வவுனியா தொழில்நுட்பக் கல்லூரிக்கு உட்புறமாக அமைந்துள்ள முகாம் ஒன்றில் மாலை நெருங்கிக்கொண்டிருந்த வேளை உடைத்த ஒலிபெருக்கியில் சில நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
இந்த கல்லூரி கடந்த வருடம் போர் நிறைவுபெற்ற நாளில் இருந்து தடுப்பு முகாமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கொதிக்கும் வெய்யிலில், வியர்வை வழிய முகாமுக்கு வெளிப்புறம் மக்கள் காத்திருந்தனர். வீதியோரத்தில் பெற்றோரும், சகோதரிகளும், பிள்ளைகளும் நீண்ட நேரமாக காத்திருந்தனர். ஒவ்வொரு புதிய பெயர்கள் அறிவிக்கப்படும் போதும், கூட்டத்தில் இருந்து புதியவர்கள் எழுந்து நின்றனர். பின்னர் அவர்கள் மருத்துவ பரிசோதனை மேசைக்கு சென்றனர். பின்னர் அலுவலகத்திற்கு சென்றனர். அதன் பின்னரே வாசலுக்கு வந்தனர். அங்கு தான் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் காத்திருந்தனர்.
280,000 இடம்பெயர்ந்த தமிழ் மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினரை தான் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக சிறிலங்கா அரசு மீள்குடியேற்றியுள்ளது. ஆனாலும் விடுதலைப்புலிகளுடன் நேரடியாக தொடர்புள்ளவர்கள் தற்போதும் தடுப்பு முகாம்களில் தான் உள்ளனர்.
இன்று வவுனியா கல்லூரியில் இருந்து வெளியேறுவதற்கு 700 பேருக்கு அனுமதிகள் கிடைத்துள்ளன. வேறு முகாம்களில் இருந்த 400 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விடுவிக்கப்பட்ட அனைவரும் உடல் ரீதியாக ஊனமடைந்தவர்கள். அவர்களால் அரசுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட முடியாது. செம்மண் தரையின் ஊடாக அவர்களுக்கு வழங்கப்பட்ட மலிவான செயற்கை அவயவங்கள் மற்றும் இயங்கு சாதனங்களை பயன்படுத்தி அவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்களுக்கு என சிறீலங்கா இராணுவம் பல புனர்வாழ்வு முகாம்களை நடத்தி வருகின்றது. அங்கு ஆங்கிலக் கல்வியும், தொழில் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
இன்று விடுதலை செய்யப்பட்டவர்களை விட மேலும் 9,000 விடுதலைப்புலிகளும், 75,000 பொதுமக்களும் தற்போதும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். போரின் முடிவைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த மக்களின் தொகையில் இரு 25 விகிதமாகும். அவர்கள் திறந்த தடுப்பு முகாங்களில் உள்ளனர். வெளியில் சென்று வருவதற்கு அனுமதிகள் வழங்கப்படுகின்றன.
இனங்களுக்கு இடையிலான பிளவுகளை சீர் செய்வதற்கு அரசு சில அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. வடபகுதியில் பெரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக கடந்த வாரம் வவுனியா வந்த அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தெரிவித்திருந்தார். அவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக அங்கு சென்றிருந்தார்.
இன்று விடுதலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் மிகப்பெரும் துன்பமான நிகழ்வுகளை சந்தித்தவர்கள். அவர்கள் கூறும் கதைகள் துன்பமானவை. காயமடைந்த தனது தாயாருடன் கடந்த வருடம் மே மாதம் இராணுவத்திடம் சரணடைந்ததாக முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் சுபாஸ்கரன் சூரியகுமார் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் மத்தியில் எறிகணை வீழ்ந்த வெடித்ததால் அவரின் தாயார் காயமடைந்திருந்தார். சூரியகுமாரின் தந்தையாரும், இரு சகோதரிகளும் போரில் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் இடம்பெயர்ந்து சென்றபோது இந்த துன்பமான சம்பவம் இடம்பெற்றிருந்தது. அவரின் வீடு அழிவடைந்துவிட்டது, வீட்டை சுற்றி உள்ள நிலங்களில் மிதி வெடிகளின் அபாயம் உண்டு என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
பத்து மாதங்களாக தடுப்புக்காவலில் இருந்த சூரியகுமார் (28) தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வேறு ஒரு முகாமில் சிறிய தற்காலிக கூடாரத்தில் வசிக்கும் தனது எஞ்சிய குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேருடன் இணைந்து வாழத் திட்டமிட்டுள்ளார்.
முகாமில் வசதிகள் மிகவும் குறைவாக உள்ளபோதும், அவர்களால் தமது சொந்த கிராமத்திற்கு திரும்ப முடியாது. அதற்கான அனுமதியை படைத்தரப்பு வழங்கவில்லை. அவர்களின் கிராமத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசு மக்களை மீள்குடியமர்த்துவதில் அக்கறை கொண்டுள்ளது ஆனால் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என வவுனியாவை தளமாக கொண்ட அரச சார்பற்ற நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று விடுவிக்கப்பட்ட பலர் மெனிக்பாம் முகாமை நோக்கி செல்கின்றனர். தனது மருமகனை பார்வையிடுவதற்கு மகேந்திரன் நாகேஸ்வரி (44) என்பவர் மாலை வேளையில் வந்து சேர்ந்தார். அவர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து பணியாற்றிய போது ஒரு காலை இழந்திருந்தார்.
நாகேஸ்வரி இறுதியாக மாலை 4 மணியளவில் தான் வாசலை அடைந்தார். மிகவும் சிறிய குடிசைக்குள் 10 பேர் வசிப்பதாக தெரிவித்துள்ள அவர், தகரத்தால் அமைக்கப்பட்ட கொட்டகை கடும் வெப்பமாக இருந்தாலும் எல்லோரும் ஒன்றாக இணைந்திருப்பது மகிழ்ச்சி தருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கணேஸ் தனுசன் (24) என்பவர் விடுதலைப்புலிகளின் படையணியில் வெடிபொருட்களை எடுத்துச் செல்லும் பணிகளை மேற்கொண்டிருந்தார். எனினும் போர் நிறைவுபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மோதலில் அவர் ஒரு கையை இழந்திருந்தார்.
தனது உறவினர்களை தேடிக் கண்டுபிடிப்பதே தனது முதன்மையான தொழில் என அவர் தெரிவித்துள்ளார். அவரின் பெற்றோர்கள் முகாம்களில் வாழ்கின்றனர். தகரங்களினாலும், சாக்குகளினாலும் கட்டப்பட்ட அந்த தற்காலிக குடியிருப்புக்கள் காற்று வீசும் போது நிலையாக நிற்பதில்லை.
முன்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த பிரதேசத்தில் உள்ள வீதியோரங்களில் இவ்வாறான பல ஆயிரம் குடிசைகளே காணப்படுகின்றன. தமது கிராமங்களுக்கு மக்கள் திரும்பியுள்ள போதும் அவர்கள் தாம் முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான சான்றிதழ்களை எப்போதும் தம்முடன் வைத்திருக்கின்றனர்.
அவர்களுக்கு பிளாஸ்ரிக் பாத்திரங்களும், அரசியும், பருப்பும், மாவும் மட்டுமே வழங்கப்படுகின்றது.எனது உறவினர்கள் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை எனவே அவர்களை கண்டறிவது கடினமாக இருக்கலாம் என தனுசன் மேலும் தெரிவித்துள்ளார்.
சூரியன் மறையும் நேரம் நெருக்கியது, ஆனால் தமது உறவினர்களை பார்ப்பதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
எழு பிள்ளைகளின் தாயாரான குமாரகுரு செனெஸ்ரா (34) என்பவர் தனது கணவரை பார்ப்பதற்காக காத்திருந்தார். அவரின் கணவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து போரிட்டவர். அவர் கடந்த 10 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். செனெஸ்ரா தனது இளைய மகனை கையில் வைத்திருந்தார்.
இரவு வருவதற்கு முன்னர் அவர் வெளியில் வந்தால் நல்லது, அவர் தனது மகனை பார்க்க முடியும். அவர் இன்றுவரை தனது மகனை காணவில்லை என அவர் மேலும் தெரிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பில் உதவிய ஈழவனுக்கு எமது நன்றிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment