குரு - சீடன்இரண்டு இருக்கைகளுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைத்தவர்கள் கூண்டோடு கயிலாசம்!
சீடன் - ஆடிய ஆட்டமென்ன? பாடிய பாட்டென்ன? திட்டிய வார்த்தை என்ன? திரட்டிய நிதி என்ன? கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன. ...?
குரு - நாடு கிடக்கிற நிலையிலே இப்படியான பாட்டுக்கு இப்போது என்ன அவசியம்?
சீடன் - அவசியம் இருக்கிறது குருவே? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துக் கொண்டு வெளியே வந்து திருமலையில் சம்பந்தனைத் தோற்கடிப்போம் யாழ்ப்பாணத்தில் சேனாதிராசாவையும் சுரேஷ் பிரேமச்சந்திரனையும் தோற்கடிப்போம் என ஊழையிட்டவர்கள் கூண்டோடு கயிலாசம் போய்விட்டார்கள்! குறிப்பாகச் செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆடிய ஆட்டம் சொல்லி மாளாது!
குரு - கொஞ்சம் விபரமாகச் சொல்?
சீடன் - தமிழ்த் தேசியக் கூட்டமை உடைத்ததன் மூலம் தமிழினத்தின் ஒற்றுமையைக் குலைத்தவர்களுக்கு தமிழ்வாக்காளர்கள் தக்க தண்டனை வழங்கியுள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் சரி, திருமலையில் சரி தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பாக போட்டியிட்ட 19 வேட்பாளர்களும் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள்! கட்டுக்காசும் பறிபோய்விட்டது!
குரு - நம்ப முடியவில்லையே! சிரிஆர் வானொலி நாளும் பொழுதும் செய்த பரப்புரையைப் பார்த்தால் யாழ்ப்பாணம், திருமலை இரண்டிலும் ததேமமுன்னணி பெரிய வெற்றிவாகை சூடப்போகிது என்ற தோற்றம் இருந்ததே?
சீடன் - அப்படியொரு மாயை அந்த வானொலி உருவாக்கியது. தங்களோடு ஒத்தூதக் கூடிய ஆய்வாளர்களையும் அரசியல்வாதிகளையும் காற்றலைக்கு அழைத்து வந்து பேச்சுக் கச்சேரி வைத்தது. ஆய்வாளர்கள் தங்கள் பங்குக்கு துரும்பைத் தூணாக்கிக் காட்டினார்கள். நோஞ்சான்களைப் பயில்வான்களாக சித்தரித்துக் காட்டினார்கள். ஆய்வாளர்கள் நிலவன், துரைரத்தினம், வரதாசா போன்றோர் மட்டும் சிரிஆர் வானொலி அறிவிப்பாளர்கள் சக்தி பரமலிங்கம் பொன்னையா விவேகானந்தன் விரித்த வலையில் விழ மறுத்தார்கள். அப்படி விழ மறுத்தவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள்!
குரு - எப்படித்தான் உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது என்பது சரியாகத்தான் இருக்கிறது!
சீடன் - அதைவிட சிறுபிள்ளை வேளாண்மை விளைந்தும் வீடு வந்து சேராது என்பார்களே? அந்தப் பழமொழிதான் இன்னும் பொருத்தமாக இருக்கும்.
குரு - சரி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கிறது?
சீடன் - தேர்தல் முடிவுகள் இன்னும் முழுதாக வந்து சேரவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சி 5 இருக்கைகளும், ஆளும் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3 இடங்களையும், அய்க்கிய தேசியக் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியள்ளது. தமிழ்க் காங்கிரஸ் கட்சி நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. உடுப்பிட்டி, பருத்தித்துறை தொகுதிகளில் மட்டும் சொற்ப வாக்குகளைப் பெற்று முக்கித்தக்கி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது!
குரு - திருமலையில் சம்பந்தரைத் தோற்கடித்து விட்டுத்தான் மறுவேலை என்று கொக்கரித்தார்களே? அங்கே என்ன நடந்தது?
சீடன் - திருமலையில் சம்பந்தரைத் தோற்கடிப்பது என்பது கிழக்கே உதிக்கும் ஞாயிறு மேற்கே உதித்தால்தான் சாத்தியமாகும்! சம்பந்தனது வெற்றிபற்றி தொடக்கம் முதலே யாருக்கும் அய்யுறவு இருக்கவில்லை. முதலாவதாக வந்து மேலதிக இருக்கையையும் கைப்பற்ற முடியுமா என்பதுதான் கேள்விக் குறியாக இருந்தது. ஆளும் கட்சியைச் சேர்ந்த வெளிமாவட்ட சிங்களக் காடையர்கள் அங்கு தமிழ்மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை துப்பாக்கிகளைக் காட்டிப் பயமுறுத்தித் தடுத்துவிட்டார்கள்! அதனால் வெறுமனே 2000 வாக்கில் ஒரு இருக்கையை இழக்க வேண்டிவந்து விட்டது. குரு - சம்பந்தருக்கு பாவ மன்னிப்புக் கொடுத்துவிட்டதாக உயிருக்குப் பயந்து கனடாவில் அரசியல் புகலிடம் கேட்டுள்ள ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னாரே?
சீடன் - சம்பந்தனுக்குப் பாவமன்னிப்புக் கொடுக்க அவர் என்ன யேசுநாதரா? உண்மையைச் சொன்னால் அவர் ஒரு அரசியல் கோமாளி. அவரை யாரும் பொருட்படுத்துவதில்லை. நாட்டில் மேடையில் பேசிப் பேசி தொண்டை வரண்டு களைத்துப் போனவர். இங்கு வந்து சிரிஆர் வானொலியில் கத்திக் கத்தி தொண்டை வரண்டு போனவர்.
குரு - 2004 இல் ஒரு இலட்சம் விருப்பு வாக்குகள் பெற்ற கஜேந்திரன் என்னவானார்? வெறுமனே 49,000 விருப்பு வாக்குகள் பெற்ற சம்பந்தர் எப்படி கஜேந்திரனுக்கு நியமனம் கொடுக்க மறுத்தார் என அவரை இங்கு பலர் வறுத்தெடுத்தார்களே?
சீடன் - கஜேந்திரனுக்கு கிடைத்த வாக்குகள் வி.புலிப் போராளிகள் வீடு விடாகச் சென்று சேகரித்த வாக்குகள். அது மட்டுமல்ல சஜேந்திரனுக்குக் கிடைத்த விருப்பு வாக்குகளை சம்பந்தருக்குக் கிடைத்த விருப்பு வாக்குகளோடு ஒப்பிடுவது முட்டாள்த்தனம். திருமலை மாவட்டத்தில் விழுந்த மொத்த வாக்குகள் 191,657 ஆகும். அதே சமயம் யாழ்ப்பாண மாவட்டத்தில் விழுந்த மொத்த வாக்குகள் 284,026 ஆகும்.
குரு - அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இப்படிப் படுதோல்வி அடைந்ததற்கு என்ன காரணம்?
சீடன் - இதென்ன கேள்வி குருவே! அவர்களிடம் மூலோபாயத் திட்டம் (Strategic Planning) இருக்கவில்லை. கனடாவில் அந்த மூலோபாய திட்ட்டத்தை கையில் வைத்திருக்கும் ஒரு அரசியல் ஞானி இருக்கிறார். என்ன காரணமாகவோ அந்த ஞானியிடம் அந்த மூலோபாயத் திட்டத்தைக் கேட்டுப் பெற்று தேர்தலைச் சந்திக்க அந்த இரண்டு அரசியல் கற்றுக் குட்டிக்களான கஜேந்திரனும் கஜேந்திரகுமாரும் தவறிவிட்டார்கள்! குரு - 2004 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது இன்று யாழ்ப்பாணம், திருமலை, வவுனியா எங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறைந்த வாக்குகளைப் பெற்றிருக்கிறது, குறைந்த இருக்கைகளைப் பெற்றிருக்கிறது என்று அரசியல் ஞானி சொல்கிறாரே? சீடன் - 2004 ஆம் ஆண்டில் தமிழ்மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தார்கள். இன்று 400,000 இலட்சம் மக்கள் முகாம்களில் அல்லது நலன்புரி சங்கங்களில் இரக்கிறார்கள். இந்த அடிப்படை உண்மையை இந்த அரசியல் ஞானி கணக்கில் எடுக்க வசதியாக மறந்து விட்டார். குரு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா கோடி கோடியாக பணம் கொடுத்தது என்று இங்குள்ள ஓர் ஆய்வாளர் சொன்னாரே?சீடன் - இந்தியா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கோடி கோடியாக கொடுத்தால் அது நல்லதுதானே? அது பலவீனத்தை அல்ல தேசியக் கூட்டமைப்பின் பலத்தைக் காட்டுகிறது என்றுதானே அறிவுடையோர் எண்ணுவர். குரு - கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நினைக்கத்தான் பரிதாபமாக இருக்கிறது. சம்பந்தனுக்கு சவால் விடப் போய் உள்ளதும் கெட்டதடா கொள்ளிக் கண்ணா என்றது போலக் கட்டுககாசையும் இழந்து வெறுங்கையோடு கொழும்பு திரும்பியுள்ளார். சீடன் - அவர் தோற்றது தனிப்பட்ட முறையில் எனக்குக் கவலை. உலகத்தமிழர், தமிழ்நெட், பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை போன்றவை அவரைப் பப்பாசி மரத்தில் ஏற்றிச் சறுக்கி விழ வைத்துவிட்டார்கள். நம்ப வைத்துக் கழுத்தை அறுத்துவிட்டார்கள்!குரு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இனித்தான் பொறுப்பு அதிகம். குறுக்குச்சால் ஓட்டுபவர்கள் தொல்லை இனி இருக்காது. எனவே ஒற்றுமையுடன் அவர்கள் இனி அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தலாம். அதற்கு முதல் வாழ்வாதரங்களை இழந்து முகாம்களில் முடங்கிக் கிடக்கும் எமது மக்களயும் விடுவிக்க நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியும் பாரிய போராட்டங்களை நடத்த வேண்டும்.
சீடன் - அதுதான் குருவே அடியேன் விருப்பமும்!
குரு - பிந்தி வந்த செய்தி ஏதாவது உண்டா?
சீடன் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மொத்தம் 14 இருக்கைகள் கிடைத்துள்ளன. யாழ்ப்பாணம் 5, திருமலை 1, மட்டக்களப்பு 3, வன்னி 3, அம்பாரை 1, தேசியப் பட்டியல் 1.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment