விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முன்னர் செயற்பட்ட முக்கியஸ்தர்களில் ஒருவரும் கவிஞருமான புதுவை இரத்தினதுரையின் விடுதலை குறித்து அவரது சகோதரி இராசலட்சுமி நேற்று முன்தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுவையின் சகோதரி தனது கணவரான பத்மநாதனுடன் வந்து அமைச்சரைச் சந்தித்தார் என்று சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது கவிஞர் புதுவை இரத்தினதுரை தனது மனைவி குடும்பம் சகிதமாக படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கிச் சென்றிருந்தார். இதன்போது புதுவை இரத்தினதுரை தவிர்ந்த அவரது மனைவியும் பிள்ளைகளும் நலன்புரி முகாமில் தங்க வைக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டு திருமலையில் வசித்து வருகின்றனர்.
இத்தகவலை புதுவை இரத்தினதுரையின் சகோதரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்ததோடு தனது சகோதரனான புதுவை இரத்தினதுரையை விடுவித்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரின் சகோதரியும் இவ்வாறு தம்மிடம் உதவி கேட்டு வந்ததாகவும் தாம் அதற்கான உதவிகளைச் செய்திருந்ததாகவும் தற்போது தயா மாஸ்டர் வடமராட்சியில் சுதந்திரமாக நடமாடித் திரிவதாகவும் தெரிவித்தார். புதுவை இரத்தினதுரை குறித்து விவரங்களைக் கண்டறிந்து அவரது விடுதலைக்காகவும் தம்மால் மனிதாபிமான அடிப்படையில் உதவ முடியும். அதற்கான நடவடிக்கைகளிலும் தாம் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைது செய்யப்பட்டடோர் சரணடைந்தோர் என அனைத்து புலிகள் இயக்க உறுப்பினர்களையும் விடுதலை செய்யவேண்டுமென்ற கோரிக்கையை தாம் ஜனாதிபதியிடம் வலிறுத்தி வருவதாகவும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருக்கும் கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்றும் தெரிவித்திருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment