"ராஜபக்ஷவின் நிர்வாகமானது தமிழ் மக்களைச் சென்றடைய வேண்டியது முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். உண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சமீபத்தில் அவர் (ராஜபக்ஷ) விஜயம் மேற்கொண்டிருந்தார் என்று அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியாவுக்குப் பொறுப்பான உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
நம்பிக்கையான எதிர்காலத்துடன் தாங்கள் வாழப்போகிறார்கள் என்று அவர்கள் (தமிழர்கள்) கருதுவது மிக முக்கியமானதாகும். இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 1 இலட்சம் பேர் தற்போதும் முகாம்களில் உள்ளனர். அவர்கள் தமது வீடுகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பிளேக் கூறியுள்ளார்.
இந்த விடயங்கள் யாவும் வென்றெடுக்கப்பட்டால் மனித உரிமைகளுக்கு அதிகளவில் மதிப்பளிப்பதாக அமையும். அத்துடன் கடந்த கால உரிமை மீறல்கள் தொடர்பாக பதிலளிக்கும் கடப்பாடுகள் சில இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இவை யாவும் நான் கூறும் இந்த நல்லிணக்கம் தொடர்பாக விடயங்களைக் கையாள்வதில் பாரியளவுக்குப் பங்களிப்பைச் செலுத்தும் என்று நினைக்கிறேன் என்றும் பிளேக் தெரிவித்திருக்கிறார்.
நாட்டில் சமாதானம் ஏற்படுமென உண்மையான எதிர்பார்ப்பைத் தான் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். "இப்போது உண்மையான வாய்ப்புக்கிட்டியிருப்பதாக நான் நினைக்கிறேன். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி எப்போதும் கூறியிருந்தார். அவ்வாறு பெற்றுக்கொள்வதானது இலங்கையின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கு அவருக்கு இடமளிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதில் தான் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக அவர் (ராஜபக்ஷ) கூறியுள்ளார். இந்த 13 ஆவது திருத்தமானது மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும். வடமாகாணம் உட்பட மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாக அது அமையும்.
நல்லிணக்கம் தொடர்பாக எப்போதும் அவர் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக நான் நினைக்கிறேன். அதனை இப்போது முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.
அதேசமயம் இலங்கை சட்டத்தின் பிரகாரம் பொன்சேகா மீது நடவடிக்கை எடுக்கப்படுமென தான் எதிர்பார்ப்பதாகவும் பிளேக் கூறியுள்ளார்.
இலங்கையில் குடும்ப செல்வாக்கு அதிகரித்து வருவது தொடர்பாக அவர் கவலைப்படுகிறாரா என்று கேட்கப்பட்டபோது நாட்டில் இந்த மாதிரியான குடும்ப அலுவல்கள் இருந்து வருவது நீண்டகால பாரம்பரியமாக இருப்பதாக பிளேக் கூறியுள்ளார்.
"ராஜபக்ஷவுக்கு முன்னர் பண்டாரநாயக்காக்கள் மற்றும் பல குடும்பங்கள் இந்த மாதிரியான தன்மையில் இருந்துள்ளன. இலங்கை விடயத்தில் இது அசாதாரணமானதொன்றல்ல என்று நான் நினைக்கிறேன்.
தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் இடம்பெற்றது என்பது தொடர்பாக அதாவது நீதியான முறையில் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது என்ற அபிப்பிராயத்தை இலங்கை மக்கள் கொண்டிருக்க வேண்டும் என்று பிளேக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment