Friday, April 9, 2010

கொசோவோ – தமிழீழம் தொடர்பில் மேற்குலகத்தின் நகர்வுகளில் உள்ள ஒற்றுமைகள் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

அனைத்துலக ரீதியில் சிறீலங்கா தொடர்பான செய்திகள் அண்மைக்காலமாக தலைப்புச் செய்திகளாக மாற்றம் பெற்றுவருகின்றன. சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்களும், அது தொடர்பில் மேற்குலகம் கொண்டுள்ள போக்கும் தான் அதற்கான பிரதான காரணம்.

சிறீலங்கா அரசு மீதான மேற்குலகத்தின் நடவடிக்கைகள் என்பது போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை அடிப்டையாகவே கொண்டது. இந்த இரு காரணிகளையும் முன்நிறுத்தியே மேற்குலகமும் சரி ஐ.நாவும் சரி சிறிலங்கா விடயத்தில் தலையை நுளைக்கப்போகின்றன.

மேற்குலகத்தை பொறுத்தவரையில் சிறீலங்கா விடயத்தில் உள்நுளையவேண்டிய கட்டாயம் ஒன்று உள்ளது அதற்கு காரணம் பூகோள ரீதியாக இந்து சமுத்திர பிராந்தியம் பெற்றுவரும் முக்கியத்துவம் தான். எனவே தான் சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியா மௌனமாக உள்ளது.

சுpறிலங்கா அரசு மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் கூட இந்தியா இல்லை என்பது தான் கசப்பான உண்மை.

இருந்த போதும் மேற்குலகம் சிறிலங்கா மீது மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் மீதான அழுத்தங்களின் மூலம் எவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கப்போகின்றது என்ற கேள்விகள் எழலாம். இந்த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளில் மேற்குலகம் மேற்கெண்டுவரும் நகர்வுகளுக்கும், கொசோவோ பிரச்சனையில் மேற்குலகம் மேற்கொண்ட நகர்வுகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள் அதிகம் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

1990 களில் உக்கிரம் பெற்ற பல்கன் வளைகுடா பிரச்சனையில் யூகோஸ்லாவாக்கியாவில் இருந்து துண்டு துண்டாகி உடைந்த நாடுகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு கொசோவோவும் இணைந்து கொண்டது.

அப்போது கொசோவோவின் சுதந்திரப்பிரகடனம் அனைத்துலகத்தின் பாதுகாப்புக்கும், சமாதானத்திற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தல் என சிறீலங்கா தெரிவித்திருந்தது.

ஐ.நாவின் பாதுகாப்பு பேரவையின் 1,244 ஆவது சரத்தின் அடிப்படையில் கொசோவோ, ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்கால நிர்வாக சபையின் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருவதுடன், நேட்டோ படையினரின் தலைமையிலான கொசோவோ படையினர் பாதுகாப்புக்களை வழங்கி வருகின்றனர். இதன் மூலம் பிராந்தியத்தில் சட்ட ரீதியாக சேர்பியாவின் இறைமை மீண்டும் நிலைநிறுத்தப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

கொசோவோ மீதான மேற்குலகத்தின் தலையீட்டுக்கு பூகோள அரசியல் நலன் சார்ந்த கொள்கைகளே காரணமாக இருந்தபோதும், சேர்பிய அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகள் தான் மேற்குலகத்தின் தலையீடுகளை இலகுவாக்கியது.

முதலாவதாக யூகோஸ்லாவாக்கியாவால் கொசோவோவுக்கு வழங்கப்பட்ட சுயநிர்ணய உரிமையை சேர்பியா தொடர்ந்து பேணவில்லை.

1974 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த சுயநிர்ணய உரிமையின் அரசியல் சாசன திருத்தங்களின் அடிப்படையில் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, காவல்துறை, நீதிமன்றம் போன்ற அதிகாரங்கள் கொசோவோ அரசுக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் அதனை மதிக்காத சேர்பியா (மிலோசொவிக் அரசு) கொசோவோவை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவர படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. தனது படை நடவடிக்கைக்கு காரணமாக சேர்பியாவின் இறைமை தொடர்பாக மிலோசொவிக் பேசினார்.

கொசோவோவின் சுயநிர்ணய உரிமை இரத்து செய்யப்பட்டது முதலாவது காரணமாக இருந்த போதும், அதனை கைப்பற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையின் போது இடம்பெற்ற பேர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இரண்டாவது காரணமாக அமைந்தன.

இந்த இரு காரணங்களுமே மேற்குலகம் அங்கு கால்பதிக்க வழிவகுத்தன. கொசோவோ விடுதலை இராணுவத்திற்கு எதிரான சேர்பியா அரசின் போர்ப்பிரகடனம் குறிப்பிட்ட இனத்திற்கு எதிரான போர்ப்பிரகடனமாக காலப்போக்கில் மாற்றமடைந்தது.

முன்னர் சேர்பியா வலுவாக இருந்தபோது, அமெரிக்கா உட்பட பல நாடுகள் கொசோவோவின் தனிநாட்டு கோரிக்கையை ஆதரிக்கவில்லை. கொசோவோ விடுதலை இராணுவத்தையும் அமெரிக்கா தடை செய்திருந்ததது.

பாரிய படை வளமும், பொருளாதார வளமும் கொண்ட நாடுகளின் பிரச்சனைகளில் தலையிடுவதற்கு அனைத்துலக சமூகம் துணிவதில்லை. உதாரணமாக செச்சென்னியா பிரச்சனை, மற்றும் சீனா எதிர்கொண்டுள்ள திபெத் பிரச்சனை என்பவற்றை இங்கு குறிப்பிடலாம்.

ஆனால் படைத்துறை ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வலுவிழந்து காணப்படும் ஒரு நாடு அனைத்துலகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்ப முடியாது. மேலும் அனைத்துலகத்தின் நன்மதிப்பு இருந்தால் மட்டுமே நாடு பிளவுபடுவதை தடுக்க முடியும். இந்த இரண்டையும் சேர்பியா இழந்தபோது மேற்குலகம் அங்கு இலகுவாக நுளந்து கொண்டது. (இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் சிறிலங்காவும் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக பலவீனமாகி வருகின்றது அல்லது அவ்வாறு மேற்குலகத்தினால் பலவீனப்படுத்தப்படுகின்றது).

கொசோவோவில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான மனித உரிமை அவலங்கள் காரணமாக மேற்குலக நாடுகள் தலையீடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதுடன், இறுதியில் சேர்பிய இராணுவத்தின் நடவடிக்கைகள் ஒரு முடக்க நிலைக்கு கொண்டுவரப்பட்டன.

சேர்பியாவின் இறைமை உள்ளிட்ட அனைத்துலக சட்டங்கள் அனைத்தையும் புறம்தள்ளிவிட்டு கொசோவோவின் சுதந்திர பிரகடனத்திற்கு அனைத்துலக நாடுகள் அங்கிகாரம் வழங்கின.

பிராந்தியத்தில் உறுதித்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற யதார்த்த நிலையின் அடிப்டையில் தான் இந்த நாடுகள் அங்கீகாரம் வழங்கின.

தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை பொறுத்தவரையில் அதன் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக மௌனித்து போனாலும், சிறிலங்கா அரசின் படை நடவடிக்கையை மிகப்பெரும் மனித உரிமை மீறலாகவும், போர்க்குற்றங்களாகவும் மாற்றப்பட்ட பின்னரே ஆயுதப்போராட்டம் மௌனித்துள்ளது.

மேலும் தமிழர் தாயகத்தின் இறைமையை மறுசீரமைப்பு செய்யுமாறு ஐ.நாவிடமும், அனைத்துலக சமூகத்திடமும் விடுதலைப்புலிகள் முன்னர் கேட்டிருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது. அதாவது தமிழ் மக்களின் இறைமைய அங்கீகரிக்குமாறு அவர்கள் கேட்டிருந்தனர். ஆனால் அதற்கான காலம் தற்போது கனிந்துள்ளதாகவே அனைத்துலகத்தின் நகர்வுகளை நோக்கும் போது புலப்படுகின்றது.

இதனை மறுவளமாக கூறுவதானால் சிறிலங்கா தனது நாட்டின் இறைமை தொடர்பாக பேசுகின்றது. அவ்வாறானால்; அங்குவாழும் இனங்களின் இறைமை தொடர்பாக அந்த இனங்களும் பேசமுடியும்.

ஒரு இனத்தின் இறைமை என்பது அழிக்கப்படும் போது ஒரு நாட்டின் இறைமையை அனைத்துலக சமூகம் புறம்தள்ள முடியும். அதனைத் தான் கொசோவோ மீதான மேற்குலகத்தின் நடவடிக்கைகள் எமக்கு கற்றுத்தந்திருந்தன.

ஏனைய நாடுகளில் நடைபெற்றுவரும் பிரிவினைக்கான போர்களுடன் ஒப்பிடும் போது ஈழத்தமிழ் மக்களின் போராட்டம் பிரிந்து செல்வதற்கு மிகவும் சாதகமான புறச்சூழல்களை முன்னர் கொண்டிருந்ததாக கருதப்பட்டது. அதற்கு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் தயாகப்பிரதேசம் இருந்தது காரணமாக இருந்தபோதும், தற்போது அதனை விட வலுவாக காரணங்கள் உள்ளன. பூகோள பிராந்திய முக்கியத்துவம், தமிழ் இனத்தின் இறைமை மீதான சிறீலங்கா அரசின் வன்முறை, உலக நாடுகளின் கதவுகளை தட்டும் தமிழ் மக்களின் கூட்டு அரசியல் தஞ்சம் போன்ற பல காரணங்கள் தமிழ் மக்களின் கைகளில் உள்ளன.

ஆனால் மேற்குலகத்தின் இந்த நகர்வுகளை முறியடிக்க இந்தியா தன்னால் முடிந்த அத்தனை நடவடிக்கையையும் மேற்கொள்ளும் என்பதை நாம் புரிந்து கொண்டு அதனை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

எனினும் மேற்குலகம் தற்போது மேற்கொண்டுவரும் நகர்வுகளை புலம்பெயர் தமிழ் சமூகமும், தயகத்து தமிழ் அரசியல் தலைமைகளும் இணைந்து சரியான வழியில் உள்வாங்கும்போது சிறீலங்கா ஒரு சேர்பியாவாகவும், தமிழீழம் ஒரு கொசோவோவாகவும் மாற்றம்பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை.


No comments:

Post a Comment