Monday, March 22, 2010

அரசாங்கம் திணிக்கும் தீர்வை ஏற்றுக் கொண்டு த.தே.கூ. விலைபோகாது: சுயநிர்ணய உரிமை பூதமோ, பிசாசோ அல்ல சம்பந்தன்

அரசாங்கம் திணிக்கும் தீர்வை நாம் ஏற்கமாட்டோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலைபோகவும் மாட்டாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடுபவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலையின் புறநகர்ப் பகுதிகளான சல்லி, ஆனந்தபுரி, பள்ளத்தோட்டம் , திருக்கடலூர், 10 ஆம் குறிச்சி ஆகிய இடங்களில் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இரா.சம்பந்தன் மேலும் கூறியதாவது;

இலங்கைத் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றைக் கண்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. தாம் திணிக்கும் தீர்வை ஏற்கக்கூடியதான வடக்கு, கிழக்குத் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை உருவாக்கும் முயற்சியிலே ஜனாதிபதி தற்போது ஈடுபட்டிருக்கிறார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவான அணியாகப் பாராளுமன்றம் செல்ல வேண்டும். அரசாங்கம் திணிக்கும் தீர்வை நாம் ஏற்கமாட்டோம். கூட்டமைப்பு விலைபோகவும் மாட்டாது.

ஆயுதப் போராட்டம் இல்லாத புதிய சூழலில் எதிர்வரும் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் பேசும் மக்கள் தங்களின் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

தமது பதவிக்காலம் முடிவதற்கு மேலும் இரண்டு வருடங்கள் இருந்த போது புதிய ஆணையொன்றை ஜனாதிபதி ராஜபக்ஷ கேட்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். வடக்கு,கிழக்குத் தமிழ் பேசும் மக்கள் ஆணைதர முடியாதென்று மறுத்துவிட்டனர்.

நாட்டின் மேற்கு, தெற்கு மக்கள் ஆணையை வழங்கினர். ஜனாதிபதித் தேர்தல் முடிவு நாட்டில் இன ரீதியாக பாரிய முரண்பாடு இருப்பதை சர்வதேச சமூகத்திற்குத் தெரிவித்தது.

ஜனாதிபதித் தேர்தலில் மேற்கு தெற்கு ஒரு தீர்ப்பு. வடக்கு, கிழக்கு இன்னொரு தீர்ப்பு. இலங்கைத் தமிழின உரிமைப் போராட்டம் இன்று சர்வதேச அரங்கில் முன்னணியில் இருப்பதற்கு முக்கிய காரணம் ஆயுதப் போராட்டமேயாகும்.

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வு காணப்படப்போகிறது என்பதைச் சர்வதேச சமூகம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது.

அதேவேளை, யுத்தமற்ற புதிய சூழலில் நடைபெறப்போகும் பொதுத் தேர்தலிலும் தமிழ்மக்கள் என்னவிதமான தீர்ப்பை வழங்கப் போகிறார்கள் என்பதையும் சர்வதேசம் அவதானித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வைக் கோரி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றது என்றும் அது குறித்து நாம் கவனித்துக்கொண்டிருக்கின்றோம் என்றும் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர், வெளியுறவு அமைச்சர் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஆகியோர் பங்குபற்றி இதேவிதமாகக் கூறியிருந்தனர்.

சுயநிர்ணய உரிமை என்பது பூதம், பிசாசு அல்ல. நாட்டில் தாயகத்தில் வாழும் ஒரு இனத்துக்கு இருக்க வேண்டியது சுயநிர்ணய உரிமையாகும். நாட்டின் இறைமை, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இறைமை அனைத்து இன மக்களுக்கும் உரியது. வடக்கு, கிழக்குத் தமிழ் பேசும் மக்கள் எதிர்வரும் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கும் ஆணையை அரசாங்கத்தினால் உதாசீனம் செய்ய முடியாது. எமது சுயநிர்ணய உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டுமென்றும் சம்பந்தன் கூறினார்.

முல்லைத்தீவு, கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக மீளக்குடியமர்த்தப்படவில்லை. இன்னும் முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனை நான் மல்லாவி, துணுக்காய் பிரதேசத்திற்கு சென்றவாரம் சென்ற போது பார்த்தேன்.

புலம்பெயர் சமூகத்துடன் பேசி வருகின்றோம். வெளிநாட்டு அரசுகள் மற்றும் தொண்டர் நிறுவனங்களுடனும் பேசுகின்றோம். இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீளக் குடியமர்த்தி வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும். அரசியல் தீர்வுடன் இம்முயற்சி தொடரும் என்றும் சம்பந்தன் கூறினார்.

No comments:

Post a Comment