வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் பூர்வீக தாயகம் - ஆனால் அது 1931இல் இருந்து டி.எஸ். செனநாயக்காவின் சிங்களமயமாக்கும் திட்டத்தால், அதன் பின் வந்த அரசாங்கங்கள் எல்லாம் திட்டமிட்டு சிங்களவர்களைக் குடியேற்றிக் கொண்டிருக்கின்றன. இப்போ கிழக்கு மாகாணம் 35 – 40 வீதத்திற்கு மேற்பட்ட நிலங்கள் சிங்களக் குடியேற்றத்துக்குள் போய்விட்டது. மேற்கத்தேய நாடுகளில் வாழும் தமிழ் பேசும் மக்கள் 1983 ஆண்டுகளில் இருந்து தமது நாட்டின் உண்மையான நிலைமையை உணராதவர்களாகவே உள்ளனர்.
இவர்கள் விடுதலைப் புலிகளினால் எமது தயாகம் மீட்கப்பட்டு தமிழீழம் ஒன்று அமையும் என்ற எதிர்பார்ப்பிலேயே தம்மால் முடிந்த உதவிகளை அவ்வமைப்புக்கு அளித்துக்கொண்டிருந்தனர். ஆனால் இன்று அந்நிலைமை முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட அழிவுகளோடு பல வருடங்கள் பிற்போடப்பட்டுள்ளது. இப்புலம் பெயர்வாழ் மக்களில் பெரும்பாலானோர்கள் இன்னமும் வட – கிழக்கு மாகாணங்கள் தமிழ்ப் பிரதேசமாக இருப்பதாகவே நினைக்கின்றார்கள். ஆனால் உண்மை நிலை அப்படியல்ல. தமிழ்ப்பிரதேசங்கள் சிங்கள அரசுகளால் திட்டமிட்டு குடியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஈழத்தின் கடந்த கால நிலைமை
இங்கு இலங்கை சுதந்திரம் அடைந்த பின் உள்ள அரசியல் நிலைமையைப் பற்றி சுருக்கமாகப் பார்த்தோமானால் 1949 ஆம் ஆண்டில் இருந்து தமிழரசுக்கட்சி தமிழ் பேசும் மக்களின் உரிமைக் கோரிக்கையை சமஸ்டி (கூட்டாட்சி) கொள்கையை வைத்திருந்தது. அதைப் பெறுவதற்காக 1976 வரை பல அகிம்சா முறைப் போராட்டங்களை நடாத்தியது. பல பேச்சுவார்;த்தைகளை நடாத்தியது. ஆனால் எதுவும் பெற்றியளிக்கவில்லை. சத்தியாக்கிரகப் போராட்டங்கள் இராணுவத்தால் தாக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்டது.
இதனால் 1976ல் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமானால் அவர்கள் ஓர் சுதந்திர தமிழீழத்தில்த்தான் வாழலாம் என வட்டுக்கோட்டை மாநாட்டில் தீர்மானித்தார்கள். அத்தீர்மானத்தைத் தொடர்ந்து 1977 பொதுத் தேர்தல், அதில் தமிழ் மக்கள் தமிழீழத்துக்காகவே வாக்களித்து 80வீதமான பாராளுமன்ற உறுப்பினர்களைப் பாராளுமன்றம் அனுப்பினர். அதைத் தொடர்ந்து இனக்கலவரம் உருவானது.
இதனால் தமிழ் பேசும் மக்கள் சிங்களப் பகுதிகளில் இருந்து தமது தாயகமான வட – கிழக்கை நோக்கி வந்தனர். இந் நிலையில் தமிழ் இளைஞர்கள் இந்த நிரந்தர பெரும்பான்மை சிங்கள அரசு ஒரு போதும் தமிழரது உரிமைகளை பேச்சுவார்த்தையால் தரப் போவதில்லை என்பதை உணர்ந்து ஆயுதப் போராட்டத்துக்கு தயார் ஆனார்கள். அதன் விபரங்களை அனேகமானோர் அறிந்திருப்பீர்கள்.
போராட்ட அமைப்புக்கள்
1977 கால கட்டத்தில் பல போராட்ட அமைப்புக்கள் உருவாகின. ஒரு சில வருடத்துள் 35 அமைப்புகட்கு மேல் உருவாகின. அவற்றில் நின்றுபிடித்தவற்றில் ஐந்து அமைப்புக்களைக் குறிப்பிடலாம்.
1. ஈழப் புரட்சி அமைப்பாளர்கள். 2. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி. 3. தமிழீழ விடுதலை அமைப்பு. 4. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம். 5. தமிழீழ விடுதலைப் புலிகள்.
இவ் அமைப்புக்கள் கிட்டத்தட்ட ஓரளவு புரிந்துணர்வோடு 1986 வரை போராடின. பின் இவர்களுள் உள்ள பிரச்சினைகளால், அது ஓர் அமைப்புக்களிற்கிடையேயான ஆயுத மோதலாக மாறியது. அதனால் விடுதலைப் புலிகளைத் தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் தொடர்ந்து மோதாது பின்வாங்கி வெளிநாடுகளுக்கு போய்விட்டன. இதனால் ஈழப்போராட்டம் 45,000 போராளிகளை இழந்ததாக ஊடகவியலாளர் சிவராம் தனது கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தார். இவ் விடயம் ஓர் ஆய்வுக்குரியதாகையால் அதனை தொடராது விடுவோம்.
1987 – 1990 வரையான காலம்
இக்காலகட்டத்தில்தான் இந்திய - இலங்கை ஒப்பந்தம் உருவானது. சரியாகக் கூறினால் 1987 ஆடி 27இல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. அதன் அடிப்படையில் வட – கிழக்கு இணைந்த ஈழப்பகுதி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைமையில் இரண்டரை வருடங்கள் வரை ஆட்சி செய்யப்பட்டது.
இக் காலகட்டத்தில் இந்திய அமைதிகாக்கும் படையினர் ஒரு லட்சம் பேருக்குமேல், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த உதவினார்கள். இக்காலகட்டத்தில் விடுதலைப்புலிகட்கும் - இந்திய அமைதிப்படையினர்கட்கும் மோதல்கள் ஏற்பட்டதால் பல மக்கள் இறந்ததோடு பல விடுதலைப்புலிகளும் இந்திய அமைதிப்படையினரும் கொல்லப்பட்டனர். எமது மக்கள் அப்போதிருந்தே இந்தியாவின் எதிராளிகள் ஆக மாறிவிட்டார்கள்.
அதன் தொடர்ச்சியாக ராஜீவ்காந்தி கொலை தமிழ் நாட்டில் உள்ள சிறீபெரும்பூரில் ஓர் தேர்தல் கூட்டத்தில் நடந்தது. 1990 இல் இந்திய அமைதிப்படை திருப்பி அழைக்கப்பட்டதன் பின் வட கிழக்கு விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்துக்குள் வந்தது. அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசா விடுதலைப்புலிகளின் அப்போதைய நடவடிக்கைக்கு ஆதரவாக இருந்தார்.
1990 – 2009 காலகட்டம்:
1990ல் வடக்கு கிழக்குப் பகுதியாவும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்கள் வந்தது. இந்திய அமைதிப்படையும் இந்தியா போய்விட்டது. அப்போதைய மாகாண ஆட்சியில் ஈடுபட்டவர்களுக்கும் இந்தியாவுக்கும் பிறநாடுகட்கும் இடம் பெயர்ந்தார்கள். போக முடியாது நின்ற பலர் விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டார்கள்.
இறுதியில் 1990இல் இருந்து தமிழ் பேசும் மக்களின் விடுதலையைப் பெறும் பொறுப்பை விடுதலைப்புலிகள் எடுத்துக் கொண்டார்கள். அக்காலகட்டத்தில் அவர்கள் முதலில் யாழிலும் பின் கிளிநொச்சியிலும் ஓர் நிழலரசை நடாத்தினார்கள்.
இக் காலங்களில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் ஆங்காங்கே மோதல்கள் நடந்தவண்ணமிருந்தன. இதனால் 1995ல் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்தார்கள். அவர்களோடு மக்களும் சென்றனர். இங்கும் நிழலரசு தொடர்ந்தது.
2002 களில் நோர்வே அரசு ஓர் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது, அதோடு கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியும் வந்ததால் விடுதலைப்புலிகளுக்கும், அரசுக்கும் இடையில் ஓர் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தானது. அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நோர்வேயின் அனுசரணையுடன் வெளிநாடுகளில் நடாத்தப்பட்டது. இவ்வறாக ஆறுகட்ட பேச்சுவார்தைகள் நோர்வே, சுவிற்சலாந்து, தாய்லாந்து ஆகிய நாடுகளில் நடந்தன. ஆனால் அப்பேச்சுவார்த்தைகளினால் குறிப்பிடக்கூடிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
2004ல் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண முக்கியஸ்தர் விலகியதால் அங்கிருந்த 6000 – 7000 போராளிகளும் அமைப்பில் இருந்து விலகியதாகவே கணிக்கப்பட்டது. கருணா 1500 போராளிகளோடு சிறீலங்கா இராணுவத்தோடு இணைந்து கிழக்கு மாகாணத்தை சிறீலங்கா வசமாக்கினார்.
அத்தோடு வடக்கு மாகாண மோதலிலும் இராணுவத்துக்கு முழு உதவிகளையும் வழங்கி விடுதலைப் புலிகளின் முழு அழிவிற்கும் காரணமானார்கள். இவை பெரியதோர் ஆய்வுக்கான விடயமாதலால் அடுத்த கட்டத்துக்குப் போவோம்.
விடுதலைப்புலிகளின் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றாலும், அவர்களோடு ஆயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 13,000ற்கும் மேற்பட்ட போராளிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்கள் சிங்கள இடங்களில் இராணுவக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வதைமுகாம்களில் முட்கம்பிகளுக்கு நடுவில் இராணுவக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். 3இலட்சத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் வதை முகாம்களில் முட்கம்பிகட்கு நடுவில் இராணுவக் காவலில் வைக்கப்பட்.னர்.
இப்போ அவர்களில் சிலர் தமது கிராமங்கட்கு அனுப்பப்பட்டாலும் அவர்களது வதிவிடங்கள் அழிக்கப்பட்டதால் பொது இடங்களில் வாழ்வதாக அறிகிறோம். கிளிநொச்சியில் மட்டும் 47 000 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. அதே போலத்தான் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் நிலைமையுள்ளது.
தற்போதைய ஈழ நிலைமை
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இராணுவ முற்றுகையாகின்றது. முல்லைத்தீவில் மட்டும் 2500 ஏக்கரில் பிரமாண்டமான இராணுவ முகாம் உருவாகியுள்ளது. இது மணலாற்றுப்பக்கம் முழுக்க சிங்கள மயமாக்குவதின் முதற்கட்டமாகும். வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம்வரை ஏ9 வீதி ஓரக் கடைகள் சிங்களவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 147 சிறிய இராணுவ முகாம்கள் குடாநாட்டுக்குள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. யாழ்.குடாநாடு தாங்க முடியாத அளவிற்கு, சிங்களக் கடைகளும், சிங்கள உல்லாசப் பிரயாணிகளின் முற்றுகைக்குள்ளும் வந்துள்ள நிலையில் அவர்கள் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளும் இருந்து அல்லோலகல்லோலப்படுகின்றார்கள்.
இந்த இராணுவ ஆக்கிரமிப்பாலும் முள்ளிவாய்க்கால் முடிவாலும் ஈழத்துக்குள்ளேயே 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளான நிலையில் அங்கு அடுத்தது தேர்தல்கள் நடக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தை 26ம் திகதி நடந்து முடிய அடுத்து சித்திரை 8ம் திகதி பாராளுமன்றத் தேர்தல், அதற்கு அடுத்ததாக வடமாகாணத் தேர்தல் நடக்க இருக்கிறது.
மகிந்த அரசின் இரகசிய திட்டம்
இலட்சக் கணக்கான எம் மக்களைக் கொன்று குவித்து வடகிழக்கை இராணுவ வெற்றி மூலம் தம் வசமாக்கியது போல், வடகிழக்கு பாராளுமன்றத் தேர்தலிலும் 31 பாராளுமன்ற ஆசனங்களுக்கு 1869 வேட்பாளர்களைப் போட்டியிட வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதறடிக்க முழுமூச்சுடன் வேலை செய்கின்றது. அதற்கு எமது தமிழ் மக்களும் ஒத்துழைக்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது.
மகிந்தவின் இரகசியத்திட்டம் ஜனநாயகம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் பலமாக இருக்கக்கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பை சுயேட்சைக்குழுக்களின் மூலம் பாராளுமன்றத்தில் குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அதன் பின் கிழக்கு மாகாணம் போல் வடக்கு மாகாணத்திலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை யாழ்.குடாநாட்டிலும், வன்னிப் பகுதியிலும் நடாத்தும் ஆரம்பவேலைகளைச் செய்யத் தொடங்கியுள்ளது. எனவே தமிழ் மக்கள் மகிந்தவின் குள்ள நோக்கை உணரவேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நிலைமை
ஒவ்வொரு ஜனநாயக நாடுகளிலும் தேர்தல்கள் வரும் போது விரும்பாதவர்கள் விலகுவதும், கட்சிக்கட்டுப்பாட்டுக்கு விசுவாசமற்றவர்கள் விலக்கப்பட்டு புதிய வேட்பாளர்களை உள்வாங்குவதும் ஜனநாயக மரபாகும். இதே நிலைமைதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலும் நடந்தது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த ஜனநாயக நடவடிக்கையை புலம்பெயர் நாடுகளில் உள்ள சில அமைப்புக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஏன்?
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள்:
இக்கட்சியின் கொள்கைகளை இவர்களது தேர்தல் அறிக்கையில் நீங்கள் பார்க்கமுடியம். அதாவது அரசியல் தீர்வு தொரடர்பாக அவ் அறிக்கை கூறுவதாவது 'இந்த நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இரு இனங்கள் பகிரப்பட்ட இறையாண்மையூடாக அதிகாரப்பகிர்வைப் பெறுதல்' இவ்வதிகாரப்பகிர்வு 'தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான தேசிய இனம், அவர்கள் இலங்கைத்தீவில், சிங்களவர்களுடனும், ஏனையோருடனும் பாரம்பரியமாக வாழ்ந்து வந்தார்கள். தொடர்ச்சியான வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப் பூர்வமான வாழ்விடமாகும். தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்' என்று கூறுகிறது. இது ஓர் சமஸ்டி முறைக்குள்ளான கொள்கையின் அவ்வறிக்கை 12 பக்கங்களைக் கொண்டுள்ளது. அதிகமான கணனியில் அதைப் பார்க்கமுடியும்.
தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் கொள்கையும் ஏறக்குறைய சமஸ்டி அமைப்பு போலவே பார்க்கமுடியும். அதாவது அவர்கள் 'இரண்டு தேசம் ஒரு நாடு' என்கிறார்கள். எனவே இது தமிழீழக் கொள்கையல்ல. அடுத்தது 6வது திருத்தச் சட்டத்தை அனுசரித்து நாடாளுமன்றம் போவதே தனிநாடு கேட்கமாட்டோம் என்று சத்தியப்பிரமாணம் செய்வதன் மூலம் ஆகும். எனவே இவர்கள் தான் விடுதலைப்புலிகளின் கொள்கையைப் பாதுகாக்கிறார்கள் என்பதில் எந்த உண்மையும் இல்லை, என்பதை மக்கள் உணரவேண்டும்.
கடந்த காலத்தில் தமிழரின் உரிமைக்காக விட்டுக்கொடாது தொடர்ந்து கொள்கைப்பிடிப்போடு சரியான அரசியல் பாதையில் போனவர்தான் தமிழரசுக்கட்சி, பின் தமிழர் ஐக்கிய முன்னணி, அதன் பின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, கடைசியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு. எனவே மக்கள் தயங்காது அவர்களை வெல்ல வைக்க வேண்டிய தேவை இருக்கிறது.
உலகத் தலைவர்கள் எதைச் சொல்கிறார்கள்
அண்மையில் நடந்த உலகத்தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட், பிரதமர் கோர்டன் பிறவுன், நிழல் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் கேய்க் ஆகியோர் தமிழ்மக்கட்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்கள். அதைவிட இந்திய வெளிநாட்டு அமைச்சர் சிறீ கிருஸ்னாவும் தமிழர் பிரச்சினை தீர அதிகாரப்பகிர்வு அவசியம் என இந்திய மத்திய பாராளுமன்றத்தில் பேசியிருந்தார்.
இதே முடிவுகளைத் தான் ஐக்கியநாடுகள் சபையின் தலைவர் பான்கிமூனும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகியவற்றின் தலைவர்களும் கூறினார்கள். இதனால் நாம் இறைமையை இழந்துவிட்டோம் என்று அர்த்தம் அல்ல.
நாம் கேட்பது கிடைக்காவிட்டால் எமது கோரிக்கையை வெளிநாடுகட்கு கொண்டு செல்வோம் என சம்பந்தர் யாழில் நடந்த தேர்தல் கூட்டமொன்றில் கூறியிருந்தார்.
இந்திய நிலைப்பாடும் ஈழவர்களும்
தற்போதைய புதிய அமைப்பான தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியாவிற்கு விலைபோயுள்ளதாக கூறிவருகின்றனர். இவ்விடயத்தை இவர்கள் கடைசிவரை கூறவில்லை. பத்மினிக்கும் கஜேந்திரனுக்கும் வேட்பாளர் சந்தர்ப்பம் கொடுக்கப்படாததாலேயே தானும் விலகி அதற்கு சில காரணங்களை முன்வைப்பதாகவே பார்க்கமுடிகிறது.
தமிழ் காங்கிரசின் மூத்த தலைவரான விநாயகமூர்த்தி கஜேந்திரகுமாரின் முடிவை ஓர் முதிர்ச்சியற்ற முடிவு எனக் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் 2002இல் இருந்து 6 கட்டப் பேச்சுவார்த்தைக்குப் போனார்கள். அதில் உள்ளக சுயநிர்ணய உரிமை பற்றிக் கதைக்க விரும்பம் தெரிவித்தனர்.
விடுதலைப்புலிகளின் தலைவரின் இறுதியாக வெளியிடப்பட்ட மாவீரர் நாள் உரைகள் சிலவற்றில் உள்ளக சுயநிர்ணய உரிமைபற்றி கதைக்கவிரும்பம் தெரிவித்திருந்தார். அதற்கு முன் திம்பு பேச்சுவார்த்தை இந்திய - இலங்கை ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் எல்லாம் விடுதலைப் புலிகள் கலந்து கொண்டனர். இது தனிநாட்டுக்கான பேச்சுவார்த்தை அல்ல. அவை ஓர் உள்ளக சுயநிர்ணய உரிமை பற்றியதே.
கடைசியாக அன்பார்ந்த புலம்பெயர் வாழ் தமிழ்பேசும் மக்களே, எமது தீர்வு படிப்படியாக, குறுகிய, மத்தியதர, நீண்ட கால தீர்வாகக்கூடியதாக இருத்தல் அவசியம். இன்று எமது பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பலத்தில் உள்ளது. எனவே அதை வெல்ல வைப்போம். அதை ஈழத்தமிழ் பேசும் மக்களுக்களால் செய்ய முடியும். அதற்கு புலம்பெயர் தமிழர்களாகிய உங்களாலும் உதவமுடியும். மிகப்பலத்தோடு ஒரு கட்சி இருப்பது அவசியம்.
சிந்தியுங்கள் சிந்தித்து செயலாற்றுங்கள்.
- கலாநிதி ஆ.க.மனோகரன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment