
இந்தியாவும் மேற்குலகமும் அதனை நோக்கிய தமிழிழ விடுதலைப்புலிகளின் நகர்வுகள் தொடர்பாக உங்களுக்கு சிலவிடயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய பக்கம் சார்பாக நடந்து கொள்வதாகவும் அவர்களின் கட்டளைகளுக்கு ஏற்ப நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள். அது எவ்வளவு தூரம் உண்மைத்தன்மை என்பதை நாங்கள் ஆராய்வது ஒருபுறம் இருக்க கஜேந்திரன் மற்றும் பத்மினி அவர்கள் மேற்குலகில் அரசியல் நடவடிக்கைகளை ஈடுபட்டார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். மறுப்பதற்கு இடமில்லை.
இந்தியாவும் கூட்டமைப்பும்
அண்மைக்காலமாக தமிழ் கூட்டமைபைச் சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், சம்பந்தன் ஐயா மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா சென்று வந்ததும், இந்திய தலைவர்களை சந்தித்ததும் யாவரும் அறிந்த விடயம். இப்படிப்பட்ட விடயங்கள் உங்களுக்கு சந்தேகங்களை தோற்றுவித்தாலும் நீங்கள் இராஜதந்திர (Diplomatic) ரீதியான நோக்கில் பார்ப்பதை விடுத்து குறுகிய நோக்குடன் ஆராய்ந்து இருக்கிறீர்கள். இது உங்களின் பக்க சார்பு போக்கை காட்டுகிறது. கூட்டமைப்பு அங்கத்தவர்கள் இந்தியா செல்வதை வைத்துக்கொண்டு அவர்கள் இந்தியாவிற்கு சார்பாக நடந்து கொள்கிறார்கள் என்று கூறுவதை விடுத்து அவர்கள் இந்தியாவை தமிழர் பக்கம் திருப்புவதற்கு இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள் என்று நீங்கள் ஏன் பரந்துபட்ட நோக்கில் பார்க்கவில்லை?
இத்தனை அழிவுகளுக்கும், இத்தனை அவலங்களுக்கும் பின்னர் அசைந்து கொடுக்காத தன்மீதான அவ நம்பிக்கையைப் போக்க ஐ.நா. செயலாளர் பான் கி மூன் அவர்கள் அறிவித்திருந்த இறுதி யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தனக்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர்கள் குழுவை அமைக்கும் தீர்மானத்தை எதிர்த்து இந்தியா கடந்த வாரத்திலும் ஈழத் தமிழர்களுக்கான முடிவுறாத தனது துரோகத்தை நீட்டியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.
இப்படியான இந்தியாவின் நடவடிக்கைகள் தொடர்வதற்கான காரணம் என்ன? இந்தியாவிற்கும் தமிழ் மக்களின் உறவிற்கும் பாரிய இடைவெளி இருப்பது தான் காரணம். இந்த இடைவெளியை குறைத்து இந்தியாவை தமிழர் பக்கம் திரும்ப வைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் தமிழர்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் ஈடுபட வேண்டும். இப்படியான தமிழ் கூட்டமைப்பின் நகர்வுகளை இந்தியாவின் பக்க சார்பு போக்காக நீங்கள் காட்ட முற்படுவது ஆரோக்கிய தனமற்ற கருத்தாகவே இருக்கிறது.
இந்தியாவும் தமிழீழ விடுதலைப்புலிகளும் எமது போராட்ட ஆரம்ப காலகட்டங்களில் எமது விடுதலை அமைப்புக்களுக்கு இராணுவ பயிற்சிகளை அளித்து ஆயுதங்களை வழங்கி எங்களை வளர்த்தது இந்தியா தான். இந்தியா தனது தேவைகளிற்காக தான் இப்படியான நடவடிக்கைகளை செய்தது என்று கூறினாலும் எமது தலைவர் அவர்கள் சரியான இராஜதந்திர நோக்கில் அதை பயன்படுத்தி பாரிய இராணுவ கட்டமைப்பை உருவாக்கினர்.
1980 ல் இந்தியாவின் தமிழர் சார்பு போக்கை சிதைப்ப்பதற்காக ஸ்ரீலங்காவின் அப்போதைய ஜனாதிபதி J . R . ஜெயவர்தன மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கையில் வெற்றிகண்டார். அதற்கு பின்னர் இந்தியா தமிழர்களை எதிரிகளாக பார்க்க வேண்டிய அந்த கசப்பான நிலை ஏற்பட்டதற்கு எமது இராஜதந்திர நகர்வுகளில் ஏற்பட்ட தவறே காரணம். இதை தமிழீழ விடுதலை புலிகளின் அரசறிவியல் செயலகத்தை சேர்ந்த அரசண்ணா அவர்கள் உணர்ச்சிபட எப்பொழுதும் கூறுவார். அவரின் வரிகளை நான் இங்கே அப்படியே தருகிறேன். ' எங்களுக்கு பயிற்சியளித்து எங்களை வளர்த்துவிட்ட இந்தியாவை எங்களுடன் மோதவைத்த பெருமையும் இராஜதந்திர போக்கும் சிங்கள இராஜதந்திரி J . R . ஜெயவர்தனவிற்கு உள்ளது' . தற்பொழுது இந்தியாவின் தமிழர் எதிர்ப்பு போக்கிற்கு வித்திட்டவர் J . R . ஜெயவர்தன. இந்த நிலையை தமிழ் மக்கள் மாற்ற வேண்டிய தேவை உள்ளது.
அதைவிடுத்து இந்தியாவை நாமும் துரோகியாக எதிரியாக பார்ப்பது எமது முட்டாள்தனமான சிந்தனையை எடுத்துக்காட்டுகிறது. பாலா அண்ணா அவர்கள் சமாதான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தனது இந்தியாவை நோக்கிய நகர்வுகளை ஆரம்பித்திருந்தார். இந்தியாவின் அனுசரணை இன்றி தமிழ் மக்கள் தீர்வு ஒன்று பெற முடியாது என்பதை பாலா அண்ணா அவர்கள் எப்பொழுதும் கூறுவார். இந்தியாவின் அங்கீகாரம் இன்றி நாம் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் கூறுவார்.
மேற்குலகமும் இந்தியாவை மீறி எதையும் செய்யமுடியாது. திரு. எரிக் சொல்கெய்ம் அவர்கள் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் ஒவ்வொரு பேச்சுவார்த்தைகளில் நடந்தவற்றையும், ஸ்ரீலங்கா மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளை சந்தித்த பின்னர் ஒவ்வொரு தடவையும் இந்தியா சென்று விளக்கம் அளிப்பார். இவை எல்லாம் எங்களுக்கு ஒன்றைச் சொல்லுகிறது. இந்தியாவை மீறி மேற்குலகம் ஒன்றையும் பெற்றுத்தரப் போவதில்லை. இதற்காகத்தான் நாம் இந்தியாவை எமது நண்பனாக மாற்ற வேண்டும்.
பாலா அண்ணா அவர்கள் சமாதான காலப்பகுதியில் இந்தியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் மிக தீவிரமாக செயற்பட்டார். அவரது இறுதிக் கால கட்டத்தில் இந்தியாவின் சில தலைவர்களுடன் தொடர்புகளை பேணத் தொடங்கினார். திரு கே. நாராயணனுடன் தொடர்புகளை பேணிவந்தார். இது அவரின் இராஜதந்திர நகர்வாக அமைந்தது. பாலா அண்ணர் அவர்கள் தான் சமாதான காலங்களில் இந்தியாவை நோக்கிய நகர்வுகளை யாழில் இருந்து சமாதான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட பத்திரிகை நண்பர் அவர்களிற்கு தெளிவாக தான் மரணம் எய்துவதற்கு முன்னர் விளக்கி இருந்தார். மேற்குலகத்தை நம்பி தமிழீழ மக்களின் அரசியல் நடவடிக்கைகள் முன்னகர்த்தினாலும் இறுதியில் இந்தியாவின் அனுசரணை இன்றி நாம் எதையும் செய்து விட முடியாது.
எனவே இந்தியாவை தமிழ் மக்களின் நண்பனாக்கி எமது இலக்குகளை அடைவதற்காக நாம் இராஜதந்திர ரீதியாக செயற்படுவது இன்றைய காலத்தின் கட்டாய தேவை. இதற்காக தமிழ் மக்கள், அரசியல் வாதிகள், தமிழ் முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்வரவேண்டும்.
ப.ரங்கநாதன்
ஐக்கிய இராச்சியம்
nanthakumarkumaran@yahoo.co.uk
No comments:
Post a Comment