ஞாயிற்றுக்கிழமை, 28 மார்ச் 2010,
அப்பாவி மாணவன் கபிலநாத்தின் படுகொலைக்கு மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டவேண்டும். கடத்தலுக்கும் கொலைக்கும் காரணமான சக்திகள் அடையாளம் காணப்படவேண்டும். அதற்கான விசாரணைகளை அரசு தொடங்கவேண்டும். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா நேற்று விடுத்த அறிக்கையில் வலியுறுத்ததியுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது
யாழ்ப்பாணம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் திருச்செல்வம் கபிலநாத் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இனந் தெரியாத ஆயுதக் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்ட செய்தி கசிந்துகொண்டிருந்தது.
இந்த மாணவன் விடுவிக்கப்பட வேண்டுமானல் மூன்று கோடி ரூபா பணம் வேண்டுமெனப் பேரம் பேசப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இந்த மாணவனின் தந்தை திருச்செல்வம் யாழ்ப்பாணத்தில் அருள்விநாயகர் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் எனவும் அறிகின்றோம்.
நேற்றுவரை இந்த மாணவன் கடத்தப்பட்டது தொடர்பில் பொலிஸாரினால் நியாயமான எந்தவித விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவோ அல்லது மாணவன் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ செய்திகளில்லை.
இதற்குப் பலத்த அரசியல் பின்புலம் இருந்ததா என்பது கண்டறியப்படவேண்டும். இப்பொழுது அந்தப் அப்பாவி மாணவன் கபிலநாத் கொலை செய்யப்பட்டுப் புதைகுழியில் புதைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளதான செய்தி வந்திருக்கிறது.
இப்பொழுதும் கடத்தல், கப்பத்திற்காகக் கொலை செய்யப்படுதல் அதுவும் மாணவன் படுகொலை செய்யப்பட்டிருப்பதான நடவடிக்கை தொடர்கின்றமை இரத்தத்தை உறைய வைக்கிறது. அதிர்ச்சி அளிக்கிறது.
இக்கடத்தலுக்கும் கொலைக்கும் காரணமான சக்திகள் அடையாளம் காணப்பட வேண்டும். அதற்கான விசாரணையை அரசு தொடங்கவேண்டும். கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
இனிமேலும் இப்படியொரு கடத்தல், கொலை, வன்முறை சம்பவம். இடம்பெறாத வகையில் நாமும் மக்களும் கண்டனம் தெரிவிப்பது மட்டுமல்ல, எதிர்ப்பை அமைதியான வழிகளில் வெளிப்படுத்த வேண்டும் என வேண்டுகின்றோம்.
அந்த அப்பாவி மாணவனுக்கு எமது அஞ்சலியை செலுத்துவதுடன் அவரின் பெற்றோர், உறவினர் மாணவர்களுடன் கண்ணீரில் கலந்துகொள்கிறோம். என்றுள்ளது.
இந்த படுகொலை சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:-
கடந்த 14 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு குறித்த மாணவனின் வீட்டுக்கு வந்த சிலர் அவரது பெயரைக் கூறி வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின்னர் சற்றுநேரம் கழித்து தொலைபேசியில் தொடர்புகொண்டு மூன்று கோடி ரூபா கப்பம் தந்தால் மாணவரை விடுதலை செய்வோம் என்று கடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் பணிக்காகவே இந்தப் பணம் கேட்பதாக, சில கட்சிகளின் சின்னங்களைக் கூறி கடத்தல்காரர் கப்பம் கோரினர்.
நண்பர்கள் மூவர் கைதாகினர்
இந்தச் சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு அவரது நண்பர்களான மாணவர்கள் மூவரைக் கைது செய்தனர். அவர்களில் இருவர் ஜி.சீ.ஈ (உயர்தர) வகுப்பு மாணவர்கள். மற்றையவர் ஜி.சீ.ஈ (சாதாரண) வகுப்பு மாணவன். மூவரும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று வந்தனர்.
உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவரும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்றனர். மற்றைய மாணவன் கடந்த டிசம்பர் மாதம் சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார். பொலிஸார் கைது செய்த பிரஸ்தாப மாணவர்கள் மூவரும் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டனர்.
கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழு
கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட பொலிஸ் கோஷ்டி பிரஸ்தாப மாணவர்கள் மூவரையும் விசாரணை செய்து வந்தனர்.
இந்த விசாரணையின் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களில் உயர்தர வகுப்பு மாணவனான யோகநாதன் காண்டீபன் என்பவரின் வீட்டை சுற்றிய பகுதியை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நேற்று முன்நாள் தேடுதல் நடத்தினர்.
அந்த மாணவனின் வீடு சாவகச்சேரி ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள தனியார் ஒழுங்கை ஒன்றில் அமைந்துள்ளது. நகரில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் டச்சு வீதியை அண்டியதாக அந்த ஒழுங்கை உள்ளது.
சம்பவ இடத்துக்கு நீதிவான்
நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் டச்சு வீதி மற்றும் அண்டிய அந்த ஒழுங்கை ஆகிய பகுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் அந்தப் பகுதிக்குள் எவரும் உட்செல்லக்கூடாது என்று தடைவிதித்தனர்.
சாவகச்சேரி நீதிவான் ரி.ஜே.பிரபாகரன் சம்பவ இடத்துக்குச் சென்றார்.
அவரது முன்னிலையில் குறிப்பிட்ட மாணவனின் வீட்டுக்கு பிற்புறமாகவுள்ள வாழைத் தோட்டத்தில் புதைகுழி ஒன்று தோண்டப்பட்டது. மூன்று அடி ஆழமுள்ள அந்தப் புதைகுழிக்குள் இருந்து அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்டது. தமது மகனான கபில்நாத்தின் சடலம்தான் என உறவினர் சடலத்தை அடையாளம் காட்டினர்.
யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியை சம்பவ இடத்துக்கு அழைத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
நேற்று மாலை 5.30 மணிளவில் சம்பவ இடத்துக்குச் சட்ட வைத்திய அதிகாரி சென்றார். சடலம் யாழ்.ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்பட்டது.
பிரஸ்தாப வீட்டில் வசித்து வரும் உயர்தர பரீட்சை மாணவனின் தந்தை வெளிநாட்டில் உள்ளார். அவரது மனைவி தனது மற்றொரு மகனை கொழும்புக்கு அழைத்துச் சென்றார். அப்போது உயர்தர வகுப்பு மாணவன் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார்.
இறந்தவர் கடத்தப்படுவதற்கு முதல் நாள் கொழும்பு சென்ற உயர்தர வகுப்பு மாணவனின் தாயார் மகனைக் கைது செய்த செய்தி கேட்டு மறுநாளே சாவகச்சேரிக்கு திரும்பியிருந்தார்.
பெரும் எண்ணிக்கையானவர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் அங்கு கூடிய போதும் சடலத்தைப் பார்வையிட பொலிஸார் எவரையும் அனுமதிக்கவில்லை.
குடாநாட்டில் வன்செயல்கள் சற்றுக் குறைந்து வரும் வேளையில் இச் சம்பவம் குடாநாடு முழுவதும் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment