தமிழ் மக்கள் தமது ஒற்றுமையே ஒரேஒரு ஆயுதமாக நம்பி தேர்தல் களத்தினை சந்திக்கும் இந்த நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஆசனம் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் பிரிந்து தனிக்குழுவாக தேர்தலை சந்திப்பது மட்டுமல்ல தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினை வாதத்தினையும் வளர்க்கின்றீர்கள்.
பிரிவினைவாதம் உங்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான். வன்னியிலே தமிழ்ச்செல்வன் குழு என்றும் நடேசன் குழு என்றும் இரண்டு குழுக்களாக பிரிவினைவாதத்தினை ஏற்படுத்தியவர் நீங்கள்.
கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபராக சிறிதரன் அவர்கள் இருந்தபோது தன்னுடைய பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் தேவையென்று அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனை பலமுறை அணுகியபோதும் அவருடைய குழுவில் இருந்த தாங்களும், பாப்பா, இளம்பருதி, கண்ணன் ஆகியோரும் அதை எதிர்த்தபோது சிறிதரன் அவர்கள் அப்போது காவல்துறை பொறுப்பாளராக இருந்த பா.நடேசன் அவர்களை அணுகி அவர் மூலமாக விடுதலைப்புலிகள் தலைமையை தொடர்புகொண்டு பாப்பா அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த குறிப்பிட்ட இடத்தை மகாவித்தியால விளையாட்டு மைதானமாக பெற்றுக்கொண்டதும் அதன் காரணமாக இரண்டு குழுக்களை நீங்கள் வளர்த்துவிட்டதும் வன்னியில் இருந்த எங்களுக்கு தெரியாததல்ல.
2006 முதல் 2008 வரை வன்னியில் இருந்து ஏதோ செய்ததாக எழுதியிருக்கிறீர்கள். இரண்டு ஊர்வலங்களில் கலந்துகொள்வதற்கும் அதைப்பற்றி பத்து அறிக்கைகள் ஈழநாதத்தில் போடுவதற்கும் நீங்கள் பாராளுமன்றம் போக வேண்டியதில்லை? 2008 ல் மக்கள் தினம் தினம் கொல்லப்பட்டு இளைஞர்களும் யுவதிகளும் தாயகத்தை மீட்க போருக்கு செல்லும்போது நீங்கள் அவசர அவசரமாக உங்கள் சகோதரிக்கு திருமணம் செய்து வைத்ததுதான் நீங்கள் வன்னியில் செய்ததாக எனக்கு ஞாபகம் இருக்கிறது. திருமணம் செய்யாத எல்லோரும் போராடவேண்டும். நீங்கள் புத்திசாலி.
உங்கள் சகோதரனை விடுவிப்பதற்காக மகிந்த அரசுடன் ஒப்பந்தம் செய்து அதன்படி வெளிநாட்டுக்கு சென்று வாயை மூடிவைத்திருந்தது பலருக்கு தெரியும். ஆனால் நீங்கள் புலத்திற்கு சென்று பெரிதாக ஏதோ செய்ததாக சொல்கிறீர்களே? என்ன செய்தீர்கள் என்று தயவுசெய்து சொல்கிறீர்களா?
பாராளுமன்றத்திற்கு சென்று நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். கடந்த தடவை பாராளுமன்றத்திற்கு சென்ற நீங்கள் அங்கே வாயே திறப்பதில்லையாமே. கதிரைக்கு பாரமாக இருக்கிறீர்களே என்று யாராவது கேட்டால் இங்கிலீஷ் தெரியாது. தெரிந்தால் ஒரு கை பார்த்துவிடுவேன் என்று சொல்வீர்களாமே. இப்போது இங்கிலீஷ் கதைப்பீர்களா? அது சரி யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஒரு ஆங்கில ஆசிரியரிடம் பளை அரசியல்துறை அலுவலகத்தில் வைத்து இங்கிலீஷ் டிப்ளோமா சான்றிதழ் பெற்றீர்களாமே. மிரட்டி சான்றிதழ் வாங்கினால் இங்கிலீஷ் கதைக்கமுடியுமா?
விடுதலைப்புலிகளின் ஆயுத வழியிலான போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகின்றதான இந்தநேரத்தில் தமிழ் மக்களின் பலம் என்று சொல்லக்கூடியதான ஒன்று எங்கள் ஒற்றுமையே. ஒற்றுமையின் வழிநின்று இராஜதந்திர ரீதியில் எடுக்கக்கூடிய முடிவுகளின் மூலமே தமிழ்மக்களுக்கு கெளரவமான ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.
தமிழ் மக்களின் இன்றுள்ள சோகமான நிலைக்கு காரணம் மூன்று. முதலாவதாக கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டது அல்லது சரியாக பயன்படுத்தத் தவறியது. எமது பலத்தின் அடிப்படையில் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அதன் அடிப்படையில் முன்னோக்கி செல்வதை நாம் விட்டுவிட்டோம். இன்று பலனற்று நிற்கின்றோம்.
இரண்டாவது தமிழ்மக்களின் உள்ளான பிரிவினைவாதம். டக்ளஸ் என்றும் கருணா என்றும் ஆனந்தசங்கரி என்றும் சித்தார்த்தன் என்றும் இன்னும் எத்தனையோ பிரிவுகளை பிரித்து ஒதுக்கிவிட்டோம். சேரவேண்டும் என்ற எண்ணமோ அதற்கான நடவடிக்கையோ என்றும் எடுத்ததில்லை. இன்று கஜேந்திரன் குழு என்றும் டபிள் கேபீ என்றும் சொல்லும் நிலையில் நீங்களே உங்களை உருவாக்கியுள்ளீர்கள்.
முக்கியமானதும் மூன்றாவதுமானது இராஜதந்திரம் இல்லாத செயற்பாடுகள். விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகராக பாலா அங்கிள் இருந்தவரை விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் இராஜதந்திர ரீதியில் நகர்ந்தது. ஆனால் அவர் இல்லாதபோது அந்தவெற்றிடம் பூர்த்திசெய்யப்படாததற்கு காரணம் என்ன? அவரைப் போன்றவர்கள் இல்லாததா? அல்லது அவரைப் போன்றவர்களை பயன்படுத்த விரும்பாததா?
விடுதலைப்புலிகள் இல்லாமல் போய்விட்டார்களே தவிர அவர்களுடைய போராட்டம் எந்தவகையிலும் பயனற்றுப்போகவில்லை. விடுதலைப்புலிகளை தோற்கடித்து விட்டோம் என்ற மமதையில் சிங்கள அரசு இருந்தாலும் போராட்டத்தினை அடிப்படையாகக்கொண்ட சர்வதேச அழுத்தத்தின் காரணமாக தீர்வு ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டாய தேவையில் சிறிலங்கா அரசு உள்ளது என்பது மறுக்க முடியாதது,
இந்த நிலையில் புதிய குழுவை உருவாக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக இப்போது உள்ளதற்கு நீங்கள் கூறும் காரணம் என்ன? தமிழ்க் கூட்டமைபில் ஆசனத்திற்காக கடைசிவரை காத்திருந்த நீங்கள் அதுவரை அவர்களுக்கெதிராக கூறாத குற்றச்சாட்டுக்களையெல்லாம் உங்களுக்கு ஆசனம் மறுக்கப்பட்டபோது கூறுவதற்கு காரணம் என்ன? தங்களுக்கு ஆசனம் வழங்கப்படாததற்கான காரணத்தினை நீங்கள் இராஜதந்திர ரீதியில் சிந்தித்து பார்த்ததுண்டா? அதனால் ஏற்படும் அனுகூலங்களைப் பற்றியோ அல்லது பிரிந்து செல்வதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியோ நீங்கள் சிந்தித்ததுண்டா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுடன் ஒப்பந்தத்தினை ஏற்படுத்தியுள்ளதோ இல்லையோ தமிழ்மக்களுக்கு சார்பான ஒரு தீர்வினை எடுப்பது இந்தியாவுக்கு அவசரமும் அவசியமானதுமொன்றாகும். கச்சதீவிலும் பாலைதீவிலும் மட்டுமல்ல வடக்கு பிரதேசமெங்கும் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது அதை பார்த்துக்கொண்டிருக்க இந்தியா ஒருபோதும் தயாராக இருக்காது. தமது நம்பிக்கைக்கு பாத்திரமான பலம் பொருந்திய தமிழ் அமைப்பொன்றிடம் வடக்கு கிழக்கினை ஒப்படைக்க இந்தியா என்றும் தயாராகவே உள்ளது.
விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் இறுதி மாவீரர் செய்தியிலும் கேட்டிருந்த ஒன்று இந்தியாவும் இந்திய மக்களும் தமிழ் மக்களுக்கான தீர்வுக்கு தமது பங்களிப்பினை வழங்க வேண்டும் என்பதே.
மாவீரர்களின் தியாகங்களும் அவர்களின் கனவுகளும் நனவாக நாம் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பத்தினை இராஜதந்திரமாக அணுகுவது அவசியமாகும்.
விடுதலைப்புலிகளின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்டது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. இராஜதந்திரத்தின் அடிப்படையில் சில மாற்றங்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் தேர்தலை சந்திப்பதே புத்திசாலித்தனமானது.
கஜேந்திரன் குழுவினர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவர்களால் சாதிக்கக்கூடியது எதுவும் இல்லை. மாறாக தமிழ் மக்களின் தீர்வில் எதிர்மறையான பாதிப்புக்களையே ஏற்படுத்தும். இதனை கஜேந்திரன் குழுவினர் சிந்திக்க வேண்டும்.
இல்லையேல் தமிழ் மக்கள் தமது தீர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை முழுமையாக ஆதரிக்க வேண்டும்.
காந்தன்
guindysri@yahoo.com
No comments:
Post a Comment