Saturday, April 24, 2010
மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை வரலாறு பாகம் ஒன்று
இந்த ஆண்டு தை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங்கு தருகிறோம்.இது தமிழரின் போராட்ட வாழ்வோடு ஒன்றியது என்பதால் தொடராக வரவுள்ளது. வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கலாம். தலைப்பு மட்டும் மாற்றப்படும். இனி கட்டுரை.....யாழ் மாவட்டம் வடமராட்சியில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசமே வல்வெட்டித்துறையாகும்.வல்வெட்டித்துறை என்னும் பெயர் அப்பிரதேசத்துக்கு வந்ததே ஒரு சுவாரசியமான கதைதான். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்கள் இலங்கையை ஆண்டபோது `வெல்வெட்` என்னும் ஒரு வகை துணி அப்பிரதேசத்தில் இருந்த ஒரு துறைமுகம் மூலமாக ஏற்றுமதியானது.வெல்வெட் + துறை தான் பிற்காலத்தில் மருவி வல்வெட்டித்துறையானது.வல்வெட்டித்துறையில் வசித்த பெரும்பாலான மக்களின் பரம்பரைத் தொழிலாகவிருந்தது மீன் பிடியாகும். ஆனாலும் அங்கிருந்த மக்களில் சிலருக்கிருந்த கடல் பற்றிய அறிவு காரணமாக தூர நாடுகளுக்கான கப்பல் பயணத்தின் மாலுமிகளாகவும் செயற்பட்டனர். ஆரம்பகாலத்தில் கடத்தலுக்கும் பெயர் போன ஒரு ஊர் அது. ஆனாலும் துரதிஷ்டவசமாகவும் நியாயமற்ற வகையிலும் வல்வெட்டித்துறை கடத்தலுடன் மட்டுமே தொடர்பு படுத்தி பேசப் பட்டது.வல்வெட்டித்துறையும் யாழ்ப்பாணத்தின் பிற பகுதிகளைப் போன்றே பெரும் எண்ணிக்கையிலான கல்வியாளர்களையும் அரசாங்க உத்தியோகத்தர்களையும் உருவாக்கிய ஒரு ஊராகும்.அவ்வாறாக வல்வெட்டித்துறையில் மிக்க சிறப்போடு வாழ்ந்த ஒரு குடும்பம் தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையினதும் அவரது மூதாதையர்களினதும் குடும்பமாகும்.`திருமேனியார் குடும்பம்` என்றுதான் வேலுப்பிள்ளை அவர்களது மூதாதையர்கள் வழி வந்தவர்களை மரியாதையோடு அழைப்பார்கள் அந்த ஊர் மக்கள்.வல்வெட்டித்துறையிலிருக்கும் புகழ் பெற்ற சிவன் கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்தவர்களும், இருப்பவர்களும் வேலுப்பிள்ளையின் தந்தை வழி வந்த குடும்பத்தினர்தான். அந்தக் கோயிலே பிரபாகரனின் முன்னோர்களால் தான் கட்டப்பட்டது.பிரபாகரனின் மூதாதையர்களே சிவன் கோயிலை கட்டுப்படுத்தி வந்தவர்கள் என்ற காரணத்தால் எசமான் குடும்பம் என்றும் அழைக்கப்பட்டார்கள்.பிரபாகரனின் முன்னோர்களில் ஒருவரான ஐயம்பிள்ளை என்பவர் புகழ்பெற்ற வணிகராகத் திகழ்ந்தவர். புகையிலை மற்றும் சாயப் பொருட்களை கடல் வழியாகப் இந்தியாவின் கடற்கரையை அண்டிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்தவர்.டச்சுக்காரர்கள் இலங்கையை ஆண்ட காலத்தில் இலங்கையின் புகழ்பெற்ற வணிகர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். அவருடைய மகனான வேலாயுதம் என்பவரும் அதேபோல வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்.அவரது பிள்ளையான வெங்கடாசலம் காலத்தில் அந்தக் குடும்பத்தின் வியாபாரமும், செல்வ வளமும் பல மடங்கு பெருகியது. அவர் சொந்தமாக பன்னிரண்டு கப்பல்களை வைத்து வாணிபம் செய்தவர். இந்தியா, பர்மா, மலேசியா முதலான நாடுகளுக்கு அவர் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப் பெரிய வணிகராகத் திகழ்ந்தார். அத்துடன் ஒரு கொடை வள்ளல்.அந்தக் காலத்தில் விவசாயக் காணிகளையும் பெரும் பண்ணைகளையும் சொந்தமாகக் கொண்டவர். அப்படியான ஒரு 90 ஏக்கர் காணி முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இருந்தது. இங்குதான் புலிகளும் இராணுவத்தினரும் இறுதி யுத்தத்தில் மோதிக் கொண்டனர் என்பது மிகவும் அதிசயத் தக்க ஒரு நிகழ்வு.அவரை வல்வெட்டித்துறை மக்கள் `பெரிய தம்பி` என்று அன்போடு அழைப்பார்கள். 1822ல் வெங்கடாசலத்தின் மறைந்த தந்தை வேலாயுதம் ஒருநாள் அவரின் கனவில் வந்து சிவனுக்காக ஒரு கோயில் கட்டும்படி கேட்டுக் கொண்டாராம். ஏற்கனவே அந்தக் குடும்பத்துக்கு பிள்ளையார் மற்றும் அம்மன் கோயில்களுடன் தொடர்பிருந்தது குறிப்பிடத்தக்கது.அன்றிலிருந்து அதை தனது வைராக்கியமாகவே கொண்டிருந்தார் அவர். சிறிது சிறிதாக கோயில் கட்டுவதற்கான பணத்தைச் சேர்க்கத் தொடங்கினார். விரைவிலேயே பெருந்தொகைப் பணத்தைச் சேர்த்துவிட்டார்.முதன் முதலாக அம்மன் கோயிலுக்கு அருகாக 60 `பேர்ச்` அளவு கொண்ட காணி ஒன்றை வாங்கினார். தான் கொண்ட வைராக்கியம் காரணமாக அன்றிலிருந்து சிவன் கோயில் கட்டி முடியும்வரை தன் உடம்பில் மேலாடை உடுத்தாமல் ஒரு தவம் போன்று இருந்த காரணத்தால் `திருமேனியார்` என்று அவரையும், `திருமேனியார் குடும்பம்` என்று இவருடைய சந்ததியினரையும் மக்கள் அழைத்தார்கள்.வீட்டுக்குக்கூடச் செல்லாமல், கோயில் கட்டும் இடத்திலேயே தங்கியிருந்து. அதை முழுமையாகக் கட்டிமுடித்து கும்பாபிஷேகம் நடத்திய பெருமைக்குரியவர் இந்தத் `திருமேனியார்` வெங்கடாசலம்!வெங்கடாசலம் தன்னுடைய சொந்தப் பணத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டி முடித்தார். அதனால் அவர்களது குடும்பமே அந்தக் கோயிலின் பரம்பரை சொந்தக்காரர்களாகவும் தர்மகர்த்தாக்களாகவும் ஆனார்கள்.ஒருவாராக 1867-ம் ஆண்டு சிவன் கோயில் கட்டப்பட்டு அந்த ஆண்டே குடமுழுக்கும் செய்யப்பட்டது.வெங்கடாசலமும் அவரது சகோதரர் குழந்தைவேல்பிள்ளையும் சேர்ந்து கொழும்பு செக்குத் தெருவிலும் கீரிமலையிலும் ஏன் பர்மியத் தலைநகர் ரங்கூனிலும் கூட கோயில் கட்டினார்கள்.வெங்கடாசலத்தின் மகனின் பெயரும் வேலுப்பிள்ளை தான். இந்த வேலுப்பிள்ளையாரின் மகனான திருவேங்கடத்தின் மகன்தான் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளை. திருவேங்கடம் தனது ஒரே ஒரு மகனுக்கு தன் தந்தையின் ஞாபகார்த்தமாக வேலுப்பிள்ளை என்றே பெயரிட்டார்.பிரபாகரனின் அப்பாவான வேலுப்பிள்ளையும் தமது முன்னோர்கள் போலவே கடவுள் பக்தி கொண்டவராகவும், பொது சேவையில் நாட்டம் கொண்டவராகவும் இருந்தார். அவருக்கு அரசியலில் எந்தவித விருப்பமும் இருந்தது கிடையாது. தம்முடைய பிள்ளைகள் நன்றாகப் படித்து உயர்ந்த பதவிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது.இலங்கையை பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டு கொண்டிருந்த 1943-ம் ஆண்டில் தனது பத்தொன்பதாவது வயதில் இலங்கை அரசுப் பணியில் எழுத்தராகச் சேர்ந்தார் வேலுப்பிள்ளை. முதலில் ரயில்வே துறையில் அவருக்கு வேலை கிடைத்தது. அதன் பிறகு சில தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெற்று மாவட்ட நில அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். முப்பத்தொன்பது ஆண்டுகள் கருத்தோடு வேலை செய்து, 1982-ம் ஆண்டில்தான் அவர் பணி ஓய்வு பெற்றார். 1982 ல் அவர் மாவட்ட நில அதிகாரியாக ஓய்வு பெற்றபோது இலங்கையின் காணி அமைச்சராக இருந்தது காமினி திசாநாயக்காவாகும்.அவருக்கு சிங்களவர்கள் மீது எந்த வெறுப்பும் இருந்ததில்லை. சிங்கள மொழியிலும் நல்ல தேர்ச்சி கொண்டிருந்தார் அவர். அம்மொழியில் தேர்வும் எழுதி வெற்றி பெற்றவர். நேர்மையும் கறார்த்தன்மையும் கொண்ட அதிகாரியாக அறியப்பட்ட வேலுப்பிள்ளை, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.வேலுப்பிள்ளை தனது இருபத்து மூன்றாம் வயதில் அதாவது 1947ல் பார்வதி அம்மாளை மணம் முடித்தார்.வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள்.மூத்தவர் மனோகரன் 1948ல் பிறந்தார். கப்பலில் வானொலி அதிகாரியாகப் பணியாற்றியவர். தற்போது டென்மார்க்கில் வசிக்கிறார்.அடுத்தவர் ஜெகதீஸ்வரி 1949ல் பிறந்தார். பின்னாளில் அப்போதிக்கரியாக இருந்த மதியாபரணத்தை கல்யாணம் செய்தார். ஐரோப்பாவில் வசித்த இவர்கள் தற்போது தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கலைஞர் கருணாநிதி நகரில் வசிக்கிறார்கள்.அடுத்தவர் வினோதினி 1952ல் பிறந்தார். பின்னாளில் வர்த்தகப் பட்டதாரியான ராஜேந்திரனை கல்யாணம் செய்து கொண்டவர். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்னர் கனடா சென்ற அவர் தற்போதும் அங்கேதான் வசிக்கிறார்.கடைக்குட்டியாகப் பிறந்தவர் சாட்சாத் பிரபாகரனே தான். 1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் நாளில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தார். அன்று பிரபலமாயிருந்த இணுவில் மகப்பேற்று நிலையத்தில் இவர் அவதரித்தார்.அவருடைய தாய்மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை தமிழரின் வரலாற்றை மாற்றப்போகும் அக்குழந்தைக்கு பிரபாகரன் என்னும் பெயரை இட்டார்.இக்குழந்தையின் பிறப்பின் பின்னாளும் முன்னாளும் ஒரு பெரும் வரலாறே அடங்கிக் கிடக்கிறது.அதை வரும் வாரத்தில் பார்க்கலாம்.....- சாணக்கியன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment