Monday, April 26, 2010

புலிகளுடன் தமிழர் பிரச்சனையும் செத்துவிட்டது அந்த அரசியலை மீண்டும் தோண்டி எடுத்துக் கொண்டு வராதீர்கள்; குமுறும் மகிந்தா?

புலிகளுடன் தமிழர் பிரச்சனையும் செத்துவிட்டது அந்த அரசியலை மீண்டும் தோண்டி எடுத்துக் கொண்டு வராதீர்கள்; குமுறும் மகிந்தா?�வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது காலாவதியாகிப் போன ஒன்று. இனிமேல் அதுபற்றிப் பேசுவதற்கே இடமில்லை.� என்று மகிந்த ராஜபக்ஸ கூறியிருக்கிறார். தமிழ் பத்திரிகை ஒன்றின் ஆசிரியருடனான சந்திப்பின் போதே அவர் இதை வெளி;ப்படையாகக் கூறியிருக்கிறார். �வடக்கு-கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. அது காலாவதியான விவகாரம். புலிகளின் அரசியலுடன் அதுவும் செத்துவிட்டது. புலிகளின் அந்த அரசியலை மீண்டும் தோண்டி எடுத்துக் கொண்டு வராதீர்கள். கிழக்கில் இன்று பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அப்படியிருக்க அவர்களின் விருப்பை மீறி நாம் வடக்கு-கிழக்கை இணைத்து, அவர்களுக்கு அநீதி இழைக்க முடியாது. ஒரு பிரதேசத்துக்கு ஒருவரும் தனியுரிமை கோர முடியாது. இன்று கொழும்பில் சிங்களவர்கள் சிறுபான்மையினர். அவர்கள் இங்கு (கொழும்பில்) இருபத்தியேழு வீதத்தினராகக் குறைந்து விட்டனர். அதற்காக அவர்கள் ஊர்வலம் நடத்தவில்லை. போராட்டம் செய்யவில்லை. எல்லா இடத்திலும் எல்லோரும் கலந்து வாழ அனுமதிப்பதே சரியானது- முறையானது. ஆகவே, காலாவதியாகிப் போன வடக்கு- கிழக்கு இணைப்பை விடுத்து வேறு விடயங்கள் பற்றிப் பேசலாம்.� இப்படிக் கூறியிருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ. வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த போது- அது உயர்நீதிமன்றத் தீர்ப்பு. அதில் தலையிட விரும்பவில்லை என்று கூறி ஒதுங்கியவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. ஆனால் இப்போது என்னவென்றால் அது காலாவதியாகிப் போய்விட்டது- இனித் தோண்டியெடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இதிலிருந்து வடக்கு-கிழக்கு இணைப்புக்கு அவர் எதிரானவர்- என்பது உறுதியாகியுள்ளது. அது ஒருபுறத்தில் இருக்க, இந்தச் சந்திப்பின்போது- கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டம் ஆகியவற்றின் சனத்தொகை வீதம் குறித்து அவர் கூறியிருக்கும் கருத்துகள் முற்றிலும் தவறானவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இப்போது முஸ்லிம்கள் தான் பெரும்பான்மையினர் என்று அவர் கூறியிருப்பது அப்பட்டமான தவறு. 2007ம் ஆண்டில் அரசாங்க மதிப்பீடுகளின் படி கிழக்கில் தமிழர்கள் தான் பெரும்பான்மையினர். இங்கு தமிழர்கள் 40.39 வீதமும், முஸ்லிம்கள் 37.64 வீதமும், சிங்களவர்கள் 21.64 வீதமாகவும் இருக்கின்றனர். இது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மதிப்பீடு. ஆனால் அரசாங்கதின் இந்த மதிப்பீட்டையே தவறாக்கும் வகையில் முஸ்லிம்கள் தான் பெரும்பான்மையினர் என்று மகிந்த ராஜபக்ஸ கூறியிருப்பது- வடக்கு- கிழக்கு இணைப்புக்கு எதிரான தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கே என்பது தெளிவாகத் தெரிகிறது. முஸ்லிம்கள் வடக்கு-கிழக்கு இணைப்பை எதிர்ப்பது போன்ற தோற்றப்பாட்டை அவர் உருவாக்க முனைகிறார். வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைப்பது குறித்து முஸ்லிம்களிடத்தில் அச்சம் இருந்தது உண்மை. ஆனால் இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணத்தில் தமக்கு தனியான நிர்வாக அலகு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருந்ததே தவிர, தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த மாகாணங்களைப் பிரிக்க வேண்டும் என்று அவர்கள கோரவில்லை. வடக்கு-கிழக்கு இணைப்பு பற்றிய முஸ்லிம்களின் நிலைப்பாட்டை தீவிரமாக்கும் வகையில் ஜனாதிபதியின் கருத்துகள் அமைந்திப்பதை காணமுடிகிறது. சிங்களவர்கள் தான் வடக்கு-கிழக்கு இணைப்பை கடுமையாக எதிர்த்து வந்தனர். ஆனால் மகிந்த ராஜபக்ஸவோ, முஸ்லிகள் இணைப்பை எதிர்ப்பார்கள் என்றே கூறியிருக்கிறார். சிங்களவர்களை இந்த இடத்தில் அவர் நியாயவாதிகளாக்க முற்படுகிறார். இனரீதியான ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றால் அதை இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணத்துக்குள் ஏன் செய்ய முடியாது என்று ஜனாதிபதி கருதுகிறாரோ தெரியவில்லை. அதேவேளை ஒரு பிரதேசத்துக்கு தனியொரு இனம் உரிமை கோர முடியாது என்ற ஜனாதிபதி மகிந்தவின் வாதம், கிழக்கு சிங்களக் குடியேற்றங்களை நியாயப்படுத்தும் வகையிலானதாகவே அமைந்துள்ளது. வடக்கு-கிழக்கு இணைப்பை தமிழ்மக்கள் வலியுறுத்துவதற்கு காரணங்கள் பல இருக்கின்றன. ஆதாரபூர்வமான புள்ளி விபரங்களின் அடிப்படையில்- தமது தாயகம் பறிபோகும் என்ற அச்சத்தினால் தான் இப்படியொரு கோரிக்கையை அவர்கள் முன்வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கிழக்கில் 1881ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கீட்டின் போது 58.96 வீதமாக இருந்த தமிழர்கள், 2007ம் ஆண்டு மதிப்பீடுகளின் படி 40.39 வீதமாகக் குறைந்து போயுள்ளனர். அங்கு 1881இல்; 33.66 வீதமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை, 37.64 வீதமாக அதிகரித்துள்ளது. 1881ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் போது கிழக்கில் சிங்களவர்களின் எண்ணிக்கை 4.66 வீதம் மட்டுமே. ஆனால் இன்று அவர்களின் எண்ணிக்கை 21.64 வீதமாக பிரமாண்ட வளர்ச்சி கண்டிருக்கிறது. இந்த மாற்றங்கள் ஒன்றும் சாதாரணமாக நிகழ்ந்து விடவில்லை. இயற்கையின் நியதியால் ஏற்பட்ட மாற்றமல்ல இது. திட்டமிட்டு ஏற்படுத்தப்படடவை. குடியேற்றங்களின் மூலமும், வன்முறைகளை ஏவித் தமிழர்களை விரட்டியடித்தும் தான் இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதேநிலை நீடிக்குமானால் இன்னும் சில வருடங்களில்- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியது போல தமிழர்கள் கிழக்கில் சிறுபான்மையினராகி விடுவர். காலப்போக்கில் அவர்கள் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியமில்லை. இப்படியான திட்டமிட்ட நடவடிக்கைகளின் ஊடாக தமிழரின் பாரம்பரிய பிரதேசம் கபளீகரம் செய்யப்படுவதைத் தடுக்கவே வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பைத் தமிழர்கள் கோருகின்றனர். இதற்கும் அப்பால் தமிழரின் தாயகக் கோட்பாடு என்ற நியாயங்கள் வேறு இருக்கின்றன. இதைக் கூட விதண்டாவாத நோக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பார்க்கிறார் என்பது இப்போது வெளிப்படையாகியுள்ளது. அடுத்து- வடக்கு-கிழக்கு இணைப்பு கோரிக்கையை புலிகளின் அரசியல் கோரிக்கையாகக் காண்பித்து குப்பைத் தோட்டிக்குள் போடுவதற்கும் முனைகிறார் அவர். தென்னிலங்கை அரசியல் சக்திகள் புலகளின் தோல்விக்குப் பிறகு, ஈழக் கோரிக்கையும், வடக்கு- கிழக்கு இணைப்புக் கோரிக்கையும் புலிகளினது விருப்பங்களாக திரிபுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இவை தமிழ்மக்களின் விருப்பம்- என்பதையும், கடந்த காலங்களில் தேர்தல்களின் மூலம் மக்களாணை வழங்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த சக்திகள் புரிந்து கொள்வதாக இல்லை. வடக்கு-கிழக்கு இணைப்பை புலிகளின் அரசியல் கோரிக்கையாகக் காண்பித்து அவர்களுடன் அது செத்து விட்டதாகப் பிரகடனம் செய்ய முற்படுகிறார் மகிந்த ராஜபக்ஸ. இப்படிப்பட்ட ஒருவரிடம் இருந்து நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. அடுத்து கொழும்பு மாவட்ட சனத்தொகை விகிதாசாரம் பற்றி அவர் கூறியுள்ள கருத்தும் தவறானது. கொழும்பில் சிங்களவர்கள் 27 வீதமாகக் குறைந்து போய்விட்டனராம். இதுவும் தவறான தகவலே. 2001ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி கொழும்பு மாவட்டத்தில் சிங்களவர்கள் 41.36 வீதத்தினராகும். ஆனால் தமிழர்கள் 28.91வீதமாகவும், முஸ்லிம்கள் 23.87 வீதத்தினராகவும் உள்ளனர். அப்படியிருக்கும் போது கொழும்பில் தமிழர்களே பெரும்பான்மையினர் என்றும் அதற்காக சி;ங்களவர்கள் போர்க்கொடி உயர்த்தவில்லை என்றும் கூறியிருப்பது இனங்களுக்கிடையிலான உறவை வளர்க்கும் செயலாகத் தெரியவில்லை. தமிழருக்கு எதிராக சிங்கவர்களைத் தூண்டி விடும் கருத்தாகவே உள்ளது. சரியான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி இப்படியொரு கருத்தை முன்வைத்திருந்தாலும் பரவலாயில்லை. மிகவும் முக்கியமானதொரு தருணத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பு தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டிருக்கும் இந்தக் கருத்துகள் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகங்களையே அதிகப்படுத்தியுள்ளது. அடுத்த பதவிக் காலத்துக்கு தெரிவானால் கூட அவரால் தமிழ்மக்களுக்கு ஆகப் போகும் காரியம் ஏதுமில்லை என்பதையே அவரது கருத்துகள் உணர்த்துகின்றன.

No comments:

Post a Comment