Sunday, March 14, 2010

இந்தோனேசியாவில் கப்பலில் தவிக்கும் ஈழத் தமிழர்களை மீட்க நெடுமாறன் கோரிக்கை

இந்தோனேசிய கடல் பகுதியில் கடந்த 150 நாட்களுக்கும் மேலாக தவித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களை மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,

இலங்கை சிங்கள ராணுவத்துக்கு அஞ்சி உயிர் பிழைக்க பழுதடைந்த கப்பல் ஒன்றின் மூலம் 257 தமிழர்கள் ஆஸ்திரேலியா நோக்கி பயணம் செய்தனர். நடுவழியில் ஜாவா கடல் அருகே இந்தோனேசிய கடற்படை அவர்களைத் தடுத்து நிறுத்தியது.

கடந்த 150 நாள்களுக்கும் மேலாக அந்தக் கப்பலில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் உணவோ, மருந்தோ போதுமான அளவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

கப்பலை விட்டு இறங்கினால், இந்தோனேசிய அரசு தங்களை இலங்கைக்குத் திரும்ப அனுப்பிவிடுமோ என்ற அச்சத்தில், கப்பலிலேயே இருந்து கொண்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூத், இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் சுசிலோ பாங் பேங்க் யுதோனோ ஆகிய இருவரும் கடந்த 10-ம் தேதி ஆஸ்திரேலியாவில் கான்பெரா நகரில் சந்தித்துப் பேசினர். ஆனாலும், தமிழ் அகதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் இடம்கொடுத்து ஆதரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

எனவே, இந்த அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும்படி ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்த வேண்டிய கடமை இந்திய அரசுக்கும், உலக நாடுகளுக்கும் உண்டு.

இந்தக் கோரிக்கையை மனிதாபிமானத்துடன் அணுகி, தமிழ் அகதிகளின் உயிர்களை இந்திய அரசு காக்க வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப முடியாவிட்டால் தமிழ்நாட்டு அகதிகள் முகாமிலாவது அவர்களைத் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இங்கே மாவட்ட ஆட்சியர்களையும், அமைச்சர்களையும் வைத்து மாநாட்டை நடத்துகிறார் கருணாநிதி. இவர்களுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்?

தமிழ்நாட்டில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை கூட தமிழ் பயிற்றுமொழியாக இல்லை. அடிப்படைகளைச் செய்யாமல், மாநாடு நடத்தி என்ன பயன் இருக்கப் போகிறது? உலக நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சி இருக்கைகள் நிதியின்றி மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

மாநாடு நடத்தும் கோடிகளைக் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்கி ஆராய்ச்சி இருக்கைகள் தொடர வாய்ப்பு வழங்கலாம் என்றார் நெடுமாறன்.

No comments:

Post a Comment