Saturday, April 24, 2010

எம் தலைவர் வருவார் :- கண்மணி

சில நிகழ்வுகள் முடிவே தெரியாமல் நீண்டுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் ஒருநாள் அவை முடிவுகளை சந்தித்தே தீரும். அப்படி முடிவுகளை சந்திக்கும்போது, அதில் இருக்கும் துயரும் மகிழ்வும் சேர்ந்தே வெளிப்படும்.தேசியத் தலைவரின் அன்னையை திரும்ப அனுப்பிவிட்டு நடத்தும் அரசியல் கேலிக்கூத்து நம்மை அறுவெறுக்கச் செய்கிறது. ஒருநாட்டின் அரசத் தலைவர் உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவரின் தாய், தமிழீழ அரசின் தலைவர், மேதகு தேசிய தலைவர் அவர்களை அறியாத உலகம் இல்லை. அப்படிப்பட்ட ஒருவரின் தாய், ஒரு நாட்டிற்கு வருவது, ஒரு அரச தலைவருக்கு தெரியாது என்று சொல்லும் அளவிற்கு அந்த அரச தலைவரும், அதை கேட்கும் அளவிற்கு இந்த நாட்டின் மக்களும் எவ்வளவு முட்டாள் தனமாக இருக்கிறார்கள் என்பதை சிந்திக்கும்போது, நமக்கு வியப்பை விட எரிச்சலே மேலோங்குகிறது. எந்த அரசு ஆட்சியில் இருக்கிறதோ, அந்த அரசின் காலடிகளில் திரியும் ஒருவர், எப்படியாவது கருணாநிதியின் அரசுமீது குற்றப்பழி நேரக்கூடாது என்பதற்காக தமது விரலை போயஸ் தோட்டத்தை நோக்கி நீட்டுகிறார். 2003 ஆம் ஆண்டு அப்போதைய அரச தலைவராக இருந்த செயலலிதா தான் இதற்கு காரணம் என்று கூறி, கருணாநிதியை தப்பிக்க வைக்க முயற்சிக்கிறார். இன்னொரு தலைவர் தைலாபுரம் தோட்டத்திலிருந்து அறிக்கையிடுகிறார், இது தமிழக முதல்வருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என. இந்த சிறுபிள்ளைத் தனமான விளையாட்டுக்களை கேட்டு, தமிழகம் சிரிப்பாய் சிரிக்கிறது. உலகத் தமிழர்கள் ஒலி வாங்கி வைத்து சிரிக்கிறார்கள். என்னக் கேவலம்! ஒரு மாநிலத்திற்கு அதி முக்கிய பிரமுகர் வருவது ஒரு அரச தலைவருக்குத் தெரியாது என்றால், தந்தை பெரியார் சொல்வாரே, அரசர்கள் வானம் மும்மாரி பெய்ததா? என்று அமைச்சர்களைக் கேட்டு தெரிந்து கொள்வார்கள் என்றால், அரசர் என்ன மயிரைப் பிடுங்குவதற்கா இருக்கிறார் என. அப்படித்தான் நமக்கும் கேட்கத் தோன்றுகிறது. இந்த அரசின் அதிகார ஆற்றலான காவல்துறை, புறநகர் காவலர் மாவட்டம், தமது அதிமிகு ஆற்றலை காவல்துறையின் குவிப்பில் காட்டியிருக்கிறது. காவல் துறைக்கு தெரிந்த தகவல், காவல் துறைக்கு தலைமை வகிக்கும் தலைவருக்கு தெரியாமல் போனது எப்படி? என்கிற இயற்கையான கேள்வி எழ வேண்டும். எழா விட்டால் நாமும் அவர்களோடு சேர்ந்த முட்டாள் குளத்தில் மூழ்கி குளித்தவர்களாக மாறிவிடுவோம். 2003ஆம் ஆண்டு செயலலிதா அரசு, நடுவண் அரசுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில்தான் அனுமதி மறுக்கப்பட்டதாக திராவிட தளபதி அறிக்கையிடுகிறார். சமூக நீதி காத்த வீராங்கணை பட்டத்தை வளைந்து நெளிந்து கொண்டு அவருக்கு வழங்கிய போது, இவருக்குத் தெரியாதா? இப்படிப்பட்ட ஒரு கடிதத்தை செயலலிதா எழுதியிருக்கிறார் என. தெரிந்தும் மறைக்கிறாரா? அல்லது மறந்துவிட்டாரா? என்று புரியவில்லை. சட்டமன்றத்திலே வீணாய்போன பேராயக் கட்சியின் உறுப்பினர் சுதர்சனம் சொல்கிறார், செம்மொழி மாநாட்டைக் குலைக்க இவர்கள் சதி செய்கிறார்கள் என்று. செம்மொழி மாநாடே தேவையற்றது என்ற கருத்து தானே மாநாடு அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து தமிழ் பாவலர்கள், அறிஞர்கள், தமிழ்இன உணர்வாளர்கள், உள்ளங்களிலிருந்து உரக்க எழுந்து கொண்டிருக்கிறது. எமது தேசிய தலைவரின் அன்னையர் இங்கு வருவதின் மூலம்தான் இந்த மாநாடு குலைக்கப்படும் என்ற கூற்று எப்படி சரியானது என்று அவர்தான் விளக்க வேண்டும். இவர்கள் போட்டிருக்கும் சட்டையிலும் அளவு கிடையாது, செய்யும் கற்பனையிலும் அளவு கிடையாது. டெல்லியிலிருந்து முனகல் சத்தம் கேட்டவுடன், ஐயோ நம் பதவி முடிந்ததே என்று முக்காடு போட்டுக் கொள்ளும் தன்மானம் அற்ற தலைமை பண்பு கொண்டவர்கள்தான் இந்த பேராய கட்சியின் பெரும் பங்காளர்கள். இவர்களுக்குள் இருக்கும் குழுவையே இவர்களால் ஒன்றிணைத்து நிலைநிறுத்த முடியாதபோது, பாவம் இவர்கள் செம்மொழி மாநாட்டைக் குறித்து, கொள்ளும் அக்கறை பெரும் நகைப்பிற்கிடமாகி இருக்கிறது. இன்னொரு கிறுக்கன் சுப்பிரமணியசுவாமி. நுனலும் தன் வாயால் கெடும் என்பதை போன்று எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக எப்போதாவது உறக்கம் வராவிட்டால், சென்னைக்கு வந்து உள்ளேன் ஐயா என்று சொல்வதைப் போல, நானும் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன் என்பதை அறிவித்து செல்வதற்கு அறிக்கைகளை தருகிறார். ஏனோ தெரியவில்லை. இரண்டே பேர் இருக்கும் இந்த கட்சிக்கு ஊடகங்கள் இவ்வளவு முன்னுரிமை தருகிறதே என்ற சந்தேகம் நமக்கு தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி இழிநிலை போக்கோடு ஒருநிலை நீடித்துக் கொண்டிருக்கும்போது, வேறொரு புறத்திலிருந்து நமக்கு நம்பிக்கையும், மனதிடனையும் அளிக்கக்கூடிய செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழ் தேசிய ராணுவம் ஊடகங்களுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறது, எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணிக் கொள்ளாதீர்கள் என்று. எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணிவிடாதீர்கள் என்று சொல்லப்படும் வார்த்தைக்குள் வைக்கப்படும் �க்�கன்னாவிற்கு ஆயிரம் பொருள் குவிக்கப்பட்டிருப்பதை அர்த்தம் புரிந்து அறிந்து கொள்வார்கள். நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம், எந்த ஒரு இயக்கமானாலும், எந்த ஒரு போராட்டமானாலும் அது தமது தேவையை அடையும்வரை ஓய்ந்தது கிடையாது என்று. சில நேரங்களில் வீரம் செறிந்த கருவிகள் போராட்டம் வெற்றியை அள்ளிக் கொடுக்கலாம். சில நேரங்களில் அந்த போராட்டத்தின் நாயகர்களான மக்களின் கண்ணீர் வெற்றியை காணிக்கையாக அள்ளி தரலாம். யூதர்களின் கண்ணீர் இட்லரை அடையாளம் தெரியாமல் வீழ்த்தியது. கண்ணீர் என்பது சில நேரங்களில் விழுமியங்களாக, சில நேரங்களில் வீரமாக வெளிப்படுகிறது. தமிழர்களின் கண்ணீர் நாளைய தினம் ராஜபக்சேக்களை வீழ்த்தலாம். அது இயற்கையாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வுதான். எது ஒன்றும் தானாக இயங்கிக் கொண்டே இருக்கும். எந்த ஒரு நிகழ்வும், எந்த நிலையிலும் அமைதியாகாது. அவை ஒரு தொடர் தான். ஆனால் அந்த நிகழ்வுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் படிப்பினைகள், நமது வெற்றியை தீர்மானிக்க சற்று உந்தித்தள்ளும் ஆற்றலாக அமைந்துவிடுகிறது. போராட்டத்தின் தேவையை எல்லோராலும் கண்டுபிடித்துவிட முடியாது. இந்த உலகம் தோன்றிய காலம் முதல் எவ்வளவோ முறை மரங்களிலிருந்து கனிகள் பூமியில் விழுந்திருக்கிறது. எத்தனையோ லட்சக் கணக்கான மக்கள் விழுந்த கனியை பார்த்திருக்கிறார்கள். அதை எடுத்து சுவைத்திருக்கிறார்கள். ஆனால் ஐசக் நியூட்டன் முன்னால் விழுந்த அந்த ஆப்பிளுக்கு மட்டும் ஏனோ ஒரு கேள்வியோடு விழுந்தது. நியூட்டன் சிந்தித்தான். ஏன் அந்த கனி கீழே விழ வேண்டும். அது மேலே சென்றுவிடக்கூடாதா? அல்லது மரத்திலேயே இருந்துவிடக் கூடாதா? அது பூமியை நோக்கி விழ வேண்டும் என்றால், ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்பதை அவன் சிந்திக்க தொடங்கினான். ஆகையால்தான் அவனால் புவிஈர்ப்பு விசை என்கின்ற புதிய அறிவியல் ஆற்றலை கண்டுபிடிக்க முடிந்தது. தமிழீழத்திலும் தொடர்ந்து எத்தனையோ நிகழ்வுகள், எத்தனையோ தலைவர்கள், அவர்கள் நடத்திய போராட்டங்கள், அவர்கள் இழந்த இழப்புகள், அதில் கிடைத்த அனுபவங்கள், அவர்களுக்கு அதைத் தவிர வேறெதுவும் சிந்திக்க முடியவில்லை. அப்போதுதான் அங்கே ஒரு தலைவன் தோன்றினான். அவன் சிந்தித்தான். ஏன் எம்மின மக்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை நிறுத்த முடியாதா? அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று அவனுக்குள் எழுந்த கேள்வி அவன் மனங்களில் கலகம் செய்தது. அவனது குருதி ஓட்டங்களில் குறிப்புகளாய் நடைபயின்றது. அதற்கான விடையை கண்டுபிடித்தான். தமக்கான ஒரு அரசு இருந்தால்தான் இதற்கான விடை நிரந்தரமாக இருக்கும் என்பது. ஆக, எந்த ஒரு அறிவியல் படைப்பாக இருந்தாலும், சமூக படைப்பாக இருந்தாலும் அவற்றிற்கு ஒரு அடிப்படை காரணியை கண்டுபிடிக்கும் ஆற்றல் வாய்ந்த தலைவன் ஒருவன் தேவைப்படுகிறான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வாழ்ந்த தமிழினத்திற்கு அப்படி ஒரு தலைவன் வாய்த்தான். அவன் தமிழர்களின் முகத்தை உலகிற்கு அறிமுகம் செய்தவன். தமிழினம் என்பதை இந்த உலக ஏடுகளில் பதிவாக்கியவன். தமிழ் மொழியை காக்க, புதிய படைப்பாற்றல்களை உண்டு பண்ணியவன். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் வாழ்ந்த தமிழீழம், தனக்கென ஒரு நாடு அமைத்துக் கொள்ள தவறிய போது, அதற்கான பெரும் முயற்சி எடுத்தவன். அதை முற்றிலுமாய் முடிக்கும்வரை எம்உயிர் தலைவரின் ஓட்டம் அடங்கப்போவது கிடையாது. அதன் முதற்கட்ட பதிவாகத்தான் எல்லாம் முடிந்தது என நினைத்துக் கொண்டு ஏதேதோ எழுதிக் கொண்டிருக்காதீர்கள் என்ற எச்சரிக்கையின் தொடக்கம். தலைவன் வருவான். அவன் வரும் காலத்தில் மேதகு குடியரசு தலைவராக வருவான். அதற்கான அடுத்தக்கட்ட நகர்வு விரைவில் வெளிப்படுத்தப்படும். ஒவ்வொரு திட்டமும், செயல்பாடும் நம்மை நம்பியே இயக்கப்படுவதால் நமது பங்களிப்பு என்னதென்று நாம் சிந்திக்க வேண்டிய தருணத்திற்கு வந்திருக்கிறோம். நமக்கான இன உணர்வை, நமக்கான மொழி உணர்வை, நமது இலட்சிய தேவையை அடைய நாம் இழப்புகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். நாம் மிரட்டப்படலாம். அல்லது ஆசை வார்த்தைகளால் அலைக்கழிக்கப்படலாம். இல்லையெனில் அதிகார ஆளும் வர்க்கங்களால் புறக்கணிக்கப்படலாம். அத்தனையும் தாண்டிதான் நாம், நமக்கான லட்சியத்தை அடைய இருக்கிறோம். விடுதலை என்பது எட்டிப் பறிக்கும் கனி அல்ல. அதை போராடியே பெற வேண்டி இருக்கிறது. போராடி பெற்ற விடுதலைக் கனி நமது மக்களின் எதிர்கால வாழ்வை மகிழ்ச்சியும், மனநிறைவும் கொண்ட மகத்தான நிலையில் கொண்டு அமைக்கப்போகிறது. யார் தடுத்தாலும் இது நிற்கப்போவதில்லை. காரணம் இது கோடிக் கோடி மக்களின் கனவு. அவர்களின் மனங்களில் புதைந்துபோன நிகழ்வு. அவை ஒருநாள் நடந்தேத்தீரும். எம் தலைவர் வருவார். அந்த ஒலி முகத்தைக் கண்டு தமிழினம் விடியல் பெறும். அவரோடு நாம் கரம் இணைத்து தமிழருக்கான நாட்டை கட்டியமைப்போம். அதற்காக நாம் தொடர்ந்து கடமையாற்றுவோம்.அந்த காலத்தில் நமது தலைமைக்கெதிராக கருத்துக்கூறிய பன்னாடைகள் காற்றில் அடித்துச் செல்லப்படும். ஆனால் நமது எண்ணமும், உணர்வுகளும் உற்சாகத்தோடு அணிவகுக்கும்.

No comments:

Post a Comment