நேற்று யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு உரை நிகழ்த்தும் போது:
எமது மக்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னாலும் எமது உறவுகள் புனர்வாழ்வு என்கின்ற தடுப்பரண்களுக்குள்ளும் மூச்சுவிட முடியாத நிலையில் அடைக்கப்பட்டிருக்கின்ற நிலையிலும் நாம் நம்பியிருந்த எமது போராட்டம் முறியடிக்கப்பட்டு நாம் நிர்க்கதியாகியிருக்கின்ற நிலையில் நாங்கள் வாழ்ந்த மண்ணில் யார் யாரோ வந்து எங்களை இருத்திக் கேள்வி கேட்கின்ற நிலையில் எமது பிரதேசத்தில் நாம் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுகின்றது.
இந்தச் சூழலில் நாங்கள் ஒரு தேர்தலைச் சந்தித்திருக்கின்றோம்.
இந்தத்தேர்தலில் தமிழ் மக்களின் மன நிலை என்ன? நாங்கள் எவ்வாறு இந்தத் தேர்தலில் வாக்களிக்கப் போகின்றோம்? நாங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றோம். நாங்கள் வாக்களிக்கச் செல்லலாமா? இவை எல்லாம் உங்கள் மனங்களில் இருக்கின்ற பாரிய கேள்விகள்? வாழ்விலே நாங்கள் அழிந்து போனவர்களாக தோற்றுப்போனவர்களாக வேரோடு பிடுங்கி எறியப்பட்டவர்களாக எங்களுடைய வாழ்க்கையிலே ஒரு நடைப் பிணமாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
மனதிலே ஆயிரம் உணர்வுகள், சொல்ல முடியாத வேதனைகள், சோகங்கள் ஒவ்வொரு தாய் தந்தையரின் உள்ளங்களிலும் தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய ஏக்கம், இழந்து போன பிள்ளைகளுக்கு ஏதாவது செய்யலாமா என்று நினைக்க முடியாத நிலை, அவர்களை எல்லாம் மனங்களிலே வைத்துக் கொண்டு தங்களுடைய உணர்வுகளை அடக்கி இந்தத் தேர்தலை எவ்வாறு சந்தித்துக் கொள்வது?, இந்த நிலை தான் நாங்கள் இன்று காணுகின்ற சூழல்.
இந்த நிலையிலேயே பல்வேறுபட்டவர்கள் பல்வேறு வழிகளிலே தேர்தலில் இறக்கப்பட்டு தமிழ் மக்கள் தெரிவினை மேற்கொள்வதில் ஒரு குழப்பமான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இன்று முழத்துக்கு முழம் இராணுவ முகாம்களையும், காவலரண்களையும் அவற்றில் இருந்து எங்களைக் கண்காணிக்கின்ற படைத் தரப்பினரைத் தான் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
சிங்கள மக்கள் எவ்வாறு தாங்கள் உயர்ந்தவர்கள் தமது இனம் எவ்வளவு உயர்ந்த இனம் என்பதை ஏற்றுக் கொள்கின்றார்களோ, அதே சமதியான அதே ஆளுமையுடைய அதே ஆற்றல்களைத் தனக்கான கலாசாரங்களையும், விழுமியங்களையும் கொண்ட எமது தமிழினம் ஏன் இன்னொரு இனத்தினால் எதிரியாகவும் தீண்டத்தகாக இனமாக பார்க்கப்படவேண்டும்.
இதே போன்று தமிழர்கள்> சிங்கள மக்கள் வாழ்கின்ற இடங்களில் காவலரண்களை அமைத்து அங்கு தமிழர்கள் அங்கு நிற்பார்களானால் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?
யாழ்ப்பாணத்தில் தற்போது சிங்களவர்களுடைய வியாபார நிலையங்கள், தனிச் சிங்களத்திலே அவர்களது பெயர்ப்பலகைகள்.
அம்பாறை என்கின்ற ஒரு தனி மாவட்டம் ஒரு தமிழ் மாவட்டமாக இருந்தது. இன்று அம்பாறை நகர்ப்பகுதியிலே ஒரு தனி தமிழ் எழுத்தைக் காணமுடியாது.
இவ்வாறாக எங்கள் தமிழ் மண் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நாளாந்தம் எங்கள் வாழ்வு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
மெல்ல மெல்ல தமிழரது வாழ்விடங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நாங்கள் வாழ்ந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து 20 தொடக்கம் 25 ஆண்டுகளாக எங்கள் சொந்த இடங்களுக்குச் செல்லமுடியாது ஏதிலிகளாக அலைந்து கொண்டிருக்கின்றோம்.
தற்போது கூட தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதற்கான முனைப்புக்கள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. படையினரது குடும்பங்களை குடியமர்த்துவதற்கென பல்வேறு தமிழ் கிராமங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
என்று தெரிவித்த சிறீதரன் யாழ்ப்பாணத்தில் படித்துவிட்டு வேலையற்று திரிகின்ற இளைஞர்களை வாக்குப் போடுவதற்கு சிலர் வேட்டையாடி வருகின்றனர். இவர்கள் இங்கு வேலையற்று இருக்கும் போது சிங்களப் பகுதி இளைஞர்கள் எமது பகுதிகளில் வேலைகளுக்கு அமர்த்தப்படுகின்றனர்.
சிங்கள இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் வழங்கப்படுகின்ற சந்தர்ப்பம் ஏன் தமிழ் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் வழங்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய சிறீதரன்
கிளிநொச்சி கிழக்குப் பகுதியில் எவரும் குடியேற அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் அங்கு 90வீதமானோர் குடியேற்றப்பட்டு விட்டதாக பொய்ப்பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களுடைய சொத்துக்கள் யாவும் சூறையாடப்படுகின்றன.
மீளக் குடியமர்த்தல் என்ற பெயரில் அனுமதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் தரிசு நிலங்களிலும் வெளிகளிலும் தறப்பாள்களிலும், தகரங்களுக்குக் கீழும் வாழுகின்ற அவல நிலை காணப்படுகின்றது.
மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற தகரங்களின் மேலே இந்திய மக்களின் அன்பளிப்பு என எழுதப்பட்டுள்ளது. எங்கள் மீது போரைத் தொடுத்து எங்கள் உறவுகளைக் கொன்றொழித்து எங்களை ஏதிலிகளாக்கி எங்களை தெருவில் விட்ட இந்தியா எங்களுக்கு வழங்கியுள்ள பரிசு 12 தகரங்கள் மட்டுமே.
எங்களுக்கு அமெரிக்கா, இந்தியா, உலக நாடுகள் தீர்வினை வழங்கும் என்ற ஒரு கற்பனை உலகிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்தியாவுடன் பேசுவதில் தவறில்லை ஆனாலும் 87களில் இருந்து இறுதிவரை எங்களது அழிவுகளில் கூடுதல் பங்கு வகித்தது இந்தியா. மாற்று அரசியலுக்காக சரத் பொன்சேகாவை நாங்கள் ஆதரித்தோம் என்றால் அதேபோல் இந்தியாவுடன் பேசுவதிலும் தவறில்லை என்று கூறலாம்.
ஆனாலும் எங்களுக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். எங்களுடைய அனைத்து ஆரோக்கியமான முனைப்புகளையும் முன்னெடுக்க எங்களுக்கு ஒரு தீர்வு வேண்டும். நாங்கள் ஒரு நல்ல தீர்வை நோக்கி நகர வேண்டும். அந்தத் தீர்வுக்கான பாதையை அல்லது அதற்கான வழிவகைகளையும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதற்கு அனைவரும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலையின் யுத்தம் தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வியாபித்து பின்னர் அது வன்னியிலே முடக்கப்பட்டது.
வன்னியின் கொரூரம் என்பது வார்த்தைகளுக்கு அடங்காதது. வன்னியில் நடைபெற்ற ஒரு சிறிய சம்பவத்தை இந்த வேளையில் குறிப்பிடுகின்றேன்.
ஒரு ஆசியரிருக்கு நிகழ்ந்தது.
இராணுவம் மிக நெருக்கமாக வந்துவிட்டது. அவருடைய தாய் படுகாயம் அடைகின்றார். படுகாயம் அடைந்தவரை மாற்று இடத்திற்குக் கொண்டு செல்ல முடியாத சூழல். அந்த இடத்தில் தாயை அவ்வாறே விட்டு விட்டுச் செல்ல முடியாத நிலையில் தாய் இறந்ததாக கருதிய அந்த ஆசிரியர் நிலத்தினை அகழ்ந்து அதனுள்ளே தாயை புதைத்துவிட்டு சென்றிருக்கின்றார்.
அதன் பின்னர் அவரைச் சந்தித்த சிலர் உமது அம்மா இறக்கவில்லை அவரது உடலில் உயிர் இருந்தது. என்று கூறியிருக்கின்றார்கள். அன்றிலிருந்து இன்றுவரை அந்தத் தாயின் நினைவாகவே அந்த ஆசிரியர் நாளைக் கழிக்கின்றார். அவரது வாழ்க்கை முழுமையும் அந்தத் தாக்கம் இருந்துகொண்டே இருக்கும்.
இவ்வாறாக பல்லாயிரக்கணக்கான அவலங்கள் வன்னியில் அரங்கேற்றப்பட்டன.
கஞ்சிக்காக காத்திருந்த எங்கள் பிஞ்சுக் குழந்தைகள் மீது ஈவிரக்கமற்ற முறையில் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டன. அந்தத் தாக்குதல்களில் குழந்தைகள் துடிதுடித்து இறந்த அவலம் உலகில் வேறெங்கு நிகழ்ந்திருக்கும்?
இவ்வாறான அர்ப்பணிப்புக்களையும் அவலங்களையும் சந்தித்த எமது இனத்தின் பிரதிநிதிகளாக தங்களைக் கூறிக்கொள்ளும் மேதாவிகளான சிலர் எம் இனத்தைக் காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டிற்காக சில இலட்சம் ரூபாய்களுக்கு சோரம் போய் சுயேட்சைகளாகக் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
தமிழ் மக்களினுடைய வாக்குகள் வன்னியில் இருந்து பிடுங்கி வீசப்பட்ட மக்களின் உணர்வுகளுக்காவும், உரிமைகளுக்காகவும் வழங்கப்படவேண்டும்.
வன்னியில் இருந்து சுயமான தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வெளி மாவட்டங்களுக்கு அரிசி அனுப்பி அதன் மகிழ்வில் வாழ்ந்த மக்கள் வன்னி மக்கள். இன்று யார் யாரிடமோ எது எதுக்கெல்லாமோ பிச்சை எடுக்கின்ற நிலையில் அந்த மக்கள் இருக்கின்றார்கள்.
அந்த மக்களது நலனை பிரதானமாகக் கொண்டே தாயகத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களது வாக்குகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படவேண்டும் என்றும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment