புளொட் தலைவர் த.சித்தார்த்தனுடன் தீபச்செல்வன் நடத்திய உரையாடல்
தம்பி இப்படி ஏன் செய்தான்? என்று தெரியவில்லை என்று குறிப்பிடும் புளொட் (PLOTE) அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மே 17 ற்கு பிறகு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை கூறுகிறார். ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட சூழலில் இன்றைய காலச் சூழலின் தேவையை உணர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்ட தீர்வை நோக்கி நகர இணைந்து செயற்பட தயாராக உள்ளதாகக் குறிப்படும் சித்தார்த்தனை வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சந்திந்து இந்த உரையாடலை நிகழ்த்தினேன்.
தீபச்செல்வன் : தமிழ் மக்களின அரசியலில் ஒன்றிணைவது என்பது மிக முக்கியமான விடயமாயிருக்கிறது. ஆரம்ப காலம் முதல் மிக முக்கிமான விடயமாக இருந்த பொழுதும் மே 17 ன் பின்னர் அதற்கான பல அவசியங்கள் எழுந்துள்ளன. ஆனால் தொடர்ந்தும் ஒன்றிணைதல் நிறைவேறாமலிருக்கிறது. நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இம்முறை பாராளமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக செய்திகள் வந்திருந்தன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் நான் உரையாடும் பொழுது நீங்கள் இறுதி வரை இணைவதாக குறிப்பிட்ட பொழுதும் பின்னர் இணையவில்லை என்று குறிப்பிட்டார். நீங்கள் ஏன் அவ்வாறு இணைந்து போட்டியிடவில்லை?
புளொட் தலைவர் சித்தார்த்தன் : மே 17 எமது ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டு விட்டது. தமிழ் மக்களின் அரசியலைப் பொறுத்தவரை மே 17க்கு முன்னர், மே 17 ற்கு பின்னர் என இரண்டு பிரிவுகளாக பிரித்து பார்க்க வேண்டி உள்ளது. அதற்கு முன்பு நடந்தவற்றை இப்பொழுது அப்படியே விட்டு விட்டு இனி நடக்க வேண்டியவற்றைப் பார்க்க வேண்டும். இந்த யுத்த்தில் ஆயிரக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டடு லட்சக் கணக்காண மக்கள் இடம்பெயர்ந்து இருக்கிறார்கள். இதனால் இந்தப் போராட்டத்தை தொடங்கிய எல்லோருக்குமே ஒன்றுபட வேண்டிய கடப்பாடு இருப்பதை நான் பல தடைவ கேட்டிருக்கிறேன். இதற்காக எல்லாவற்றையும் விட்டு நான் வருவதற்கு தயாராக இருக்கிறேன். இந்த இடத்தில் அவர்களிடம் நான் ஒன்றை குறிப்பிட்டேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை மாற்ற வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றால் தென்பகுதியில் ஒத்துக்கொள்ளாத தன்மை உள்ளது. அதனால் இந்தப் பெயரை நாம் மாற்ற வேண்டும் என்று கேட்டேன்.
இனி ஈழம் என்ற கோரிக்கை சாத்தியப்படாது. ஓன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வைத்தான் நாங்கள் எல்லோரும் கேட்கிறோம். அதை நாங்கள் ஒன்றிணைந்து கேட்க வேண்டும். கடந்த காலத்தில் சரத் பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்த பொழுது அது தெற்கில் வேறு அர்த்தத்தை கொடுத்து இறுதிவரை சரத் பொன்சேகாதான் ஜனாதிபதி என்ற நிலையிருந்து பின்னர் இறுதியில் 18 லட்சத்திற்கு மேற்பட்ட பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மகிந்த ஜனாதிபதியானார். தெற்கை எதிர்கொள்ள சமாளிக்க இந்த மாற்றயங்களை நாம் செய்ய வேண்டி உள்ளது.
சம்பந்தன் ஐயா என்னை வந்து தங்களுடன்தான் கேட்க வேண்டும் எனக் கேட்டார். நானும் அதற்கு சம்மதித்திருந்தேன். புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள் எல்லாம் விலக்கப்பட்டார்கள். அந்த இடங்களுக்கு இவ்வளவு காலமும் போராட்டத்துடன் நின்ற சிலருக்கு ஆசனங்களைக் கேட்டிருந்தோம். அவர்கள் தந்திருக்கலாம். இது பற்றி செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடம் நான் தெளிவாக சொல்லியிருந்தேன். அவர் பேசி விட்டு சொல்லுவதாக சென்றார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு பொது இணக்கத்திறகு வர முயற்சி செய்தோம். ஆனால் எல்லா கட்சிகளும் முற்று முழுதாக தேர்தல் ஒப்பந்தம் ஒன்றையே செய்து கொண்டன. அத்தோடு தத்தமது கட்சிகளின் நலன்களை பார்க்கும் பொழுது நாங்கள் எங்கள் கட்சியின் நலனை பார்க்க வேண்டியிருந்தது. மற்றும்படி ஒன்றிணைந்து செயற்படுவதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. பொதுவான வேலைத் திட்டத்திற்கு உரியவர்களை விண்ணப்பிக்கும்படி கேட்டு அவர்களை நேர்காணல் ஊடாக நியமனம் கொடுத்திருக்கலாம். இறுதி வரை நாங்கள் அவர்களது பதிலுக்கு காத்திருந்தோம். செல்வம் அடைக்கலநாதன் எங்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை அதனால் நாங்கள் இறுதி நேரத்திலேதான் இப்படி போட்டியிடுவது என தீர்மானித்தோம்.
தீபச்செல்வன்: இந்த தேர்தலின் பிறகு தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நீங்கள் இணைந்து செயற்படுவீர்களா?
புளொட் தலைவர் சித்தார்த்தன்: தேர்தலின் பிறகு நாங்கள் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறோம். இந்திய நிருபமா எங்களை சந்திக்கும் பொழுது ஒரு விடயத்தை சொல்லியிருந்தார். நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொரு தீர்வுகளை முன் வைக்கிறீர்கள். அதை விடுத்து நீங்கள் எல்லோரும் சேர்ந்து நியாயமான தீர்வை முன்வைத்தால் நாங்கள் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதை நிறைவேற்றித் தருவோம் என்று அவர் குறிப்பிட்டார். அவருக்கு நாங்கள் இந்தத் தேர்தலில் இணைய முடியாத நிலையிருப்பதை சொல்லிய அதேவேளை தேர்தலின் பிறகு நாங்கள் இணைந்து செயற்படுவோம் என்று சொன்னோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக ஒரு தீர்வை நோக்கிச செல்லும் அதேவேளை இப்பொழுது தேவைப்படுபவற்றை ஆரம்ப கட்டமாக செய்ய இணைந்து செயற்பட தயராக உள்ளோம்.
தீபச்செல்வன் : அவசரகாலச்சட்டம் முதல் இன அழிப்பு, யுத்தம், வன்முறை என்று எல்லாமே நடந்தேறிக் கொண்டிருந்தபொழுது நீங்கள் அரசாங்கத்தில் இணைந்திருந்தீர்கள் அல்லது அரசாங்கத்துடன் சேர்ந்து இருந்தீர்கள். ஆதரவளித்தீர்கள். இவற்றை தடுக்க ஏன் உங்களால் முடியாமல் இருந்தது?
புளொட் தலைவர் சித்தார்த்தன்: நான் 2001 ற்கு பிறகு பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. நான் அவசரகாலச் சட்டத்தை ஆதரிக்கவில்லை. நாங்கள் இந்த அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலின் பொழுது நாங்கள் மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்தோம். கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரித்தது. இரண்டுமே ஒரே நிலைப்பாடுதான். இரண்டுமே ஒன்றுதான். நாங்கள் மகிந்தவை ஆதரிக்கும் பொழுதே இதை மிகத் தெளிவாக சொல்லியிருந்தோம். இவர்கள் இரண்டு பேருமே தமிழ் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவோ தீர்க்கவோ மாட்டார்கள் என்று சொல்லியிருந்தேன்.
ஆனால் நான் மகிந்த ராஜபக்ஷவைக் கேட்டிருந்தேன் ஏன் இந்த மக்களை தடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று? அப்பொழுது பலருமே சொன்னார்கள் இந்த மக்களை பல வருடங்களுக்கு தடுத்து வைத்திருப்பார்கள் என்று. மகிந்த எங்கள் கட்சியிடம் ஆறு மாதங்களுக்குள் அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்று சொன்னார். அடுத்து 12 ஆயிரம் சிறுவர்களை தடுத்து வைத்திருப்பது பற்றியும் எடுத்துச் சொன்னோம். 87கள் உட்பட ஜே.வி.பி போராட்டத்தில் சிறைவைக்கப்பட்ட சிறுவர்களை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டது போல அவர்களையும் விடுவிக்க வேண்டும். இவர்களை தடுத்து வைப்பதில் நியாயமில்லை என்று சொன்னோம். சொன்னோம் என்பதை விட அவர்களை விடுதலை செய் என்பதை நாங்கள் ஒரு கோரிக்கையாக வைத்தோம். அவர்களை படிப்படியாக நாங்கள் விடுதலை செய்வோம் என்று மகிந்த குறிப்பிட்டார்.
இதில் இன்னொரு விடயத்தையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். புலம்பெயர் தமிழர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிந்தவுக்கு வசதியான செயற்பாடுகளைச செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு கடல் கடந்த தமிழீழம் - நாடு கடந்த தமிழீழம் - வட்டுக் கோட்டை தீர்மானம் என்று சொல்லிக் கொண்டிருக்க இங்கு மகிந்த இங்கு ‘புலிகள் மீண்டும் உருவாகி விடுவார்கள்’ என்று அவர்களை விடுதலை செய்ய பின்னடிக்கிறார். இது வெளி நாட்டில் உள்ளவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. அவர்களுக்கு இங்குள்ள மக்களின் நிலமைகளை சரியாகத் தெரியும். இங்குள்ள போராட்டத்தின் நிலை தெரியும். அவர்கள் தாங்கள் எதையாவது செய்ய வேண்டும் என்பதிற்காக செய்கிறார்கள். அவர்கள் இந்த மக்களுக்கு எத்தனையோ விதத்தில் உதவிகளைச் செய்ய முடியும். தேவையான அதிகாரப் பரவலாககம் சம்பந்தமான பல வேலைகளைச் செய்யலாம். அழுத்தங்களைக் கொடுக்கலாம்.
இது மகிந்தவுக்கு வசதியை அமைத்து கொடுக்கின்றது. சிறார்களுக்கு புனர்வாழ்வு கொடுக்கிறோம் என்று மகிந்த சொல்லும் பொழுது சிறார்களுக்கு புனர்வாழ்வை பெற்றோர்களால் தான் கொடுக்க முடியும் என்று நான் குறிப்பிட்டேன். இன்று அரச கட்சியில் போட்டியிடும் கனகரத்தினம் போன்றவர்கள் அவர்களை விதலை செய்வதற்காக என்று கூறி விண்ணப்ப படிவம் நிரப்புகிறார்கள். அரச கட்சியில் போட்டியிடுபவர்கள் ஏன் விண்ணப்ப படிவம் நிரப்ப வேண்டும்? இங்கு இவர்களது தேர்தலுக்காக அந்த மக்களின் வேதனைகள் எல்லாம் பாவிக்கப்படுகிறது. நாங்கள் படிப்படியாக அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறோம். ஆனால் முதலில் பலவந்தமாக சேர்க்கப்பட்டவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டிருந்தோம்.
உலகம் முழுவதிலும் யுத்தம் முடிந்தவுடன் ஒரு சமாதானம் எதிர்பார்க்கப்படும். எனவே இப்படியான விடயங்களுக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்திருக்கிறோம். தேர்தலின் பிறகும் நாங்கள் இதற்காக அழுத்தங்களைக் கொடுப்போம்.
தீபச்செல்வன் : இப்படி அரசாங்கத்துடன் சேர்ந்திருக்கும் பொழுது எதை உங்களால் சாதிக்க முடிந்தது?
புளொட் தலைவர் சித்தார்த்தன்: 1990 ம் ஆண்டு நாங்கள் எப்படி நாங்கள் அரசாங்கத்துடன் சேர வேண்டி வந்தது என்று குறிப்பிட வேண்டும். 90 ல் முள்ளிவாய்க்காலைப் போலத்தான் வவுனியா இருந்தது. தாண்டிக் குளத்திற்கு அப்பால் மக்கள் தள்ளப்பட்டிருந்தார்கள். இந்திய இராணுவக் காலமான அப்பொழுது நாங்கள் எல்லாவற்றிலிருந்தும் விலகியே இருந்தோம். கொழும்பிலும் மலைநாட்டிலும் என்று எங்கள் பாதுகாப்பிற்காக பிரிந்திருந்தோம். அப்பொழுது வவுனியா அச்சமான சூழலுடன் இருந்தது. நாங்கள் ஓமந்தைக்குச் சென்று வெள்ளைக்கொடி காட்டி மக்களை கூட்டி வந்தோம். நாங்கள் அன்று இதில் ஒதுங்கி இருந்திருந்தால் இது ஒரு தமிழ் பகுதி இல்லாமல் போயிருக்கும். அம்பாறையாக அல்லது திருகோணமலையாக மாற்றுவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டது.
வன்னியில் இன்று மக்கள் வாழ்வதாக இருந்தால் இராணுவத்தின் மத்தியில்தான் வாழ வேண்டும். அதுபோலத்தான் வவுனியா மக்களுக்கும் அந்த நிலை ஏற்பட்டது. அதற்காக இந்த மக்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து விடுவதா? நாங்களும் அப்படித்தான். விடுதலைப் புலிகளுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்சினைகளும் பிறகு இருக்கவில்லை. எங்களை விட மிக அதிகமாக இந்திய இராணுவக் காலத்தில் விடுதலைப் புலிகள் இராணுவத்தினருடன் வேலை செய்திருக்கிறார்கள்.
நாங்கள் அழிவுதான் போராட்டம் என்று பார்க்கவில்லை. எமது மக்களின் அவலங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது. அரசைப் பொறுத்தவரை எங்கு எதிர்க்க வேண்டுமே அங்கு எதிர்த்துத்தான் இருக்கிறோம். வவுனியாவில் இராணுவ முகாங்களை அமைத்து அதைச் சுற்றி மக்களை குடியமர்த்த இராணுவம் இடமளிக்காத பொழுது அதை எதிர்த்து அங்கு மக்களை குடியமர்த்தியிருக்கிறோம். நாங்கள் இல்லாவிட்டால் இங்கு பல குடியிருப்புகள் இல்லாமல் போயிருக்கும். எங்கள் மக்கள் வாழ வேண்டும். வாழத்தானே நாங்கள் போராட்டம் தொடங்கியிருந்தோம். அரசாங்கத்தத்துடன் சேர்ந்திருப்பதாக நீங்கள் கேட்கிறீர்கள் ஆனாலும் நாங்கள் சரியாகத்தான் பயணிக்கிறோம் என நினைக்கிறோம்.
அப்பொழுது நாங்கள் சந்திரிகாவுடன் கதைத்து செய்ய வேண்டியதைச் செய்தோம். இப்பொழுது ஒரு விடயமாக இருந்தால் மகிந்தவுடன் கதைத்து அதை நாங்கள் செய்வோம். ஏனென்றால் விரும்பியோ விரும்பாமலே மகிந்ததான் இந்த நாட்டின் ஜனாதிபதி.
தீபச்செல்வன் : இந்தத் தேர்தலில் சுயாட்சி, ஜனநாயகம், அபிவிருத்தி என்பவற்றை உங்கள் நோக்குகளாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். யுத்தம் முடிந்த சூழலில் ஜனநாயகம் உன்மையிலே ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட முடியுமா? நீங்கள் குறிப்பிடும் சுயாட்சி என்பது எத்தகையது?
புளொட் தலைவர் சித்தார்த்தன்: அபிவிருத்தி என்பது எமது மக்களுக்கு நீண்டகாலமாக தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது. எமக்கு இதுவரை எந்த அபிவிருத்தியும் நடைபெறவில்லை. எனவே அதை எங்கள் நோக்கில் ஒன்றாக கொள்கிறோம். யுத்தம் முடிந்த பிறகு ஓரளவு ஜனநாயகம் ஏற்பட்டிருக்கிறது. இதை நான் வெளியில் செல்லும் இடங்ககளில் பார்த்திருக்கிறேன். மக்கள் முன்பை விட பேசுவதற்கு துணிகின்றார்கள். ஆனால் முழுமையான உண்மையான ஜனநாயகம் ஒன்றை நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாங்கள் நாடாளுமன்றத்தில் எமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம். சுயாட்சி என்பது வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தங்கள் அலுவல்களை தாங்களே பார்த்துக் கொள்ளக்கூடிய அதிகார பரவலாக்கத்தை பெற்றுக்கொள்ளுவதைக் குறிக்கிறது. அதனையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
தீபச்செல்வன் : வடக்கு கிழக்கு இணைப்பை கை விடுவது அல்லது அது பற்றி பேசுவது என்பது தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கியமான நிலைப்பாடுகளாக மாறியிருக்கின்றன. இந்த விடயம் தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன?
புளொட் தலைவர் சித்தார்த்தன்: வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீக தாயகம். அதை யாரும் மறுக்க முடியாது. அது எப்பொழுதும் ஒன்றாகவே இணைந்திருக்கிறது. அதை யாரும் பிரிக்க முடியாது. நிர்வாக ரீதியாக பிரித்திருக்கிறார்கள். சட்ட ரீதியாக நீதிமன்ற ஆணை முலம் பிரித்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கு இணைந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்பது தமிழ் மக்கள் எல்லோரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. ஆனால் வடக்கு கிழக்கை இணைப்பது பற்றி வடக்கில் இருந்து குரல்கள் வருவதைவிட கிழக்கில் இருந்தே இனி வர வேண்டும். சில முஸ்லீம் மக்கள் இதை மறுக்கலாம். கடந்த காலச் செயற்பாடுகள் இதில் முக்கிய தாக்கத்தை செலுத்துகின்றன. அதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். எனவே வடக்கு கிழக்கை இணைப்பது தொடர்பாக வடக்கில் இருந்து நிறைய குரல்கள் வந்து விட்டன. இனி கிழக்கிலிருந்தே அதற்கான குரல்கள் வர வேண்டும். நாங்கள் இருசாராரும் இணைந்து குரல் கொடுப்பதன் மூலம் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை இணைக்க முடியும் என்று நம்புகிறேன்.
தீபச்செல்வன் : விடுதலைப் புலிகள் இருக்கும் பொழுது நீங்கள் ஆயுதங்களை வைத்திருந்தீர்கள். அது உங்கள் பாதுகாப்பிற்கு அவசியம் எனக் கூறப்பட்டது. இப்பொழுது விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில் ஆயுதங்களை நீங்கள் கையளிக்கலாம் அல்லவா? கிழக்கில் யுத்தத்தின் பின்னர் உருவாகிய நிலமைகளைப்போல வடக்கில் ஏற்படாமல் தவிர்க்க இது உதவலாம். அதன் மூலம் ஜனநாயகத்தை மேலும் நீங்கள் வலியுறுத்தலாம் அல்லவா?
புளொட் தலைவர் சித்தார்த்தன்: நீங்கள் சொல்லுவதை நாங்கள் முற்று முழுதாக ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் இப்பொழுது எந்த ஆயுதங்களையும் பயன்படுத்துவதில்லை. எங்கள் அலுவலகத்தில் ஆயுதங்களுடன் யாரும் திரிவதை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் இப்பொழுது வெளியில் எந்த ஆயுதங்களுடனும் செல்வதில்லை. காவல்துறையினர் இங்கு பாதுகாப்பில் பணி புரிகிறார்கள். அவர்களைத் தவிர எனக்கு எந்த ஆயுதப் பாதுகாப்பும் இல்லை. ஏனென்னறால் ஆயுதச் சூழலற்ற ஜனநாயகச் சூழலே எங்களுக்கு தேவைப்படுகின்றது. அதை நான் வலியுறுத்துகிறேன்.
தீபச்செல்வன்: தேர்தல் பிரசாரங்களின் பொழுது உங்களுக்கு வாக்களிக்காது விட்டாலும் சில தமிழ் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும் என உங்கள் வேட்பாளர்கள் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது. எதற்காக அப்படி சொல்லுகிறீர்கள்?
புளொட் தலைவர் சித்தார்த்தன்: தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக பல சுயேச்சைக் குழுக்கள் அரசால் இறக்கப்பட்டுள்ளன. அதற்காக அரசாங்கம் பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. எங்களுக்கு வாக்களிக்காது விட்டாலும் அவைகளுக்கும் அரசின் தூண்டுதலில் போட்டியிடும் கட்சிகளுக்கும் வாக்களிக்காமல் போட்டியிடும் தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். வவுனியாவில் வன்னி அகதி மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிவாரணப் பொருட்களை தேர்தல் கால பண்டமாக ரிஷாத் பயன்படுத்துகிறார். அது அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டி நிவாரணம். வவுனியாவில் உள்ள முஸ்லீம் மக்களின் வாக்குகளின் விகிதத்தின்படி அவர்களுக்கு ஒரு ஆசனம் இருக்கிறது. அதை விடுத்து தமிழ் மக்களின் ஆசனங்களை பறிக்கும் நோக்கத்துடன் இப்படியான செயற்பாடுகள் நடக்கின்றன. இதனால் நாம் மக்களுக்கு இப்படிச் சொல்லியிருக்கிறோம்.
நேர்காணல் : தீபச்செல்வன்
No comments:
Post a Comment