Monday, March 29, 2010

தமிழீழ விடுதலைக்காக பன்னிரெண்டு நாட்கள் நீராகாரம் கூட அருந்தாது உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர் மாவீரன் திலீபன். - விஜய் டி.இராஜேந்தர்

இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய் டி.இராஜேந்தர் தலைமையில் 29.03.2010 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய மாநில அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் அறிக்கை
தமிழீழ விடுதலைக்காக பன்னிரெண்டு நாட்கள் நீராகாரம் கூட அருந்தாது உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர் மாவீரன் திலீபன். சிங்கள அரசால் சிதைக்கப்பட்டிருக்கிறது அந்த மாவீரனின் நினைவாலயம்.. இதைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை. கலைஞர் இருக்கும் அண்ணா அறிவாலயம். வன்னியின் தொன்மையையும் பண்டார வன்னியனின் சிறப்பையும் பறைசாற்றும் நினைவுக்கல் சிங்கள அரசால் நொறுக்கப்பட்டது. பாயும் புலி பண்டார வன்னியன் என்று சரித்திர நாவல் எழுதி சரித்திர நாயகர் என்று தன்னைப் பறைசாற்றிக் கொள்ளும் கலைஞர் அவர்களே..! சிங்கள அரசுக்கு எதிராக சரமாரியாக கேள்விக்கணைகளைத் தொடுத்திருக்க வேண்டும்.
மாறாக சராசரி தமிழனாகக் கூட குரல் கொடுக்க மறுக்கிறீர்களே ஏன்? இப்படி மௌன ராகம் தான் பாடலாமா? தமிழினத்தின் மானம்தான் இப்படி போகலாமா? நீங்கள் காப்பாற்ற நினைப்பது உங்கள் அரசு எங்கே போனது உங்கள் போர் முரசு? இலங்கையிலே மாவீரர்களின் கல்லறைகள் தகர்க்கப்படுகிறது. நினைவுத் தூண்கள் நொறுக்கப்படுகிறது.
சிங்களவன் நிலத்தைக் கீறி எடுக்கிறான்.. எலும்புகளை வாரி இறைக்கிறான்.. குப்பையிலே கொட்டிக் களிக்கிறான்.. இங்கிருக்கும் தமிழன் ஏன் கைகட்டிக் கிடக்கிறான்? அன்று 1981-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி யாழ் நூலகம் சிங்களர்களால் எரிக்கப்பட்டது.. அதுபோல் தமிழீழத்தின் கடைசி மன்னன் சங்கிலியன் சிலையும் நொறுக்கப்படலாம்.. தமிழர்களின் தொன்மையான வரலாற்றுச் சின்னங்களும் சிதைக்கப்படலாம்... இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இங்கிருக்கும் தமிழக அரசுதான் தூங்கலாமா? இலங்கைத் தமிழர்கள்தான் இத்துணை துயரங்களைத் தாங்கலாமா?
ஈழத்திலே சிங்கள இராணுவம் புலிகளுடன் நடத்திய யுத்தம் முடிந்து விட்டது. இருந்தும் தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்க மறுப்பது ஏன்? தமிழர்களின் சொந்த நிலங்களில் சிங்களவர்களை குடியமர்த்தி வருவது ஏன்? சிங்களவர் தமிழீழத்தின் கல்வெட்டுகளை மட்டுமா உடைக்கிறார்கள்? தமிழ் மக்களின் இதயத்தையே உடைக்கிறார்கள்... பெயர்ப் பலகைகளில் இருக்கும் தமிழ் எழுத்துகளை மட்டுமா அழிக்கிறார்கள்? தமிழ் இனத்தையே அல்லவா அழிக்கிறார்கள்.. இங்கிருக்கும் தமிழனே நீ ஒற்றுமை இல்லாதவன் என்று சொல்லாமல் சொல்லி அல்லவா பழிக்கிறார்கள்..
மத்திய அரசே! நீங்கள் போட்ட நிதிநிலை அறிக்கை! அதில் பெட்ரோல் டீசல் விலையேற்றம்.. மக்கள் வாழ்வில் இல்லையே ஏற்றம்.. மாறாக அவர்கள் வாழ்விலோ ஏமாற்றம்.. மாநில அரசே! அரிசி மட்டும் குடும்ப அட்டைக்கு கிடைத்தால் போதுமா? காய்கறி பருப்பு வகைகள் அவர்களுக்கு எப்படிக் கிடைக்கும்? கல்லையும் மண்ணையும்தான் காய்ச்சிக் குடிக்க முடியுமா? கடும் துயரத்தைத் தரும் உங்கள் ஆட்சியில்தான் வாழ்க்கை நடத்த முடியுமா? லாரி வைத்திருப்பவர்களே..! பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை எதிர்த்து நடத்த நினைக்கிறார்கள் வேலை நிறுத்தம்..! அவர்கள் தங்கள் லாரியிலே சுமையைத்தான் ஏற்றுகிறார்கள்... ஆனால் மத்திய அரசும் மாநில அரசும் மக்களின் தலையில் சுமையை அல்லவா ஏற்றுகிறீர்கள்.. மனச் சுமையை அல்லவா கூட்டுகிறீர்கள்.. இதற்கு என்னதான் முடிவு? என்றுதான் கிடைக்குமோ விடிவு..?
தமிழக அரசே..! நீ கட்டிக் கொண்டேயிருந்தால் போதாது மேம்பாலம்.. நீங்கள் விலைவாசியை கட்டுப்படுத்துவோம் என்பதெல்லாம் வெறும் வாய்ஜாலம்.. உங்கள் ஆட்சியில் மக்கள் வாழ்க்கைக்கோ கெட்ட காலம்.. இந்த நிலை தொடர்ந்தால் மத்திய - மாநில அரசே! உங்கள் ஆட்சிக்கே இருக்காது எதிர்காலம்..!
மத்திய அரசே! மத்திய அரசே! இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தா..!
இந்திய அரசே! இந்திய அரசே! நீ நழுவாதே...! இலங்கைத் தமிழர் பிரச்னையை கை கழுவாதே...!
மத்திய அரசே..! மத்திய அரசே..! தண்ணீருக்கு நடுவேதான் இலங்கைத் தீவு.. தமிழரை சிங்களனுக்குக் கொடுக்கலாமா காவு..?
ஈழம் ஆகிறது அங்கே சிங்கள மயம்.. எங்கள் இதயம் ஆகிறது இங்கே ரணம்..
ஆழத்தை துறந்து அகண்ட நீலக்கடல் இருக்குமா? ஈழத்தை மறந்து எங்கள் தமிழினம் இருக்குமா?
விடாதே..! விடாதே..! இலங்கைத் தமிழர்களைக் கை விடாதே..! தொடாதே..! தொடாதே..! துரோகி சிங்களனின் கரத்தைத் தொடாதே..!
மத்திய அரசே..! மத்திய அரசே..! வஞ்சிக்காதே..! வஞ்சிக்காதே..! தமிழினத்தை வஞ்சிக்காதே..!
நிந்திக்காதே..! நிந்திக்காதே..! ஈழத்தமிழர்களை நிந்திக்காதே..!
தூங்காதே..! தூங்காதே.. - இங்கிருக்கும் தமிழக அரசே தூங்காதே..! தாங்காதே..! தாங்காதே..- ஈழத்திலிருக்கும் தமிழினம்தான் தாங்காதே..!
அடிக்கிறான்.. அடிக்கிறான்.. அங்கே கணக்குப் போட்டு சிங்களன் அடிக்கிறான்.. வடிக்கிறான்.. வடிக்கிறான்.. ரத்தக் கண்ணீரைத்தான் தமிழன் வடிக்கிறான்...
மத்திய அரசே! மத்திய அரசே! விலைவாசியை கட்டுப்படுத்து.. பெட்ரோல் டீசல் விலையை மட்டுப்படுத்து..!
விண்ணை முட்டும் விலைவாசியே! விண்ணைத் தாண்டி வருவாயா? விடிவு காலத்தை மக்களுக்குத் தருவாயா?
வெந்நீரில்தான் பருப்பு வேகும்! விலைவாசியை நினைத்தாலே தாய்மார்களின் நெஞ்சம் வேகும்...
பெட்ரோல் டீசல் போட்டால்தான் வண்டிகள் கூட ஓடும்..! பெட்ரோல் டீசல் விலையை நினைத்தாலே நெஞ்சம் வாடும்..!
கொடுக்கிறார்கள் நோட்டை.. பெறுகிறார்கள் ஓட்டை.. கெடுக்கிறார்கள் நாட்டை.. புரிகிறார்கள் ஊழல் வேட்டை.. எழுப்புகிறார்கள் புதிய கோட்டை.. ஏன் குறைக்கவில்லை பொருட்களின் ரேட்டை..?
தேர்தல் என்றால் கேட்கிறார்கள் ஓட்டு.. விலைவாசியை ஏற்றி வைக்கலாமா மக்களுக்கு வேட்டு..
கடுகைக்கூட பொரித்தால்தான் பொரியும்.. விலைவாசியை நினைத்தாலே நெஞ்சம் எரியும்..
அடிக்காதே..! அடிக்காதே..! விலைவாசியை ஏற்றி மக்கள் வயிற்றில் அடிக்காதே...!
நடிக்காதே..! நடிக்காதே..! மாநில அரசே! நீலிக்கண்ணீர் வடிக்காதே..!
மேம்பாலம் கட்டினால் வாகனங்கள்தான் ஏறி இறங்கும்.. ஏறிய விலைவாசி எப்போதுதான் இறங்கும்? ஏழைகளின் நெஞ்சம் எப்படித்தான் உறங்கும்?
வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் வருவது அந்தக் காலம்..! விலைவாசியை நினைத்தாலே கண்ணீர் வருவது இந்தக் காலம்..!
வெண்டைக்காயை உடைத்தால்தான் அது உடையும்..! விலைவாசியை நினைத்தாலே மண்டை குடையும்..!

No comments:

Post a Comment