வடக்கு கிழக்கை இணைக்கமாட்டேன் என மகிந்த ராஜபக்ச கூறுகிறார். அது அவருடைய கொப்பனது சொத்தல்ல. அது எங்களுடைய என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருமலை முதன்மை வேட்பாளர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்தின் காரைதீவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
காரைதீவு பிரதேசசபை தவிசாளர் என். ஜீவராசா தலைமையில் நடைபெற்ற இப்பரப்புரைக்கூட்டம் நடைபெற்றது.
அங்கு உரையாற்றிய இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது
1977 ஆம் ஆண்டு எமது திருமலை மாவட்டத்தின் வடபுறத்தில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோத ஒரு வீட்டுத்திட்டத்தை அமைத்தோம்.
அந்த வீட்டுத்தோட்ட கிராமத்திற்கு நாம் இட்ட பெயர் ”விபுலானந்த கிராமம்” என்பதாகும். அவ்வாறு முத்தமிழ் வித்தகர் எனப்போற்றப்படும் விபுலானந்தர் பிறந்தமண்ணில் இன்று நான் பேசக் கிடைத்ததையிட்டு மகிழ்வடைகின்றேன்.
நாம் அடிமையாக வாழமாட்டோம். உரிமையுடன் வாழவேண்டும் என்று மிக உறுதியாக இருக்கலாம். இதுவே நம் மத்தியிலுள்ள பெரும் சவாலாகும்.
இன்று ஒரு பெரும் சவாலை நாம் எதிர்நோக்கியுள்ளோம். காரணம் 30 ஆண்டு காலமாக யுத்தம் நாட்டில் நடைபெற்றது. தந்தை செல்வாவின் கோரிக்கையின் அடிப்படையில் சமாதானமாக இனப்பிரச்சனை தீர்த்துக் கொள்ளப்படாததால் எமது மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதன் நிமித்தம் நமது இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அந்த ஆயுதபோராட்டம் முப்பது ஆண்டு காலமாக நடைபெற்றது. எமது போராளிகள் பல சாதனைகளைப் படைத்தார்கள். இது எல்லோருக்கும் அறிந்த விடயம்.
வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் கணிசமானளவு பிரதேசம் அவர்களுடைய பொறுப்பிலிருந்தது. இன்று அது முடிவுக்கு வந்துள்ளது. ஏனைய நாடுகளின் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டுவந்தது அரசு. தற்போது அந்த இயக்கம் எம்மத்தியில் இல்லை என கூறிவருகின்றது.
ஆனால் நாம் ஒன்றை மட்டும் மறந்துவிடமுடியாது. அந்த ஆயுதமேந்திய இயக்கம் நடத்திய போராட்டத்தின் நிமித்தமே எமது போராட்டம் சர்வதேச அரங்கில் முன்வரிசையில் இடம்பெற்றிருக்கிறது. இதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்தச் சூழ்நிலையில்தான் தற்பொழுது பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
தற்பொழுது நம் மத்தியில் ஆயுத இயக்கமுமில்லை. ஆயுத போராட்டமுமில்லை. முதன்முறையாக நீண்ட காலத்தின் பின் ஒரு பொதுத்தேர்தல் புதிய சூழலில் நடைபெறுகின்றது. இன்று சர்வதேச சமூகம் இந்த தேர்தல் முடிவுகளை மிக உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களை எவ்வித முடிவை எடுக்கப்போகின்றார்கள் என அது காத்துக்கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்கள் அடிபணிந்த நாட்டின் இரண்டாம்தரப் பிரஜைகளாக வாழச் சம்மதம் தெரிவிக்கப்போகின்றார்களா? அல்லது தமிழ் மக்கள் இலங்கை தமிழரசு கட்சி – தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வகுக்கப்பட்ட கொள்கையின் அடிப்படையில் வாக்களித்து தாம் ஒரு பெரும் தேசிய இனம், சரித்திர ரீதியாக வடக்கு கிழக்கில் வாழ்ந்து அது எமது தாயகம் எமக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என முடிவெடுக்கப்போகின்றார்களா? என்பதை சர்வதேச சமூகம் உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருக்கின்றது.
இதுவே தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள சவாலாகும். - என தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment