Thursday, March 18, 2010

அற்ப சலுகைகளுக்காக விலைபோகாத ஒரே அமைப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்பே : செல்வம் அடைக்கலநாதன்

மார்ச் 2010, 02:28.48 AM GMT +05:30 ] தமிழ்த் தேசிய கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் துயரங்கள், கஷ்டங்கள், துன்பங்களுக்கும், எதிர்கால சுபிட்சமான வாழ்க்கைக்கும் உளசுத்தியுடன் செயற்படுகின்ற ஒரே கட்சி. அற்ப சொற்ப சலுகைகளுக்காக த.தே.கூட்டமைப்பு சோரம் போனது கிடையாது. இவ்வாறு வன்னி மாவட்ட த.தே.கூ. முதன்மை வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பாராளுமன்றத்தில் பலமுள்ள கட்சியாகத் தெரிவு செய்ய வேண்டியது வன்னிப் பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களாகிய உங்கள் ஒவ்வொருவரது தலையாய கடமையாக இருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

வவுனியா நகரசபையின் உபதலைவர் ரதன் தலைமையில் சாஸ்திரி கூமாங்குளத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அந்தக் கட்சியின் வன்னி வேட்பாளர்கள் 9 பேரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

அங்கு உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்ததாவது:-

கடந்த கால தேர்தல்களிலே தமிழ் மக்க ளின் உரிமையை நிலைநாட்ட வேண்டும், விடுதலையை நிலைநாட்ட வேண்டும், அரசியல் தீர்வைப் பெற வேண்டும் என்பதற்காக மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து வந்துள்ளார்கள். இதற்காக நாங்கள் அரசாங்கத்தின் அற்ப சொற்ப சலுகைகளைப் பெற்று சோரம் போகாத வகையில் நாங்கள் செயற்பட்டு வந்திருக்கின்றோம். எமது மக்கள் தமது வாக்குரிமையின் மூலமாக எமக்களித்த ஆணையின் அடிப்படையில், சரியான முறையில் நாங்கள் செயற்பட்டதனால்தான் 3 பாராளுமன்ற உறுப்பினர்களை இழந்திருக்கின்றோம்.

எமது பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகிய ஜோசப் பரராஜசிங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீவிரமாக எடுத்துக் கூறியதற்காகத்தான் அவர் கோவிலில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உறுப்பினர் ரவிராஜ் தொலைக்காட்சியிலும், பாராளுமன்றத்திலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எழுச்சியான முறையிலே எடுத்துக் கூறியதற்காக தெருவிலே நாயைப் போல சுடப்பட்டார்.

பாராளுமன்றத்திலே இனப்பிரச்சினை தொடர்பாக முக்கியப்படுத்தி பேசிவிட்டு, ஓமந்தையைக் கடந்து சென்றபோதுதான், உறுப்பினர் சிவநேசன் கிளேமோர் தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார்.

எமது தலைவர் சம்பந்தன் எமது பிரச்சினைகள் தொடர்பாக பத்திரிகைகளிலே காரசாரமாக எழுதியதற்காக நாலாம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

இவ்வாறு 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் துரத்தித் துரத்தி இந்த அரசாங்கத்தினாலே வேட்டையாடப்பட்டார்கள். வெளியில் சென்றால் என்ன நடக்குமோ என்பது தெரியாத ஆபத்தான ஒரு நிலைமை இருந்தது. எஞ்சியிருப்பவர்கள் இருக்கின்றார்கள் என்றால் அது கடவுளின் ஆசிர்வாதமே. இல்லையென்றால் எங்கள் மீது புல்லு முளைத்திருக்கும். அப்பாவித் தமிழ் மக்களுக்கும் இதே கதிதான் நடைபெற்றது.

இந்த நிலையில் தான் நாங்கள் எமது மக்களை அவர்களது இடங்களில் சென்று பார்ப்பதற்கு முடியாத ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம். இதனை நியாயப்படுத்துவதற்காக நான் இதனைச் சொல்லவில்லை. இதற்காக எங்களது மனச்சாட்சி உறுத்துகின்றது.

நாங்கள் நினைத்திருந்தால் எமது தலைவரின் தலைமையிலே பத்துப்பேராவது அமைச்சர்களாக மாறி, சில அபிவிருத்தி வேலைகளைச் செய்திருக்க முடியும்.
அப்படிச் செய்திருந்தால், வன்னியிலே 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதை 2500 பேர் அங்கவீனர்களாக மாறியிருப்பதை, அவர்கள் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டதை அரசாங்கத்துடன் சேர்ந்து அதனை நியாயப்படுத்தியதாக முடிந்திருக்கும். இடம்பெயர்ந்திருந்த மூன்று லட்சம் பேரை முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டது சரியானதே, அவர்கள் அங்குதான் இருக்க வேண்டியவர்கள் என்பதை உறுதிப்படுத்தியதாக முடிந்திருக்கும். எம்முடைய இனம் அழிக்கப்படுகின்ற போது, அழிப்பு வேலைகளைச் செய்து கொண்டிருந்த அரசாங்கத்துடன் நாங்கள் எவ்வாறு இணைந்து செயற்பட்டிருக்க முடியும். அது நியாயமான செயலாக இருந்திருக்குமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

ஜனாதிபதி தேர்தலிலே முன் நிபந்தனையின் அடிப்படையில் நாங்கள் செயற்படுவதற்காக முயற்சித்தபோது, அதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இணங்கி வரவில்லை.
ஆனால் ரணில் விக்கிரமசிங்கவுடன் இனப்பிரச்சினை பற்றி பேச்சுக்கள் நடத்தியபோது, அவர்கள் உடனடியாக அரசியல் தீர்வு தேவை என்ற விடயத்திலே, அதற்காக அவசரமாகச் செயற்பட வேண்டியது அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுத் தந்தார்கள்.

நாங்கள் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தபோது அரசாங்கம் என்ன செய்தது? ரணில் விக்கிரமசிங்கவும் சரத் பொன்சேகாவும் தமிழ்த்தலைவர்களுடன் சேர்ந்து நாட்டைப் பிரிக்கப் போகின்றார்கள் என சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கம் தீவிரமான பிரசாரத்தை மேற்கொண்டு 18 லட்சம் வாக்குகளைப் பெரும்பான்மையாகப் பெற்றிருந்ததை நீங்கள் அறிவீர்கள்.

இதே அரசாங்கம் இப்போது என்ன செய்கிறதென்றால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்காகத் திட்டமிட்டுச் செயற்படுகின்றது. இதற்காகத்தான் அரச கட்சியிலே தமிழர்கள் பல பேரை வேட்பாளர்களாக அரசாங்கம் நிறுத்தி எங்கள் மக்களுடைய வாக்குகளைப் பிரிப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கின்றது.

இன்று அரசங்கத் தரப்பினர் உங்கள் வாக்குகளுக்காகத் தருகின்ற பல்வேறு பொருட்களை பெற்றுக்கொண்டு வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் கடந்த வருடம் முள்ளிவாய்க்காலிலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டார்களே அதனைச் சரியென்று ஏற்றுக்கொள்ளப் போகின்றீர்களா? யுத்தத்தின் இறுதிக் கட்டத்திலே வன்னியிலே அரசாங்கம் செய்தவை எல்லாம் சரியானதே என்பதை நிரூபிப்பதற்காக அரசாங்கத் தரப்பினருக்கு நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்களா?

எனவே எனது அன்புக்குரிய மக்களே!

நீங்கள் யாருக்கு எதற்காக வாக்களிக்கப் போகின்றீர்கள் என்பதைத் தெளிவாகச் சிந்தித்துப் பாருங்கள்.

இன்று சிறைகளிலே ஆயிரக்கணக்கானவர்களை அடைத்து வைத்திருப்பது சரியானது என்பதற்காக வன்னி மக்களாகிய நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்களா, தமது மக்கள் விடுதலை பெற்று, சுதந்திரமாக, கௌரவமாக, தமது சொந்தக் கிராமங்களிலே சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காகத் தமது உயிர்களை இழந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதற்காக வாக்களிக்கப் போகின்றீர்களா என்பதைக் கவனமாகத் தீர்மானிக்க வேண்டும்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் துயரங்களுக்கும், கஷ்டங்கள், துன்பங்களுக்கும், எதிர்காலத்தின் சுபிட்சமான வாழ்க்கைக்கும் உளசுத்தியுடன் செயற்படுகின்ற ஒரே கட்சியாகும். எனவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பாராளுமன்றத்தில் பலமுள்ள கட்சியாகத் தெரிவு செய்ய வேண்டியது வன்னிப்பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களாகிய உங்கள் ஒவ்வொருவரது தலையாய கடமையாக இருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள்.

No comments:

Post a Comment