அமெரிக்க புலனாய்வுத் துறையோடு சரத் பொன்சேகா தொடர்புகொண்டார?
கடந்த மாதம் 8ம் திகதி கைதாகி கடற்படையினரின் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா, அமெரிக்க புலனாய்வுத் துறையோடு தொடர்புகொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 2 சர்வதேச தொலைபேசி அழைப்பை அவர் மேற்கொள்ளலாம் என சலுகை வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள அவரின் இரண்டு மகளுடனும் அவர் அன்றாடம் உரையாடிவருவதாகவும், இருப்பினும் அனோமா பொன்சேகா அவரை பார்க்க வரும்போது தனது கையடக்க தொலைபேசியில் சில தொடர்புகளை மேற்கொண்டு அதில் சரத்தை உரையாட வைத்திருப்பதாகவும் தற்போது கூறப்படுகிறது.
சிறையில் இருந்தவண்ணம், இலங்கையில் நடைபெற்ற யுத்தக் குற்றங்கள் தொர்பான சில தகவல்களை அவர் அமெரிக்க புலனாய்வுத் துறையினருக்கு தெரிவித்து வருவதாக இராணுவத்தினர் தற்போது நம்புகின்றனர். இதனால் அவர் எந்த விதமான சர்வதேச தொலைபேசி அழைப்பையும் இனி மேற்கொள்ள முடியாது என இராணுவத்தினர் கட்டுப்பாடு விதித்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. அனோமா பொன்சேகா கொண்டுசெல்லும் மொபைல் தொலைபேசியும் , சிறைக்குள் பாவிக்க தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
தான் தனது இரண்டு மகள்களுடன் மட்டுமே உரையாடியதாக சரத் தெரிவித்துள்ளபோதும், அத் தொலைபேசி அழைப்பு அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்பட்டதும், மறு முனையில் யார் பேசுவது என்பது அறியமுடியாது என்ற நிலை காரணமாகவும், இத் தடை உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். ஆக மொத்தத்தில் அமெரிக்காவும் சரத்தும் தொடர்புகளை பேணிவருவது இலங்கைக்கு ஆபத்து என்பதை கோத்தபாய நன்கு உணர்ந்திருக்கிறார்.
இதனை அடுத்து சரத் பொன்சேகா சாகும் வரை உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக சில உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைவாக, வழமையாக வீட்டில் சமைத்த உணவை எடுத்து வரும் அனோமா பொன்சேகா, இன்று அவரை பார்க்கவரும் போது எந்த உணவையும் எடுத்துவரவில்லை என அதிர்வின் கொழும்பு நிருபர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment