Friday, April 2, 2010

ஆற்றல்மிகு இலக்கியவாதியான கவிஞர் புதுவை இரத்தினதுரையை விடுதலை செய்ய ஆவன செய்யுங்கள் : உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்

ஆற்றல்மிகு இலக்கியவாதியும் தமிழ்க் கவிதை உலகில் போற்றப்படுபவருமான கவிஞர் புதுவை இரத்தினதுரையை இலங்கை அரசின் சிறையிலிருந்து விடுதலை செய்து மீண்டும் அவரை ஒரு தமிழிலக்கியவாதியாக நமது மக்கள் கண்டு மகிழ ஆவன செய்யுங்கள். என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் பல பேராசிரியர்களின் நெருங்கிய நண்பர் அவர் என்பதையும் உலகில் எந்தப் பகுதியில் வாழும் தமிழ் அன்பர்களும் அவரின் விடுதலையை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் நாம் அறிவோம். எனவே மிக நீண்ட கால இலக்கிய அனுபவம் மிக்க அவரை விடுதலை செய்ய தங்களுக்குள்ள செல்வாக்கை உபயோகியுங்கள்”

இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் திரு துரை கணேசலிங்கமும் இயக்கத்தின் சர்வதேச ஊடகத் தொடர்பாளர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கமும் கையொப்பமிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நா. சண்முகலிங்கன் அவர்களுக்கு அனுப்பிய வைத்துள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜேர்மனியிலிருந்து இயங்கிவரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேற்படி கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராசிரியர் நா. சண்முகலிங்கம் அவர்கள்
துணை வேந்தர்
யாழ்ப்பாண பல்கலைக் கழகம்
இலங்கை

அனபுடையீர்!

நம் மத்தியில் மிக குறைந்தளவு உயர் கல்வியோடு உலகம் போற்றும் தமிழ்க் கவிஞனாக உயர்ந்தவர்தான் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள். பேராசிரியரகள் கைலாசபதி சிவத்தம்பி மௌனகுரு கிருஸ்ணராஜா நுஃமான் ஆகியோரது நன்மதிப்பையும் பெற்று அந்நாட்களில் பல்கலைகழக மேடைகளில் கூட இலக்கிய முழக்கம் செய்தவர்தான் அந்த படைப்பாளி.

தற்போது புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து வரும் பல கவிஞர்கள் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களோடு நமது மண்ணில் பல கவியரங்கு மேடைகளில் பங்குபற்றியவர்கள் தான். ஆரம்பத்தில் தனது அரசியல் தளமாக மார்க்சிய மற்றும் மாவோயிசத்தை கடைப்பிடித்த கவிஞர் புதுவை இரத்தினதுரைக்கு பல்வேறு இலக்கிய மற்றும் அரசியல் தளங்களில் நண்பர்கள் அதிகமாக இருந்தார்கள். அனைத்து தரப்பினராலும் மதிக்கப்படுகின்ற ஒரு நல்ல படைப்பாளியாகவே அவர்கள் கணிக்கப்பட்டார்.

பின்னாளில் தம்மை தமிழீழ விடுதலைக்காக போராடுகின்ற போராளி இயக்கத்தோடு இணைத்துக் கொண்ட அவர் மேற்படி இயக்கத்திற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் தனது இலக்கிய அறிவையும் அரசியல் அனுபவத்தையும் பயன்படுத்தினார். அதன் மூலம் உலத்ததமிழ் மக்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டார். அவரது கவிதைகள் உலகத் தமிழர்களின் இல்லங்களில் தினமும் படிக்கப்படும் பைபிள் புத்தகத்தின் அத்தியாயங்களைப் போன்றவை.

இவ்வாறான ஆற்றல் மிக்க ஒரு இலக்கியவாதியாகத் திகழும் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் கொடிதான சிறைக்குள் வாடுகின்றார். அவருக்கு ஏற்கனவே இருதய நோய்க்கான சிகிச்சையும் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிகளாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களை சிறையிலிருந்து விடுவித்து அவரை மீண்டும் பொதுவாழ்வில் ஈடுபடுத்தும் பொறுப்பு எம்மைச் சார்ந்ததாகும் என்பதை நாம் நன்கு உணர்வோம்.

எனவே தாங்கள் தங்களுக்குள்ள அரசியல் மற்றும் நிர்வாகச் செல்வாக்கு போன்றவற்றை பயன்படுத்தி அவரை விடுதலை செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ளுமாறு தங்களை மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். இந்த விண்ணப்பமானது உலகத்தமிழ் பண்பாட்டு இயத்தினால் மாத்திரமன்றி உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் அனைத்து தரப்பினராலும் விடுக்கப்படுகின்றது என்பதை தங்கள் மேலான கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.

இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் மற்றும் சர்வதேச ஊடகத் தொடர்பாளர் ஆகியோரினால் கையொப்பமிட்டு அனுப்பி வைக்கப்படுகின்றது. என்று மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment