Saturday, March 27, 2010

சாலையின் இருமருங்கும் போரின் சுவடுகள் பேரழிவுகளாக நெஞ்சைச் சுட்டன - ஆடுகள் மேயும் புலிகளின் கல்லறை!



சாலையின் இருமருங்கும் போரின் சுவடுகள் பேரழிவுகளாக நெஞ்சைச் சுட்டன - ஆடுகள் மேயும் புலிகளின் கல்லறை! (படங்கள் இணைப்பு)
15 நாட்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், மலையகம், கிழக்கு மாகாணம், புத்தளம் என இலங்கை முழுவதும் சென்று பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முஸ்லிம் அமைப்பு ஒன்று நடத்திய சமய நல்லிணக்கக் கருத்த ரங்கத்துக்காக அழைக்கப்பட்ட நான், அது முடிந்தவுடன் சொந்த முயற்சியில் நண்பர்களின் உதவியோடு பிற இடங்களுக்கும் சென்று வந்தேன்.ஏ-9 சாலை திறக்கப்பட்ட பின் யாழ்ப்பாணம் செல்வது எளிதாகி உள்ளது. சாலையும் மோசம் இல்லை. அரசு பஸ்கள் தவிர, தனியார் பேருந்துகளும் போகின்றன. அப்படி ஒரு பேருந்தில் நான் யாழ்ப்பாணம் சென்ற போது, வன்னியில் உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டேன். இந்திய பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை என்றார்கள். ஒரு கணம் பதறிப்போனேன். என்னுடன் வந்திருந்த கலாநிதி ரவீந்திரன் என்னைவிட 'டென்ஷன்' ஆனார். நான் ஒரு பேராசிரியர் எனவும், இரண்டு நாட்கள் மட்டும் யாழ் நகரைச் சுற்றிப்பார்க்க விரும்புவதாகவும் விளக்கினார். அந்த அதிகாரி என்னை உட்காரச் சொல்லிவிட்டு, மேலதிகாரியிடம் சென்று ஏதோ பேசி வந்து, போய் வருமாறு அனுமதித்தார்.அதிகாலை. ''முல்லைத் தீவு மாவட்டத்துக்குள் நுழைந்துவிட்டோம். இது கிளிநொச்சி. இது ஆனையிறவு. இங்குதான் புலிகள் மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தினர், இது சாவகச்சேரி, நெல்லியடி'' என ரவீந்திரன் சொல்லிக்கொண்டு வந்தார். சாலையின் இருமருங்கும் போரின் சுவடுகள் பேரழிவுகளாக நெஞ்சைச் சுட்டன. ஒரு கட்டடத்திலும் கூரை இல்லை. எங்கு பார்த்தாலும் ராணுவ சென்ட்ரிகள். கடைகள், ஹோட்டல்கள்கூட ராணுவத்தாலேயே நடத்தப்படுகின்றன. முள்வேலி முகாம்களில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள், இந்திய அரசு உதவியுள்ள தகர ஷீட்களில் குடிசைகள் அமைத்துத் தங்கியுள்ளனர். வீடுகளுக்குச் செல்லவில்லை. வீடுகள் இருந்தால்தானே. அஸ்திவாரம் தவிர, பிற எல்லாம் ராணுவத்தினரால் பெயர்த்தெடுத்துச் செல்லப்பட்டு, சிங்களப் பகுதிகளில் விற்பதாக அறிந்தேன். கூரையற்ற பள்ளிகளில் குழந்தைகளும் ஆசிரியர்களும் வெயிலில் அமர்ந்திருப்பது வேதனையான காட்சி. நிறைய டூரிஸ்ட்டுகள் வருகிறார்கள். பெரும்பாலானோர் சிங்களர்கள். யாழ்ப்பாணத்துக்குச் சென்று வர அரசு ஊக்குவிக்கிறது எனவும், உதவித்தொகை வழங்குகிறது எனவும் சிலர் கூறினர். பொதுவாகச் சிங்களர்கள் சுற்றுலா செல்வதில் ஆர்வம் உடையவர்கள். நாகத் தீவில் உள்ள புத்த கோயிலுக்கு போர்க் காலத்தில் போக இயலாதவர்கள் பெருந்திரளாக இப்போது வருகின்றனர். தீவுக்குச் செல்லும் லாஞ்ச்சுகளுக்கு நிற்கும் வரிசையைப் பார்த்துத்தான் ஊருக்குச் செல்லாமலேயே திரும்பி வந்ததைச் சொன்னார் பூபால சிங்கம் புத்தக நிலைய உரிமையாளர் ஸ்ரீதர் சிங்.யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் ஒரு சிறிய புத்த கோயில் உண்டு. போரின்போது தமிழ் ஆயுதப் போராளிகள் அதை இடித்துத் தரை மட்டமாக்கி இருந்தனர். அது இப்போது புதுப்பிக்கப்பட்டு புதுப் பொலிவுடன் விளங்குகிறது. யாழ்ப்பாண நகருக்குள் குறிப்பாக, புகழ்பெற்ற நல்லூர் கந்தசாமி கோயிலைச் சுற்றி ஏராளமான தற்காலிகக் கடைகளைச் சிங்களர்கள் அமைத்துள்ளனர். திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறந்த இடத்தில், புலிகள் அமைத்துள்ள நினைவுச் சின்னத்தைச் சுற்றி ஏராளமான சிங்களக் கடைகள் இருப்பது ஒரு வேதனைக் காட்சி. புலிகள் அமைத்த கிட்டு பூங்காவும் இன்று பராமரிப்பு அற்றுக்கிடக்கிறது.பிரபாகரனால் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ் நகர மேயர் ஆல்பிரட் துரையப்பாவின் பெயரில் கோட்டைக்கு அருகில் விளையாட்டு மைதானம் ஒன்றை அரசு கட்டியிருந்தது. புலிகளின் ஆட்சிக் காலத்தில் அந்தப் பெயர் நீக்கப் பட்டு இருந்தது. இன்று மீண்டும் அந்தப் பெயர் சூட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டு உள்ளது. கோப்பாயில் உள்ள மாவீரர் கல்லறை உடைக்கப்பட்டதாகக் கொழும்பில் கேள்விப்பட்டேன். அங்கு சென்று பார்க்கும் விருப்பத்தைத் தெரிவித்தபோது, கோப்பாய் கல்வியியல் கல்லூரி அதிபர் யோகநாதன் அழைத்துச் சென்றார். கல்லறைகள் எதுவும் சேதப்படுத்தப்படவில்லை. ஆனால், எந்தப் பராமரிப்பும் இல்லாமல் புற்பூண்டுகள் முளைத்துக்கிடந்தன. அலங்காரமாக அமைக்கப்பட்டு இருந்த பீடங்கள் மட்டும் நொறுக்கப்பட்டு இருந்தன.நான் சென்றிருந்தபோது கீரி மலையில் திருவிழா. தமிழர்கள் அங்கு உள்ள குளத்தில் புனித நீராட மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும், சிங்களர்கள் கடலுக்குள்ளும் சென்று குளிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் ஒருவர் வேதனையோடு சொன்னார். சாலை விதிகளை மீறும் சிங்களர்கள் கண்டுகொள்ளாமல் விடப்படுவதாகவும், தமிழர்கள் என்றால் அபராதம் விதிப்பதாகவும் இன்னொருவர் கூறினார்.ஆனாலும், இந்த வேதனைகளை அவர்களால் வெளிப்படுத்த இயலவில்லை. எந்த எதிர்ப்புகளையும் அவர்கள் காட்டுவதற்கு இப்போது சாத்தியம் இல்லை. ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளிலேயே பெரிய இழப்பு இதுதான். 30 ஆண்டுகளில் அவர்கள் எல்லாவற்றையும் இழந்துள்ளனர். வெறுங்கையோடு நிற்கின்றனர். 'உரிமையாவது... கத்தரிக்காயாவது. எங்கள் காணிகளுக்குத் திரும்பி கமம் (விவசாயம்) செய்ய அனுமதித்தால் போதும்' என்றார் முள்வேலி முகாமில் உள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த பரந்தாமன். மூன்று லட்சம் பேர் இருந்த முள்வேலி முகாம்களில் இப்போது 80 ஆயிரம் பேர் உள்ளனர். வாரம் ஒன்றுக்கு ஒரு ஜாடி அரிசி, மாவு, பருப்பு, கொஞ்சம் எண்ணெய் தருகின்றனர். வேறு எதுவும் இல்லை. அரிசியைப் பொங்கி, பருப்பைக் கடைந்து சாப்பிட வேண்டியதுதான். கடும் வெப்பம். பெரிய அளவில் முகாம்களுக்குள் அம்மை நோய் உள்ளதென ஒருவர் சொன்னார்.முகாம்களில் இருந்து வெளியே அனுப்பப்பட்டவர்களின் நிலை இன்னும் மோசம். தூர் வாரப்படாத கிணறுகள், சாகுபடி செய்ய இயலாத நிலங்கள். சுதந்திரமாக இருக்க முடிவது ஒன்றே ஆறுதல்.கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகர் தவிர, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் காத்தான் குடி, அக்கறைப்பற்று முதலான இடங்களுக்கும், புனித இடம் என அறிவிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றம் செய்யப்படுகிற தீகவாபிக்கும் சென்றேன். பழைய புத்த விகார் ஒன்று புதுப்பிக்கப்பட்டு அதைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் இருந்து உரிமையா ளர்கள் அகற்றப்பட்டுள்ளனர்.புத்தளத்திலும் அருகில் உள்ள ஆலங்குடாவிலும் 20 ஆண்டுகளாக அகதிகளாக உள்ள 80 ஆயிரம் முஸ்லிம்களின் நிலை இன்னும் வேதனையானது. இன்று நிலைமை ஓரளவு சீரானபோதும் ஊருக்குத் திரும்புவதா, வேண்டாமா என்கிற திகைப்பில் அவர்கள் உள்ளனர். இந்த 20 ஆண்டுகளில் ஒரு குடும்பம் மூன்று குடும்பங்களாகி உள்ளன. திரும்பிச் சென்றால், அவர்களுக்குஇருக்கப் போவது ஒரு வீடு இருந்தவெற்றிடம்தான். அதையும்கூட இப்போது அவர்களால் அடையாளம் காண்பது கடினம்.vikatan.com

No comments:

Post a Comment