Saturday, April 24, 2010

இரா. சம்பந்தனுக்கு ஓர் அன்பு மடல் வலம்புரி

அன்புமிகு சம்பந்தன் ஐயாவுக்கு அநேக வணக்கம்.அண்ணன் மாவை சேனாதிராசாவுக்கு எழுதிய கடிதத்திற்கு முன்னதாக உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்பதே விருப்பம். இருந்தும் யாழ். மாவட்டத் தேர்தல் முடிபுகள் தொடர்பில் சில கருத்துக்களை தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தமையால் மாவைக்கு முதலில் கடிதம் எழுதினோம். கடிதங்கள் எழுதும் பணி நிறையவே இருப்பதால் முன்பின் என்ற பாகுபாட்டுடன் இக் கடிதத்தை நோக்கமாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.தமிழ் மக்களின் மூத்த அரசியல் தலைவர் தாங்கள். நாடாளுமன்ற அனுபவமும் அரசியல் அனுபவமும் நிறையவே உண்டு. தங்களின் அரசியல் முதிர்ச்சிக்கு ஈடாக இருக்கக் கூடிய அரசியல்வாதியயாருவர் இருப்பாரா யின் அது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியாகவே இருக்க முடியும். எனினும் தமிழ்த் தரப்பின் இரண்டு பழுத்த அரசியல் தலைவர்கள் ஒன்றாக-ஒற்றுமையாக இருக்க முடியாமல் போனமை துரதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும்.இருந்தும் தமிழ்த் தரப்புகள் எங்காவது, எப்போதாவது ஒற்றுமைப்பட்டதுண்டா என்று யாரேனும் கேள்வி எழுப்பினால், தலைகுனி வதை விட வேறு வழியேதும் இல்லை. என்ன செய்ய முடியும்? மூவேந்தர் காலந் தொட்டு ஒற்றுமையீனத்தின் டி.என்.ஏ. கூறுகள் எங்கள் உதிரங்களில் சீறிப்பாய்ந்து கொண்டு தான் இருக்கின்றன.இது தொடர்பில்தான் இக் கடிதத்தை தங்களுக்கு எழுத எண்ணினேன். திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயம் பாடல் பெற்ற தலம். அந்த மண்ணில் பிறந்த தங்களுக்கு கோணேச்சரத்தானை திருமுறையால் பாடிப்பணிந்த திருஞானசம்பந்தரின் நாமம் சூட்டப்பட்டது பெருமைக்குரியது.பிறந்த பதியாலும், நாமத்தாலும், அரசியல் அனுபவத்தாலும் பெருமைக்குரிய தாங்கள் இப்போது அதிரடிக் கோபம் கொள்வதாக அறிந்து மனம்நொந்து கொண்டோம். ‘கோபம்’ உணர்வுகளில் ஒன்று. சில இடங் களில் அது தேவையானதும் கூட. இருந்தும் உங்களின் ‘சுயகோபம்’ தமிழ் அர சியலில் ஒற்றுமையைக் குலைக்குமாக இருந்தால் தமிழர் நலன் கருதி கோபம் தணிப்பது உத்தமம்.அதேநேரம் தமிழ் அரசியலின் மூத்த தலைவராக இருக்கும் நீங்கள் தமிழ் அரசியல் தரப்புகளை ஒற்றுமைப்படுத்தும் பணியையும் செய்ய வேண்டும் என விநயமாக வேண்டி நிற்கிறோம்.கடந்த பொதுத் தேர்தலில் நடந்த பிரிபாடலை மறந்து அத்தனை பேரையும் ஒன்று சேருங்கள்; ஒற்றுமைப்படுத்துங்கள். எவரையும் புறந்தள்ளாதீர்கள். அரசுடன் இணைந்து செயற்படுவது என்ற முடிபை எடுத்த தங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனோ, வீ. ஆனந்தசங்கரியுடனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்களுடனோ, சிவாஜிலிங்கம் சார்ந்தவர்களுடனோ ஒற்றுமைப்படுவது கடினமான காரியமல்ல.எனவே தயவு செய்து தமிழ் அரசியல் தரப்பு களை ஒன்று சேருங்கள். விமர்சனங்களை ஒதுக்கி விடுங்கள்.எல்லாம் இழந்து துன்புறும் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்க ஒன்றுபடுங்கள். இது விடயத்தில் உங்கள் முடிபை ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றோம்.தங்கள் பதில் கிடைக்காவிடினும் பதில் எழுதும் எங்கள் பண்பாடு தொடரும்.நன்றி

No comments:

Post a Comment