவை ஏன் வெளியிடப்படவில்லை?
சாட்சியற்ற இருண்ட போர் விவகாரங்கள் எதையும் தெரியாத நிலையில் தமிழர் தரப்பு உள்ளது. விசாரனைகளiயோ வெளிநாட்டு ஊடகங்களையோ, வெளிநாட்டுத் தொண்டர் நிறுவனங்களையோ இலங்கை அனுமதிப்பதாக இல்லை. அதற்கான அழுத்தங்களை செய்யவோ, செய்விக்கவோ எந்த முனைப்பும் வெளிநாடுகளிலும் இல்லை.
போராட்டம் தீவிற்குள்ளும் வெளியேயும் தேர்தற் களை கட்டியுள்ளது. அனைவரும் தேர்தற் கவனத்தில் உள்ளனர்.
அவலங்கள் தொடர்கின்றன. ஆனால் அவலங்கள் ஏதும் இல்லை என ரூபவாகினிப் பாணியில் தமிழ் வானொலி ஒன்று கனடாவில் அலறுகின்றது. சிங்களவர் வன்னியில் குடியேறினால் என்ன என்று இன்னொரு தமிழ் வானொலி கேலியாகக் கேட்கிறதாகவும் வதந்தி?
வர்த்தக மேலாதிக்கம் திட்டமிடப்பட்ட முறையில் முதல் கட்டமாக ஆரம்பித்துள்ளது. அந்தப் பொருளாதாரத்தைச் சுற்றி ஒரு குடியேற்றம் நிகழும். அது பாராம்பரிய மண் அபகரிப்பாக மாறும். இது முறிகண்டியில், கிளிநொச்சியில், பூநகரியில் எல்லாம் இடம் பெறுவதாக செய்திகள் வருகின்றன.
ஆனால் இங்கே கனடா, ரொறன்ரோவில் உள்ள இந்த ஊர்ச் சங்கங்களில் ஒன்று கலைவிழாச் செய்வதில் முனைப்புக் காட்டுகிறது. ஆனால் மறுபுறத்தில் கிளிநொச்சி மற்றும் பூநகரிப் பகுதிகள் இராணுவ மயமாக்கப்பட்டு சிங்கள மயமாக்கப்படுகின்றன என்ற செய்திகள் வெளியாகின்றன.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முட்கம்பி வேலிகளைத் திறந்து விட்ட மகிந்த அரசு பாராளுமன்றத் தேர்தல் காலம் என்றும் பாராது பூநகரியில் பொலிஸ் நிலையம் ஒன்றைத் திறந்துள்ளது. இதற்கு பூநகரியின் கேந்திரமே காரணமாகும். இது பற்றி பிறிதொரு சந்தரப்பத்தில் விரிவாகப் பார்ப்போம்.
தாயகத்தில் மக்களோ, தமிழரது ஆயுதப் போராட்டம் தோற்று விட்டது. இனி எங்களால் எதையும் செய்ய முடியாது. நடப்பதைக் காண வேண்டியது தான் என்ற ஒரு விரக்தி நிலையில் உள்ள நிலையில் தேர்தல்கள். தோற்பது வேறு தோற்க அழிக்கப்படுவது வேறு. உலகில் உள்ள எந்தப் பலமான அரசும் தோற்கடிக்கப்படலாம் அல்லது அழிக்கப்படலாம். இது அந்த நாட்டை எத்தனை நாடுகள் எவ்வளவு காலமாக என்னென்ன வழிகளில் சுற்றி வளைக்கின்றன என்பதைப் பொறுத்தது.
எனவே இதைத் தமிழர் தரப்பின் முழுத் தவறென தப்புக் கணக்குப் போடாது, இது இந்திய, இலங்கை ஆகிய நாடுகள் சுற்றியுள்ள நாடுகளையும் சேர்த்துக் கொண்டு ஒரு சிறிய தீவினுள் இருந்த ஒரு போராட்ட அமைப்பை பாரிய நீண்ட நாள் திட்டத்தின் அடிப்படையில் நசுக்கி அழித்து விட்டார்கள் என்பது தான் உண்மை.
காலங் கடந்து எந்தப் பேரரசும் நிலைத்ததில்லை. அவை கூடத் தாமாகவே நலிந்து இருக்கையற்றுப் போயுள்ளன. இந்த நிலையில் தமிழீழ நிழலரசு அழிப்பை கண்டு தமிழர் துவள்வதில் அரத்தமில்லை.
நமது போராட்டம் கப்பல்களில் வரும் ஆயுதங்களை நம்பி வளர்ந்த கப்பல் போராடம் என்பதை உணர்ந்த இந்தியா 18 கப்பல்களைக் கவிழ்த்து போராட்டத்தையும் கவிழ்த்து விட்டது. இந்தியா தனி நாட்டுக் கோரிக்கை இலங்கைத் தீவில் எழுவதை விரும்பாத ஒன்று. இதற்குக் காரணம் பாக்கு நீரிணைக்கு இரு புறமும் தமிழ் பேசுபவர்கள் இருப்பது தான். தமிழகத்திழலோ அன்றில் தமிழ் ஈழத்திலோ தமிழர் இல்லாவிடின் இந்தியாவின் அணுகுமுறை பங்களாதேஷை ஒத்ததாக அமைந்திருக்கும்.
எனவே இலங்கைத் தீவில் பல்லின இனங்களும் கலந்து வாழும் கலப்பு, வன்னியில் மேற்கொள்ளப்படுவதை இந்தியாவும் விரும்பும்.
ஆகவே மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் குடியேற்றங்கள் எதுவித தடையுமின்றித் தொடரும் அபாயம் தவிர்க்க இயலாதது. ஆனந்தபுர அழிப்பைப் போலவே முல்லைத்தீவு, அலம்பலில் கடற்புலிகளும் செயலிழக்க வைக்கப்பட்டனர். இதைச் செய்த 57 பிரிவே கைப்பற்றலை வெற்றிகரமாக நடாத்தி முடித்த அணியாகும்.
புலிகளின் அழிக்க இயலாத பல படையணிகளில் எதுவும் மோதலில் ஈடுபடாத நிலையில் குறிப்பாக கடற்புலிகள் அணிகள் அலம்பலில் பின்னடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டமை அவதானிப்பிற்குரியது. இவற்றை நிட்சயம் வேண்டிய தகவலின்றியோ அன்றில் நீண்ட நாள் திட்டம் இன்றியோ செய்திருக்க இயலாது.
இவ்வாறான பாரிய தாக்கம் எதுவும் யாரையும் நிலை தடுமாற வைப்பது இயல்பே. ஆனால் அதிலிருந்து விரைந்து மீண்டு ஜனநாயக அரசியலையாவது ஒற்றுமையாகவும் , விவேகத்துடனும் நகர்த்த வேண்டியதே நமது இன்றைய கடமையாகும்.
கப்பல் ஓட்டிய தமிழர்கள் இறுதியில் கப்பலிற்காக காத்திருக்க வைக்கப்பட்டு மோசமாக அழிக்கப்பட்டமைக்கு புலிகளிற்கு நம்பிக்கையான ஒரு தரப்பும் காரணமாக இருந்திருக்க வேண்டும். அது எந்த நாடு ? எந்தக் கழகம்? எந்த முகமற்ற வில்லன்? போன்றவையே இன்று நம் முன் எழுந்து நிற்கும் கேள்விகளாகும்.
No comments:
Post a Comment