தலைமைத்துவம் என்பது ஒரு தவம் போன்றது. தலைவர்கள் என்று அழைக்கப்படுவர்கள் எல்லாம் தலைமைத்துவம் கொண்டவர்கள் அல்ல. அதன் உள்ளடக்கம் ஆழமானது. அதற்குள் புதைந்துள்ள பண்புகள் அசைக்க முடியாத வேரோடு இருக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதன் ஆணி வேர் உண்மை என்கின்ற அடிப்படையில் அழுத்தமாய் புதைந்திருக்கும். ஆகவேதான் அதன் மேலிருக்கும் கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள் பசுமையாகவும், பாதுகாப்பாகவும் செழித்தோங்கி இருக்கின்றன. தலைவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் எல்லோரும் தலைமைத்துவ ஆற்றலாளர்களாக இருப்பார்களாயின், அப்படி இருக்கும் அந்த தேசத்தின் கட்டுமானம் எந்த அணுஆயுதத்திற்கும் கட்டுப்பட்டதாக இருக்காது. எந்த நாடுகளாலும் மிரட்டப்படும் அளவிற்கு சோர்ந்து நிற்காது.
அந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும், அச்சமின்றி உரிமையோடு தமது மண்ணிலே உலாவித் திரிவார்கள். அவர்களின் சிந்தனை, செயல்திறன் அனைத்தும் அந்த நாட்டை உறுதியாகவும், அமைதியாகவும், நிறைவாகவும் கட்டி அமைப்பதிலே செலுத்தப்படும். அந்த நாட்டு மக்கள் தமது மூதாதையரின் வரலாற்றிலிருந்து கற்றுக் கொண்டவைகளை, அவர்களிடம் கிடைத்த அறிவுக் கனிகளை தமது மக்களுக்கான வாழ்வியலாக மாற்றித் தருவார்கள். காரணம், அந்த மக்களை தலைவர் அப்படி உருவாக்குவார். ஆனால் இன்று உலகில் இருக்கும் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், அந்த நாட்டில் வறுமை, ஊழல், அறியாமை, அடிமைத்தனம் என மாந்தகுல விரோதப்பண்புகள் ஏராளமாக இறைந்து கிடக்கின்றன. இதை முற்றிலுமாய் அழித்தொழிக்க முடியுமா? என்ற சிந்தனை தலைமைத்துவம் கொண்ட யாருக்கும் எழாது. காரணம் அநீதி மாந்தத்திற் கெதிரான கோட்பாடு ஒருநாள் செத்து மடியும் என்பதை தலைவர் என்று சொல்லப்படுபவர்கள் நம்புவார்கள்.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் அந்த மக்களின் வாழ்வும் கட்டி அமைக்கப்படும். தமது நாட்டு தலைவரின் சிந்தனை, செயல் இவைகளின் மூலமே அந்நாட்டு மக்களும் தமது வளமான எதிர்காலத்தை தமது மகிழ்ச்சியான வாழ்வியலை அமைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள். ஒருகாலமும் இந்த முயற்சி தோல்வி அடைந்தது கிடையாது. இதற்கான வரலாற்று ஆதாரங்கள் ஏராளமாக இருக்கிறது. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதே அந்த நாடு எப்படி இருக்கும் என்பதற்கு அடிப்படையாகும். இயல்பாக தலைமைத்துவம் என்பது இயற்கையாக அமையக்கூடிய ஒரு பண்பு நலனாகும். தலைமைத்துவத்தில் சுயநலம் இருக்காது. அது முழுக்க முழுக்க பிறநலன் சார்ந்தே அமைக்கப்பட்டிருக்கும். அங்கே பழிவாங்கல் இருக்காது. இந்த தலைமை புகழை விரும்பாது. அவர்கள் ஒரே சொல்லில்தான் வாழ்வை அமைத்திருப்பார்கள். அது தமது மக்கள் நலன். அவர்களின் சிந்தனை ஒரே நேர்க்கோட்டில்தான் பயணிக்கும். அது தமது மக்களின் வாழ்வு. அவர்களின் செயல் ஒரே அடிப்படையில்தான் கட்டப்பட்டிருக்கும். அது தமது மக்களின் எதிர்கால மகிழ்ச்சி. இதிலிருந்து அவர்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள்.
இந்த நிலையை அடைவதற்காக தம்மை இழப்பதற்கு ஒவ்வொரு நொடியும் அவர்கள் தயாராக இருப்பார்கள். தாம் இழப்பதின் மூலம் தமது மக்கள் வாழ்வு சிறப்படைவதை அவர்கள் நேசிக்கிறார்கள். காரணம் தமது வாழ்வை விட, தமது மக்களின் வாழ்வு தான் அவர்களுக்கு மிக மிக முக்கியம். அவர்கள் இந்த மண்ணில் அதற்காகவே தோன்றியவர்கள். அதற்காகவே படைக்கப்பட்டவர்கள். அவர்கள் வித்துக்களாய் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மண்ணில் புதைந்து மரமாகும் வித்துக்களைப் போன்று, இவர்கள் பூமியில் நடந்து கொண்டே மகிழ்ச்சி தோட்டத்தை உருவாக்கும் மாண்புமிகு வித்துக்கள். இவர்களிடம் அச்சத்தை அடையாளம் காண முடியாது. இவர்கள் வீரத்தின் விளைநிலங்கள். இவர்கள் கோழைகளை வெறுக்கிறார்கள். காரணம், எந்த நிலையிலும் சொந்த மண்ணின் நலன் கோழைகளால்தான் அடகு வைக்கப்படும். அவர்கள் சுயநலக்காரர்களை அறுவடை செய்ய ஆசைப்படுகிறார்கள். ஏனென்றால் இந்த கலைகளால்தான் மொத்தப்பயிரும் நாசமாக்கப்படும். இவர்களால்தான் ஊழல், பித்தலாட்டம், பிறசொத்து அபகரிப்பு போன்ற தனிமனித விரோத செயல்கள் வேகமாக வளர்கிறது.
இவர்கள் கல்வியைக்கூட கடைவிரித்து விற்கும் கயவர்களாக வாழ்கிறார்கள். சொந்த மக்களின் வாழ்வைவிட, இவர்களின் சொத்து சேகரிப்பே லட்சியமாக இருக்கிறது. ஆகவே போதைப் பொருட்கள் விற்று, அதில் தாம் சுகபோகமாக வாழலாம் என்று நினைக்கும் அயோக்கிய தனத்தை தலைவர்கள் அறுவெறுக்கிறார்கள். இப்படிப்பட்ட அயோக்கியர்களை அவர்கள் அறுத்தெறிந்து அனலில்போடவே விரும்புவார்கள். சொந்த நலன் குறித்து இவர்களின் வாழ்வு எப்போதும் அமைந்தது கிடையாது. எந்த செயல் செய்தாலும் அதில் தமது சொந்த மக்கள் வாழ்வே அடங்கியிருக்கும். உண்பது, உறங்குவது, எழுவது என எந்த நிகழ்வும் தமது சொந்த மக்களை சார்ந்தே சிந்திக்கப்படுகிறது. இப்படி வாழ்பவர்களே தலைவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட முடியும். இவர்களே தலைவர்களாக எல்லா காலத்திலும் அடையாளம் காணப்படுகிறார்கள். தலைவர்களிடம் எளிமை செழித்தோங்கி இருக்கும். எங்கெல்லாம் எளிமை இருக்கிறதோ அங்கெல்லாம் ஏமாற்றுதல் இருக்காது. எங்கெல்லாம் எளிமை இருக்கிறதோ அங்கே உண்மை ஆட்சி செய்யும். உண்மைக்கும் நேர்மைக்கும் மிகப் பெரிய எதிரி ஆடம்பரம்தான்.
ஒரு தலைவன் எளிமையாக வாழ்கிறான் என்றால், அவன் உண்மையாக வாழ்கிறான் என்று பொருள் கொள்ளலாம். காரணம் உலக வரலாற்றில் அப்படி எளிமையாக வாழ்ந்தவர்களே இன்றுவரை தலைவர்களாக போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சீனத்திலே மிகச் சிறப்பான, ஆடம்பரமான, இம்பீரியல் மாளிகையை விட, மாவோவைத்தான் உலகத்தில்உள்ள எல்லா மக்களுக்கும் தெரியும். கிராம்லின் மாளிகையை விட, விளாதிமிரைத்தான் உலகம் நன்கு அறிந்திருக்கிறது. ஜெர்மானிய அறிவியல் படைப்புகளைவிட, மார்க்ஸைதான் உலக மக்கள் மனனம் செய்து வைத்திருக்கிறார்கள். 2000 ஆண்டுகளாக எந்த நிலையிலும் மக்கள் மனங்களிலிருந்து இறக்கி வைக்க முடியாத, உயிர் சொல்லாக இயேசு என்ற பெயர் வாழ்வதற்கு காரணம், இயேசுவிடமிருந்த எளிமைதான் என ஆய்வாளர்கள் அறிவிக்கிறார்கள். ஆக, எளிமையிலிருந்துதான் உண்மை உயிர்வாழ்கிறது. எளிமையிலிருந்துதான் நேர்மை நடைப்பழகுகிறது. எளிமை, நேர்மை, உண்மை இவை உற்றத் தோழர்கள். இது தலைமைத்துவத்தின் அடையாளம்.
ஆகவே ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, நாம் இந்த பண்புகளிலிருந்தே பாடத்தை கற்க முடியும். இதைவிட அடுத்த கட்டத்திற்கும் நாம் நகர்ந்து செல்லவேண்டுமென்றால், எந்த ஒரு தலைவனும் எல்லா நேரத்திலும் பசியோடு வாழ வேண்டும். அது, ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும், புதியப்புதிய கோட்பாடுகளை கற்றுக் கொள்ளும் பசியாக, தாம் கற்றுக் கொள்வதிலிருந்து கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு தமது மக்களை மீட்டெடுக்கும் பசியாக, ஒவ்வொரு நடவடிக்கையும் தமது மக்களுக்கான புதிய வாழ்வை உண்டாக்கித்தரும் பசியாக அது அமைந்திருக்க வேண்டும். இது ஒரு தலைவனுக்கே உரிய மாபெரும் பண்பு. அப்படி பசித்துவாழும் தலைமைத்துவம் செழித்திருக்கும். பசி என்பது தமது மக்களை உயரிய நிலைக்கு அழைத்துச் செல்லும்வரை அடங்கக்கூடாது. அது மேலும் மேலும் அகோரப் பசியாக உருவெடுக்க வேண்டும். அந்த பசி தமது மக்களின் உன்னத வாழ்வை உயர்த்திப்பிடிக்க வேண்டும்.
இப்படி பசியோடு வாழும் ஒரு தலைவனுக்கும், அந்த நாட்டிற்கு பெரும் பேராக கருதப்படும். ஆனால் தமது பசி தீர்த்துக் கொண்டு சொந்த மக்களை சுரண்டி கொழுப்பதென்பது தலைமைத்துவம் அல்ல. அது அயோக்கியத்தனம். அதேப்போன்று ஒரு தலைவன் தனித்திருக்க வேண்டும். அவனுடைய தனித்தன்மை சொந்த செயலில் அல்ல, தமது உயிராதாரமே அந்த தனித்தன்மையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். உலகமே வியந்து அன்னார்ந்து பார்க்கும் ஆற்றலை அந்த தனித்திருப்பது வெளிப்படுத்தும். அந்த தனித்திருப்பதின் உட்பொருள் உலகிற்கு அல்ல. தமது சொந்த மக்களுக்கே விளங்குமாறு அமைந்திருப்பது அவசியமாகும். தமது சொந்த மக்களை காப்பாற்ற கருவி தரித்து களம் வந்தாலும், களைப்படையாமல் இறுதிவரை நின்று போராடும் அந்த குணம், தமது மக்களைக் காக்கும் படைக்கருவிகளை புதிது புதிதாக படைத்தளிக்கும் அந்த ஆற்றல் உலகிற்கே போர் யுத்திக்களை போதிக்கும் விடுதலைக் கொண்ட திறன் இவை தனித்திருப்பதின் அடையாளத்தை வெளிப்படுத்தும்.
எப்போது ஒரு தலைவன் இந்த உலக சம்பிரதாயங்களைவிட்டு, இந்த நடைமுறைகளை ஒத்தி வைத்துவிட்டு, தனக்கான ஒரு புதிய பண்பாட்டமைப்பை, தனக்கான ஒரு புதிய தத்துவத்தை, தமது மக்களின் விடுதலைக்காக படைத்தளித்து, கோடிக்கணக்கான தலைவர்களிலிருந்து தனித்து தெரிகிறானோ, அப்போதே தலைமைத்துவம் என்பது அந்த தலைவனுக்குள் எரிதழலாய் எரியத் தொடங்கிவிடும். அந்த வெளிச்சம் நமது மக்களின் வாழ்வின் இருளை விரட்டியடிக்கும் ஆத்ம சுடராக உலகம் அறிவிக்கும். அந்த தனித்திருப்பதின் அடையாளத்தை, தனித்துவத்தின் பண்பை தலைவனும் புரிந்து கொள்ள வேண்டும். தலைவனின் வாழ்க்கையைப் பார்த்து தமது மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி தனித்திருப்பதின் உட்பொருள் இங்கே வரலாறாய் பதிவு செய்யப்படும். ஆயிரம் ஆண்டுகளானாலும் இதிலிருந்து ஒரே எழுத்தைக்கூட எவராலும் மாற்றி இருக்க முடியாது. இவர்கள் தனித்திருப்பது தமது மக்களின் வாழ்வுக்காக.
அதேபோன்று அவர்கள் விழித்திருக்க வேண்டும். எந்த ஒரு தலைவனாக இருந்தாலும், எந்த நிலையிலும் விழிப்பாய் இருப்பது அடிப்படையில் அவசியமாகும். இந்த விழிப்பு தமது மக்களை காக்கும் பண்பு. இந்த விழிப்பு தமது மக்களின் எதிர்காலத்திற்கான கட்டமைப்பு. இந்த விழிப்பு தான், தமது மக்களின் மகிழ்ச்சியை உருவாக்கும் காரணி. ஆகவே எந்த தலைவனாக இருந்தாலும், அவன் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது அவனுக்குள் விதைக்கப்பட்ட நியதி. இந்த தலைமைத்துவம் கொண்டவர்களே வரலாற்றால் நேசித்து, அரவணைக்கப்படுகிறார்கள். இயற்கை இவர்களை தாலாட்டி வளர்த்திருக்கிறது. காற்றும் பனியும் இவர்களை நேர்த்தியாய் போஷித்து பாதுகாக்கிறது. ஆகவே இவர்களின் விழிப்பு என்பது தமது சொந்த மக்களின் எதிர்கால வாழ்வுக்கான அறப்பணியாகும். எந்த தலைவனும் விழித்திருப்பதிலிருந்து தவறும்போது, சொந்த மக்களை துயரத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள்.
இன்று உலக வரலாற்றில் பல நாடுகள் போர் களங்களிலே சொந்த மக்களை பலிக் கொடுப்பதும், இயற்கையான நீர்வளத்தை காத்துக் கொள்வது முடியாமல் போவதும் ஏன் நிகழ்கிறது? அங்கே உள்ள தலைவர்களுக்கு தலைமைத்துவம் இல்லை. அவர்களுக்குள் விழிப்பு இல்லை. சொந்த மக்களின் நலன் குறித்த சிந்தனை இல்லை. ஒரு தலைவன் பசித்திருக்க வேண்டும், தனித்திருக்க வேண்டும், விழித்திருக்க வேண்டும். ஆக இந்த மூன்று வார்த்தைகளின் முதல் எழுத்துக்களே பதவி என்ற பண்பை படைத்தளிக்கிறது. பதவியைத் தாம் தாங்கி நிற்கும்போது, அவன் மேற்கண்ட மூன்று பண்புகளை உள்ளடக்கியவனாக இருக்க வேண்டும். இந்த உள்ளடக்கம் நாம் வாழும் நிகழ்காலத்திலேயே காணக்கூடிய அறிய வாய்ப்பை பெற்றிருக்கிறோம். சொந்த மக்களின் நலனுக்காய் பதவி என்ற அந்த பண்பை சிறப்பாக செயல்படுத்திய ஆற்றல் வாய்ந்த தலைவன் எமது தேசியத்தலைவன். அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும், சொல்லும், செயலும் புன்னகையோடுக்கூடிய அந்த முகத்தில் புதைந்திருக்கும் சிந்தனையும், சொந்த மக்கள் நலன் சார்ந்தே களத்தில் இருந்தது.
உயிரெழுத்தின் கடைசி எழுத்தான ஆயுத எழுத்தைப்போல, சொந்த மக்களின் உயிர்வாழ்வுக்காக கடைசியாகத்தான் அவர் கருவி ஏந்தினார். அந்த கருவி ஏந்திய போராட்டம்கூட, மக்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பானதாக இருக்கத்தானே ஒழிய, தம்மைக் காத்துக்கொள்ள அல்ல என்பதை காலம் பதிவு செய்து வைத்திருக்கிறது. அந்த தலைவனின் லட்சிய பாதைத்தான் இன விடுதலைக்கான பாதை. உலகத்தின் தமிழர்கள் இதுவரை சிந்திக்காத ஒரு நிலையை எமது தலைவன் சிந்தித்தான். அந்த தலைவன் சிந்தித்ததின் வெளிப்பாடுதான் தமிழீழம் என்கின்ற உலகத்தமிழர்களின் அடையாளம்.ஆகவே தலைவரின் பாதை என்பது தமிழர்களின் பாதையாகும். அந்த பாதையே உலகத் தமிழர்களுக்கு உன்னதத்தையும் உண்மையான மகிழ்ச்சியையும், உரிமையோடு வாழக்கூடிய அடிப்படையையும் அளிக்கும். அணித்திரள்வோம். அந்தப் பாதைத்தான் நமது பாதை.
No comments:
Post a Comment