இன்று நமது திருமலை மண்ணில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் நாம் மீண்டும் அவ்வாறானதொரு வரலாற்றுத் தவறை இழைக்கப்போகின்றோமா என்ற கேள்வியே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. திருகோணமலையில் பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
திருக்கோணமலையில் பொது மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம்:-
“காலத்தை தவறவிட்டால் கண்டவரெல்லாம் கதவைத் தட்டுவர்”
அன்பார்ந்த தமிழ் மக்களே!
“வரலாற்றின் தவறுகளை மறப்போர் அந்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வதற்கு சபிக்கப்பட்டவர்களாவர்” என்பது அறிஞர் வாக்கு.
இன்று நமது திருமலை மண்ணில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் நாம் மீண்டும் அவ்வாறானதொரு வரலாற்றுத் தவறை இழைக்கப்போகின்றோமா என்ற கேள்வியே நம்மை அச்சுறுதிக் கொண்டிருக்கின்றது.
நமக்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் போனாலும் பிரச்சனையில்லை. ஆனால் தமிழரசுக் கட்சியை தோற்கடித்துக் காட்டுகின்றோம். சம்பந்தரை வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றோம். என்ற கோசங்களுடன் களமிறங்கியிருக்கின்றனர் பலர்.
இவ்வாறானவர்களின் உண்மையான நோக்கம் என்ன?
ஏன் இவர்கள் தமிழரசுக் கட்சியை தோற்கடிக்க வேண்டுமென்பதில் இந்தளவுக்கு உறுதியாக களமிறக்கப்பட்டிருக்கின்றனர்?
இதன் இரகசிய நோக்கம் என்ன? இதற்குப் பின்னால் எவ்வாறான தீய சக்திகள் தொழிற்படுகின்றன?
ஏன் இந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியை தோற்கடிப்பதற்காக அனைத்து எதரணியினரும் சுயேட்சையாகவும், கட்சிகளாகவும் களமிறக்கப்பட்டிருக்கின்றனர்?
இன்று தமிழ் மக்களின் தனித்துவத்தையும் ஒன்று பட்ட உணர்வையும் பிரதிபலிக்கும் ஒரேயொரு அரசியல் தலைமையாக தமிழரசுக் கட்சியே எஞ்சியிருக்கின்றது.
பேரழிவுகளுடன் தமிழ் மக்கள் தமது சுயமரியாதை, தனித்துவம் எல்லாவற்றையும் இழந்து விட்டதாகவே, பலரும் எண்ணி மகிழ்ந்த வேளையில்தான் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் சுயமரியாதை மற்றும் தமிழ் தேசிய அடையாளத்தை பாதுகாக்கும் வரலாற்று பொறுப்பை தன் தோள்மீது சுமந்து கொண்டிருக்கின்றது.
எனவேதான் தமிழரசுக் கட்சியை தோற்கடிக்க வேண்டும், அதன் அரசியல் பலத்தை சிதைக்க வேண்டும் என்பதில் எதிர்சக்திகள் வெறியாக இருக்கின்றனர்.
குறிப்பாக சம்பந்தரை தோற்கடிக்க வேண்டுமென்பதில் ஏன் அவர்கள் இந்தளவு அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்? இதன் பின்னாலுள்ள அரசியல் நிகழ்ச்சி நிரல் என்ன?
இன்று தமிழ் மக்களுக்காக இயங்கும் அரசியல் தலைவர்களில் மிகவும் மூத்தவரும் அரசியலில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவருமாக ஒருவர் இருக்கின்றார். என்றால் அது இரா.சம்பந்தர் அவர்களே.
எனவே சம்பந்தரை தேர்தல் மூலம் தோற்கடிப்பதன் மூலம் அவரின் அரசியலை கையாளும் ஆற்றலை சிதைப்பதே எதிர் சக்திகளின் நோக்கமாகும். இதற்காகவே திருகோணமலையில் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்தாளும் அரசியல் உபாயம் ஒன்றை ஒரு சில ஏவல் தமிழர்களின் துணை கொண்டே தமிழர் தேசிய விரோத சக்திகள் சாதிக்க முயல்கின்றன.
சம்பந்தரை தோற்கடிப்பதன் மூலம் பின்வரும் காரியங்களை எதிர் சக்திகள் சாதிக்க முயல்கின்றனர்.
சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் சனநாயக தலைமைக்குரிய சகல தகுதிகளையும் கொண்ட ஒருவராக கருதப்படும் இரா.சம்பந்தரை அவரது மாவட்டத்திலேயே தோற்கடிப்பதன் மூலம் அவரது அரசியல் தலைமைத்துவ அந்தஸ்தை இல்லாமல் செய்து தமிழ் மக்களின் பேரம் பேசும் அரசியல் ஆற்றலை சிதைத்தல்.
இணைந்த வடகிழக்கு என்பதில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருப்பவர் சம்பந்தர் என்ற வகையில் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கிலேயே அவரை தோற்கடிப்பதன் மூலம் அந்த நிலைப்பாட்டை பலவீனப்படுத்தி, வடகிழக்கு பிரிப்பை அரசியல் ரீதியாக உறுதிப்படுத்துவது.
இதன் மூலம் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை சிதைத்து நிரந்தரமாக தமிழ் மக்களை அடிமைப்படுத்துவது.
தமிழர் தேசிய அரசியல் வரலாற்றில் சாத்வீக மற்றும் ஆயுத போராட்ட அனுபவங்கள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டும், இந்த கால கட்டங்களில் சர்வதேச இராஜதந்திரமட்ட தொடர்புகளையும் ஒருங்கே கொண்ட ஒரேயொரு தலைவராக சம்பந்தரே இருப்பதால் அவரை தோற்கடிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கான சர்வதேச அங்கீகாரம் கொண்ட தலைமைத்துவத்தை இல்லாமல் ஆக்குவது.
இந்த அரசியல் கபட நோக்கத்தை விளங்கிக் கொள்வது தமிழ் மக்களாகிய நமது வரலாற்று கடமையாகும்.
கடந்த கால அரசியல் குறித்தும் நமது அரசியல் தலைவர்கள் குறித்தும் உங்கள் மத்தியில் கோபம் இருக்கலாம். விமர்சனங்கள் இருக்கலாம். உங்கள் கோபமும் விமர்சனமும் நியாயமானதே! அவ்வாறு கோபப்படுவதற்கும், விமர்சிப்பதற்கும் உங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு.
ஆனால் ஒரு தகப்பன் தவறு செய்தால் பிள்ளைகள் மன்னிப்பதில்லையா? அதே போன்ற உரிமையுடன் தமிழரசுக் கட்சியை பாதுகாக்கும் கடப்பாடு தமிழ் மக்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்த பொறுப்பை எந்தவொரு தமிழ் குடிமகனும் நிராகரிக்கமாட்டார்கள் என்பது நமது ஆணித்தரமான உறுதியாகும்.
எனவே நமது கடமைகளாவன ……
தமிழரசுக் கட்சிக்கு எதிராக வாக்குகளை பிரித்தாளும் நோக்கில் களமிறக்கப்பட்டிருக்கும் அனைத்து சக்திகளையும் நிராகரிப்பது,
கடந்த பொதுத் தேர்தலில் பங்கு கொண்டது போன்றே இம்முறையும் இரண்டு தமிழ் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்துவதற்காக முழுமையாக வாக்களிப்பில் பங்கு கொள்வது,
குடும்பம் மற்றும் நட்புசார் உறவுகளுக்கு அப்பால் தமிழ் தேசியத்தின் எதிர்கால இருப்பை கருத்தில் கொண்டு வாக்களிப்பது, “ காலத்தை தவறவிட்டால் கண்டவரெல்லாம் கதவைத் தட்டுவர்”
கல்வி சமூகம்,தமிழ் புத்திஜீவிகள் சமூகம்,தமிழ் மாணவர் ஒன்றியம்,திருகோணமலை கலை இலக்கிய பேரவை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment