Sunday, April 11, 2010

வி.உருத்திரகுமாரனுக்கு ஒரு திறந்தமடல் - சேரமான்

விசுவநாதனின் ருத்திர புத்திரனே, நியூயோர்க்கை கலங்கடிக்கும் சட்ட அறிஞனே, நாடுகடந்து அரசமைக்கும் அறிஞர்களின் அதிபதியே,
வணக்கம்!
மே 2 - நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தேர்தல்! கேட்கும் போதே மெய்சிலிர்க்கின்றது. மயிர்க்காம்பெல்லாம் கூச்செறிந்து புல்லரிக்கின்றது.
புதிய வடிவம்!
புதிய சிந்தனை!
புதிய பாதை!
தமிழீழம் தமிழர்களுக்கானது மட்டுமல்ல:
அங்கு இரண்டு தாயகங்கள் என்கின்றீர்கள்! ஒன்று முஸ்லிம்களின் தாயகம், மற்றையது தமிழர்களின் தாயகம் என்கின்றீர்கள் ஈழத்தீவில் தமிழீழ அரசமைக்கும் உரிமை தமிழர்களுக்கு உண்டென்றால்... தமிழீழத்தைத் துண்டாடி அரசமைக்கும் உரிமை முஸ்லிம்களுக்கு உண்டென்கின்றீர்கள்!
இப்படித்தான் உங்கள் இறுதி அறிக்கை கூறுகின்றது.
தமிழர்களைப் போன்று முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான இனம் என்கின்றீர்கள். மதசார்பற்ற தமிழீழம் அமைப்பது உங்கள் இலக்கு என்கின்றீர்கள். ஆனால் முஸ்லிம்களின் மதத் தனித்துவம் பேணப்படும் என்கின்றீர்கள்.
ஐயா!
தமிழீழத்தைத் துண்டாடி அரசமைக்க வேண்டும் என்று எப்போது உங்களிடம் எங்கள் முஸ்லிம் சகோதரர்கள் மனுச்செய்தார்கள்?
தமிழீழத்தில் தமிழ் - முஸ்லிம் பிராந்தியங்கள் இருப்பதாக உங்களிடம் எந்த வரலாற்று அறிஞர் கூறினார்?
இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் என மூன்று மதங்களைத் தழுவி வாழும் ஈழத்தமிழர்களை, தமிழர்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் இரு தேசிய இனங்களாகக் கூறுபோடும் உரிமையை உங்களுக்கு யார் அளித்தார்கள்?
ஈழத்தீவு என்பது தமிழர்களின் பூர்வீகப் பூமிஅங்கு ஆண்டாண்டு காலமாய் ஆட்சி செய்தவர்கள் தமிழர்கள்.
பௌத்தத்தின் வருகையோடு அங்கு தோற்றம்பெற்றது சிங்களம். அதற்கு முன் மாதகலில் இருந்து இருந்து தெய்வேந்திரமுனை வரை தமிழர்கள் ஆட்சிசெய்தது பண்டைய வரலாறு. திருகோணமலையும், மாந்தையும், அனுராதபுரமும் தமிழர்களின் தலைநகர்களாக விளங்கியது அன்றைய கல்வெட்டு.
பின்னர் யாழ்ப்பாண அரசாகவும், வன்னிமைகளாகவும் ஈழத்தீவின் வடகிழக்கு மாநிலத்தில் தமிழரது ஆட்சி சுருங்கிப் போக, கண்டியும், கோட்டையுமாக தென்னிலங்கையில் சிங்கள ஆட்சி விரிந்தது வரலாறு.
16ஆம் நூற்றாண்டில் ஈழமண்ணில் வெள்ளையர்கள் கால்பதித்த பொழுது அங்கு இருந்தது இரண்டு இனங்களின் அரசுகள்: ஒன்று தமிழரசு, மற்றையது சிங்கள அரசு. பின்னர் எங்கிருந்து முஸ்லிம் அரசு முளைத்தது?
தனித்துவமான மதத்தையும், பண்பாட்டையும் எமது முஸ்லிம் சகோதரர்கள் கொண்டிருப்பதை எவரும் மறுக்கவில்லை.தமது மதத்தையும், பண்பாட்டையும் இஸ்லாமியத் தமிழர்கள் பேணிப் பாதுகாக்கும் உரிமையை யாரும் மறுதலிக்கவுமில்லை.
தமிழீழ மண்ணின் விடிவிற்காகப் போராடி வீழ்ந்த மாவீரர்களில் எத்தனையோ முஸ்லிம் சகோதரர்களும் உள்ளார்கள். இறுதியாக ஆனந்தபுரத்தில் நிகழ்ந்தேறிய நெருப்பாற்றில் கனரக ஆயுதமேந்தி வீரகாவியமாகிய முஸ்லிம் போராளியை நாங்கள் மறந்துவிட முடியாது.
வீட்டுகொரு மாவீரன் என்ற நிலைமாறி வீட்டில் இரண்டு மாவீரர்களைக் கண்ட முஸ்லிம் குடும்பங்களும் இன்றி வன்னி மண்ணில் வாழ்கின்றன.தமிழகத்தில் தீக்குளித்து ஈகைச்சாவெய்திய எங்கள் அப்துல் ரவூப்பை நாங்கள் யாரும் மறக்கவில்லை.
இந்த மாவீரர்களின் வாழ்வும் சாவும் தமிழீழத்திற்கானது.தமிழீழத்தைக் கூறுபோடுவதற்காக அல்ல!
ஐயனே!
தமிழீழத்தில் இருந்து பிரிந்து சென்று முஸ்லிம் தனியரசை முஸ்லிம்கள் நிறுவலாம் என்கின்றீர்கள்.
சரி.
அந்த அரசுக்கான தொடர்ந்தேர்ச்சியான நிலம் எது? காத்தான்குடியா? சம்மாந்துறையா? பொத்துவிலா? மூதூரா? புத்தளமா? மன்னாரா? அல்லது யாழ் நகரமா? பலஸ்தீனர்களை காசாவிலும், மேற்குக்கரையிலும் இஸ்ரேலிய ஏகாதிபத்தியம் முடக்கியமை போன்று எமது முஸ்லிம் சகோதரர்களை முடக்கிச் சிதறடிப்பதா உங்கள் எண்ணம்?

அப்படித்தான் இருந்தாலும்...
அங்கு வாழும் ஏனைய தமிழர்களின் கதி? ஆரையம்பதியும், வீரமுனையும், சம்பூரும், வண்ணாத்திவில்லும், திருக்கேதீச்சரமும், முற்றவெளியும் எந்த அரசின் ஆளுகைக்கு உட்படும்? தமிழீழ அரசினதா? முஸ்லிம் அரசினதா? அல்லது சிங்கள அரசினதா?தமிழீழத் தனியரசை நிறுவுவது ஈழத்தமிழர்களின் கடன்.
அதற்கு இராசதந்திர அங்கீகாரம் பெற்றுக்கொடுப்பது புகலிட உறவுகள் ஒவ்வொருவரின் கடன்.

ஆனால் தமிழீழத்தை துண்டாடுவது எவரது கடன்? தமிழீழத்தை தமிழ், முஸ்லிம், சிங்களப் பிராந்தியங்களாகப் பிரித்து தீர்வுத் திட்டமொன்றை 1985இல் இந்தியப் பேரரசு முன்வைத்த போது அதனை அடியோடு நிராகரித்தவர் எமது தேசியத் தலைவர்.
அந்த சூரியத்தேவனால் நிராகரிக்கப்பட்ட திட்டத்திற்கு நீங்கள் செயல்வடிவம் கொடுக்க முற்படுவதன் சூத்திரம் என்ன? இதுதான் உங்கள் நாடுகடந்த அரசமைக்கும் திட்டத்தின் விஞ்ஞாபனம் என்றால் இதற்கு எதற்காக புகலிட தேசத்தில் தேர்தல்? இந்தியாவிலேயே உங்கள் தேர்தலை நிகழ்த்தலாமே?
புகலிடத் தமிழர்களை சிதறடிப்பது சிங்கள அரசின் திட்டம் என்றால்...
தமிழீழத்தை துண்டாடுவது இந்தியாவின் திட்டமா?
புலம்பெயர் உறவுகளை இணைப்பதற்காக நாடுகடந்த அரசமைப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் ஈழத்தமிழர்களின் தன்னாட்சியுரிமையைப் பற்றிப் பேசுவதை விடுத்து புதிதாக முஸ்லிம்களின் தனியரசு உரிமையைப் பற்றி நீங்கள் பேசுவதன் சூத்திரத்தைத்தான் எம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. தயைகூர்ந்து விளக்குவீராக.
நிற்க:
தமிழீழத் தேசியக் கொடியாகிய புலிக்கொடியை நீங்கள் அங்கீகரிக்கவில்லையாமே? உங்கள் நாடுகடந்த அரசின் கொடியாக புலிக்கொடி அமையாது என்று உங்கள் அறிவாலோசகர் பீற்றர் சால்க் கூறியுள்ளாராமே? இதன் அர்த்தம்தான் என்ன? உங்களின் தேசியக் கொடிதான் என்ன?
அதுசரி... உங்கள் நாடுகடந்த அரசுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒவ்வொரு வேட்பாளரும் தலா ஆயிரம் பவுண்கள் கட்டுப்பணம் செலுத்த வேண்டுமாமே? எதற்காக? ஏழை எளியவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதற்கா? அல்லது தடுப்பதற்கா? பிரித்தானிய நாடாளுமன்றம் செல்வதற்கு ஐநூறு பவுண் கட்டுப்பணம் செலுத்தினால் போதும்.
ஆனால் உங்கள் அரசில் இணைவற்கு ஆயிரம் பவுண்களா? நினைக்கவோ பிரமிப்பாக இருக்கின்றது. சட்ட அறிஞரே! நாடுகடந்த தேர்தல் திருவிழா தொடங்கும் நிலையில் இறுதியாக உங்களிடம் இரண்டு கேள்விகள். தென்சூடானிற்கு இடைக்கால நிர்வாகம் கிடைத்தது போன்று தமிழீழத்திற்கும் இடைக்கால நிர்வாக ஆட்சி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக 2003ஆம் ஆண்டில் தேசியத் தலைவரிடம் வாக்குறுதி அளித்திருந்தீர்களே, உங்கள் வாக்குறுதி என்னவாயிற்று?
அதுதான் போகட்டும். ஐ.நா செக்கியூரிட்டிக் கவுன்சிலிலும், ஒபாமாவுடனும் பேசி அமெரிக்கப் படைகளை முள்ளிவாய்க்காலுக்கு அனுப்புவதாக நடேசன் அண்ணாவிடம் கதையளந்தீர்களே, அதற்கு என்ன நடந்தது?
எங்கள் போராளிகளும், பொறுப்பாளர்களும் நயவஞ்சகமாக படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியும், சிறைப்பிடிக்கப்பட்டதன் சூத்திரமும் உங்களுக்கும், திருவாளர் கே.பி அவர்களுக்கும் நன்கு தெரியும்.
தயைகூர்ந்து விளக்குவீராக!
நன்றி: ஈழமுரசு

No comments:

Post a Comment