தமிழர்களது வாழ்வும் விடுதலைப் போராட்டமும் முள்ளிவாய்காலில் சிதைக்கப்பட்டு எதிர்காலம் சூனியமாக்கப்பட்டதற்கு ஒத்தாசை புரிந்து துணைநின்று செயற்பட்ட ஈ.என்.டி.எல்.எப். தேசவிரோத குழுவினர் மீண்டும் கிளிநொச்சியில் தளம் அமைத்து செயற்பட அனுமதியளிக்கப்பட்டமை சிங்கள இந்திய அரசுகள் வழங்கிய பரிசாகும்.
முள்ளிவாய்காலில் நயவஞ்சகத்தனமான முறையில் தமிழர்களது விடுதலைப் போரட்டமும் அதன் கட்டமைப்புகளும் சிதைக்கப்பட்டு பத்து மாதங்கள் நிறைவடைய இருக்கும் தருணத்தில் இதுவரை மர்மமாக இருந்து வந்த சில வினாக்களுக்கு விடைகிடைத்துள்ளது.
முப்படைகண்டு புதியவரலாறு படைத்த தன்னிகரில்லா தலைவன் மேதகு வே.பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு கட்டடுக் கோப்புடனும் உறுதிப்பாட்டுடனும் தாயகவிடுதலை நோக்கிய பயணத்தில் மக்கள் ஆதரவுடன் பயணப்பட்ட போது சமகாலத்தில் தோன்றிய பல இயக்கங்கள் இருந்த இடம் தெரியாது காணாமல் போயிருந்தமையும் சில இயக்கங்கள் தடம்மாறி சிறிலங்கா ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுடன் சமரசமாகி நக்கிப்பிழைக்கும் அரசியல் நடத்தியமையும் கடந்த கால வரலாறாகிப் போயிருந்தம யாவரும் அறிந்ததே.
தமிழீழ விடுதலைப்பயணத்தில் எவ்வித சமரசத்திற்கும் விட்டுக் கொடுப்பிற்கும் இடம் கொடுக்காது ஆரம்பம் முதல் இறுதிவரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு உறுதியுடன் செயற்பட்டு வந்ததனால் வெற்றுக்கோசங்களுடன் உலாவந்த இயக்ங்களும், அமைப்புக்களும் மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் களத்தை விட்டகன்று அன்னிய சக்திகளது காலடியில் தஞ்சம் புகுந்து வாழ்வு பெற்றுவந்தவர்கள் இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் தேசியத் தலைமையும் வெளிப்படாத சூழ்நிலையில் மீண்டும் களம் திரும்பி இருக்கின்றனர்.
நரி ஊருக்குள் வருவதே தப்பு….. ஊழையிட்டுக் கொண்டு வேறு வருகிறதா…… என்பது போன்று முன்னால் இயக்மான ஈ.என்.டி.எல.எப். வன்னியில் தளம் அமைத்து செயற்பட முற்பட்டுள்ளனர்.
குறிப்பாக இரண்டு தசாப்தங்களிற்கு முன்னர் ஈழவிடுதலைப் போராட்டக்களத்தில் இருந்து ஓடி இந்திய உளவுத்துறையின் ஆசீர்;வாதத்துடன் நாய்ப்பிழைப்பு பிழைத்து வந்த ஈ.என்,டி.எல்.எப் என்ற அமைப்பு கிளிநொச்சியில் முகாம் அமைக்க முற்பட்டுள்ளமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதோடு பல மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
கடந்த மே மாதம் 18ம் நாளன்று முள்ளிவாய்க்காலில் தமிழர் தேசமும் விடுதலைப் போராட்டமும் சிதைக்கப்பட்டு தற்போது பத்து மாதங்கள் நிறைவடையும் நிலையில் கூட முட்கம்பி வேலி வதைமுகாமிற்குள் அடைக்கப்பட்டுள்ள எமது சொந்தங்களை மீட்டு சகவாழ்வு வாழ வைக்கவோ… இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மனிதப் பேரவலத்தை ஏற்படுத்திய சிங்கள அரச இராணுவ தலைமைகளை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டிக்கவோ….. மனிதநேயம் பற்றி வாய்கிழிய பேசிவரும் உலகநாடுகள் எவையும் இதுவரை முன்வராத போதும் தமிழ்மக்களிற்கு காவலாக இருந்த இருந்து வருகின்ற தமிழீழ விடுதலைப்பலிகள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி பயங்கரவாத அமைப்பாக சித்தரிப்பதிலே முழுக்கவனத்தையும் செலுத்தி வருகின்றனர்.
2008ம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் வன்னியில் செயற்பட்டுவந்த அனைத்துலக தொண்டு நிறுவனங்களை முழுமையாக வெளியேற்றிய சிங்கள இனவாத அரசு அதன்பின்னர் மேற்கொண்ட கொடூர இனஅழிப்பை மூடிமறைக்க முயன்றபோது இவ் உலகநாடுகளும் அதற்கு இசைவாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிராந்தி உலக வல்லாதிக்க நாடுகள் உள்ளிட்ட இருபதிற்கு மேற்பட்ட நாடுகள் சிங்களத்துடன் சேர்ந்து எமது தேசத்தை சின்னாபின்னமாக்கி இருந்தநிலையில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து ஈ.என்.டி.எல்.எப். அமைப்பினைச் சேர்ந்தவர்களும் செயற்பட்டிருந்தமை தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
சிலநூறு பேரைக் கொண்டுள்ள இவ் அமைப்பு இந்திய உளவுத்துறையின் ஆசீர்வாதத்துடன் இந்திய மண்ணில் இவ்வளவுகாலமும் சுகபோகங்களை அனுபவித்து வாழ்ந்து வந்த நிலையில் வன்னியில் போர் உக்கிரம் பெற்றதை அடுத்து எசமானர்களின் ஏவல்களாக களமிறக்கப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் மக்களுக்கும் எதிரான பல தாக்குதல்களை மேற்கொள்ள பணிக்கப்பட்டிருந்தனர். அதனை செவ்வனே நிறைவேற்றியதற்கான பரிசாகவே தற்போது கிளிநொச்சியில் தளம் அமைத்து செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சில மாதங்கள் கடுமையான எதிர்த்தாக்குதல்களை நடத்தி கிளிநொச்சியை சிங்களப்படையின் கனவு நகரமாக்கி அடையமுடியாத இலக்காக தக்கவைத்து இருந்த நிலையில் கடந்த ஆண்டு தை மாதம் இரண்டாம் நாள் கிளிநொச்சி பரந்தன் பகுதிகளை கைவிட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் பின்வாங்கியதை அடுத்து தமிழீழ தனியரசின் நிர்வாக அரசியல் தலைநகராக செயற்பட்ட கிளிநொச்சி எதிரிப்படை வசமானது.
நன்கு பயிற்றுவிக்கப்பட்டு அனுப்பப்பட்ட ஈ.என்.டி.எல.எப். குழுவினர் மக்களோடு மக்களாக ஒன்றினைந்து பல சதித்திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். குறிப்பாக கிளிநொச்சியை கைவிடப்பட்டபின்னர் பெரும்பாலும் தற்காப்பிற்கான சிறிய தாக்குதல்கள் சிலவற்றை மேற்கொண்ட வண்ணம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தமிழீழ விடுதலைப்புலிகள் பின்வாங்கியிருந்த காலப்பகுதியிலையே இவர்களது சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
உடையார்கட்டு சுதந்திரபுரம் வள்ளிபுனம் புதுக்குடியிருப்பு இரணப்பாலை மாத்தளன் புதுமாத்தளன் வலைஞர்மடம் வெள்ளமுள்ளிவாய்கால் முள்ளிவாய்க்கால் என மக்கள் பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தி தமிழ்மக்களை ஓரிடத்தில் ஒன்றுதிரட்டி ஒட்டுமொத்தமாக கொன்று குவித்துவந்த காலப்பகுதியில் மக்கள் எங்கு செல்வது என்ன செய்வது எனத் தெரியாது தவித்துவந்த வேளை உள்நின்ற கயவர்களது வழிகாட்டுதல்களில் பின் பக்கமாக ஊடுருவி சுற்றிவழைத்து பெருமளவிலான மக்களை இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் பலாத்காரமாக கொண்டு செல்ல முற்பட்டனர் சிங்களப்படைகள்.
எத்தனை துன்பம் நேர்ந்தாலும் தம்மை காத்து காவல் நின்ற தமிழீழ விடுதலைப்புலிகளுடன் செல்லவே மக்கள் முடிவெடுத்தனர். அப்போது சில கசப்பான சம்பவங்கள் இடம் பெற்றீருந்தமையும் அவையே தமிழீழ விடுதலைப்புலிகள் மீது மக்களை வெறுப்படைய வைத்த நிகழ்வாக அமைந்ததுடன் அனைத்துலக ரீதியில் அழுத்தங்களை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமைந்திருந்தது.
இராணுவகட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல முற்பட்ட மக்களை விடுதலைப்புலிகளே குண்டு வீசியும் சுட்டும் படுகொலை செய்ததாகவும் ஆயுத முணையில் சுற்றிவளைத்து வெளியேறி செல்லவிடாது தடுத்ததாகவும் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது. அவ்வாறே சில சம்பவங்கள் இடம் பெற்றும் இருந்த நிலையில் சில கானொளி ஆதாரங்களும் சிங்கள இராணுவத்தால் வெளியடப்பட்டு இந்திய உளவுத்துறையின் கைவண்ணத்தால் வடஇந்திய ஆங்கில செய்தி சனல்கள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி கூப்பாடு போட்டிருந்தமையும் இடம்பெற்றிருந்தது.
இக்காலப்பகுதியில் வேறுசில தகவல்களும் வெளிவந்திருந்தன. அவையாவன: இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மும்பாயில் உள்ள இராணுவமுகாமில் இரகசியமாக தமிழ் ஒட்டுக்குழுக்களிற்கு பயிற்சி அழிக்கப்பட்டதாகவும் அவர்கள் வன்னிக்களமுனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஒரு செய்தி வெளியாகியருந்தது.
முள்ளிவாய்காலில் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தவேளை இந்திய இராணுவ உயரதிகாரிகளால் சிங்கள இராணுவத்திற்கு ஓர் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதாவது தம்மால் வன்னியில் இரகசிய நடவடிக்கைகளுக்காக பயிற்சியளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட 50 பேர் மக்களுடன் மக்களாக போராளிகளுடன் போராளிகளாக கலந்து நிற்பதாகவும் அவர்களை எவ்வித ஆபத்தும் இன்றி வெளியேற்றித் தரவேண்டும் எனவும் அவர்கள் எங்கு எவ்வாறு வந்து சேர்வார்கள் என்ற தகவலும் இந்திய இராணுவத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறே வன்னியில் உள்நுழைந்து இனத்தையே காட்டிக்கொடுத்து நயவஞ்சக செயல்களை செய்த 50பேரிற்கும் எந்த இடத்தில் எவ்வாறு சென்றடைவது எந்தவகையான நடவடிக்கைகளை கையாள்வது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இதன் அடிப்படையில் குறித்த 50பேரும் பாதுகாப்பாக சிங்கள இராணுவத்தால் மீட்க்கப்பட்டு அடுத்த கணமே இந்திய இராணுவத்தரப்பிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர்கள் மீண்டும் இந்தியா கொண்டுவரப்பட்டு மேலுமுக்கிய சில ஆலோசனைகள் வழங்கப்பட்டு தமிழகத்தில் களமிறக்கப்பட்டதாகவும் அந்த செய்தி மேலும் தெரிவித்திருந்தது.
இதில் என்ன வேடிக்கை என்றால் குறித்த 50 பேர் வன்னியல் இருந்து செயற்பட்டது இந்திய இராணுவத்தால் தெரியப்படுத்தப்படும்வரை சிங்கள இராணுவத்தினருக்கு தெரியாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவற்றை பார்க்கும் போது புலிகள் போர்வையில் நின்று இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் செல்ல முற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொன்றதும் சிங்கள இராணுவத்தால் சுற்றிவழைக்கப்பட்டு பலவந்தமாக இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டுவரப்பட்ட மக்கள் சோதனைக்காக விசுவமடுப்பகுதியில் குழுமியிருந்த இடத்தில் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டிருந்தமையும் இந்த துரோகக் குழுவினது நடவடிக்கையாகவே இருந்திருக்க வாய்ப்புள்ளது.(பல மக்கள் தற்போது இந்த விடையத்தை உறுதிப்படுத்தியும் உள்ளனர்)
முள்ளிவாய்க்கால் பகுதியை யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் வட இந்தியாவை மையமாக வைத்து செயற்பட்டுவரும் ஆங்கில செய்திச் சனல்கள் பரபரப்பாக ஒரு காணொளிக்காட்சியை மீண்டும் மீண்டும் பல நாட்கள் ஒளிபரப்பிவந்திருந்தன.
உளவு விமானம் மூலம் படம்பிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட காணொளியில் சுமார் ஆயிரம் வரையிலான தமிழர்கள் கடலால் சூழப்பட்ட பகுதியில் ஒதுக்கப்பட்டு ஆயுதம் தாங்கிய ஐந்து ஆறு நபர்களால் தடுத்து வைத்திருப்பது போன்ற காட்சி சலனப்பதிவாக காண்பிக்கப்பட்டிருந்தது.
யுத்தம் நடந்த பகுதியல் இருந்து வெளியேறமுற்பட்ட தமிழர்களை விடுதலைப் புலிகளே இவ்வாறு ஆயுதமுணையில் தடுத்து நிறுத்தும் காட்சியாகவே இவர்களால் சித்தரிக்கப்பட்டிருந்தது. சில நிமிடங்கள் கொண்ட இக்காட்சிப்பதிவுகள் அடங்கிய இறுவெட்டுக்கள் இந்தியா வருகைதந்த சிங்கள உயர்மட்டக்குழுவினரால் இந்திய உயரதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய உளவுத்துறையினரால் அவை ஆங்கில ஊடகங்களிற்கு வழங்கப்பட்டிருந்தன.
ஆயிரம் வரையிலான மக்களை ஐந்து ஆறு பேர் ஆயுதமுணையில் தடுத்து வைத்திருப்பது என்பது சாத்தியப்பாடு இல்லாத விடயமாகும். அதுவும் இவர்கள் சொல்வது போன்று வெளியேறவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இருந்த மக்களை இவ்வாறு ஐந்தாறு பேர் தடுத்து நிறுத்துவது இயலாத காரியமாகும்.
அப்படியானால் இது எவ்வாறு சாத்தியப்பட்டிருக்கும்.
மாத்தளன் பகுதியில் பாரிய ஊடறுப்புத் தாக்குதலை மேற்கொண்டு பல்லாயிரக்கணக்கிலான மக்களை பலவந்தமாக தமது கட்டுப்பாட்டு பகுதிக்குள் சிறைப்படுத்திக் கொண்ட சம்பவமும் அதன் பின்னரும் இது போன்ற பல சம்பவங்கள் இடம் பெற்றிருந்தமை யாவரும் அறிந்ததே.
அவ்வாறு சிறிலங்கா இராணுவத்தால் சுற்றிவழைக்கப்பட்ட தமிழர்களில் ஒருபகுதியினரை இவ்வாறு ஆயுதமுணையில் மிரட்டி கடல் சூழ்ந்த பகுதியில் நிறுத்தியிருக்கலாம்….. அதற்கு இந்த துரோக குழு உறுப்பினர்கள் உதவிபுரிந்திருக்கலாம்….. இதனையே தமது உளவு விமானத்தின் மூலம் திட்டமிட்டு படம் பிடித்து தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயண்படுத்தியிருக்கலாம்….
எமது இனத்தை சிங்களத்துடன் சேர்ந்து நின்று கொன்று குவித்த இந்த துரோகிகளது கடந்த காலமும் மக்கள் விரோத செயற்பாட்டிலே ஊறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்களது விடிவிற்காக எழுபதுகளில் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு இயக்கங்கள் எதிர் கொண்ட பெரும் நெருக்கடி நிதிப்பற்றாக்குறையாகும். தமிழர் தாயகப்பகுதியில் இயங்கிவந்த சிறிலங்கா அரச வங்கிகளை கொள்ளையடித்து இந்த நிதிப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்துவந்தனர்.
சில இயக்கங்கள் தமிழர்களது விடுதலைக்கான போரை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான நிதியினை பெறுவதற்காகவே ஆரம்ப காலகட்டங்களில் இவ்வாறான வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் ஈ.என்.டி.எல.எப். போன்ற பல வெற்றுக் கோசம் எழுப்பிவந்த இயக்கங்கள் அiமைப்புக்கள் வெறுமனே தமது சுகபோக வாழ்வினை உறுதிப்படுத்துவதற்காகவே வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்திருந்தனர்.
இவர்கள் வங்கிக் கொள்ளையுடன் மாத்திரம் நின்றுவிடாது கொலை கொள்ளை வழிப்பறி கற்பழிப்பு என அனைத்துவித சமூகவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர். அதனால்தான் அமைதிப்படை என கூறிக்கொண்டு தாயகத்தை ஆக்கிரமித்த இந்தியப்படையின் ஏவல் பணியாளர்களாக இவர்களால் இலகுவில் மாறி தேசவிரோத செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட முடிந்தது.
இவ்வாறு எமது தாயகத்தை சீரழித்த இந்த தேசத்துரோகிகள் மீண்டும் கிளிநொச்சியில் தளம் அமைத்து செயற்பட முற்படுவதும் வவுனியா முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு கிளிநொச்சி உள்ளிட்ட சில பகுதிகளில் மக்கள் மீளக் குடியேறிவருகையில் அண்மைக்காலத்தில் சில மர்மக் கொலைகள் இடம் பெற்றுவருவதும் தொடர்புபட்ட நிகழ்வுகளாகவே எண்ணத்தோன்றுகின்றது.
மீண்டும் இவர்கள் தமது கைவரிசையினை காட்ட முற்பட்டுள்ளதனையே இம்மர்மக் கொலைகள் எடுத்துக்காட்டுகின்றன. தொடர்ச்சியாக அண்மைய நாட்களில் கொலைசெய்யப்பட்ட நிலையில் கிணற்றுக்குள் வீசப்பட்டிருந்த பெண்களது உடல்கள் மீட்கப்பட்டிருந்தமையும் அவற்றை இராணுவம் உடனடியாக தமது கட்டுப்பாட்டில் எடுத்துச் சென்றிருப்பதும் பலத்த சந்தேகங்களை எழுப்பியிருந்த நிலையில் தற்போது கிளிநொச்சி பகுதியில் ஈ.என்.டி.எல்.எப். குழுவினர் முகாம் அமைத்து செயற்பட்டுவருவது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய உளவுத்துறையினரால் அன்று தொட்டு இன்றுவரை மாற்று இயக்கங்களாக செயற்பட்டு வருபவர்களிடம் பேரம் பேசல்கள் இடம்பெற்றுவந்துள்ளது.
தமிழர்களது தலைமையாக மக்கள் ஆதரவுடன் உறுதியுடன் செயற்பட்டுவந்த தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்கு தமக்கு உறுதுணையாக இருக்க சம்மதிக்கும் இயக்கத்தினருக்கு அமைப்பினருக்கு குழுக்களுக்கு தமிழினத்தை ஆளும் தலைமைப்பதவி வழங்கப்படும்என உறுதி மொழிவழங்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இரண்டு தசாப்த காலங்களிற்கு மேலாக ஈழவிடுதலைப் போராட்டக்களத்தில் இருந்து காணாமல் போயிருந்த ஈ.என்.டி.எல்.எப். அமைப்பு மீண்டும் கிளிநொச்சியில் முழுமையான சுதந்திரத்துடன் தளமமைத்து செயற்பட அனுமதியளிக்கப்பட்டிருப்பதனை பார்க்கும் போது இந்திய ஆளும் வர்க்கத்தின் வலையில் சிக்கி எமது தேசத்தை சிதைப்பதற்கு உடன்பட்டமைக்கான பரிசாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது.
வன்னியில் மக்கள் மீளக்குடியேறிவரும் நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் ஒருங்கிணைந்து மக்கள் ஆதரவுடன் வளர்ச்சியடைவதனை தடுக்கும் நோக்கத்துடனேயே இவர்கள் தளம் அமைத்து செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாக தோன்றுகின்றது.
ஒருவேளை மக்களை தேடிவரும் புலிகளை அரவணைத்து பாதுகாப்பு கொடுத்து செயற்பட மீளக்குடியேறும் மக்கள் முன்வருவார்களேயானால் அவர்களை அச்சுறுத்தும் விதமாகவே இவர்களது மீள் பிரவேசமும் தொடர் மர்மக் கொலைகளும் இடம்பெற்றுள்ளது.
மல்லாவிப்பகுதியில் மீளக்குடியேறி வசித்துவந்த ஒரு குடும்பத்திடம் நள்ளிரவில் தம்மை புலி உறுப்பினர்கள் எனக்கூறிக்கொண்டு வந்தவர்கள் உணவுதருமாறு கேட்டுள்ளனர். அவர்களும் உணவை வழங்க அதனை ஆற அமர இருந்து சாப்பிட்டுவிட்டு பின்னர் தம்மை இராணுவப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி அக்குடும்பத்தை அவ்விடத்திலையே சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் மேற்சொன்னவற்றை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
வெளிப்படையாக தமிழ்மக்களிற்கு பாதுகாவலராக புலிகள் இருந்தபோது மக்களால் விரட்டியடிக்கப்பட்ட இந்த தேசவிரோத குழுவினர் தமிழ்த் தேசியத்தலைமையினதும் புலிவீரர்களதும் இருப்பு வெளிப்படாது இருக்கின்ற இச்சூழலில் மக்கள் மத்தியில் மீண்டும் தோற்றம் பெற்றுள்ள இவர்களது நடமாட்டமும் அச்சமூட்டுவதாகவே அமைந்துள்ளது.
சிறிலங்கா இந்திய ஆதரவுடன் மீண்டும் தாயகத்தில் காலூன்றி இருக்கும் இவர்கள் அனைத்துலக சூட்சிகளை முறியடித்து தேசியத்தலைமை வெளிப்படும் போது சூரியனைக் கண்ட பனித்துளிபோன்று காணாமல் போய்விடுவார்கள். அதுவரை இவர்களை இனம் கண்டு ஒதுக்கிவைப்பதுடன் அவர்களது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காது இருக்கவேண்டியது தமிழர்களது இன்றைய கடமையாகும்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
இரா.மயூதரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment