Saturday, April 24, 2010

பெண்கள் விடுதலை பெற்று வருவதற்கு விடுதலைப் புலிகளே காரணம்!:- இன்டர் பிறஸ்.

பழமைவாதக் கருத்துக்கள் மற்றும் பாரம்பரியமாக இருந்து வரும் கட்டுப்பாடுகளிலில் இருந்தும் யாழ்ப்பாணப் பெண்கள் சிறிது சிறிதாக விடுதலை பெற்று வருவதாக Inter Press Service IPS தெரிவித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போர் தமிழ் பெண்களில் ஏற்படுத்திய பாதிப்புக்கள் குறித்து சர்வதேச செய்தி நிறுவனங்களில் ஒன்றான இவ்வூடகத்தின் செய்தியாளர் Feizal Samath மனித உரிமைகளுக்கான இல்லத்தின் (Home for Human Rights) பணிப்பாளரான Shereen Xavier ஐச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஈழத்தமிழர்கள் விடுதலை பெறுவதற்காக நடாத்தப்பட்ட போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்திருந்தாலும், பெண் என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என காலாதி காலமாக இருந்து வரும் கட்டுப்பாடுகளைக் கடந்து யாழ்ப்பாணப் பெண்கள் தமக்கான புதிய வாய்ப்புக்களையும், வழிகளையும் தேடுவதற்கு விடுதலைப் புலிகளுக்கே நன்றி தெரிவிக்க வேண்டும் என Shereen Xavier கூறியதாக இச்செய்திக் கட்டுரை தெரிவித்துள்ளது. இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட முக்கியமான விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம். இதனைவிட, தமக்கு தனிப்பட்ட ரீதியில் ஏற்பட்ட துன்பங்கள் காரணமாகவும் யாழ்ப்பாணப் பெண்கள் சமூக ரீதியான கட்டுப்பாடுகளைக் கடந்து தமக்கான புதிய வாய்ப்புக்களைத் தேடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். போரின் காரணமாக தங்களது கணவன்மாரை இழந்துள்ள ஆயிரக்கணக்கான பெண்களும் இதற்குள் அடங்கியுள்ளனர். சிறிலங்காப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நடைபெற்ற வேளையில் யாழ் குடாநாட்டிலும், ஏனைய பிரசேங்களிலும் பெண்கள் முதன்மையான பங்கினை வகிக்க வேண்டியிருந்ததாக Shereen Xavier தெரிவிக்கின்றார். தமது கணவன்மார் உயிருடன் இருந்தாலும் குறித்த சில குடும்பப் பெண்கள் முதன்மையான பங்கினை வகிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். போர் நடைபெற்ற காலப்பகுதியில் தனக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலின் காரணமாக ஆண் வெளியில் செல்ல முடியாத நிலையில் இருந்ததால், குடும்பத்திற்குத் தேவையான வெளி வேலைகளைச் செய்ய வேண்டிய நிலைக்குப் பெண்கள் சூழல் காரணமாக நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். போர் இடம்பெற்ற காலங்களில் சந்தேகத்தின் பேரில் சிறிலங்காப் படையினரால் ஆண்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டதால், பல ஆண்கள் விடுதலை இயங்கங்களோடு இணைந்து கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இக்காலப் பகுதியில் குடும்பப் பெண்கள் எவ்வாறு நிலைமையினைக் கையாண்டார்கள் என்பதை யாழ்ப்பாணத்தின் முதியவர்கள் கீழ்வருமாறு விபரிக்கிறார்கள். 'இவர்களிடம் இரட்டைச் சுமை. குடும்பத்தினை நிர்வகிப்பதோடு, குடும்பம் தொடர்பான தேவையான முடிவுகளைகளையும் எடுக்க வேண்டும். குடும்பத்தினை நிர்வகித்தல் என்ற முதலாவது பணியையே பெரும்பாலான பெண்கள் காலம் காலமாகச் செய்து பழக்கப்பட்டவர்கள்.' இந்நிலையில், யாழ்ப்பாணப் பெண்கள் புதிய வாய்ப்புக்களைத் தமதாக்குவதைச் சமூகம் அனுமதிக்க ஆரம்பித்துவிட்டது. குடும்ப அங்கத்தவர்களின் நல்வாழ்வு மற்றும் கல்வி ஆகிய விடயங்கள் தொடர்பான முடிவுகளைத் தற்போது பெண்களே எடுத்து வருகின்றார்கள். யாழ்ப்பாணச் சமூகத்தைப் பொறுத்து, இத்தகைய முடிவுகளை எடுப்பது ஆண்களுக்குரிய பணியாகவே கருதப்பட்டு வந்தது. இந்நிலையில், பெண்கள் கூட தம்முடன் இணைந்து செயற்படலாம் என்ற நிலையினை விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள். பெண்களுக்கே உரிய வெட்கம் போன்ற இயல்புகளைக் கொண்ட கிராமத்துப் பெண்களை இலட்சியத்துக்காக ஆயுதங்களை ஏந்த வைத்து ஜீன்சுடனும், சேர்ட்டுடனும் இயங்கும் நிலைக்கு விடுதலைப் புலிகள் அவர்களை மாற்றிக் காட்டியிருந்தார்கள். 'சமூகத்தில் தமக்கிருந்த கட்டுப்பாடுகளைப் ஒதுக்கிவிட்டு பெண் விடுதலை என்ற இலட்சியத்துடன் இருந்த தமிழ்ப் பெண்கள் தாம் சமமாக நடாத்தப்படும் நாளுக்காக காத்திருந்தார்கள். இப்பெண்கள் எதிர்பார்த்த பால் ரீதியான சமத்துவத்தினை விடுதலைப் புலிகள் வழங்கினார்கள்'என Shereen Xavier கூறுகின்றார். கணவருடன் இருந்தாலும் பால் சமத்துவம் மற்றும் பெண் விடுதலை தொடர்பில் தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்த அடேல் பாலசிங்கம் போன்ற பெண்கள் தங்களுக்கு முன்னுதாரணமாகச் செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக அன்ரன் பாலசிங்கம் செயற்பட்ட வேளையில் அவரது பாரியாரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அடேல் நடைமுறையில் விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவின் தலைவியாகச் செயற்பட்டு வந்ததாக Shereen Xavier குறிப்பிடுவதாக இவ்வூடகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment