Tuesday, March 16, 2010

'நாங்கள் என்ன செய்தோம் என்பது முக்கியமல்ல, இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்பதே முக்கியம்!': ஈழநாடு (பாரிஸ்)

ஈழத்தில் வாழும் தமிழர்கள் பிச்சைக்கார முட்டாள்கள்.... என்ற தலையங்கத்தில் திரு. காந்தன் அவர்கள் எழுதிய ஈழநாடு (பாரிஸ்) குறித்த குற்றச்சாட்டுக்கு ஆசிரியரால் வழங்கப்பட்டுள்ள விளக்கங்கள்

தங்களது கவனிப்பில் ஈழநாடு பத்திரிகைகளில் வந்த பல கட்டுரைகளது நோக்கங்கள் வேறு விதமாக உணரப்பட்டுள்ளது வேதனையான விடயமாக உள்ளது. எனது கட்டுரைகள் அனைத்தும் தங்களைப்போன்ற படித்த, பணம் நிறைந்த வசதி படைத்த தமிழீழ மக்களைத் தாண்டி, அழிவுகளின் பிடியில் சிக்கி, மரணத்தின் வாசல்வரை சென்று, அங்கிருந்து தப்பி முள்வேலி முகாம்களுக்குள் சித்திரவதைபட்டு, அடுத்த வேளை உணவுக்கும், தண்ணிக்கும் அந்தக் கொடூரமான சிங்களச் சிப்பாய்களிடமே தட்டேந்தி நிற்கும் பாவப்பட்ட தமிழீழ மக்களுக்காக, அத்தனை அதிர்ச்சிகளாலும் சுக்கு நூறாகிப்போன இதயங்களோடு வாய் திறக்க முடியாமல் மவுனிக்கப்பட்ட எஞ்சிய தமிழ்த் தேசிய உணர்வு கொண்ட மக்களுக்காகவும் மட்டுமே எழுதப்படுகின்றது.

புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தமிழீழ மக்கள் குழாமின் ஒரு பகுதியினர் என்பதை மறந்து ஏன் காழ்ப்புணர்ச்சியுடன் அவர்களை நோக்குகிறீர்கள்? என்பது புரியவில்லை. அங்கு அவர்கள் சிங்கள தேசத்தால் மறுக்கப்பட்ட கல்வியில் சாதனை படைப்பதும், சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி பொருளாதார பலத்தினைப் பெருக்குவதும் உங்கள் கண்களுக்கு ஏன் உறுத்தலாக உள்ளது? அவர்களும் உங்களின் உறவுகள் என்பதை ஏன் நிராகரிக்கிறீர்கள் என்பது புரியவில்லை. தாயகத்து உறவுகளான புலம்பெயர் தமிழ்ச் சமூகம் கல்வியிலும், பொருளாதாரத்திலும் பலம் பெற்று வருவதாகக் கூறுவது உங்களுக்கு எப்படிப் பொறுக்காத கோபத்தை ஏற்படுத்துகின்றது? மறு கோணத்தில் சிந்திக்க வைக்கிறது?

'நீங்கள் யார்? நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்? உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? என்பது எனக்கோ அல்லது ஈழத்தில் வாழும் என்னைப்போன்ற அகதிகளுக்கோ தெரியாது. ஆனால் நான் பட்டம் முடித்திருக்கிறேன். நல்ல தொழில் இருக்கிறது. இழந்தவற்றை மீள உருவாக்குவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. என்னைப்போன்றே வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் வாழும் மற்றவர்களும் கற்றும் போதுமான பணத்துடனுமே உள்ளனர்.' என்ற கூற்று உங்களது சமுதாய அக்கறையற்ற மனதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. யுத்த சூழ்நிலை காரணமாக இலட்சக் கணக்கான தமிழர்கள் கல்வியைத் தொடரும் பாக்கியத்தை இழந்தார்களே, அவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றா கருதுகிறீர்கள்? நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்து இளம் குருத்துக்கள் தமிழீழ விடுதலைக்காகக் களமாடிப் பலியானார்களே, அவர்கள் பட்டம் பெற்றுவிட்டா தியாக வேள்வியில் குதித்தார்கள்? தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கூட உங்கள் தகுதிக்குப் படிக்கவில்லை என்பதால் நீங்கள் பட்டம் மட்டும் பெற்றதால் உயர்ந்துவிட்டீர்கள் என்றா கருதுகிறீர்கள்?

'அவலமே வாழ்க்கையாகிப் போனவர்கள் நாங்கள். எங்கள் அவலத்தினை வைத்து வாழ்வு நடாத்துபவர்கள் நீங்கள். இராணுவமும் சுடுகிறது. விடுதலைப்புலிகளும் சுடுகிறார்கள் என்று சொல்லி அகதி அந்தஸ்து கோரியவர்கள் நீங்கள். அந்த வார்த்தையினாலேயே விடுதலைப்புலிகள் அமைப்பு பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்டது.' என்ற தங்களது வாதத்தை நிச்சயமாக நான் நிராகரிக்கப் போவதில்லை. அந்தக் குற்ற உணர்ச்சி காரணமாகத்தான் நாங்கள் ஈழத் தமிழர்களான எங்கள் உறவுகளுக்காக தூங்கிக்கொண்டிருக்காமல் எம்மால் முடிந்த உதவிகளையும், போராட்டங்களையும் நடாத்துவது உங்கள் கண்களுக்கு எப்படித் துரோகமாகத் தெரிகின்றது?

'29 செப்ரெம்பர் 2009 தாங்கள் எழுதிய தடைக்கல்லாக மாறுகின்றதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு? என்ற ஆசிரியர் தலையங்கத்தில் செப்ரம்பர் 7-ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த விடயமானது, புலம் பெயர் தேசத்துத் தமிழர்கள் இதுவரை நடாத்திவந்த தொடர் போராட்டத் தியாகம் வீணாகிப் போய்விடுமோ என்று அச்சங்கொள்ள வேண்டியுள்ளது என்று எழுதப்பட்டுள்ளது. உயிரையும் உதிரத்தையும் உறவுகளையும் உடல் அவயவங்களையும் கொடுத்து வன்னியிலே நாங்கள் செய்த போராட்டத்தின் தியாகம் உங்களால் உணர முடியாது.' என்ற தங்களது குற்றச்சாட்டின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்காக வக்காலத்து வாங்குவதற்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் உணர்வு பூர்வமான போராட்டங்களை உதாசீனப்படுத்தியது ஏன்? புலம்பெயர் நாடுகளின் சட்டங்களையும் மீறி வீதி மறியல் போராட்டங்களை நடாத்தி, சிறைகளில் அடைபட்டு, சிதறாமல் பலமாக நிற்கும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்து அமைப்புக்களுடன் ஏன் சந்திப்புக்களை நடாத்தவில்லை. கொலைகார ராஜபக்ஷக்களுடன் சந்திப்புக்களை நடாத்துவதற்கு முன்னர், சிங்கள தேசத்தால் நெருங்க முடியாத ஈழத் தமிழர்களின் பிரிக்க முடியாத சக்தியான புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களை ஏன் அறிந்து கொள்ள முற்படிவில்லை?

'வன்னியிலே அவலப்பட்ட எங்களை மனிக்பாமிலிருந்து வெளியே எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்தபோது அதை தடுத்தவர்கள் நீங்கள். ஏனேனில் எங்கள் அவலங்கள் மட்டுந்தான் உங்களுக்கு போராட்ட ஆயுதமாக இருக்கிறது. 08 செப்ரெம்பர் 2009 அன்று தாங்கள் எழுதிய மடலில் 'வவுனியா வதை முகாமிலிருந்து எமது மக்களை விடுவித்தேதான் ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எப்போதோ உருவாக்கப்பட்டு விட்டது. அவர்கள் மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்தும் பொறுப்பை புலம் பெயர் தேசத்து எங்களிடம் விட்டு விடுங்கள். சிங்களத்துச் சிறைகளில் வாடும் எம் தமிழ் உறவுகளை இப்படியே விட்டுவிட்டு வாழாதிருக்கமாட்டோம். உலக நாடுகளின் மனச்சாட்சியைத் தட்டிக்கொண்டே, சிங்களத்தின் கொடூரங்களை அம்பலப்படுத்தியபடி அவர்களையும் சிறை மீட்போம்.' என்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எழுதுகிறீர்கள். உங்கள் குழந்தைக்கு பாலில்லாமல் உங்கள் தங்கைக்கு கழிப்பறை இல்லாமல் இருந்திருந்தால் நீங்கள் இதை எழுதியிருக்க மாட்டீர்கள். உங்களைப் பொறுத்தவரை நாங்கள் படிப்பறிவில்லாத பிச்சைக்காரர்கள்தானே.' என்ற தங்களது கருத்து உண்மைக்குப் புறம்பானது. முள்வேலி முகாம்களுக்குள் எமது மக்கள் சித்திரவதைகள் அனுபவித்த போதும் நாங்கள் இங்கே போராட்டம் நடாத்திக்கொண்டுதான் இருந்தோம் என்பது உலகம் அறியும். அந்தக் காலப் பகுதியில், அந்த மக்களைச் சென்று பார்ர்க்கவே அனுமதிக்காத சிங்கள அரசின் மனித உரிமை மீறலைக் கண்டித்து எந்தத் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சாத்வீகமாகவாவது போராட முயற்சி செய்தார்கள்? முள்வேலி முகாம்களிலிருந்து மக்களை மீட்டு எடுத்தது நாங்கள்தான் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களும் உரிமை கோருகிறாரே? புலம்பெயர் நாடுகளின் அழுத்தங்கள் காரணமாகவே முகாம்கள் திறக்கப்பட்டது என்பதை சிங்கள தேசமே ஒப்புக்கொண்டுள்ளபோது உங்களுக்கு எங்கே சந்தேகம் வந்தது?

'08 பெப்ரவரி 2010 தாங்கள் எழுதிய ஆசிரியர் தலைப்பில் புலம்பெயர் தேசங்களின் தமிழ் அமைப்புக்களுடன் உறவுகளைப் பேணி, அதன் மூலம் புலம்பெயர் தமிழீழ மக்களது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து செயலாற்ற வேண்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஈழத் தமிழர்களது தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் புலம்பெயர்ந்து வாழும் நிலையில், அவர்கள் தமிழீழத்தில் வாழும் தமது உறவுகளைக் கட்டுப்படுத்தும் பலம் கொண்டவர்கள் என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டால், தமிழீழத்தில் புதியதொரு அரசியல் தலைமையை உருவாக்க வேண்டிய வெற்றிடம் ஒன்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளீர்கள். இங்கு புலம்பெயர் தமிழீழ மக்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்பதுதான் உங்கள் பிரச்சினையே தவிர தமிழ் மக்கள் பிரச்சினை என்ன என்பதோ அதற்கான தீர்வு என்ன என்பதோ அதற்கான நடைமுறை என்ன என்பதோ உங்கள் பிரச்சினை இல்லை. பொதுவாகச் சொல்லப்போனால் ஈழத்தில் தமிழர்களாகிய நாம் அவலப்படவேண்டும். அதைவைத்து நீங்கள் வாழ்வு நடாத்த வேண்டும். அதற்கான அரசியல் சூழல் இங்கு இருக்கவேண்டும் என்பதே உங்கள் சிந்தனை.' என்ற உங்கள் சிந்தனை தங்களுக்குள்ள மட்டுப்படுத்தப்பட்ட அறிவின் வெளிப்பாடாகவே கருதுகிறேன். தங்கள் குடும்பத்தில் எத்தனை உறவுகள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள் என்பதை நான் அறியேன். ஆனாலும், இங்கு புலம்பெயர்ந்து வாழும் அத்தனை தமிழர்களின் வேர்களும் உறவுகளும் அங்கேதான் உள்ளது. அவர்கள் நிமித்தம் இங்கு வாழும் தமிழர்கள் தாயகத்தில் வாழும் தம் உறவுகளுக்காகக் கலங்குவதும், அவர்களது நிம்மதியான வாழ்வுக்காகப் போராடுவதும், அவர்களுக்கான எதிர்கால அரசியல் பலத்தைச் சீர் செய்வதும் தவிர்க்க முடியாத நியாயம் என்றே கருதுகின்றேன். இன்று போல் ஒரு காலத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ஒன்று படுத்தப்பட்ட அமைப்பை நாங்கள் ஆதரித்து எங்களுக்காக சிங்கள நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதும், அங்கு சென்ற அமிர்தலிங்கம் தலைமையிலான அவர்கள் எதிர்க்கட்சித் தலைமையை ஏற்று முடிசூடிக் கொண்டதும், பிரச்சினை என்றதும் ஓடி ஒழித்து இந்தியா சென்று தங்களை மட்டும் பாதுகாத்ததும் வரலாற்றுப் பதிவுகள். அந்த 'தமிழர் விடுதலைக் கூட்டணி' தற்போது ஆனந்தசங்கரியரால் தனது சொத்தாக்கப்பட்டு, ஈழத் தமிழர்களால் நிராகரிக்கப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியாது. கால மாற்றத்திற்குத் தகுந்ததாக அரசியல் தலைமைகள் மக்களுக்காகச் செயற்பட மறந்தால், அந்த இடத்திற்கு புதியதொரு அரசியல் சக்தியை உருவாக்குவார்கள் என்பதைத் தாங்கள் கற்ற பட்டப்படிப்பு தங்களுக்குத் தெளிவு படுத்தவில்லையா?

'03 பெப்ரவரி 2010 இல் தங்களுடைய ஆசிரியர் தலைப்பில் 'விடுதலைப் போர்க் களத்தில் புலம்பெயர் தமிழர்களது பங்களிப்பு எவ்வளவு காத்திரமாக இருந்ததோ, அவ்வாறே அரசியல் போர்க் களத்திலும் அவர்களது பங்களிப்பு அவசியமானது மட்டுமன்றி, புறக்கணிக்க முடியாது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழீழத்தின் சொந்தக்காரர்களான ஈழத் தமிழர்களின் மூன்றில் ஒரு பகுதியினர் புலம்பெயர் தேசங்களில் வாழ்கிறார்கள் என்பதையும் கணக்கில் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்துக்களையும், முடிவுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே புலம்பெயர் தமிழர்களின் அவாவாக உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.' ஈழத் தமிழர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழ்கிறார்கள் என்பது ஒரு கண்க்கீடு. அதில் நானோ, தாங்களோ மாற்றம் செய்துவிட முடியாது. தங்களது காழ்ப்புணர்ச்சிகளுக்கு அப்பால், புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தமது உறவுகளான, வேர்களான, ஈழத் தமிழர்களின் இன்னல்களுக்கு விடிவு தேடும் முயற்சியில் பின் நோக்கி நகரப் போவதில்லை. சிங்கள அரச பயங்கரவாதத்தால் நொருங்கி, வாயிழந்து போயுள்ள உறவுகளுக்காகப் பேசவேண்டிய நிலையில் உள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகம், ஈழத் தமிழர்களின் இத்தனை அழிவுகளுக்குப் பின்னாலும், தவறான அரசியல் முனைப்புடன் தமிழீழ மக்களிடம் அரசியல் நடாத்த முற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்தனை செயல்களையும் கண்களை மூடிக்கொண்டு மவுனமாகப் பார்த்திருக்க மாட்டாது என்பதையும் தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

'மூன்றில் ஒரு பகுதியினர் புலம்பெயர் தேசங்களில் வாழ்கிறார்கள் என்று தாங்கள் அதிகமான தலைப்பில் தெரிவிப்பதின் அர்த்தம் புரியமுடியாதுள்ளது. ஆனாலும் அவ்வாறான ஒரு தொகையான மக்கள் தமிழீழத்திற்கான பங்களிப்பினை தரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதே நாடு கடந்த தமிழீழ அரசு. ஈழத்தில் வாழும் மூன்றில் இரண்டு பங்கு மக்களாகிய நாம் எந்த தியாகம் செய்தோம் என்ற அடிப்படையிலோ, அல்லது எம்மிடம் பொருளாதார அல்லது கல்வி பலம் உண்டா இல்லையா என்ற அடிப்படையிலோ நாடு கடந்த தமிழீழ அரசில் எந்த இடைஞ்சல்களையும் ஏற்படுத்த தயாராக இல்லை. அதேபோன்று தாயகத்தில் வாழும் நாம் எமது ஒன்றுபட்ட பலத்தினை சர்வதேசத்திற்கும் அரசுக்கும் காட்டவேண்டிய நிலையில் உள்ளோம்.' என்ற கருத்தில் எனக்கு எந்த மாறுபாடும் கிடையாது. நீங்களும், நாங்களும் இணைந்து செல்லக்கூடிய ஒரு நேர்கோடு என்ற நம்பிக்கையை நாடு கடந்த தமிழீழ அரசு ஏற்படுத்துமாயிருந்தால், தமிழ்த் தேசிய உணர்வுள்ள எவரும் அதை நிராகரிக்க மாட்டார்கள். புலம்பெயர் தமிழர்கள் உலகத் தமிழர் பேரவையையும், நாடு கடந்த தமிழீழ அரசையும் இரு கண்களாகவே பார்க்கின்றார்கள். நாடுகடந்த தமிழீழ அரசின் ஒருங்கிணைப்பாளர் திரு. வி. உருத்திரகுமாரன் அவர்கள் இந்த இரண்டு அமைப்புக்களையும் சிங்கள இனவாதத்தைச் சுக்குநூறாக்கப்போகின்ற 'இரட்டைக்குழல் துப்பாக்கி' என்றே வர்ணித்துள்ளார்.

'இவ்வாறான நேரத்தில் புலம்பெயர் தமிழர்களுக்கு மதிப்புக்கொடுக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் தேசியத்தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதும் விமர்சிப்பதும் உங்களுக்கு மதிப்பு கொடுக்கக்கூடியதான ஒரு குழுவினை ஏற்படுத்தி அதனை ஆதரிப்பதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக தமது உயிரை தியாகம் செய்த மாவீரர்களின் ஆன்மாவினை வேதனைப்படுத்தும் என்பதே உண்மை.' என்ற கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. தேசியத் தலைவர் அவர்களுக்குப் பக்கத்திலேயே கருணா என்ற நச்சுச் செடியும் வளர்ந்திருந்தது. விடுதலைப் புலிகளின் தமிழீழக் கொள்கைகளை சிங்கள தேசத்திலும், உலக அரங்கிலும் எடுத்துச் செல்லவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

'நாங்கள் என்ன செய்தோம் என்பது முக்கியமல்ல, இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்பதே முக்கியம்!'

No comments:

Post a Comment