உதயனுக்கு நேற்று வழங்கிய விசேட செவ்வியிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் மேற்கண்ட கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார்.
அவர் தமது செவ்வியில் தெரிவித்ததாவது:
யாழ்.தேர்தல் மாவட்ட மக்களின் வாக்குகள் மிகவும் முக்கியம். அவர்கள் தமது வாக்குரிமையை முழுமையாகப் பயன்படுத்தி, இந்த நாட்டு ஆட்சியாளருக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமது அரசியல் தீர்மானத்தை ஐயப்பாட்டுக்கு அப்பாற்பட்டவகையில் வெளிப்படுத்த வேண்டும்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி அமோக வெற்றியாக இருக்க வேண்டியது அத்தியாவசியம். எமது அதிமுக்கிய அரசியல் தளம் யாழ்ப்பாணம் மாவட்டம் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அரசியல் தீர்வு ஆட்சியாளரின் சிந்தனையிலும் சர்வதேச சமூகத்தின் சிந்தனையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இருக்க முடியாது.
அந்த வகையில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் வாழுகின்ற மக்கள் வாக்களிக்கின்ற போது தமக்காக மாத்திரம் வாக்களிக்கவில்லை. முழு தமிழினத்துக்காகவும் வாக்களிக்கிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் இன்றைய காலகட்டத்தில் தமது வாக்குரிமையை முழுமையாகப் பயன்படுத்தி தமது அரசியல் தீர்மானங்களை இந்த நாட்டின் ஆட்சியாளருக்கும் சர்வதேச சமூகத்திற்கும் மிகவும் தெட்டத் தெளிவாக ஐயப்பாட்டுக்கு அப்பாற்பட்ட வகையில் வெளிப்படுத்த வேண்டும். எமது மக்கள் இதை கட்டாய, புனிதமான கடமையாகக் கருதி நிறைவேற்ற வேண்டும்.
மக்களுடைய தீர்ப்பு ஒரு பலம் வாய்ந்த தெளிவானதாக இருக்குமாக இருந்தால் அதனை மதிக்க வேண்டிய ஒரு நிலை நாட்டின் ஆட்சியாளருக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஏற்படும். எமது தேர்தல் முடிவுகள் அவ்விதமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைய வேண்டியது இன்றைய கட்டாய தேவையாகும்.
ஆகையால் நான் மிக விநயமாகவும் அன்பாகவும் எமது தமிழ் மக்களை கேட்டுக்கொள்வது என்னவெனில், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கடமையில் தவறாது வேளைக்கு வாக்குச் சாவடிக்குச் சென்று மிகவும் தெளிவான கொள்கையின் அடிப்படையில் இத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் "வீடு' சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.
அதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பரிபூரணமாக ஆதரித்து அவர்கள்தான் உங்களின் அங்கீகாரத்தைப் பெற்ற பிரதிநிதிகள் என்பதை வெளிப்படுத்தி அதன் மூலமாக உங்கள் சார்பில் தேர்தலுக்குப் பிறகு நடைபெறக் கூடிய சகல அரசியல் நடவடிக்கைகளிலும் உங்கள் உண்மையான பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் போதிய பலத்துடன் செயற்படுவதற்கு உரித்துடையவர்கள் என்பதை உங்களின் வாக்குரிமை மூலம் வெளிப்படுத்த வேண்டும்.
தேர்தல் மூலமாக எமக்கு கிடைத்திருக்கும் இவ்வாய்ப்பை எமது கவனயீனத்தின் காரணமாக நாம் நழுவவிட முடியாது. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது மக்களுடைய எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தை எற்படுத்த வேண்டியது எம் எல்லோருடைய கடமையாகும்.
தூய்மையுடனும் துணிவுடனும் இந்தக் கடமையை நாம் எதிர்நோக்குவோம் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment