
..எழுதும்போது "பொருளாதார பலமும், கல்வியறிவும் மிக்க புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தமது எதிர்கால அரசியல் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உருவெடுக்கலாம் என்ற அச்சமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்த அச்சத்திற்குக் காரணமாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதல் தடவையில்லை. புலம்பெயர் தமிழர்களை பொருளாதார பலமும், கல்வியறிவும் மிக்க புலம்பெயர் தமிழ்ச் சமூகம் என்று தெரிவிப்பதன்மூலம் தாங்கள் எழுதும் ஒவ்வொரு தலைப்பிலும் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களை படிப்பறிவில்லாத முட்டாள்களாகவும் பணமில்லாத பிச்சசைக்காரர்களாகவும் விளிப்பது வழக்கமானது.
நீங்கள் யார்? நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்? உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? என்பது எனக்கோ அல்லது ஈழத்தில் வாழும் என்னைப்போன்ற அகதிகளுக்கோ தெரியாது. ஆனால் நான் பட்டம் முடித்திருக்கிறேன். நல்ல தொழில் இருக்கிறது. இழந்தவற்றை மீள உருவாக்குவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. என்னைப்போன்றே வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் வாழும் மற்றவர்களும் கற்றும் போதுமான பணத்துடனுமே உள்ளனர்.
பட்டம் முடித்து நல்ல வேலையில் இருந்த என்னுடைய நண்பன் நான்காம் வகுப்புடன் படிப்பினை நிறுத்தி மாடு மேய்த்துக்கொண்டிருந்த தனது தம்பியை கடன்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பியிருந்தார். வன்னி அவலத்திலிருந்து மீண்டு இந்தியாவுக்கு அகதியாக போயிருக்கும் தனது பட்டதாரி அண்ணனுக்கு மாதம் 7000 ரூபாய் அனுப்பும் அந்த தம்பி தன்னை பணக்காரனாகவும் புத்திசாலியாகவும் நினைப்பதும் அத்துடன் தான் சொல்வதைத்தான் தனது அண்ணன் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் நியமாக இருந்தாலும் வேடிக்கையானது. இந்த மனநிலை அந்த தம்பிக்கு மட்டுமல்ல உங்களுக்கும் உள்ளதுதான் அனுதாபமானது.
அவலமே வாழ்க்கையாகிப் போனவர்கள் நாங்கள். எங்கள் அவலத்தினை வைத்து வாழ்வு நடாத்துபவர்கள் நீங்கள். இராணுவமும் சுடுகிறது. விடுதலைப்புலிகளும் சுடுகிறார்கள் என்று சொல்லி அகதி அந்தஸ்து கோரியவர்கள் நீங்கள். அந்த வார்த்தையினாலேயே விடுதலைப்புலிகள் அமைப்பு பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்டது. மாதம் நூறு பவுண்ஸ் கொடுப்பதாலும் இரண்டு மாதத்திற்கொருதடவை ஆர்ப்பாட்டம் நடாத்துவதாலும் உங்கள் போராட்டம் தியாகமாகிவிட்டதா? 29 செப்ரெம்பர் 2009 தாங்கள் எழுதிய தடைக்கல்லாக மாறுகின்றதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு? என்ற ஆசிரியர் தலையங்கத்தில் செப்ரம்பர் 7-ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த விடயமானது, புலம் பெயர் தேசத்துத் தமிழர்கள் இதுவரை நடாத்திவந்த தொடர் போராட்டத் தியாகம் வீணாகிப் போய்விடுமோ என்று அச்சங்கொள்ள வேண்டியுள்ளது என்று எழுதப்பட்டுள்ளது. உயிரையும் உதிரத்தையும் உறவுகளையும் உடல் அவயவங்களையும் கொடுத்து வன்னியிலே நாங்கள் செய்த போராட்டத்தின் தியாகம் உங்களால் உணர முடியாது.
வன்னியிலே அவலப்பட்ட எங்களை மனிக்பாமிலிருந்து வெளியே எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்தபோது அதை தடுத்தவர்கள் நீங்கள். ஏனேனில் எங்கள் அவலங்கள் மட்டுந்தான் உங்களுக்கு போராட்ட ஆயுதமாக இருக்கிறது. 08 செப்ரெம்பர் 2009 அன்று தாங்கள் எழுதிய மடலில் "வவுனியா வதை முகாமிலிருந்து எமது மக்களை விடுவித்தேதான் ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எப்போதோ உருவாக்கப்பட்டு விட்டது. அவர்கள் மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்தும் பொறுப்பை புலம் பெயர் தேசத்து எங்களிடம் விட்டு விடுங்கள். சிங்களத்துச் சிறைகளில் வாடும் எம் தமிழ் உறவுகளை இப்படியே விட்டுவிட்டு வாழாதிருக்கமாட்டோம். உலக நாடுகளின் மனச்சாட்சியைத் தட்டிக்கொண்டே, சிங்களத்தின் கொடூரங்களை அம்பலப்படுத்தியபடி அவர்களையும் சிறை மீட்போம்." என்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எழுதுகிறீர்கள். உங்கள் குழந்தைக்கு பாலில்லாமல் உங்கள் தங்கைக்கு கழிப்பறை இல்லாமல் இருந்திருந்தால் நீங்கள் இதை எழுதியிருக்க மாட்டீர்கள். உங்களைப் பொறுத்தவரை நாங்கள் படிப்பறிவில்லாத பிச்சைக்காரர்கள்தானே.
08 பெப்ரவரி 2010 தாங்கள் எழுதிய ஆசிரியர் தலைப்பில் புலம்பெயர் தேசங்களின் தமிழ் அமைப்புக்களுடன் உறவுகளைப் பேணி, அதன் மூலம் புலம்பெயர் தமிழீழ மக்களது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து செயலாற்ற வேண்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு,
ஈழத் தமிழர்களது தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் புலம்பெயர்ந்து வாழும் நிலையில், அவர்கள் தமிழீழத்தில் வாழும் தமது உறவுகளைக் கட்டுப்படுத்தும் பலம் கொண்டவர்கள் என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டால், தமிழீழத்தில் புதியதொரு அரசியல் தலைமையை உருவாக்க வேண்டிய வெற்றிடம் ஒன்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளீர்கள். இங்கு புலம்பெயர் தமிழீழ மக்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்பதுதான் உங்கள் பிரச்சினையே தவிர தமிழ் மக்கள் பிரச்சினை என்ன என்பதோ அதற்கான தீர்வு என்ன என்பதோ அதற்கான நடைமுறை என்ன என்பதோ உங்கள் பிரச்சினை இல்லை. பொதுவாகச் சொல்லப்போனால் ஈழத்தில் தமிழர்களாகிய நாம் அவலப்படவேண்டும். அதைவைத்து நீங்கள் வாழ்வு நடாத்த வேண்டும். அதற்கான அரசியல் சூழல் இங்கு இருக்கவேண்டும் என்பதே உங்கள் சிந்தனை.
03 பெப்ரவரி 2010 இல் தங்களுடைய ஆசிரியர் தலைப்பில் "விடுதலைப் போர்க் களத்தில் புலம்பெயர் தமிழர்களது பங்களிப்பு எவ்வளவு காத்திரமாக இருந்ததோ, அவ்வாறே அரசியல் போர்க் களத்திலும் அவர்களது பங்களிப்பு அவசியமானது மட்டுமன்றி, புறக்கணிக்க முடியாது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழீழத்தின் சொந்தக்காரர்களான ஈழத் தமிழர்களின் மூன்றில் ஒரு பகுதியினர் புலம்பெயர் தேசங்களில் வாழ்கிறார்கள் என்பதையும் கணக்கில் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்துக்களையும், முடிவுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே புலம்பெயர் தமிழர்களின் அவாவாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
இதில் "மூன்றில் ஒரு பகுதியினர் புலம்பெயர் தேசங்களில் வாழ்கிறார்கள்" என்று தாங்கள் அதிகமான தலைப்பில் தெரிவிப்பதின் அர்த்தம் புரியமுடியாதுள்ளது. ஆனாலும் அவ்வாறான ஒரு தொகையான மக்கள் தமிழீழத்திற்கான பங்களிப்பினை தரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதே நாடு கடந்த தமிழீழ அரசு. ஈழத்தில் வாழும் மூன்றில் இரண்டு பங்கு மக்களாகிய நாம் எந்த தியாகம் செய்தோம் என்ற அடிப்படையிலோ, அல்லது எம்மிடம் பொருளாதார அல்லது கல்வி பலம் உண்டா இல்லையா என்ற அடிப்படையிலோ நாடு கடந்த தமிழீழ அரசில் எந்த இடைஞ்சல்களையும் ஏற்படுத்த தயாராக இல்லை. அதேபோன்று தாயகத்தில் வாழும் நாம் எமது ஒன்றுபட்ட பலத்தினை சர்வதேசத்திற்கும் அரசுக்கும் காட்டவேண்டிய நிலையில் உள்ளோம்.
இவ்வாறான நேரத்தில் புலம்பெயர் தமிழர்களுக்கு மதிப்புக்கொடுக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் தேசியத்தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதும் விமர்சிப்பதும் உங்களுக்கு மதிப்பு கொடுக்கக்கூடியதான ஒரு குழுவினை ஏற்படுத்தி அதனை ஆதரிப்பதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக தமது உயிரை தியாகம் செய்த மாவீரர்களின் ஆன்மாவினை வேதனைப்படுத்தும் என்பதே உண்மை.
காந்தன்
guindysri@yahoo.com
No comments:
Post a Comment