புதுமாத்தளன் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளிலிருந்து ராணுவத்தால் சேகரிக்கப்பட்ட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிதிவண்டிகளும் இருநூறுக்கும் மேற்பட்ட உந்துருளிகளும் [Bicycles & Motorcycles] பழுதுகள் திருத்தப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக கடந்த வாரம் கிளிநொச்சிக்கு அனுப்பப்பட்டது.
புதுமாத்தளன் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளிலிருந்து வந்து கொண்டிருக்கும் இவ் உருளிகளை பாதுகாப்பதற்காக 8 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு துப்பரவாக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் G.A. சந்திரசிறி கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,
நாளொன்றுக்கு ஆறு பார ஊர்திகளில் சுமார் 500 மிதிவண்டிகள் வந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் 25000 - 30000 மிதிவண்டிகளும் 10000 உந்துருளிகளும் கிளிநொச்சிக்கு வந்து சேரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வண்டிகளின் உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களை காண்பித்து அவற்றை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இதற்காக கிளிநொச்சி காவல் நிலையத்தில் புகார் செய்து தகுந்த ஆவணங்களை காண்பிக்கும் பட்சத்தில் உரியவர்களிடம் வண்டி ஒப்படைக்கப்படும் என்று மேலும் கூறினார்.
போரின் போது கிளிநொச்சியில் இருந்த பெரும்பான்மையான உந்துருளிகள் நல்ல நிலையிலேயே இருப்பதாகவும் மிதிவண்டிகள் சிறிது பழுதுடன் காணப்படுவதாகவும் இலவசமாக இவற்றினை திருத்தம் செய்து வண்டி உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment