கிளிநொச்சியில் இருந்து ஒரு போராளியின் துணைவியார் இவ்வாறு கேட்டார். வெள்ளி கிழமை இந்த பெண் தனது துணைவரை பார்ப்பதற்காக வவுனியாவிற்கு சென்றார். அங்கு தனது துணைவனான ......... என்ற போராளி மேற்கண்டவாறு தனது மனைவியிடம் கூறி இருக்கின்றார்.
அவர் மேலும் விவரித்தார்.. நான் முகாமிற்கு இவர பார்க்க போனனான் இங்க கிளிநொச்சியிலதான் இருக்கிறம். தகரம் தந்தவங்கள் நிவாரண காசிற்கு கடிதம் தந்திருகின்றாங்கள் ஆனால் காசு இப்போதைக்கு இல்லையாம் என்று சொல்றாங்கள் நிறைய தடவை கச்சேரிக்கு போனம் ஆனால் காசு இன்னமும் வரவில்லை என்றுதான் சொல்லுகினம்.
தொழில் ஒன்றும் செய்யேலாதுதானே நிவாரணத்தோட இருக்கிறம். எனக்கு சைக்கிளும் இல்லை. பக்கத்து வீட்டு காரரிட்ட சைக்கிள் வாங்கிதான் வவுனியாவிற்கு இவரை பார்க்க நானும் தம்பியும் போறனாங்கள்.
இவர் உங்களிட்ட சொல்ல சொன்னார்... தங்களை 5 வருஷத்திற்கு வைச்சிருக்க போறாங்களாம் ஆனால் அது உண்மையோ பொய்யோ தெரியாது. கலியாணம் முடிச்ச போராளிகள் 1682 பேர் இருக்கினம் இவர்களை முன்னமே விடப்போறம் என்றும் சொல்றாங்களாம். அதோட புதிதாக ஒரு முகாம் அமைத்து கலியாணம் முடிச்ச ஆட்களை அங்க கொண்டுபோக போறாங்களாம் என்றும் சொன்னவங்களாம். எது உண்மை எது பொய் என்று தெரியாது அடிக்கடி மாத்தி மாத்தி கதைபாங்களாம்.
போன வெள்ளி, சனி கிழமை காயப்பட்ட ஆட்களை விடுறது என்று அதற்கான கடிதங்களும் எல்லாருக்கும் கொடுத்தாங்கள் கூட்டிக்கொண்டுபோக பெற்றோர்கள் வந்திருந்தார்கள். ஆனால் கொஞ்சப்பேரைதான் விட்டவங்கள். என்று கூறியுள்ளார் அந்த போராளி.
மேலும் தமக்கு அரச தொலைகாட்சி, வானொலி , பத்திரிகை செய்திகளை படிக்க கொடுப்பதாகவும் கூறியுள்ள போராளி தம்மை பார்க்க வரும் பெற்றோர்கள், உறவினர்கள் இணைய செய்திகள் சிலவற்றை அச்சிட்டு கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
எங்கள எவ்வளவு காலத்திற்கு வைச்சிருக்க போறாங்கள் என்று தெரியாது ஆனால் ஆக குறைந்தது 5 வருஷம் என்று இங்க உள்ள ஆமி சொல்லுறாங்கள். வெளி நாட்டில இருக்கிற அமைப்புக்கள், மக்கள் ஏதாவது எங்கள எடுக்கிறதுக்கு அலுவல் பார்க்கிறாங்களா?அங்க என்ன நடக்குது? முடிந்தால் அறிய தாருங்கோ.
எங்களை போன்ற சிறையில் உள்ள போராளிகளை பார்க்க வாறதுக்கு சில பெற்றோர், துணைவிமார் சரியான கஸ்டப்படுகினம். போக்குவரத்துக்கு காசு இல்லை, சிலபேருக்கு சைக்கிளும் இல்லை. இவர்களுக்கு முடிஞ்சால் இதுக்கு மட்டுமாவது கொஞ்சம் உதவி செய்யுங்கோ.
சிலபேருக்கு உதவி கிடைச்சதாக கேள்விபட்டோம் நன்றி ஆனால் எம்மை போன்ற இயக்க கொடுப்பனவை நம்பி வாழ்ந்த போராளி குடும்பங்களுக்கு சரியான கஸ்டம். தயவு செய்து கைவிட்டுவிடாதீர்கள். எங்கள் வாழ்க்கை சிறையோடு முடிந்துவிடும் . எங்கள் பிள்ளைகளை கைவிட்டு விடாதீர்கள் ஏனென்றால் அதுதான் எங்கள் ஆறுதல்.
போராளிகள் எல்லோரும் காட்டி கொடுப்பதாக சிலர் ஏசுகின்றார்களாம். சிறைக்குள் இருந்து கொண்டு வெளியில் நடப்பதனை பற்றி என்னால் சொல்ல முடியாது. ஆனால் நாங்கள் நடக்குறது நடக்கட்டும் என்று சிறையிலேயே வாழ்க்கையினை கழிக்க தயாராகிவிட்டோம். விடுவாங்கள் என்ற நம்பிக்கை துளி கூட எமக்கு இல்லை.
ஒரு குறிப்பிட்ட வீத போராளிகள் வெளியில் நடமாடி திரிகின்றார்கள் சிலர் வெளியே சென்றுள்ளார்கள். ஏன்? எப்படி? இதெல்லாம் நடக்கின்றது என என்னால் சொல்ல முடியாது.
ஆனால் பெரும்தொகையான போராளிகள் சிறையில்தான் உள்ளோம். ஒரு சிலரின் நடவடிக்கைகளுக்காக எங்களை கைவிட்டுவிட வேண்டாம். ஒன்றவிட்ட கிழமைதான் என்னை பார்க்க வருவினம் ஏதும் இருந்தால் சொல்லி விடுங்கோ.
இவ்வளவும் அந்த போராளியினால் எமக்கு கூறும்படி தனது துணைவியாரிடம் சொல்லப்பட்டவை.
கிளிநொச்சியில் இருந்து வெள்ளி கிழமை காலை இரவல் சைக்கிளில் புறப்பட்ட அந்த போராளியின் துணைவியார் சனி மாலை வவுனியாவில் இருந்து வளர்ப்பதற்காக கோழி குஞ்சுகள் வாங்கி கொண்டு வந்துள்ளார். கிளியில் கைவிடப்பட்ட சைக்கிளை இராணுவத்தினர் சனங்களுக்கு கொடுக்க போகின்றார்களாம் அதற்காக தான் பதிந்து இருப்பதாகவும் சொன்னார்.
நன்றி: ஈழநாதம்
No comments:
Post a Comment