Tuesday, March 16, 2010

நாங்கள் திரும்பவும் தொடக்க புள்ளிக்கே வந்துவிட்டோம்": போரில் இருகால்களையும் ஒரு கண்ணையும் இழந்து தவிக்கும் ஜெனதா : அமெரிக்க ஊடகம்

பொதுவான எல்லா இளம் வயதினரைப் போலவே - தனது எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றது என்பது பற்றி தனக்கு இருக்கும் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாது தவிக்கிறார் ரவீந்திரன் ஜெனதா.

அவருக்கு வயது 21. தனது எதிர்காலம் எப்படியானது என்பது அவருக்கு உறுதியாகத் தெரிந்து இருக்கின்றது.

“ஒன்றுமே கிடையாது” என்கிறார் மென்மையாக.

அவருடைய கடந்த காலம் மற்றும் அவருக்கு நிகழ்ந்தவைகள் காரணமாக - தனக்கு எதிர்காலம் என்று ஒன்று நிச்சயமாக இல்லை என்பதில் ரவீந்திரன் ஜெனதா உறுதியாக இருக்கிறார்.

“இப்போது என்னால் எதுவும் செய்ய முடியாது. அது தான் இருக்கின்ற ஒரே பிரச்சினை” எனச் சொல்கிறார் அவர்.

அப்படிச் சொன்னதன் பின்னர் அவரது இனிமையான சிரிப்பும் நம்பிக்கைத் தொனியும் உடைந்து சிதறுகின்றன. சோகத்திற்குள் மூழ்கிப் போகிறார். வழியும் கண்ணீருக்கு நடுவில் வார்த்தைகள் குளறியபடி வெளியாகின்றன. “எதைச் செய்வதானாலும் எனக்கு இப்போது உதவி தேவையாக இருக்கிறது” என்கிறார்.

இலங்கை அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடந்த ஆண்டு நடந்த கடுமையான கடைசிச் சண்டையின் இடையில் அகப்பட்டுக் கொண்ட 280,000 பேரில் ரவீந்திரன் ஜெனதாவும் ஒருவர்.

சண்டையில் இருந்து அவர் ஒருவாறு தப்பி வெளியேறி விட்டார். ஆனால் அதற்கு முன்பாக கால்களையும் கண்களில் ஒன்றையும் பறிகொடுத்து விட்டார்.

“எங்களுக்கு ஒரு பதுங்கு குழி கிடைத்திருந்தது. நாங்கள் தங்கி இருந்த அந்தப் பதுங்குழியின் உள்ளேயே எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. அதில் என் உறவினர் இறந்து போனார். எனக்கு...? நான் என் இரு கால்களையும் இழந்தேன்” சோகத்துடன் வருகின்றன வார்த்தைகள்.

தனக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்லும் போது தன் கண்பார்வை போன விதத்தைச் சொல்வதற்கு அவர் மறந்து விடுகிறார்.

சில நிமிட சோகம் கப்பிய அமைதிக்குப் பின்னர் தொடர்கிறார், “எனக்கு இப்போது ஒரு கண்ணும் கிடையாது”.

இவ்வாறாக CNN நிறுவனத்திற்காகத் தயாரித்த ஒரு விவரணச் சித்திரத்தில் Sara Sidner எழுதியுள்ளார். அதனைப் புதினப்பலகை-க்காகத் தமிழாக்கியவர் ரி.ரேணுபிரேம்.

Sara Sidner தொடர்ந்து எழுதியுள்ளதாவது:

அந்த பயங்கரம் நிறைந்த சம்பவங்கள் இடம்பெற்ற போது ரவீந்திரன் ஜெனதாவும் அவரது குடும்பத்தினரும் இலங்கையின் வட பகுதியில் உள்ள அவர்களது சொந்த ஊரில் வசித்து வந்தார்கள்.

அவர்களைச் சுற்றி அந்த இடத்தில் வசித்த ஏனைய குடும்பங்கள் ஒவ்வொன்றிடமும் நீண்ட போர்க் கதைகளும் சாவு பற்றிய செய்திகளும் உள்ளன.

சாவைத் தவிர்ப்பதற்காக அவர்கள் ஒரு பதுங்கு குழியில் இருந்து மற்றொன்றுக்கு என மாதக் கணக்காக ஓடிக் கொண்டிருந்த ஒரு பயங்கரமான வாழ்வை வாழந்திருக்கிறார்கள்.

போர் மிக மோசமாக நடந்து கொண்டிருந்த சமயத்தில், இந்தியாவின் தெற்கே கண்ணீர்த் துளி வடிவத்தில் அமைந்துள்ள அந்த தீவின் மீது உலகின் கவனம் திரும்பியது.

2009 ஆம் ஆண்டில் - கடுமையான இறுதிப் போர் நடந்த மாதங்களில் - போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானப் பேரவலங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளாகின.

போரில் ஈடுபட்ட இரு தரப்புக்களுக்கு எதிராகவும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.

மோசமாகி வந்த சண்டைக் களத்தில் இருந்து வெளியேற விடாது தடுத்து மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள் என்று தமிழ்ப் புலிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், அதனை அவர்கள் மறுத்தார்கள்.

தாமே அறிவித்த பாதுகாப்பு வலயங்களில் இருந்த மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தின என இலங்கைப் படைகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
படைகளின் தளபதிகள் அவற்றை மறுத்தார்கள்.

இந்த போர் 2009 ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை அடைந்த போது - போர் பற்றிய செய்திகளை பக்கசார்பற்ற ஊடகவியலாளர்கள் சேகரிப்பதை இலங்கை அரசாங்கம் தடுக்கத் தொடங்கியது.

போருக்குள் சிக்கிக் கொண்டுள்ள மக்களுக்கு உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது பற்றிய பல கேள்விகளை இந்தத் தடை எழுப்பியது. போர் முடிவடைந்த மாதங்கள் கடந்த போதும், சண்டைக் களத்தில் இருந்து தப்பி வந்தவர்கள் அரசு நடத்திய முகாம்களிலேயே வாழ்ந்தார்கள்.

கடைசியில் ஒரு வழியாக, மக்கள் எங்காவது செல்லலாம் எனக் கூறி அந்த முகாம்களில் பலவற்றை அரசு திறந்து விட்டது.

ரவீந்திரன் ஜெனதாவுக்கு, போர் இல்லாத ஒரு வாழ்வு பற்றித் தெரியவே தெரியாது. ஏனையவர்களைப் போலவே அவரது கதையும், கண்ணீர் வெள்ளத்தால், அல்லது கோபத்தால், அல்லது தனக்கும் தன் அன்புக்குரியவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை விளக்குவது, அல்லது புதிய யதார்தத்தை எப்படிச் சமாளிப்பது என்ற எண்ணங்களால் நிறைந்து கிடக்கின்றது.

“நாங்கள் இப்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னைச் சந்தோசமாக வைத்திருக்கவில்லை” என்று தனது துண்டாடப்பட்ட கால்களைக் கவனமாக மறைத்துக் கொண்டு சொல்கிறார் அவர்.

“ஆனால், எவ்வளவோ எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்ட பின்னால், ஆண்டுக் கணக்கில் தொடர்ந்த போரின் பின்னர், பெரும் அழிவுகளின் பின்னர் அவற்றால் ஏற்பட்ட பயன் என்ன?
இவை எல்லாமும் எதற்காக...?

நாங்கள் திரும்பவும் தொடக்கப் புள்ளிக்கே வந்துவிட்டோம்." என்கிறார் ஜெனதா

No comments:

Post a Comment