Wednesday, March 24, 2010

பேரினவாத கட்சிகளுக்கு ஆதரவளிப்பது இலங்கை நடத்திய படுகொலைகளை ஏற்றுக்கொண்டதாக அமைந்து விடும்: இரா.சம்பந்தன்

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி ஆட்சி ஒன்றின் மூலமே தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்வை பெற முடியும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழர்கள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்கிறார்கள் அவர்களுக்கென தனியான கலாச்சார விழுமியங்களும், பண்பாடும் உண்டு. ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திலும் ஒரு நாட்டில் பூர்வீகமாக வாழ்கின்ற சமூகத்தினது சுயநிர்ணய உரிமைகள் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என கூறப்படுகின்றது. இதனடிப்படையில்தான் நாங்கள் சுயாட்சி வேண்டி போராடுகின்றோம்.

ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப்புலிகளை கடந்த வருடம் மே மாதம் நடந்த யுத்தத்தில் முற்றாக அழித்துவிட்டதாக கூறுகின்ற இலங்கை அரசானது, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்தது மாத்திரமின்றி சிறைக்கூடங்களான முகாம்களிலும் அடைத்துள்ளது. இந்த நிலையில் சர்வதேச சமூகம் தமிழர்களுக்கான தீர்வு திட்டம் பற்றியும் அதை அவர்களுக்கு வழங்கும்படியும் கேட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில்தான் நாங்கள் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயக பிரதேசத்திற்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி ஆட்சிமுறையிலான தீர்வுத்திட்டத்தை தயாரித்துள்ளோம்.

இந்த தீர்வுத் திட்டத்தை நாங்கள் அரசாங்கத்திடம் சமர்ப்பித்து நடைமுறைப்படுத்துமாறு கோருவதற்கு எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் வாக்காள பெருமக்களாகிய நீங்கள் எங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் 23 ஆசனங்களையும் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றினால் மாத்திரமே தமிழ் மக்களுக்குரிய சுயநிர்ணய உரிமை போராட்டமானது ஓய்ந்துவிடவில்லை, இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை சர்வதேசத்திற்கும், இலங்கை அரசுக்கும் இடுவதாக அமையும்

இல்லையேல் மகிந்த அரசு சொல்வதையும் பயங்கரவாதிகளை அழிப்பதாக சொல்லி ஆயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்களை வகைதொகையின்றி அழித்ததையும் தமிழர்களாகிய நாமே அதை சரியென ஏற்றுக்கொண்டதாக அமைந்து விடும். இதை தமிழ் மக்களாகிய நாம் புரிந்துகொண்டு எதிர்வருகின்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றியடையச் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரான சி.யோகேஸ்வரன் தலைமை தாங்கினார்.

தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் முதன்மை வேட்பாளரான சட்டத்தரணி சுமேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான சட்டத்தரணி சிவநாதன், பொன் செல்வராசா, ஆறுமுகம், அரியநேந்திரன், சத்தியநாதன், சௌந்தரராஜா ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment